சில நிமிடங்களுக்குப் பிறகு மகளை கமலாவிடம் விட்டு விட்டு சமையலறைக்குள் சென்றாள் பவித்ரா. அங்கே பாத்திரங்களை துலக்கி விட்டு, அறையை துடைத்து சுத்தமாக்கினாள்.
பின் மீண்டும், பேத்தியின் அருகில் அமர்ந்து அவளின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்த கமலாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“என்னுடைய பி.ஹெச்டிக்கு தீஸிஸ் முடிக்கனும் அத்தை...”
“ஆமாம், ரொம்ப நாளாவே சொல்லிட்டு இருக்கீயே இன்னும் முடிக்கலையா?”
“இல்லை அத்தை... நிறைய புக்ஸ் படிக்கனும், இன்னும் ரெஃபர் செய்ய வேண்டிய வேலையும் நிறைய இருக்கு...”
“ஓஹோ...”
“பாரதி இருந்தா ரொம்ப உதவியா இருந்திருக்கும்... முன்னாடி அவ தான் எனக்கு புக் லிஸ்ட் எல்லாம் ரெடி செஞ்சு தருவா... ஏன் அத்தை, இப்போ காலேஜ் லீவ் தானே... பாரதியை ஒரு வாரம் நம்ம வீட்டில வந்து தங்க கூப்பிட்டு பார்க்கவா?”
மருமகளை ஒரு பார்வை பார்த்த கமலா,
“பவித்ரா, உனக்கு தெரியாதா என்ன, பாரதியை நான் என் மகளா தான் நினைக்குறேன். அவளை வீட்டுக்கு கூப்பிட நீ என் கிட்ட கேட்கணுமா என்ன?” என்றாள்!
உங்களைப் பத்தி எனக்கு “தெரியும் அத்தை... இருந்தாலும், உங்க கிட்ட கேட்காம செய்தா நல்லா இருக்காதே... சரி, நான் அவளை ஃபோன் செய்து கூப்பிடுறேன்...”
சொல்லி விட்டு அவசரமாக எழுந்தவளை கமலாவின் குரல் தடுத்து நிறுத்தியது.