“மது, பெரியவங்க விஷயத்தை முழுசா தெரிஞ்சுக்காம இது மாதிரி எல்லாம் பேசக் கூடாது...” என்றார் அது வரை அமைதியாக இருந்த நரேந்திரன்.
“நீங்க சொல்றது சரி தான் அப்பா... ஆனா, நான் இப்போ பேசுறது என்னுடைய ஃப்யூச்சர் பத்தி தான்... அண்ணி சின்ன வயசில ஒருத்தரை லவ் செய்தாங்க, அந்த ஆள் காசுக்காக அலையுறான்னு தெரிஞ்ச உடனே அவனை விட்டு விலகி வந்துட்டாங்க, இதுல ஏதாவது தப்பு இருக்கா? புத்தியும், சுய மரியாதையும் இருக்க எந்த பொண்ணுமே அதை தானே செய்வா? இதுக்கே எல்லாரும் இவ்வளவு பாலிடிக்ஸ் செய்றீங்க... அதுவும் ரொம்ப பெரிய மனசுள்ளவங்க, நல்லவங்கன்னு நான் நினைச்ச நீங்க எல்லாம்... அப்போ, என்னை போல் ஒரு கெட்டவனை நம்பி ஓடிப் போக ரெடியா இருந்த பொண்ணை கல்யாணம் செய்துக்குறவன், அப்புறம் என்ன எல்லாம் சொல்வான்? நான் எந்த மாதிரியான கஷ்டம் எல்லாம் ஃபேஸ் செய்யனும்... எதுக்கு வம்பு, அது தான் இப்போவே கல்யாணம் வேண்டாம்னு முடிவு செய்துட்டேன்... பாரதி அண்ணிக்கே இந்த நிலைமைன்னா என்னோட நிலைமையை என்னால யோசிச்சு கூட பார்க்க முடியலை...”
“மது...”
ஏதோ சொல்ல தொடங்கிய கற்பகத்தை பேச விடாது தொடர்ந்து பேசிய மது,
“உங்க மகளுக்கு இப்படி எல்லாம் பாஸ்ட் இருந்தா குடும்ப கௌரவத்துக்கு ஒன்னும் ஆகாது... அண்ணி ஒரு நல்ல முடிவு எடுத்தா மட்டும் தான் தப்பா? நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கவே இல்லை அம்மா,” என பொரிந்தாள்!
“மது!”
நரேந்திரன் சற்றே அழுத்தத்துடன் அழைக்கவும், தன்னை மறந்து மூச்சு விடாது பேசிக் கொண்டிருந்த மது சுய உணர்வு பெற்று அமைதியானாள்! மற்றவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு, கருமமே கண்ணாக உணவருந்திக் கொண்டிருந்த விவேக்கை கோபமாக ஒரு பார்வை பார்த்தாள்!