என்ன எது என்று யோசிக்காமல் அவளது வலது கன்னத்தை மெல்ல வருடினான் தியாகராஜன்.
“அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?” எனக் கேட்கவும் வேறு செய்தான்!
அவனின் தீண்டலில்... அந்த புதிய உணர்வில் சிலிர்த்த கிருத்திகாவின் கன்னம், மேலும் சிவந்தது!
அந்த நேரம், அவர்கள் கார் நின்றிருந்த இடத்திற்கு அருகே விஜயின் கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கி வந்த விஜய், கிருத்திகா பக்கம் இருந்த கார் கதவை தட்டினான்.
தியாகு தன் கையை அவள் கன்னத்தில் இருந்து விலக்கி எடுத்துக் கொண்டு, திரும்பி நேராக அமர்ந்தப் பின் கார் கதவை திறந்தாள் அவள்!
“என்ன ஆச்சு? ஏன் திடீர்னு காரை ஸ்டாப் செய்துட்டீங்க??” என தன் கேள்விகளை அடுக்கினான் விஜய்.
“ஒண்ணுமில்லை... அண்...அண்ணா... பேசிட்டு இருந்தோம்...” என்றாள் கிருத்திகா.
விஜயின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது!
“என்னது அண்ணன்னா சொன்ன?”
விஜய் அதிர்ச்சியோடு கேட்ட விதத்தில் கிருத்திகாவிற்கு குழப்பமாக இருந்தது! தானாக ராஜின் பக்கம் பார்த்தாள்! ராஜின் உதட்டிலும் மெல்லிய குறுநகை இருந்தது! ஒன்றும் புரியாமல் விஜயிடம்,
“ஆமாம், அண்ணான்னு தான் சொன்னேன்... நீங்க என் அண்ணா தானே... ஏன் அப்படி கேட்குறீங்க?” என்றாள்!