தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 14 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பீச்சில் நேரம் இனிமையாக சென்றது!
கீதாவிடம் பேசியப் போது கிருத்திகாவினுள் ஏற்பட்டிருந்த குற்ற உணர்வு இப்போதும் இருந்தது! அதனாலேயே, ராஜ் அவள் பக்கத்தில் இல்லை என்ற ஏமாற்றத்தை மறைத்து, மற்ற குடும்பத்தினர் அனைவருடனும் நட்புடன் பேசினாள்...
ஒரு சில மணித் துளிகளிலேயே அனைவருடனும் தன் இனிய பேச்சினால் ஈஸியாகவே ஒட்டிக் கொண்டாள்... கிருத்திகா காணாமல் போயிருந்ததால் என்ன ஏது என்று பல மாதங்களாக கிலியில் இருந்தவர்களுக்கும் கிருத்திகா மீண்டும் கிடைத்தும், அவளின் இனிமையான பேச்சும் மனதுக்கு ஆறுதலாக இருந்தது! அதனால் அனைவருமே மகிழ்ச்சியுடனே நேரத்தை செலவிட்டார்கள்!
கிருத்திகா சின்ன வயதில் செய்த குறும்புகள் ஒவ்வொன்றாக சிவகாமி சொல்ல, நேரம் தொடர்ந்து கலகலப்பாகவே சென்றது.
“இப்போ தான் என்னுடைய பழைய ராஜக்குமாரியை பார்க்குற மாதிரி இருக்கு...!!! இதே போல உனக்கும் தியாகுவுக்கும் நடுவுலேயும் எல்லாம் சரி ஆகிட்டா நல்லா இருக்கும்...” என மனதில் இருப்பதை மறைக்காமல் கிருத்திகாவிடம் சொன்னாள் சிவகாமி.
அதற்கு கிருத்திகா பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், “என்ன சிவகாமி பேசுற! எல்லாம் தானா சரி ஆயிடும். சும்மா எதையாவது சொல்லி சந்தோஷமா இருக்குற குழந்தையை வருத்தப் படுத்தாதே...” என மனைவியை அமைதி ஆக்கினார் ரங்கராஜன்!
அம்மாவின் பேச்சு கிருத்திகா கடந்த சில நிமிடங்கள் மறந்திருந்த அவளுக்கும் ராஜிற்கும் இடையிலான பிளவை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தது!!
எல்லாம் தானாக சரி ஆகி விடுமா???
அத்தனை சுலபமா அது???