”தெரியலை வா யார்கிட்டயாவது உதவி கேட்கலாம்” என சொல்லி இருவரும் வண்டியை விட்டு இறங்கினார்கள், பின்னாலேயே கமிஷனர் கார் வந்து நின்றது. அதைக்கண்டதும் இவர்களுக்கு அச்சம் வர கமிஷனர் மெதுவாக வண்டியை விட்டு இறங்கி இவர்களைப் பார்த்து இளப்பமாகச் சிரித்து
”ஓடி முடிச்சிட்டீங்களா இனி உங்களால எங்கயும் ஓட முடியாது” என்றான் கர்னகடூரமாக காரணம் இரு பேய்களின் குரல் ஒன்றாக பேசும் போது நாராஸமாக கேட்டது.
அதைவிட கொடுமை அகத்தியன் அங்கு வந்ததும் உடனே அவனின் காதில் 100 பேரின் கதறல் சத்தம் கேட்கவும் அதிர்ந்தான், காதை பொத்திக் கொண்டு தடுமாற அதைக்கண்ட நாச்சியாவோ
”அகத்தியா அகத்தியா என்னாச்சி அகத்தியா“ என கேட்க அவனால் பதில் பேச இயலவில்லை. அதற்குள் கமிஷனர் நாச்சியாவை பிடிக்க ஓடிவர அகத்தியனோ அவளிடம்
”ஓடு ஓடு” என்றான் அவள் புரிந்துக் கொண்டு வேறு பக்கமாக ஓட அவளை பிடிக்க கமிஷனரும் ஓடினான்.
அகத்தியனால் எதுவும் செய்ய இயலவில்லை, அந்தக் குரல்கள் அவனை படாதபாடு பட வைத்தது. நிற்க முடியாமல் தடுமாறினான், அவனை அந்தக் குரல்கள் எங்கோ அழைத்தது, அந்த அழைப்பு வந்த திக்கில் ஓடினான், அவனது ஓட்டம் முடிவில் கார்மெண்ட்ஸில் நின்றது. கார்மெண்ட்ஸ்க்குள் வசமாக சிக்கினான் அகத்தியன், சட்டென அந்த குரல்கள் காணவில்லை அந்த இடமே அமைதியாகிவிட்டது, அமானுஷ்யமாக இருந்தது, சுற்றி முற்றி பார்த்தான், அவனை சுற்றி 100 ஆவிகள் நின்றபடி இருக்க அவனுக்கு திக்கென்றது. அனைத்து ஆவிகளும் தீயில் கருகி எரிந்த நிலையில் அவனை பயமுறுத்தியது, அவனோ அங்கு இங்கு என ஓடினான் எங்கு சென்றாலும் ஆவிகள் அவனை விட்டப்பாடில்லை, வெளியே செல்ல முயல அங்கும் ஆவிகள் இருக்கவே அவனால் எங்கும் செல்ல முடியவில்லை, அனைத்தும் அவனை தாக்கின அவனோ துடித்தான் தீயில் எப்படி அவர்கள் எரிந்தபோது துன்பப்பட்டார்களோ அந்த துன்பம் முழுவதையும் அவனை அனுபவிக்க செய்தன, அவனும் தீயில் எரிவது போல தரையில் விழுந்து துடித்தான்.