(Reading time: 6 - 11 minutes)

01. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

" ன்ன எல்லாம் ரெடியா ?" கேட்டபடியே அந்த அறைக்குள் நுழைந்தான் அர்ச்சனாவின் பெரியப்பா மகன் மனோ. அர்ச்சனாவை பெங்களூர் அழைத்து செல்ல சென்னை வந்திருக்கிறான் மனோ. இன்று இரவு கிளம்ப வேண்டும்.

அந்த அறைக்குள் வந்து ஜன்னலின் மீது சாய்ந்தபடி நின்றான். சில நாட்களாகவே அதிக உற்சாகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் மனோ.  

" என்னை பெங்களூர் அழைத்துச்செல்வதில் அவனுக்கு எதற்காம் இத்தனை உற்சாகம்?" புரியவே இல்லை அர்ச்சனாவுக்கு.

இந்த இருபத்தியெட்டு வருடங்களில் அப்பாவை விட்டு அர்ச்சனா பிரிந்திருந்தது இருபது நாட்கள். அந்த இருபது நாட்கள். அவள் வாழ்க்கையை மொத்தமாய் புரட்டிப்போட்ட இருபது நாட்கள்.  

 அது நடந்து மூன்று  வருடங்களுக்கு பிறகு இப்போது மறுபடியும் பிரிந்து போக வேண்டும். வேறு வழி இல்லை. கிடைத்திருக்கும் அரசாங்க வேலையை இழக்க மனமில்லை.  கிளம்பியே ஆகவேண்டும்.

கட்டில் மீதமர்ந்து பெட்டியில் உடைகளை அடுக்கி கொண்டிருந்தாள் அர்ச்சனா. பீரோவிலிருந்து உடைகளை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தார் அர்ச்சனாவின் அப்பா.

" இது நல்லாருக்குமா இதை வெச்சுக்கோ"

"சரிப்பா"

"இது வேண்டாம். கலர் நல்லா இல்லை"

"சரிப்பா"

அர்ச்சனாவை பார்க்கவே ஆச்சர்யமாய் இருந்தது மனோவிற்கு. "இப்படி கூடவா இருந்து விட முடியும் ? அப்பாவின் வார்த்தைகளை கேட்டுக்கொள்வதே வாழ்க்கையாய். தனக்கென்று விருப்பு வெறுப்புகளே இல்லாமல்......" அவன் யோசித்து கொண்டிருந்த நிமிடத்தில் தான் நிகழந்தது அது.

எல்லா புடவைகளுக்கும் அடியிலிருந்து அந்தப்புடவையை வெளியில் எடுத்தார் அப்பா.

அதை அவர் வெளியில் எடுத்த நொடியில் சரேலென ஒரே நேரத்தில் விரிந்தன, அர்ச்சனாவின் கண்களும், மனோவின் கண்களும்.

அர்ச்சனாவின் சுவாசம் கிட்டத்தட்ட நின்றே போனது.

அந்த புடவை. கரும்பச்சை நிறத்தில் பூவேலைப்பாடுகளுடன் ஜொலித்த அந்த புடவை......

இமைக்காமல் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்

 மூன்று ஆண்டுகளுக்கு முன் அவள் வாழ்க்கையில் சில்லென்று பெய்த பனி மழையின் ஞாபகார்த்த துளியாய், எல்லா புடவைகளுக்கும் அடியில் அந்த புடவையை ஒளித்து வைத்திருந்தாள் அர்ச்சனா.

தெரியும். அந்த புடவையை கொடுத்தது யார் என்பது அப்பாவுக்கு தெரியும். அவன் சம்பந்தமானதாக எதை பார்த்தாலும் அப்பாவுக்கு கோபம் வரும்.

கோபம் வந்தால் என்னவாகும்? வீட்டில் பிரளயம் வெடிக்குமா? சுனாமி தாக்குமா?

எதுவுமே நடக்காது.  மௌனமாய் அவள் கண்களை ஒரு முறை பார்ப்பார். அதன் பிறகு? அதன் பிறகு, எதுவுமே சொல்லமாட்டார் .அவளுடன் எதுவுமே பேசமாட்டார்.  அவ்வளவுதான்.

நரகமது. அர்ச்சனாவுக்கு அதுதான் நரகம். "அப்பாவுடன் பேசாமல், அவர் அன்பை இழந்து..... " உடல் நடுங்கியது அர்ச்சனாவுக்கு

"ரொம்ப அழகா இருக்குமா இந்தப்புடவை " என்றார் அப்பா.  மறந்துவிட்டிருந்தார். அந்த புடவையை அடையாளம் தெரியவில்லை அவருக்கு. 

"நாளைக்கு உன் ராசிக்கு இந்த கலர்தான் கட்டணும். இதையே கட்டிக்கோ " புடவையை அவள் கையில் கொடுத்துவிட்டிருந்தார் அப்பா.

போன உயிர் திரும்பியது போல் ஆழமாய் சுவாசித்தாள் அர்ச்சனா.

"அவ்வளவுதானே மா? முடிஞ்சதா? " கேட்டபடி பீரோவை மூடினார்.

"ஆங்.....  ம்... முடிஞ்சுது பா. இன்னும் அஞ்சு நிமிஷத்துலே எல்லாம் சரிபார்த்துட்டு வந்திடறேன்"

"சரிம்மா"  அறையை விட்டு வெளியேறினார் அப்பா.

டுத்த நொடி அர்ச்சனாவின் பார்வை அந்த புடவையின் மீது பதிந்தது. அர்ச்சனாவையே பார்த்துக்கொண்டிருந்தான் மனோ

ஒரு நிமிடம். மொத்தமாய் ஒரு நிமிடம் அந்தபுடவையை விட்டு அகலவில்லை அவள் பார்வை. அவள் விரல்கள் அந்தப்புடவையை மெல்ல வருடின. கண்களில் நீர் கோடிட அதை கட்டிலின் மீது வைத்தாள் அர்ச்சனா.

மனோ மெல்ல நடந்து அவள் அருகில் வந்தான். அவளது சந்தோஷங்களிலும்,வலிகளிலும் எப்போதுமே உடனிருந்தவன், உடனிருப்பவன் மனோ.

"இன்னமும் வெச்சுருக்கியா அர்ச்சனா இந்த புடவையை? தூக்கியே போட்டிருப்பேன்னு நினைச்சேன்"

கட்டிலை விட்டு மெல்ல எழுந்தாள் அர்ச்சனா.

அவள் கண்களுக்குள் பார்த்து கேட்டான் மனோ " அவனை  ஞாபகம் இருக்கா அர்ச்சனா உனக்கு?  ஆச்சரியமா இருக்கு "

சுரீரென்று நெஞ்சுக்குள் ஊசி இறங்கியது. கண்களில் நீர் சேர பார்வையை தாழ்த்திக்கொண்டாள் அர்ச்சனா.  

"இருபத்தியெட்டு வயசாச்சு உனக்கு. இப்பவும் கட்டிக்கிற புடவையிலேயிருந்து, கட்டிக்க போறவன் வரைக்கும் உங்கப்பா சொல்றதுதான் உனக்கு வேதமா? அவர் செய்யறதெல்லாம் நியாயம்தானான்னு ஒரு நாளாவது யோசிச்சு பாத்திருக்கியா? "

"மனோ... ப்ளீஸ்....."

"என்ன ப்ளீஸ் ? சரி அதை விடு . உன் மனசை பத்தி எப்பவாவது யோசிச்சு பாத்திருக்கியா?"

நிறுத்தி நிதானமாய் சொன்னாள் அர்ச்சனா " எனக்கு மனசெல்லாம் கிடையாது மனோ. அப்பா மட்டும்தான்"

சுள்ளென்று பொங்கியது மனோவின் கோபம். அந்த நொடியில், சரியாய் அந்த நொடியில் , சின்னதாய் சிணுங்கியது மனோவின் கைப்பேசி. அதை எடுத்து பார்த்தவனின் கண்களில் பொங்கிக்கொண்டிருந்த கோபம் சட்டென விலகி அவன் உதடுகளில் மெல்ல மெல்ல  புன்னகை ஓட துவங்கியது.

கைபேசியில் வந்திருந்தது , ஆங்கிலத்தில் ஒரு குறுஞ்செய்தி "waiting for your arrival" அனுப்பியவன் மனோவின் உயிர் நண்பன்.  

மெல்ல சிரித்து கொண்டான் மனோ. "உன் வருகைக்காக காத்திருக்கிறேன்" " யார் வருகைக்காகவாம்?" "நிச்சியமாக என் வருகைக்காக இல்லை"

சட்டென்று அவன் கோபம்  விலகிவிட்ட மாயம் புரியாமல் ஆச்சர்யமாய் பார்த்தாள் அர்ச்சனா

மெல்ல மெல்ல கண்களை நிமிர்த்தி அர்ச்சனாவின் கண்களுக்குள் பார்த்தான் மனோ. அவன் உதடுகளில் புன்னகை ஓடிக்கொண்டிருந்தது.

"என்னாச்சு மனோ "  புரியாமல் கேட்டாள் அர்ச்சனா

அவள் கண்களை பார்த்து நிதானமாக சொன்னான் " காத்திருக்கிறேன் உன் வருகைக்காக"

"ம்? என்னது?"

"இல்ல ஒரு மெசேஜ் வந்தது"

யாரு ஸ்வேதாவா? சிரித்தாள் அர்ச்சனா. ஸ்வேதா மனோவின் மனைவி.

"அனுப்பியது ஸ்வேதா இல்லையடி பெண்ணே. காத்திருப்பவன் வேறொருவன்" உதடுகள் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக்கொண்டான் மனோ.

பின்னர் புன்னகைத்தபடி கேட்டான் "நாளைக்கு இந்தப்புடவையை தானே கட்டப்போறே?"

"ம்"

"வெரி குட். வெரி நைஸ் " சிரித்துக்கொண்டே கைபேசியை அழுத்தியபடி அறையைவிட்டு வெளியேறினான் மனோ.

அவன் மனதில் என்ன இருக்கிறது என்று யூகிக்கவே முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள் அர்ச்சனா. அந்த புடவையை மெல்ல கையிலெடுத்தாள் " இருப்பான். இந்த புடவையை கொடுத்தவன், எங்காவது இருப்பான். தன் மனைவியுடன் பேசிக்கொண்டு, தன் குழந்தையை கொஞ்சிக்கொண்டு ,என்னை பற்றி நினைக்கவே நேரமில்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பான்" தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டவளாய் புடவையை பெட்டிக்குள் வைத்து மூடினாள் அர்ச்சனா.   

தொடரும்

Manathile oru paattu episode # 02

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.