(Reading time: 15 - 30 minutes)

19. என் இனியவளே - பாலா 

En Iniyavale

குல தெய்வ பூஜையில் கலந்து கொண்டு உடனே மதியத்திற்கு மேல் ராஜகோபாலின் குடும்பமும் இளவரசனும் கிளம்பி விட்டனர். வீடு வந்து சேர நள்ளிரவு ஆனதால் இளவரசனும் அவன் வீட்டிற்கு வந்து விட்டான்.

ஆனால் காலையில் விடிந்தவுடன் மாமா வீட்டிற்கு போய் நின்றான்.

அவனை கண்ட ராஜகோபால் “வாப்பா” என்றழைத்தார்.

வந்து ஹாலில் அமர்ந்த அவனை பார்த்து புன்னகைத்தார். ஆனால் அவன் அத்தையோ முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லாமல் அவனுக்கு காபி கொடுத்தார்.

ஜோதியும் வந்து அமர்ந்தாள். இனியாவை மட்டும் காணவில்லை.

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிந்தது. யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“எனக்கு தெரியும் மாமா நான் உங்களை கஷ்டபடுத்திட்டேன்னு. ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கல மாமா. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு தான் நினைச்சேன். என்னை மன்னிச்சிடுங்க மாமா”

“என்னப்பா மன்னிப்புன்னு எல்லாம் கேட்டுக்கிட்டு, விடு. நடக்கணும்னு இருந்திருக்கு. நடந்துடுச்சி. அதுக்கென்ன பண்றது. அங்க நடந்த எல்லா அசிங்கத்துக்கும் என் தங்கச்சியே காரணமாகிட்டா. அதுக்கு நீ என்ன பண்ணுவ.”

“இல்ல மாமா. இருந்தாலும் என் மேல தப்பு இருக்கு.” என்று கூறியவனை இடைமறித்து

“உங்க அம்மா கிட்ட பேசினியா, என்ன சொன்னா” என்றார்.

“இல்ல மாமா. நான் அம்மா கிட்ட ஏதும் பேசலை. அவங்க அப்படி சொன்னதை என்னால இன்னும் ஏத்துக்க முடியலை. அதனால அவங்க கிட்ட ஏதும் பேசலை”

“இல்லப்பா. நீ முதல்ல அவ கிட்ட தான் பேசி இருக்கணும். அவளோட கருத்தை கேட்டிருக்கணும்”

“இல்ல மாமா. இப்ப அம்மாவோட பிரச்சனை என்ன வேணும்னா இருக்கட்டும். ஆனா அதை அவங்க என் கிட்ட வெளிப்படுத்தி இருக்கலாம். இல்லேன்னா உங்க கிட்ட சொல்லிருக்கலாம். போன்ல அவங்க கிட்ட சொன்னா அதனால யாருக்கு மாமா அவமானம். என்னால இதை ஏத்துக்கவே முடியலை மாமா”

“நீ சொல்றது சரி தான். ஆனா அவ என்ன சொல்றான்னு முதல்ல கேட்டுட்டு அப்புறம் நாம இதெல்லாம் யோசிக்கலாம். நான் வந்து ராஜிக் கிட்ட பேசறேன்”

“இல்ல மாமா. நான் முதல்ல அம்மா கிட்ட பேசறேன்.”

“ம்ம்ம். சரி”

அவ்வளவு நேரம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த லக்ஷ்மி “இப்ப ராஜி அண்ணி கிட்ட என்ன கேட்க போறீங்க.” என்றார்.

“ஏன் அவ அப்படி போன்ல சொன்னான்னு தான்” என்றார் ராஜகோபால்.

“இப்ப அதுக்கு என்ன அவசியம்”

“என்ன லக்ஷ்மி. இங்க நடக்கறதை எல்லாம் பார்த்துக்கிட்டு தானே இருக்கிற. அப்புறம் என்ன பேச்சு இது”

“அதை தான் நானும் சொல்றேன். இங்க இவ்வளவு நடந்துடுச்சி. இதுக்கு அப்புறமும் நீங்க இப்படி பேசிட்டிருக்கீங்க. அவங்க சரியா தான் நடந்துக்கிட்டாங்க”

“என்ன அவ சரியா நடந்துக்கிட்டா. என் தங்கச்சி கிட்ட அவ சொன்னது சரியா. நம்ம புள்ளைங்க விருப்பத்துக்கு நாம மதிப்பு குடுத்து தான் ஆகணும் லக்ஷ்மி”

“பசங்க விருப்பம் போல நடக்கறது தப்புன்னு நானும் சொல்லலைங்க. ஆனா இங்க எவ்வளவோ நடந்து போச்சே. இவங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னா அதை நம்ம கிட்ட சொல்லி இருக்கணும் இல்லை. ஆனா இவங்க அதை நம்ம கிட்ட சொல்லாம நமக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தேடி தந்துட்டாங்க. நீங்க அதை கண்டிச்சி ஒரு வார்த்தை சொல்லாம மேற்கொண்டு பேசிட்டிருக்கீங்க”

அப்போது தான் கிச்சனில் இருந்த இனியா வெளியே வந்தாள். வந்து தந்தையின் அருகில் நின்று கொண்டாள்.

“நம்ம ஜோதி கல்யாணத்தப்பவே இதைப்பற்றி பேசினது தானே. ஜோதி கிட்ட கூட நீ யாரையாச்சும் விரும்பரியான்னு கேட்டோம் இல்லை. அப்புறம் இப்ப மட்டும் என்ன ப்ராப்லம்” என்றார் ராஜகோபால்.

“நான் இவங்க விரும்பறதை தப்பே சொல்லலைங்க. ஆனா அதை நம்ம கிட்ட சொல்லாம இப்படி பண்ணிட்டாங்களேன்னு தான் சொல்றேன். இதை பத்தி நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கூட, உங்க தங்கச்சி கிட்ட ‘ஆமா நாங்களே தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறதா தான் இருக்கோம்னு நாம தலை நிமிர்ந்து சொல்லி இருப்போம்ல. அதுக்கு இவங்க வழி விடலையே ”

“இப்ப அதுக்கு என்ன பண்றது. நடந்ததை விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியது தான்”

“அடுத்த வேலைன்னா கல்யாணமா”

“ஆமா”

“என்னங்க புரியாம பேசறீங்க. அங்க இவ்வளவு நடந்து போச்சி. இதுக்கப்புறமும் இவங்க கல்யாணம் நடக்கணுமா”

“நீ என்ன பேசுற லக்ஷ்மி. இப்ப இந்த கல்யாணம் தான் ஒரே தீர்வு”

“இந்த கல்யாணமே வேண்டாம். அங்க நடந்த பிரச்சனைக்கு அப்புறம் இந்த கல்யாணம் நடக்க வேண்டாம்.” என்று தீர்மானமாக கூறினார்.

“அம்மா” என்று பேச வந்த ஜோதியையை முறைத்து “நீயும் அவ கூட கூட்டு தானே, நீங்க ரெண்டு பெரும் எங்களுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தை தேடி தந்துட்டீங்க பார்த்தீங்களா. எப்பவும் என் ரெண்டு பொண்ணுங்களையும் நினைச்சி எனக்கு பெருமையா இருக்கும். ஆனா இன்னைக்கு இப்படி பண்ணிட்டீங்களே.”

“அந்த ஊருல நாம எவ்வளவு கௌரவமா இருந்தோம். ஆனா இன்னைக்கு என்ன ஆச்சி. என் பொண்ணை பத்தி பேசுறதுக்கு எல்லாரும் கூட்டமா வந்து பஞ்சாயத்து பேசறாங்க. பெத்த எனக்கு எப்படி இருக்கும். எல்லாரும் என்ன சொல்வாங்க. நான் உங்களை சரியா வளர்க்கலைன்னு தானே. எனக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்ல பேரு தான் வாங்கி குடுத்திருக்கீங்க.” என்று கோபமாக தொடங்கி அழுகையில் முடித்தார்.

“லக்ஷ்மி” என்று எழுந்து வந்த கணவரை விளக்கி விட்டு எழுந்து சென்று விட்டார். ராஜகோபாலும் எழுந்து சென்றார்.

அங்கிருந்த இளவரசன், இனியா, ஜோதி மூவருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.