(Reading time: 15 - 30 minutes)

சிறிது நேரத்தில் வந்த ராஜகோபால் இளவரசனிடம் “நீங்க ஒன்னும் நினைச்சிக்காதீங்க. திடீர்ன்னு நடந்த பிரச்சனையால அவ ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கா. எல்லாம் சரி ஆகிடும். நீங்க ராஜி கிட்ட பேசுங்க” என்றார்.

இளவரசனும் சரி என்றான்.

பின்பு சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டான்.

வீட்டிற்கு சென்ற இளவரசனை கண்ட அவன் தாய் ஏதும் பேசாமல் அமைதியாக அவர் வேலையை செய்து கொண்டிருந்தார்.

இளவரசனும் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு பின்பு எழுந்து அவன் அறைக்கு சென்று விட்டான்.

சற்று நேரத்தில் ஆபிஸ் செல்வதற்கு ரெடியாகி வந்த இளவரசனை சந்துரு பிடித்துக் கொண்டான்.

“என்னன்னா. நைட் எப்ப வந்தீங்க. காலைலயும் வெளியே கிளம்பிட்டீங்க. நேத்து வரைக்கும் எப்பவும் கூடவே பார்த்த அண்ணியை கொஞ்ச நேரம் கூட விட்டு இருக்க முடியலையா” என்றான்.

சந்துரு பேசியதை கேட்டுக் கொண்டே டிபன் எடுத்து வந்த அன்னையை முறைத்தான் இளவரசன்.

அதற்குள் சந்துரு “என்னன்னா. நான் கேட்டதுக்கு எதுவும் பதில் இல்லை. அம்மா கிட்ட சொல்லவா” என்றான்.

தன் அன்னையை பார்த்துக் கொண்டே “நீ எதுவுமே சொல்ல தேவையில்லை சந்துரு. அம்மாக்கே எல்லாம் தெரியும்” என்றான்.

சந்துரு மலங்க மலங்க விழித்தான்.

“தான் ஏதோ காமெடியாக பேசிக் கொண்டிருந்தால், இங்கு என்ன தான் நடக்கிறது, ஒரு வேளை அண்ணன் சும்மா சொல்கிறாரோ என்று இருவர் முகத்தையும் பார்த்தால் சீரியஸாக இருக்கிறதே” என்று எண்ணிக் கொண்டான்.

மெதுவாக “அண்ணா என்ன சொல்றீங்க” என்றான்.

“ஆமா சந்துரு. அம்மாவுக்கு எல்லாமே தெரியும்”

அப்பவும் சந்துரு விசயத்தின் சீரியஸ் புரியாமல் “ஓ. அப்ப நம்ம வீட்டுல சீக்கிரமே மேள சத்தம் கேட்க போகுது” என்றான்.

தன் அன்னையையே பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் “அது நம்ம கைல தான் இருக்கு. அவங்க மனசு வைச்சா அது நடக்கும். இல்லைனா அது நடக்காமலும் போகலாம்” என்றான்.

“என்ன சொல்றீங்க அண்ணா. எதுக்கு இப்படி அபசகுனமா பேசறீங்க”

“நான் அப்படி பேசலை சந்துரு. எல்லாம் நம்ம அம்மா தான் அப்படி பேசறாங்க. அவங்க கிட்டவே கேளு” என்று கூறிவிட்டு சென்று விட்டான் இளவரசன்.

ண்ணன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த சந்துரு திரும்பி அம்மாவை பார்த்தால் ராஜலக்ஷ்மி அங்கு கண்ணீருடன் இருந்தார்.

“அம்மா என்னம்மா நடக்குது இங்க. அண்ணன் என்ன சொல்லிட்டு போறாரு, நீங்க ஏன் அழறீங்க”

அவன் தாயும் நடந்த அனைத்தையும் கூறினார். சந்துரு அதை எதிர்த்து எவ்வளவோ கூறியும் அவன் தாய் அதை ஏற்பதாக இல்லை. சந்துரு நேரே கிளம்பி அண்ணனை பார்க்க சென்று விட்டான்.

சந்துருவை கண்ட இளவரசன் “வா சந்துரு. அம்மா என்ன சொன்னங்க” என்றான்.

“என்னன்னா என்னை எதிர்பார்த்துட்டு இருந்தீங்களா”

“ஆமா டா. இது வரைக்கும் அம்மா கிட்ட எதிர்த்து பேசினதே இல்லை. அந்த மாதிரி சிடுவேஷன் வந்ததே இல்லை. இப்ப அம்மா கிட்ட நேரா என்ன பேசறதுன்னு தெரியாம தான் அப்படி வேணும்னே பேசிட்டு வந்தேன். எப்படியும் நீ அம்மா கிட்ட இதை பத்தி பேசுவன்னு தெரியும்” என்றான்.

“நீங்க ரெண்டு பெரும் சரியான ஆளுங்க தான் அண்ணா. என்ன சொன்னாலும் அம்மா அவங்க ஸ்டான்ட்லயே தான் நிக்கறாங்க. இப்ப என்ன பிரச்சனைன்னா மாமாவோட சொந்த சிஸ்டர்ஸ் அண்ணியை பொண்ணு கேட்டுட்டு மாமா அவங்களுக்கு கொடுக்காம உங்களுக்கு கொடுத்தா அதனால மாமாக்கும் அவங்க சிஸ்டர்ஸ்க்கும் பிரச்சனை வருமாம். அம்மாவால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு நினைக்கறாங்க.”

“அம்மா ரொம்ப கிளியரா இருக்காங்க அண்ணா. என்ன சொல்லியும் அவங்க அதுல மாற மாட்றாங்க. நான் இதை பத்தியே பேசிட்டு இருந்ததுக்கு அவனே(இளவரசன்) என் கிட்ட இதை பத்தி பேச மாட்டான். நீ போ டான்னு சொல்றாங்க.”

இளவரசன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன.

அதை பார்த்த சந்துருவிற்கு தான் கஷ்டமாக இருந்தது.

“என்னன்னா. நீங்களே இப்படி பீல் பண்றீங்க. இதை விட பெரிய பிரச்சனை எல்லாம் நீங்க சமாளிச்சிருக்கீங்க. ஆனா இப்ப ஏன் இப்படி பீல் பண்றீங்க.”

“இல்ல சந்துரு. அப்ப நமக்கு பினான்சியலா ப்ராப்லம் இருந்துச்சி, அப்பாக்கு அப்புறம் எல்லாத்தையும் கவனிச்சிக்க ஆள் தேவைப்பட்டது. அது எல்லாம் வெளியில இருக்கற ப்ராப்லம். என்னால அதை எல்லாம் தாண்டி நல்லபடியா வெளிய வர முடிஞ்சது. ஆனா இப்ப ப்ராப்லம் வெளியில இருந்து இல்ல, நம்ம வீட்டுல தான். எந்த ஒரு வேலை செய்யறவங்களா இருந்தாலும் வீட்டுல மட்டும் நமக்கு நிம்மதி கிடைச்சா போதும். நாம எல்லாத்துலயும் ஜெயிச்சி வந்துடலாம். ஆனா வீட்டுல இருக்கற ப்ராப்லம் தான் சென்சிடிவ். அதை ரொம்ப யோசிச்சி தான் தீர்க்கணும்.”

“அண்ணா நீங்க இவ்வளவு எல்லாம் பீல் பண்ணாதீங்க. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம் அண்ணா”

“இல்ல டா. நானும் அப்படி தான் நினைச்சேன். மாமா எல்லாத்துக்கும் ஓகே சொல்லிட்டாரு. ஆனா அத்தை எங்க மேல கோபமா தான் இருக்காங்க. எனக்கே தெரியுது. நான் பெரிய பிரச்சனைல கொண்டு வந்து விட்டுட்டேன். சிம்பிளா முடிய வேண்டியது எப்படி வந்து நிக்குது பாரு. நேத்து வரைக்கும் நான் போனாலே சந்தோசமா என்னை வரவேற்கற அத்தை இன்னைக்கு என் முகத்தை பார்த்து கூட பேச மாட்றாங்க. எனக்கே இப்படி இருக்கு. இனியாக்கு எப்படி இருக்கும். நான் அவங்க கூட போயிருக்க கூடாது டா. நான் தான் தப்பு பண்ணிட்டேன். ரொம்ப கேர் பண்றதா நினைச்சி எவ்வளவு பெரிய ட்ரபிள் கொடுத்துட்டேன்”

“அண்ணா ப்ளீஸ் உங்களை இப்படி எல்லாம் பார்க்க முடியலை. எல்லாம் நல்லபடியா நடக்கும். இதை மட்டும் நினைச்சிக்கோங்க.”

“சரி டா. நீ கிளம்பு. எனக்கு டி.நகர்ல வேலை இருக்கு.”

“சரிண்ணா. நீங்க இதை எதையும் நினைக்காதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். ஓகே. பாய்”

“சரிடா”

இளவரசனுக்கு தான் வேலையே ஓடவில்லை. என்ன தான் முயற்சி செய்து அதை நினைக்க கூடாது என்று முயன்றாலும் அதை நினைக்காமல் இருக்க இயலவில்லை.

மாலை நான்கு மணியளவில் இளவரசனுக்கு சந்துரு போன் செய்து ஜோதியின் வீட்டிற்கு வர சொன்னான். என்னடா என்று கேட்டவனுக்கு முக்கியமான விஷயம் பேசணும் என்று மட்டும் கூறி வர செய்தான்.

இளவரசன் அங்கு சென்றால் ஜோதி, பாலு, அபி மற்றும் இனியா அங்கிருந்தனர். இளவரசன் இனியா அங்கு இருப்பாள் என்றே எண்ணவில்லை. ஜோதி தான் ஏதோ முக்கியமாக பேச அவனை அழைத்திருப்பார் என்று எண்ணியிருந்தான். ஆனால் இங்கோ இனியாவும் இருக்கிறாள்.

அனைவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு சென்ற இளவரசன் இனியாவையே பார்த்துக் கொண்டு சென்றான்.

பாலு தான் கிண்டலாக “இளவரசன் நாங்க எல்லாருமும் இங்கே தான் இருக்கிறோம்” என்றார்.

இளவரசன் மெலிதாக சிரித்துக் கொண்டான்.

பின்பு “எப்படி நீங்க எல்லாம் இப்படி கேலி பேசி சிரிச்சிட்டிருக்கீங்க” என்றான்.

சந்துரு “நான் சொல்லலை” என்றவாறு ஜோதியையும் பாலுவையும் பார்த்தான்.

பாலு “நான் பார்த்துக்கறேன்” என்றவாறு கண் சிமிட்டினான்.

“என்ன சகலை இப்படி கேட்கறீங்க. வீட்டுல ஒரு கல்யாணம் நடக்க போகுதுன்னா எல்லாரும் சந்தோசமா இப்படி கேலி பேசிட்டு தானே இருப்பாங்க” என்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.