(Reading time: 8 - 15 minutes)

15. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

ஷைனி, கீர்த்தி, தீபக் மூவரும் அமைதியாக ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். கீர்த்தி  அழைத்ததும் தீபக்கிற்கு என்ன ஏது என்று கூடக் கேட்கத் தோன்றவில்லை. உடனே கிளம்பி வந்து விட்டிருந்தான். ஆஃபீஸுக்குப் போகும் வழியில் இருக்கும் ரெஸ்டாரென்டில் வண்டியை நிறுத்திக் கீர்த்தியுடன் ஷைனியைப் பார்த்ததுவும்தான் 'ஓ நாம் இங்கே ஷைனியின் பிரச்னைக்குத் தான் வந்திருக்கிறோம் என்ற உணர்வே வந்தது.

 

யாராவது பேசித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன்

 

"நேற்று அப்புறமும் பிரச்னை பண்ணினாம்மா....?" என்று ஷைனியிடம் ஆதரவாகக் கேட்டான்.
"தினமும் பிரச்னைதான் ......அதைப் பற்றி என்ன பேச.....?எதைச் சொல்ல எதை விட......?"
இல்லே...திடீர்னு என்னைப் பார்க்கணும்னு  நீங்க சொன்னதா கீர்த்தி சொன்னதும் கொஞ்சம் பயந்துதான் போயிட்டேன். மறுபடியும் ரொம்பப் பெரிசா ஏதாவது செஞ்சுட்டானோன்னு பயந்துட்டேன்." தீபக் பேச்சினூடே கீர்த்தி என்று இயல்பாகப் பேர் சொல்லியதை ரொம்பவும் ரசித்துக் கொண்டே கவனியாதவள் போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.

"நான் உங்களைப் பார்க்க வந்ததே தயா இதுவரைக்கும் செய்ததைப் பற்றிப் பேச அல்ல.....இனி அவர் செய்யப் போற ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்காக....அதை நினைச்சுத்தான் பயந்துட்டு இன்னிக்கு உங்களைப் பார்க்க வந்தேன்."

"என்னம்மா சொல்றே?"

ஆமாங்க.....நேற்று நீங்க எல்லாம் போனப்புறம் 'ஏண்டி இப்பிடி எல்லார் முன்னாலேயும் என் மானத்தை வாங்கறே'ன்னு சத்தம் போட்டார்,
'நீதான் ஊர் சுற்றினதாவே இருந்துட்டுப் போகட்டுமே'ன்னு கத்தினார்.நாந்தான் மறந்துட்டேன்னு எல்லார் முன்னாலேயும் போட்டுக் கொடுக்கணுமா'ன்னு சொல்லிட்டுக் கடைசிலே ஒரு விஷயம் சொன்னார் பாருங்க....அதுலேதான் நடுங்கிப் போய் உங்களைப் பார்க்க வந்துருக்கேன்......"

"அப்படி என்ன சொன்னார்?"

'எல்லார் முன்னாலேயும் நீ நல்லவன்னு ப்ரூவ் பண்ணிட்டதா  நினைச்சுட்டிருக்கியா............ நீதான் ஓடுகாலின்னு ப்ரூவ் பண்ணலை.....என் பேரை மாத்திக்கிறேன்' அப்படீன்னு காட்டுக் கத்தல் கத்தினார்." என்றவாறு முகம்  சிவந்து அழ ஆரம்பித்தாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் கீர்த்தியும் ,தீபக்கும் அமைதியாக இருக்கவே ,ஷைனி அழுது கொண்டே
"நான் தயாவுக்காக ஆடுன ஆட்டத்துலே பெத்தவங்க....சொந்தக்காரங்க.....மற்றபடி அக்கம்பக்கம் ஊர் உறவு யாருமே இல்லாதவளா ஆகிட்டேன்.......இப்போ எனக்குன்னு ஆதரவு நீங்களும் கீர்த்தியும்தான்......அதுகூட நேற்று நீங்க ஏதும் பிரச்னைன்னா கால் பண்ணும்மான்னு சொன்னதுனாலேதான் உங்க உதவி கேட்கணும்னு நினைச்சேன்....ஃபோன்லே கூப்பிடக் கூட நம்பர் கிடையாதேன்னு தவிச்சுட்டிருக்கும் போதுதான் கீர்த்தி உங்களை எப்படித் தெரியும்னு கேட்டு பெரிய உதவி செய்திருக்காள்."

"அழாதே ஷைனி....எல்லாம் சரியாகிடும்...கண்ணைத் தொடைச்சுக்கோ"

தீபக் சூழ்நிலையை மாற்ற சர்வரைக் கூப்பிட்டு "மூணு காப்பி கொண்டு வாப்பா...." என்றான்.
"அவனைப் பற்றி உங்களுக்குத் தெரியாது......அவன் கொஞ்சம் ஓவரா சீன் போடுவான்....அப்படியெல்லாம் ஒன்றும் செய்யமாட்டான்....நிங்க பயப்படாம இருங்க....எதுவானாலும் உடனே கீர்த்திக்குச் சொல்லுங்க....எனக்கும் சொல்லுங்க.....முதல்லே உங்க நம்பரைக் கொடுங்க..."
"அதான் மொபைலை ரிப்பேருக்குக் கொடுத்து வச்சுருக்கேன்னு சொல்றாரெ தவிர திரும்பி வாங்கிட்டு வர மாட்டேங்குறார்....அதனாலே இப்போ என் கிட்டே மொபைல் இல்லே...."
"முதல்லே மொபைலுக்கு ஏற்பாடு பண்ணனும்....கனெக்டெடா இருப்பது ரொம்ப முக்கியம்."
ஷைனியைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

"சரி விடுங்க.....என் கிட்டே பழைய செட் ஒண்ணு இருக்கு....நாளைக்கு நான் கீர்த்திகிட்டே கொடுத்து விடுறேன்"
தீபக் அப்படி உரிமையுடன் சொன்னது கீர்த்திக்கு ரொம்பப் பிடித்திருந்தது.ம் ம்...எனத் தலையை ஆட்டினாள்.
"எனக்கு இன்னிக்கு ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகவே பயமாக இருக்கு....மறுபடியும் என்ன ட்ராமா போட்டு என்னைக் கேவலப் படுத்துவாரோன்னு இருக்கு..."

"இப்போ என்ன பண்ணலாம்....?" என்றாள் கீர்த்தி.

"உடனே எதுவும் பண்ண மாட்டான்னுதான் தோணுது....இருந்தாலும் இன்னிக்கு நான் அவனை யோசிக்கவிடாம எங்கேஜ்டா வச்சுக்கறேன்.........இன்னொண்ணு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் ....அவனுக்கு நண்பர்களே கிடையாது....அதனாலே அவன்  ஏதாவது ட்ராமா பண்ணுனாலும் அதில் நான் கண்டிப்பா இருப்பேன்....அதனாலே நீங்க கவலைப் படாதீங்க...."
"அவருக்கு நீங்க எப்படிப் பழக்கம்....?
"அடப் போங்க....சின்ன வயசுலேருந்தே ரெண்டு பேரும்   ஒண்ணாப் படிச்சோம்.....அவனுக்கு நான் மட்டும் தான் ஃப்ரெண்ட்......அப்புறம் படிப்பு...வேலை....அப்படின்னு காணாமப் போயிட்டோம்....அதுவுமில்லாம......" அப்படீன்னு சுபாக்காவுக்கு லவ் லட்டர் கொடுத்துப் பிரிந்த விஷயத்தை சொல்ல வந்தவன் ஏதோ நினைவுக்கு வந்து இந்த நேரத்தில் இடத்தில் சொல்வது சரியல்ல என்று நிறுத்திக் கொண்டான் தீபக்.


"வேற எதுவோ சொல்ல வந்தீங்க....?"
"இல்லையில்லை நீங்க லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிருக்கீங்க.....என்னைப் பற்றி ஒரு தடவை கூடவா சொல்லவில்லை?"
"ஊஹும்"
"சரி விடுங்க....நான் பார்த்துக்கிறேன்......... நீங்க கவலையில்லாமல் இருங்க.ஷைனி...கீர்த்தி நாளைக்கு இங்கியே உங்க்கிட்டே ஃபோனைக் கொண்டு வந்து கொடுக்கிறேன்"
"ஓ.கே" என்றவாறு நாளைக்குத் தன்னைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண்டதை நினைத்து மெல்லச் சிரித்துக் கொண்டாள் கீர்த்தி.
"தயா.....எப்பவுமே இப்பிடித்தானா....."
"இப்பிடீன்னா.....?
"எதுக்கும் ஓவர் ரியாக்ட் பண்ணுறது.....எதையும் அமைதியா செய்யத் தெரியாமல் ஆர்ப்பாட்டத்தோட செய்யறது...எடுத்தெறிஞ்சு பேசுறது....ஒரு நிமிடம் அன்பாக் கொட்டுறது.....மறுநிமிடம் நெருப்பாக் கொல்றதுன்னு என்னாலே புரிஞ்சுக்கவே முடியலை....."

"நீங்க லவ் பண்ணும் போது அவன் இப்பிடித்தான் இருந்தானா......."

"ஐய்யோ....எப்பிடிச் சொல்றது....அன்பு மழைதான்......கண்மூடித்தனமான் அன்புன்னா அப்பிடித்தான் இருக்கும்....ஆனால் அதுவே கல்யாணத்துக்கப்புறம்  அதுவேதான் கழுத்தை நெறிக்கற அன்பா மாறிப் போச்சு....."
"அதுதான் தயா......அவனாலே தனக்குப் பிரியமானவங்களைப் பெட்டிலே போட்டுப் பூட்டி வைக்காம இருக்க முடியாது....அதை அனுபவிச்சவன் நான். என்னை யார் கூடவும் பேச விடமாட்டான்......அவனுக்கு முதல்லே ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ளெக்ஸ் உண்டு.....அதனாலேயே யார்கூடவும் அவனாகப் போய்ப் பழகமாட்டான். ரொம்பவும் பழைய பஞ்சாங்கமா அம்மாஞ்சியா இருப்பான்....அதனாலேயே யாரும் அவன் பக்கத்துலேயே போகமாட்டங்க.....நான் ரொம்பவும் அவன் கிட்டே பிரியமா இருந்தாலும் அவன் தன்னோட அன்புனாலே சிலநேரம் உயிரை உறிஞ்சும் அளவுக்குப் போகும் போது கொஞ்சம் விலகிப் போனதுண்டு.....அவ்வ்ளோ ஓல்ட் மாடலா இருந்தவனை இத்தனை வருடம் கழித்துக் கொஞ்சம் ஓவர் மாடர்னாப் பார்த்த போது கொஞ்சம் ஷாக்கானது உண்மைதான்."

அவனை இவ்வ்ளோ புரிஞ்சுருக்கானே....என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் ஷைனி.

"ஆனாலும் அவனிடம் ஒரு மெல்லியதான ஒட்டுதல் இருந்து கொண்டேதான் இருந்திருக்கிறது.....அதனால்தான் அவனைப் பற்றி நல்லாத் தெரிந்திருந்தும் அவன் ஒரு பிரச்னைன்னா வந்து நிக்கணும்னு தோணுது....அவனை நான் என் நண்பன்னு யார்கிட்டேயும் நான் சொல்லிக் கொண்டதேயில்லை.....என் மற்ற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவனை வைத்து என்னிடம் கிண்டல் பண்ணும் போது கூட எனக்கு அவன் ஃப்ரெண்ட்னு சொல்லமாட்டேன்....அவனுக்கு நான் நண்பன்னுதான் சொல்வேன்...ஏன்னா பொதுவிடத்தில் அவனுடைய நடவடிக்கைகள்தான் என்னை அப்படி அன்னியப்படுத்தியிருக்கவேண்டும்.....ம்...ம் அவனைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது.....ஆனால் இன்னிக்கில்ல.......இன்னொரு நாள் நிதானமாப் பேசலாம்.......ஆஃபீஸுக்குப் போகணும் ...நேரமாச்சுல்லே...."

"ஆமாமா......"என்றாள் கீர்த்தி.

"ஒரு நிமிடம் ....நான் வாஷ்ரூம் போகணும்....கீர்த்தி வர்றியா..."
தீபக்குடன் தனியாகக் கிடைக்கும் சில மணித்துளிகளுக்காக
"இல்லே....நீ போயிட்டு வா" என்று ஷைனியை அனுப்பிவைத்தாள்.

ஷைனி நகரந்ததும்
"ரொம்ப தேங்க்ஸ்"
"எதுக்கு தேக்ஸ்லாம்"
"இல்லே நான் கூப்பிட்டவுடன் வந்ததுக்கு......"
"ஓ"
"எப்பிடியோ இன்னிக்கு நம்ம சந்திக்கணும்னு இருந்துருக்கு....."
"எப்பிடிச் சொல்றீங்க...."
"பாருங்க...காலைலியே நீங்க யாரோ ஃப்ரெண்ட்னு நினைச்சு எனக்குக் கூப்பிட்டீங்க.....அப்புறம்.......... " என்று சொல்லிக் கொண்டே போனவன் கீர்த்தியின் முகம் மாறியதைப் பார்த்து

"என்ன ஆச்சு.....?"
"போச்சு.....தயா வந்துக்கிட்டு இருக்கார்"

இவன் எதுக்கு....எப்பிடி இங்கே வந்தான்.....என்று யோசித்துக் கொண்டே அவனைத் தவிர்க்க முடியுமா....என ரெஸ்டாரெண்டை நோட்டம் விட்டான்.
தலையை நன்றாகக் குனிந்து கொண்டான்.இப்போ இங்கே இந்த நேரத்தில் ஷைனியை இங்கே பார்த்தால் அவன் எப்படி ரியாக்ட் செய்வான் என்று நினைக்கவே பயமாக இருந்தது தீபக்குக்கு.

கீர்த்தியிடம் மெதுவாக "நீ வாஷ்ரூம் போய் ஷைனியிடம் இப்போ வெளியில் வராதே....என்று சொல்லிவிட்டு வா....அதற்குள் இவனை நான் சமாளித்து விடுகிறேன்" என்றவாறு மெதுவாகத் தலையை நிமிர்த்திப் பார்த்த தீபக் தயா எதிரில் நிற்பதைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்தான்.

ஆனால் தயா தீபக்கை முதலில் பார்க்கவில்லை.அவன் கவனம் கீர்த்தியிடமிருந்தது.
"என்ன கீர்த்தி மேடம் இன்னிக்கு ஆஃபீஸ் இல்லையா....இல்லே ஆஃபீஸுக்கு மட்டம் போட்டுட்டு....இப்பிடி..." என்றவாறு தீபக்கைப் பார்த்தவன்
 "ஏய் என்னடா....நீ இங்கே என்ன பண்றே....நாங்க கூப்பிட்டாலாம் வேலையிருக்குன்ன்னு ஆஃபீஸுக்கு லீவ் போடமாட்டீங்க....இப்போ சார் ஆஃஃபீஸ் நேரத்துலே.....ரைட்டு....அப்புறம்...தீபக் கீர்த்தி மேடமை எப்பிடித் தெரியும் உனக்கு?"என்று கேட்டுக் ஒண்டிருக்கும் போது வாஷ்ரூமை விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தாள் ஷைனி. 

தொடரும்

Karai othungum meengal - 14

Karai othungum meengal - 16

{kunena_discuss:678}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.