(Reading time: 32 - 63 minutes)

22. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka


சாரி சந்தியா...எல்லாத்துக்கும். “ என்ற கார்த்திக்கின் குறுந்செய்தியை படித்த சந்தியாவிற்கு  கோபம் வந்தது...

“சாரி சந்தியா” அவளை அவனிடமிருந்து அந்நியமாக்கியது.

“எங்க அப்பா வைத்த பெயர் இப்போ தான் உனக்கு தெரியுதா ? ஒரு வரியில் ஒட்டு மொத்தமாக கணக்கை முடித்து எங்கடா ஓட பாக்கிற? ” என்று,

போனையே வெறித்து பார்த்தவள், அதில் சக்தியின் அழைப்பு வர எடுத்தாள்.

“ க்ளாஸ்க்கு வர்றியா ஜந்து?”

“வரலடி சக்கு.” என்றவள் முந்தைய நாள் நிகழ்வுகளை தோழியிடம் சுருக்கமாக பகிர்ந்து விட்டு, லக்ஷ்மியை பார்க்க வந்தாள். அவர் அருகில்  இருந்த தன்ராஜ், “சந்தியா, யோகா கிளாஸ் முடிச்சிட்டு சவுபர்ணிகா ஆண்டியை பாத்துட்டு வந்துடு. அவங்க உன்கிட்ட ஏதோ பெயிண்டிங் காட்டணும்னு  இப்போ தான் வீட்டுக்கு போன் பண்ணாங்க” என்றார்.

“இன்னைக்கு க்ளாஸ்க்கு போகலைபா. அம்மாக்கு ஹெல்ப்புக்கு வீட்டிலே இருக்கிறேனே?” கெஞ்சலாக கேட்டாள்.

“ஒரு மாசம் பீஸ் கட்டிருக்கு. கால் வலின்னு ஏற்கனவே ஒரு வாரம் லீவு போட்ட. துட்டுக்கு வந்த கேடா?  அம்மாவை நானும் விந்தியாவும் பாத்துக்குவோம். நீ போயிட்டு வா.“ அதட்டலாக சொன்னவரிடம் மறு பேச்சு சந்தியாவால் பேச முடியவில்லை. அவர் கண்டிப்பான பேர்வழி ஆயிற்றே. வீணாக வகுப்புகளை மட்டம் போடவும் விடமாட்டார், காசு  விரயமாவதையும் விரும்ப மாட்டார்.

வகுப்புகள் முடிந்து கிளம்பும் போது, “என்னடி சகுனி என்ன சொல்றார்?” கேட்டாள் சக்தி.

“அவனை பத்தி பேசாத. எனக்கு கெட்ட கோபம் வருது”, திட்டினாள் சந்தியா.

“சகுனி மேல கோபம்ன்னா  சகுனிகிட்ட காட்டு. என்கிட்ட காமிச்சு என்ன புண்ணியம்?”, சக்தி.

“சாரி கேட்டு மெசேஜ் அனுப்பி இருக்கான்...சிக்கினா அவன் சிக்கன் 65 தான்டி”,  சந்தியா காட்டமாக சொன்னாள்.

“நீ தான்டி அவன் சாரி கூட கேக்க மாட்டேன்றான் போன வாரம் இன்டர்வியூ முடிச்சிட்டு வந்து திட்டுன. ”, சக்தி

“அது போன வாரம்”

“நான் அடுத்த வாரம்ன்னா சொன்னேன்”, சக்தி.

“நீ என் ஆளா? அவன் ஆளா?”, கேட்டாள் சந்தியா.

“சத்தியமா உன் ஆள் தான்டி. ஜந்து, எங்க மாடியை எடுத்து கட்டுறாங்க. அதானால எங்க மாலு அத்தை வீட்டில தான் தங்க போறேன். அங்கயிருந்து யோகா கிளாஸ் தூரம். இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பக்கம் வர முடியாது.“, சக்தி.

“எதுக்குடி அந்த சிடுமூஞ்சி வீட்டுக்கு போற. எங்க வீட்டுக்கு வாயேன்டி. மாமாட்ட நான் பேசுறேன். உனக்கு கிளாஸ்சும் கட் ஆகாதுல”, கேட்டாள் சக்தி.

“ஜந்து, ஒரு நாள் தங்குனாவே உன் மொக்கைய தாங்க முடியாம காதுல ரத்தம் வரும். ஒரு வாரம்! எனக்கு எதிர்ப்பு சக்தி வேற கம்மிடி. ப்ளீஸ் எங்க மாலு அத்தை சிடுமூஞ்சினாலும் பேசாம தான்டி கொல்லும். அதுனால என்னோட பாடி பார்ட்ஸ்க்கு எந்த சேதாரமும் வராது. நான் வேணா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்துட்டுப் போறேன்.”, கெஞ்சாத குறையாக கேட்டாள் சக்தி.

“கல்யாணம் ஆகி போயிட்டா இப்படி வர முடியுமா?...இடுப்புல ஒன்னு வயுத்துல ஒன்னுன்னு குடும்ப இஸ்திரியாகிடுவியே ? ஒழுங்கா வந்து சேரு. வீணா என் அண்டாகாகசப் பெட்டியை திறக்க வைச்சிடாத”, மிரட்டினாள் சந்தியா.

“சந்தடி சாக்குல என்னை வாருறதுலே குறியா இரு. சரி எங்க அம்மா அப்பாட்ட கேட்டுப் பாக்கிறேன். எனக்கும் ஆசையா  தான் இருக்கு. ஆனா, அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லைன்னு சொல்ற. நானும் வந்தா அவங்களுக்கு சிரமம் இல்லையா?”

“அதெல்லாம் சிரமமே இல்லை...எனக்கும் ஆபிஸ் வேலை அதிகமா இருக்கு. அம்மா தனியா பூமாவை நினச்சு கவலைப்படுறதுக்கு ஒரு கம்பெனி கிடைத்தா நல்லா தான் இருக்கும்.”, சந்தியா.

அவள் சொன்னது திருப்தி அளிக்க சக்தி  அன்று மாலையே வீட்டிற்கு வருவதாக ஒத்துக் கொண்டாள்...

க்தி சென்ற பின், சதாசிவத்தின் பங்களாவிற்கு வந்தவள், அழைப்பு மணியை அடிக்க அவசியம் இல்லாமல் கதவு திறந்திருந்தது.

“ஆண்ட்டி”, சற்று குரலை உயர்த்தி அழைத்தாள்.

அவளை கவனித்த பணிப்பெண், “உள்ள வாங்கம்மா. பெரிய அம்மாவை கூப்பிடுறேன்”  என செய்தி சொல்ல ஓடினாள். இதற்கு முன்பு வந்த போது கும்பலால் நிறைந்திருந்த வரவேற்பறை வெறிச்சோடி போயிருந்தது. அவள் உள்ளே நுழையும் பொழுது சௌபர்ணிகாவும் எதிர் பட அவளை தனது ஓவியம் தீட்டும் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த ஓவியங்களை பிரமிப்பாக பார்த்து  அதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பின், சௌபர்ணிகா  பாதி வரைய பட்டு, அரைகுறையாக இருந்த  ஓவியங்களை அவளிடம் காண்பித்தார்.

“சந்தியா இங்க பாரு சிலது நான் அவுட்லைன் மட்டும் போட்டு வைச்சிருக்கேன். என்னால பெயின்ட் பண்ணவே முடியறது இல்லை. ப்ரஸ்சை எடுத்தா கை நடுங்குது.  நீன்னா ஒரே வாரத்திலே  முடிச்சிடுவ “ என்றார்.

“ஆண்டி இதெல்லாம் எத்தனை வருஷ பழசு? நீங்க  பெயின்ட் பண்ணியே பல வருஷம் ஆகியிருக்கு போல? நாம சேந்து பண்ணா இன்னும் சீக்கிரம் முடிக்கலாம். நீங்க கலர்  சஜெஸ்ட்  பண்ணுங்க நான் பெயின்ட் பண்றேன். இன்னைக்கே ஆரம்பிப்போம்”  என்று வர்ணம் தீட்டுவதில் ஆர்வமாக  ஆயத்தமானவளை  தடுத்தவர்,

 “இன்னைக்கு தான் வந்திருக்க. நாளையில் இருந்து ஆரம்பிக்கலாம். அதை விட முக்கியமான விஷயம் உன்கூட பேசணும். வா” என்று புதிர் போட்ட படி அவளை சதாசிவம் அறைக்கு அழைத்துச் சென்றார்.

“வா சந்தியா” புன்முறுவலுடன் வரவேற்றார் சதாசிவம். சிறிதாக இருந்தாலும் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்த அறை. அறையின் ஓரத்தில் இருந்த மேஜையில் படித்துக் கொண்டிருந்த ஆங்கில திரில்லர் நாவலில் அடையாளக் குறிப்பு வைத்து மூடி வைத்தவர்   அங்கிருந்த சோபாவை  கை காட்டி “உட்காரும்மா” என்றார் கனிவாக.  அவள் அந்த சோபாவில் உட்கார, சௌபர்ணிகாவும் அவளருகில் அமர்ந்தார்.

“என்ன அங்கிள் காலையில் புக் ரீடிங்கா”, புன்முறுவலுடன் கேட்டாள்.

“பிள்ளைங்க யாரும் இல்லாம வீடே வெறிச்சோடி போச்சு. அதான், சரி நேத்து நைட் படிச்சப்போ இதை கீழ வைக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸ்ஸா இருந்தது. அதான் இப்போ உட்கார்ந்து மீதி கதையை முடிச்சிடுவோம்ன்னு பார்த்தேன். ”

“எனக்கும் ரகசியம் தெரிஞ்சிகாட்டி மண்டை வெடிச்சிடும. அதுக்கு தான் இந்த திரில்லர் கதையே படிக்கிறது இல்லை. ஹால்ல யாரும் இல்லாம பயங்கர அமைதியா இருந்ததை நானும் கவனிச்சேன். எங்க அங்கிள் எல்லாரும்?”, ஆர்வமாக வினவினாள்.

“நல்ல சிவம் மகளை பாக்க குடும்பத்தோட லண்டன் போயிட்டான். சூர்யா குடும்பத்தோட மாமனார் வீட்டுக்கு போயிட்டான். கார்த்திக் அமெரிக்காவுக்கு. மதுக்குட்டி மட்டும் தான் இருக்கு. அவளை பத்தி பேச தான் உன்னை கூப்பிட்டேன் சந்தியா.  அவ வர்றதுக்குள்ள பேசணும். நேரா விஷயத்துக்கு வாரேன்” என்று தொண்டையை செருமியவர்  நாற்காலியை சந்தியா பக்கம் திருப்பி போட்டு அமர்ந்து,

“மது அன்பு இல்லத்துக்கு இந்த ரெண்டு நாளா போயிட்டு வந்ததுல இருந்து அந்த குழந்தை ஹர்ஷினியை பத்தியே பேசிகிட்டு இருந்தா. நேத்து நைட்டு திடுதிப்புன்னு வந்து அந்த குழந்தைய பாக்க பாவமா இருக்கு. நாம தத்து எடுத்திடலாமா?  பாட்டி  அம்மாவா இருந்த என்னை வளர்த்த மாதிரி, நான் ஹர்ஷினிக்கு அம்மாவா இருந்து  வளத்துடுவேன். இதுக்கு அத்தைகிட்ட சம்மதம் வாங்கி தாங்கன்னு கேக்குறா. நான் என்ன சொல்றதுன்னே தெரியலைம்மா. ப்ச்ச்” என்று அலுத்துக் கொண்டு குனிந்து தலையில் கை வைத்தவர், சில நொடி மௌனத்திற்கு பின், பழைய நிலைக்கு வந்து, சந்தியாவை பார்த்து,  “உன் கூட பழகுன பிறகு தான் ஒன்னு ரெண்டு இடத்துக்கு போயிட்டு வர்றான்னு சந்தோஷப்பட்டோம். அதுலயும் சிக்கல் வருதே”,  பொறுமையிழந்தவாராய் பெருமூச்சு விட்டார்.

அவர் சொல்வதை  லேசான அதிர்ச்சியுடன் பார்த்தாள் சந்தியா.

“சூர்யா அமெரிக்கால இருந்து லேடி சைக்காலஜிஸ்ட்டை இங்க ஒரு வாரம் அனுப்பி  மதுவுக்கே தெரியாம அவளுக்கு கவுன்சிலிங் பண்ண வைக்கிறேன்னு  சொல்றான். காதி சந்தியாகிட்ட பேசுங்க. அவ மதுவை அழகா ஹேண்டில் பண்ணிடுவான்னு  சொல்றான். உனக்கு என்னம்மா தோணுது?” என்று கேட்ட சதாசிவத்தின்  முகத்தில் ஓடிய கவலை ரேகையை புரிந்தவளாய்,

“கார்த்திக் சொல்றது கரெக்ட் அங்கிள். மதுக்கு பிரச்சனையே வெளி உலகம் பாக்காதது தான். அவளுக்குன்னு நெருக்கமா நட்பு வட்டாரம் அமையாதது தான். அவ பாட்டி மூலமா தான் உலகத்தை இத்தனை வருஷம் பாத்திருக்கா. முதல் முறையா அன்பு இல்லத்தை பாத்தவுடனே அவளுக்குள்ள இருக்கிற இரக்க குணம் தான் அவளை இப்படி யோசிக்க வைத்திருக்கு. சின்ன வயசுல நானும் கூட இப்படி யோசிச்சிருக்கேன். மதுவுக்கு புரிய வைக்க என்னால முடியும். கவலையை விடுங்க” தைரியம் சொன்னாள்.

“நான் வேண்டாம்னு சொன்னா கேட்டுக்குவா. என்ன மறுபடியும் டிப்ரஸ் ஆகிட கூடாது. அந்த பயம் தான் எங்களுக்கு ”, சோர்ந்த குரலில் ஒலித்தார்  சௌபர்ணிகா.

“மது அறியாத பொண்ணு தான். ஆனா, புரியாத பொண்ணு இல்லை. நான் அவகிட்ட பேசுறேன் ஆண்டி” பொறுப்பை கையில் எடுத்தாள். சௌபர்ணிகா அவளை மேச்சுதலாக பார்த்தவர் “உன்கிட்ட பேசுனாலே தைரியம் தானா வருது. ” என்றார். பதிலுக்கு புன்முறுவலை மட்டும் தந்து அமைதி காத்தாள் சந்தியா.

நாற்காலியில் உட்கார்ந்திருந்த சதாசிவம்  எழுந்து, கையை பின்புறமாக கட்டிய  படி இரண்டு எட்டு வைத்து விட்டு நின்றவர், “வேணி தான் வாழலை, இவளுக்காவது நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கலாம்னு நினைக்கிறேன் சந்தியா. ” கவனமாக உணர்ச்சிகளை துடைத்து விட்டு சொன்னார். “ஆனா, அதுக்கு முன்னாடி நான் கண்ணை மூடிடுவேன் போல இருக்கே“ , குரலில் கவலை ஒலித்தது.

“கடவுள் நம்பிக்கை இருக்கா உங்களுக்கு?”, சந்தியா

“இல்லைம்மா...நான் கோவிலுக்கு  போய் பல வருஷமாச்சு. “

“நம்பிக்கை கடவுள் ?”, என்றாள் சந்தியா.

சிரித்தார், சதாசிவம். “கெட்டிக்காரி, நம்பிக்கை வைன்னு சொல்லாம சொல்றா”, அவள் தோளில் தட்டினார் சௌபர்ணிகா.

“எங்க காதியும் கெட்டிக்காரன் தான். அதான் பொறுப்பை உன்கிட்ட ஒப்படைக்க சொன்னான். ”, என்றார் சதாசிவம்.

“ஆமா கெட்டிக்காரன்… சரியான காரியவாதி. “ அவளுள் உள்ள அவனுக்கு அழகு காட்டினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.