(Reading time: 32 - 63 minutes)

சென்னைல மதுவையும் நிரஞ்சனையும் சந்திக்க ஏற்பாடு உன் மூலமா செய்யுறதா காதி சொன்னான். பெரியவங்க இல்லாம ஒரு வீட்டில வயசு பிள்ளைங்க தங்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை. காதி பாட்டியும் தாத்தாவும் அதாவது சௌபர்ணிகாவோட அம்மா அப்பா உங்க கூட தங்குவாங்க.” என்றார்.

சந்தியாவுக்கு எரிச்சலாய் வந்தது. “அய்யோ பிரண்ட்ஸ் கூட சேர்ந்து ஆட முடியாதே. ஏன் கார்த்திக் என்னை முதியோர் இல்லத்திலே கொண்டு போய் விடுற. ஏதாவது  சொல்லி தட்டி கழிக்கணும்” மனதிற்குள் நினைத்துக் கொண்டு,

“அங்கிள் அது வந்து, நாங்க இன்னும் சென்னைல  தங்குற இடத்தை பத்தி டிசைட் பண்ணலை. எல்லாரும் ஓகே சொல்லணுமே. ” என்றாள்  யோசனையாய்...

“அப்படியா? காதி உன்னோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க. அவங்க  எத்தனை பேரு வர்றாங்கன்னு முதற்கொண்டு சொன்னானேம்மா” என்றார் சதாசிவம்.

“என்னது” புது தகவல்களை கேட்டு அதிர்ச்சியாய் பார்த்தாள்.

“உன்கிட்ட சொல்லலையா?”,கேட்டார் சதாசிவம்.

“இல்லையே. அப்போ கார்த்திக்கும்  வருவேன் சொன்னாரா அங்கிள்?” அவனை காணும் ஆவலில் கேட்டாள் சந்தியா.

“இல்லைம்மா உங்க கூட வர மாட்டான். ஜூன் 4, நேரா சென்னை கான்பரன்ஸ்க்கு வந்திட்டு அப்படியே கிளம்பிடுவேன்னு சொன்னான்.” என்று தகவல் சொன்னார்.

“அப்பவாவது பாக்க முடியுமா…”ஏங்கியது அவள் மனம்.

பணிப்பெண் காபி கொண்டு வந்து காபி கோப்பையை நீட்ட, தயக்கத்துடனே, “காபி குடிக்க மாட்டேன் ஆண்ட்டி ” என்றாள் சௌபர்ணிகாவிடம்.

“நல்ல பழக்கம். ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வா” என்று சௌபர்ணிகா அழைக்கும் நேரம் வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு வர, சதாசிவத்திடம் சந்தியாவை அழைத்து வருமாறு சொல்லி விட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினார். அவர் சென்றதும்,

“அவளுக்கு சொர்ணாக்கான்னு பேரு வச்சது நீ தான?” கேட்டார் சதாசிவம்.

அவர் சிநேகமாய் பேசுவதை பார்த்து வியந்தவள், “சாரி அங்கிள். ஆனா, ஆண்டி என்னை அநியாயத்துக்கு நல்லவன்னு நம்புறாங்க. ”, என்று குறும்பாக சொன்னாள்.  

சிரித்தார் சதாசிவம். அவளே தொடர்ந்தாள், “உண்மையை சொல்லுங்க அங்கிள், இந்த சௌபர்ணிகால ஏகப்பட்ட நெளிசல் இருக்கே. இந்த பேரை வேகமா சொல்ல முடியுமா? “

அவள் கேட்பதை பார்த்து மேலும் சிரித்த சதாசிவம், “உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டே வந்து என் ஒய்ப் பேரை நக்கலடிப்ப?”

“ஒய்பை நக்கலடிச்சா ஹஸ்பன்ட்ஸ் சந்தோஷப் பாடுவாங்களாம்...சர்வே சொல்லுது. “

“ஓ...அப்படியா?”

“என்ன அப்படியா? நீங்க சந்தோஷப் படுறதை சர்வே என்ன சந்தியாவே சொல்லுவா”

மீண்டும் சிரித்தார். சௌபர்ணிகா போன் பேசி விட்டு அவர்கள் இருந்த அறை நோக்கி வர, பயந்தது போல “சொர்ணாக்கா இஸ் பேக்” ரகசியமாய் சொல்ல, ரகசியமாய் சிரித்தாள் சந்தியா.

அவர்கள் அருகில் வந்த சௌபர்ணிகா “இன்னும் இங்க நிக்குறீங்க?” அதட்டலாய் கேட்டு  “வாங்க சாப்பிடலாம்” மிடுக்காக சொல்லிவிட்டு முன்னே நடக்க, “ஆண்ட்டி அது வந்து…” சந்தியா சொல்வதை  சட்டை செய்யாமல் முன்னே நடந்தார் சௌபர்ணிகா. அதே நேரம் மதுவும் வர இருவரும் அருகருகே அமர்ந்தனர்.

“சந்தியா நீ மது பிரண்ட் தான?”, சௌபர்ணிகா.

“ஆமா ஆண்ட்டி”, சந்தியா.

“மது இங்க யாரை எப்படி கூப்பிடுறாளோ அப்படியே நீயும் கூப்பிடு” கட்டளையாக சொன்னார் சௌபர்ணிகா.

ஒரு நொடி திடுக்கிட்ட சந்தியா பின் சரியென தலையாட்டினாள்.

“வாயை திறந்து சொல்லு”  சௌபர்ணிகாவின் அடுத்த கட்டளை.

“சரி ஆண்…” என்று விட்டு மதுவை பார்க்க “அத்தை” என அவள் எடுத்து கொடுத்தாள். “சரி அத்தை” என்றாள் சந்தியா பவ்யமாக. அத்தை என்று அழைப்பது வித்தியாசமாக இருந்தது, அவளுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் அது இப்போது முக்கியமில்லை. தட்டில் இரண்டு இட்லியை வைத்தவள், சட்டினியை வைத்துக் கொண்டே,

“மது, ஹர்ஷினியை ஏன் தத்தெடுக்கணும்ன்னு சொல்ற?”

அவள் கேள்வியில் அதிர்ச்சியான மது, சதாசிவத்தை பார்க்க, “மது, அங்கிள் தான் என்கிட்ட சொன்னாங்க. ஏன் அப்படி நினச்சன்னு சொல்லு தெரிஞ்சிக்கிறேன்.”, மதுவிடம் இருந்து கண்களை விளக்காமல்.

“ஹர்ஷினிக்கு சரியா சாப்பாடு இல்லை. அவளுக்கு நல்ல ட்ரெஸ் இல்லை. அவளை பாத்துக்கிறவங்க நீட்டா இல்லை. அவளை ஒரு அழுக்கு பிளாங்கெட் வச்சு போர்த்துறாங்க. கரன்ட் போச்சுன்னா கொசுக் கடி. கிழிந்த  பாய்...பிறந்த குழந்தைக்கு அவங்க கவனிப்பு பத்தாது. அங்க நிறைய பசங்க இருக்கிறதுனால இவல சரியா கவனிக்க  மாட்டேன்றாங்க “ என்று குறைகளை அடுக்கினாள்.

“நீ சொல்ற பாயின்ட் எல்லாம் குறிப்பு எடுத்து விட்டேன். சரி பண்ணுவோம். இந்த மாதிரி சூழ்நிலையில தான் அஜூ கூட வளர்ந்தான். அவன் ஒரு  வலிப்பு நோயாளி. அவன் என்ன குறைஞ்சு போயிட்டான் மது? ”, கேட்டாள் சந்தியா.

“ப்ச்...எனக்கு ஹர்ஷினியை பிடிச்சிருக்கு சந்தியா. அவளுக்கு நல்ல அம்மாவா  இருக்கணும்னு ஆசையா இருக்கு. அவ்வளவு தான் “, மது.

“ஹர்ஷினி பொம்மை இல்லை மது. பிடிச்சிருக்கு வைச்சுக்கிடலாம்ன்னு நினைக்கிறதுக்கு. எதை வைச்சு நீ நல்ல அம்மாவா இருப்பேன் சொல்ற?”, கேள்வியாய் பார்த்து கேள்வியை கேட்டாள்.

“எனக்கு எங்க பாட்டி அம்மாவா இருந்தாங்களே அதை வைச்சு”, உறுதியாக சொன்னாள் மது.

“உங்க பாட்டி அம்மாவா உன்னை வளத்திருந்தாங்கன்னா நீ இந்த நேரம் கல்யாணமே வேண்டாம்ன்னு அடம் பிடிச்சிருக்க மாட்ட. கல்யாணப் பேச்சை எடுத்தாலே டிப்ரஸ் ஆக மாட்ட “

“உனக்கு என்ன தெரியும் எங்க பாட்டியை பத்தி” கோபத்துடன் அழுகையும் சேர்ந்து வந்தது மதுவிற்கு.

“உங்க பாட்டி உன்னை அம்மாவா வளர்க்கலை. உங்கம்மாவோட அம்மாவா தான் வளத்திருக்காங்க. நான் ஒரு விஷயம் சொன்னவுடனே உன்னால தாங்க முடியாம அழுகை வருது. கல்யாணமே பண்ணாம ஹர்ஷினியை நீ வளத்தா ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேசுவாங்க. ஒவ்வொருத்தவங்க சொல்றதுக்கு உட்காந்து அழுதுகிட்டு இருந்தா...இருந்தான்னு ஏன் சொல்லணும்? கண்டிப்பா அழுதுகிட்டே தான் இருப்ப… பின்ன, அந்த குழந்தையை எப்படி கவனிக்க முடியம்? “ வெளிப்படையாக கேட்டாள் சந்தியா.

ங்கு நடப்பதை வேறும் பார்வையாளர்களாக மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர் சதாசிவமும், சௌபர்ணிகாவும். மதுவிடம் அடாவடியாக பேசும் சந்தியாவின் பேச்சை மது எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று இருவருக்கும்   உள்ளூர பயம் தொற்றிக் கொண்டது.

சந்தியா கேட்டதும் தன் மேல் குறுகிய மனப்பான்மை தோன்ற இயலாமையில், “ஆமா, என்னால எதுவுமே முடியாது, ஐ ஆம் பிட் பார் நத்திங்”  என்று சொல்லி அழுது கொண்டே எழுந்திருக்க,  அவள் கையை பிடித்து  இழுத்த சந்தியா, “வெரி குட் மது. என் பிரண்ட்ன்னா பிட் பார் நத்திங்கா தான்  இருக்கணும்.” குறும்பாக சொல்லி அவளை சிரிக்க வைக்க முயல,  மதுவோ கையை உதறிக் கொண்டு,

“ சட் யுவர் மவுத்” என்றாள் எரிச்சலாய்.

“சட்டிய போட்டு கவுத்”, சந்தியா அதே குறும்புடன்.

கொஞ்சம் கோபம் மறைந்தாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, தட்டை எடுத்து சமையலறையில் கழுவ, சந்தியாவும் அவள் பின்னே தட்டை தூக்கிக் கொண்டு “விம் போட்டு விளக்குவியா? நைஸ் நைஸ், அப்படியே இதுக்கும்… “ தன் தட்டை கொடுக்க, அதை பிடுங்கிய மது, சிங்கில் தூர விசிறி எரிந்து கோபத்தை காட்டினாள்.

“அய்...ஸ்கூல்ல  டிஸ்கஸ் த்ரோல பெரிய ஆளாயிருப்ப போல ”  சந்தியா விடாமல் சீண்ட,

மதுவோ பேசாமல் முன்னே இரண்டு எட்டு வைக்க, “சரி. நீ பேச மாட்டா. சாயங்காலம் முடிஞ்சா அம்மாவை பாக்க வா… அம்மாவை  நேத்து எமர்ஜென்சில அட்மிட் பண்ற மாதிரி ஆகிடுச்சு”

அதை கேட்டவுடன் காத்து இறங்கிய பலூன் போல கோபம் காணாமல் போய் கவலை தொற்ற , ‘பொய் சொல்ற”, சொன்னாள் மது.

“சீ... அம்மா விஷயத்தில எல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஹை பிபி கொஞ்சம் சிவியர் ஆகிடுச்சு” , விளக்கினாள் சந்தியா.

“ஆண்ட்டி இப்போ எப்படி இருக்காங்க? இஸ் ஷி ஆல்ரைட்?”, பதறினாள் மது.

“இப்போ பெட்டர். நேத்து  திடீர்னு  மயங்கிட்டாங்க.  டாக்டர் பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. எதுக்கும் வாதம் வர்றதுக்கு அறிகுறியான்னு மூளையில் ஸ்கேன் பாக்க சொல்லியிருக்காங்க. ” என்றாள் வருத்தமாக.

“இவ்வளோ  விஷயம் நடந்திருக்கு. ஏன் எங்கிட்ட சொல்லலை, சந்தியா. “, ஆதங்கமாய் கேட்டாள் மது.

“உன்கிட்ட சொல்ல தான் வந்தேன். நீ இப்படி ஒரு கிறுக்குத்தனமான முடிவெடித்து வைச்சிருக்கியே. புத்திமதி சொன்னா அழுதுடுற. என்னத்தை சொல்ல. “ அலுத்துக் கொண்டாள் சந்தியா.

“கல்யாணம் பண்ணாம குழந்தைய தத்து எடுத்து வளக்க கூடாதா?”, கேட்டாள் மது.

“அதுக்கு முன்னாடி நீ இன்னொன்று வளக்கணும். “, சந்தியா புதிர் போட்டாள்.

“என்னது?”, மது.

“மன தைரியம். அது இல்லைன்னா இந்த சொசைட்டிய எதிர்கொள்ள முடியாது. அதை முதல்ல வளத்துக்கோ. அப்புறம் மத்ததை யோசிக்கலாம். இன்னொரு விஷயம் அன்பு இல்லத்தில் பிள்ளைங்களை தத்து கொடுக்க மாட்டாங்க. “

“இதை முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளோ தூரம் பேசியிருக்க வேண்டியது இருந்திருக்காது “, ஏமாற்றத்துடன் சொன்னாள்   மது.

“அப்புறம், உன்  டிஸ்கஸ் த்ரோ திறமையையும் பாத்திருக்க முடியாது” என்றாள் சந்தியா கிண்டலாக.

அன்பு இல்லத்தில் தத்து கொடுக்க மாட்டார்கள் என்று முதலிலே சொன்னால், மதுவுடன் சில உண்மைகளை விவாதிக்க, புரிய வைக்க, அவளுக்கு அறிவுரை வழங்க  இதை வாய்ப்பாய் சந்தியா உபயோகித்து இருக்க முடியாதே! இது மதுவின் இறுகி போன மனதை மாற்ற சந்தியாவின் முதல் முயற்சி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.