(Reading time: 32 - 63 minutes)

நியூ யார்க் நகரம்

திகாலை 5:30 மணிக்கு அலாரம் வைத்து விழித்தவனை வரவேற்க ஆதவன் தயாராய் இருந்ததை ஜன்னல் திரையின் வழியே ஊடுருவி வந்த ஒளி, வெளிச்சம் போட்டு காட்டியது. சோம்பல் முறித்த படி, முந்தைய நாள் அவளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு பதில் வருமா என்று ஆர்வத்துடன் போனை பார்த்தவனுக்கு  ஏமாற்றம்.

படுக்கையை விட்டு எழுந்தவன் பால்கனிக்கு சென்றான். நியூ யார்க் நகரின் முக்கிய பகுதியில் 28வது மாடியிலிருந்தவனை ஓங்கி உயர்ந்த கட்டிடங்களுக்கு இடையில் புகுந்து வந்து முகத்தை தழுவி ‘ஏர் வாஷ்’ முறையில் கழுவி சென்றது  அதிகாலை சில்லென்ற காற்று…

சூரியனின் சிறிதளவு ஒளிக்கீற்று  அவன் மேல் பட்டு “லைட் வாஷ்” செய்து  புத்துணர்ச்சி அளித்தது….

“சூர்யனை ரொம்ப நேரம் பார்த்தா கண்ணுக்கு நல்லதில்லை” யோகா வகுப்பின் முன் நின்று சென்ற திங்கள் அவள் சொன்னது, இந்த திங்கள்  ஞாயிறை  பார்த்ததும் இதயம்  எதிரொலித்தது…

அவன் தொலைத்து விட்ட சக்தியை உயிர்ப்பிக்கும்  அந்த குறும்பு பேச்சை கேட்க ஆர்வமாய் காத்திருக்க, அவளோ அழுதாளே? “என் பேய் அழுவான்னு எனக்கு தெரியாதே! ஆக்ஸிடென்ட்லா நடந்த விஷயத்துக்கு இன்னும் எத்தனை நாள்  என்னை ராவணனாட்டும் நினைக்கப் போறாளோ? “ உள்ளம் குமுறி முந்தைய நாள் பூமா வீட்டில் நடந்ததை அசை போட்டது…….

அவளிடம் பேசிய பின் அவன் உடல் எந்திரத்தனமாக நடமாடிக் கொண்டிருக்க மனமோ, ”தொட்டால் பிடிக்காதுன்னு எத்தனை தடவை வார்ன் பண்ண?  உன் விருப்பத்தை அறியாமலே அணைத்தது தப்பு தான்! அழாதடா ப்ளீஸ்” குற்ற உணர்ச்சியில் துவண்டான்.

காதலால் பேச திணறியவளை அவன் செய்த பிழையால்  வேதனையில் வருந்துகிறாள்  என்றது  குற்ற உணர்ச்சியில் இதயம் அவன்  மூளையை முடக்கியது. வெறுக்கிறாள் என வருந்தி கோடி மைல்கள் தள்ளி வந்தவனால்  அவள்  வேதனைப் படுவதை தாங்க முடியவில்லை.

“சாரி சந்தியா …………….. எல்லாத்துக்கும்” குறுஞ்செய்தியாக  அனுப்பினான். அனுப்பிய பின்னும் அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளிடம் அவன் கேட்கும்  முதல் மன்னிப்பு. இத்தனை நாள் வித விதமான செல்ல பெயர்களில் அவளை அழைத்து விட்டு, இப்போது  சந்தியா  விளித்திருந்தது  அவனுக்கே வித்தியாசமாக இருந்தது….

”ஹோப் திஸ்  கம்பர்ட்ஸ் யு ” தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

“கார்த்திக்”, பல முறை அழைத்தாள் பூமா.

“.....”, கையில் வைத்திருந்த போனை வெறித்து பார்த்த படி உறைந்து உட்கார்ந்திருந்தான்.

“ஹலோ கார்த்திக்” அவன் எதிரில் அமர்ந்திருந்த குணா, அவன் கரத்தை தொட்டு அழைக்க, சுதாரித்த கார்த்திக்,

“ஹான்….” அப்போது தான் எங்கிருக்கிறோம் என நினைவு வந்தவனாய்,

“என்னாச்சு கார்த்திக்?” அவனை ஆராயும் பார்வை பார்த்தாள்  பூமா.

“நத்திங்” மறுப்பான தலையாட்டலுடன், தோளை குலுக்கி  சமாளிப்பாக சிரித்தான்.

“ஆனா ஊனா இப்படி ஒரு பாதுகாப்பு வளையத்தை போட்டு தப்பிச்சிடுறீங்க” என்றான் குணா.

“பாதுகாப்பு வளையம்?”, புரியாமல் கேட்டான் கார்த்திக்.

“கண்ணை மூடுங்க கார்த்திக். இப்போ கொஞ்சம் கேள்விகள் கேட்பேன். நான் கேட்டவுடனே யோசிக்காம சட்டு சட்டுன்னு பதில் சொல்லணும், ஒரு செகன்ட்க்குள்ள “ என்று  பூமா சொன்னவுடன் சிரித்துக் கொண்டே சரியென கண்களை மூடிய கார்த்திக்கிடம்,

“உங்க பேரு?”

“இது என்ன கேள்வி, பூமா...ப்ரீஸ்சூல் இன்டர்வியூ மாதிரி!” எதிர்கேள்வி கேட்டான் கார்த்திக்.

“இது ரேப்பிட் பயர் ரவுன்ட். சட்டு சட்டுன்னு பதில் சொல்லணும். கேள்வி கேக்க கூடாது” என மறுபடியும் சில பொதுவான கேள்விகள் கேட்க அவனும் கண்ணை மூடிக் கொண்டே பதில் சொன்னான்.

“இப்போ நாம எங்க இருக்கோம்? ”

“ரெஸ்டாரண்ட்”

“எந்த ரெஸ்டாரன்ட்?”

அவனும் சட்டென்று “இந்தியன் ரெஸ்டாரண்ட்” என்றது தான் தாமதம் பூமாவும், குணாவும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவள் சொன்ன பின் தான் கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தவன் “ஓ..மை காட்”, சொல்லிக் கொண்டே பூமாவையும் குணாவையும் பார்க்க இயலாமல், குனிந்த படி கைகளை நெற்றியில் வைத்து  வெட்கத்தில் நெளிந்தான்.

“சைனீஸ் ரெஸ்டாரண்ட் வந்து சாப்பிட்டு முடிச்சவுடனே கொடுக்கிற பார்ட்ச்யூன் குக்கீ எடுத்து பார்க்க சொன்னா, அந்த போனையே வெறிச்சு பார்த்துட்டு இருக்கீங்க. ஏதோ ரோபோவாட்டம் எங்க இருக்கோம், என்ன செய்றோம்ன்னு கூட தெரியாம இருக்கலாம் ஓகே. என்ன சாப்பிடுறோம்ன்னு கூட தெரியாம இருப்பாங்களா? . உங்களுக்கு என்ன ப்ராப்ளம்?” கேட்டாள் பூமா.

“ம்….” என்று புருவத்தை உயர்த்தி  பெருமூச்சு விட்டவன், பின்  அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே...“நத்திங்” தலையாட்டலுடன்  தோளைக் குழுக்கி மழுப்பலாக சொன்னான்.

“சோ….தேர் இஸ் சம்திங்” என்றாள் பூமா நமுட்டு சிரிப்புடன்.

“பாப்பூ, ஜெட் லேக்னால டயர்டா இருப்பாரா இருக்கும்.” என்று பூமாவிடம் சொல்லி விட்டு,  “கார்த்திக் நீங்க பார்ச்ச்யூன் குக்கீயை பார்த்து உங்களுக்கு என்ன போட்டிருக்கு சொல்லுங்க” என்றான் குணா ஆர்வமாக.

சீன உணவகத்தில் விருந்திற்கு பின் வைக்கப்படும் பார்ச்சுன் குக்கீ என்ற இனிப்பில் இருந்த காதித சுருளை  திறந்த பார்த்தவன்,

“pleasure awaits you by the seashore”

குணாவிற்கு வாசித்துக் காட்டினான். “அக்கரையில் உங்களுக்கு சந்தோஷம் காத்திருக்குன்னா, இந்தியாலயா? இக்கரைக்கு அக்கரை பச்சை தான?” சிரித்துக் கொண்டே கேட்டான் குணா.

“இல்லை. இன்னைக்கு சர்ப் பண்ண போகலை. அதான் இப்படி வந்திருக்கு” என்றான் கார்த்திக்.

“உங்களுக்கு சர்பிங் பிடிக்குமா?” , குணா.

“அய்யோ….இட் இஸ் மை ஸ்ட்ரெஸ் ரிலீவர். அதுக்காக தான் சண்டே இங்க லேண்ட் ஆகுற மாதிரி ப்ளான் பண்ணேன்.  அப்புறம் சரி உங்களை பாத்துட்டு போயிடலாமேன்னு வந்தேன். ஆனா, உங்க தம்பி சரணைத் தான் பாக்க முடியாம போச்சு”, ஏமாற்றமாய் சொன்னான் கார்த்திக்.

“சரண் இந்த வீக்கென்ட் கொஞ்சம் பிசியா இருக்கான். ஆனா, அடுத்த வாரம்  என். பி. ஏ. மேட்ச் இருக்கே. கண்டிப்பா வருவான். அடுத்த வீக்கென்ட்  எங்க வீடே  களைகட்டும். நீங்களும்  வாங்களேன்.” அழைத்தான் குணா.

“‘ஆமா கார்த்திக், வர்ற வெள்ளிக்கிழமை, என் ப்ரண்ட், நீங்க இன்னைக்கு முறைச்சீங்களே அவ தான், அவளுக்கு பர்த்டே. கேர்ள்ஸ் நைட்க்கு அவ வீட்டுக்கு போயிடுவேன். குணாக்கு தங்கமணி கொண்டாட்டம். அத்தனை பிரண்ட்ஸ்சையும்  மேட்ச் பாக்க கூப்பிட்டு இருக்கார். நீங்க தனியா ஹோட்டல்ல இருக்கிறதுக்கு  இங்க வாங்க நல்லாயிருக்கும்.” பூமாவும் குணாவின் கோரிக்கையை வழி மொழிந்தாள்.

“வர்ற வீக்கெண்டா? தலைக்கு மேல வேலையிருக்கே, ஆனா வசூல் ராஜா...அவனை பாத்தே ஆகணும்“ பொறாமையில் கொதித்த நெஞ்சம் “ கண்டிப்பா வருவேன்.”, உறுதியாக சொன்னான். பின், சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி வீட்டை அடைந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக “நான் இப்போவே நியூ யார்க் கிளம்பலாமா, இப் யு  டோன்ட் மைன்ட்.”, குணாவிடம் சற்று கெஞ்சலாகவே கேட்டான் கார்த்திக்.

யோசனையாய் குணா பூமாவின் முகத்தை பார்க்க, பூமாவோ கார்த்திக்கை பார்த்து, “நீங்க கேட்காட்டினா கூட கிளம்ப சொல்லியிருப்பேன். உங்களை பாத்தாவே டிஸ்டர்ப்டா தெரியுறீங்க. உங்க சந்தோஷம் கடற்கரையில தான இருக்கு. உங்களுக்கு பிடிச்சதை செய்யுங்க. மனசுக்கு நல்லாயிருக்கும்.” என பூமா சொன்ன விதம் அவனுக்கு இதமாக இருந்தது.

“கப்பு வாங்குனாலும், சைக்காலஜி படிச்சிருக்கீங்கன்னு ப்ரூவ் பண்றீங்க” என குறும்பு புன்னகையுடன் கார்த்திக் பாராட்ட, அவள்  குணாவை பார்த்து காலரை தூக்கி விட்டு பெருமையாக சிரிக்க, “பாப்பூ...ஓவரா பெருமை படாத. என்னோட புது படைப்புக்கு முன்னாடி அது ஒண்ணுமே இல்லை. அதை கார்த்திக்கிற்கு பார்சல் பண்ணி அனுப்பி விட்டுடு. நைட் சாப்பிடுவார்.” என குணா அசராமல் துரத்த அசந்தது கார்த்திக் தான்.

“மனசு தான் சரியில்லைன்னு பாத்தா இந்த மனுசன் உடம்பையும் சரியில்லாம பண்ணி விட்டுருவார் போல இருக்கே.” உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டான்.

“சாப்பிட்டு பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லணும். நான் போன் பண்ணி கேப்பேன்” என்று வழியனுப்ப வாகன நிறுத்துமிடம் வரைக்கும் வந்த குணா சொல்லி விட்டு இல்லை மிரட்டி விட்டு சென்றான்.

பால்கனியில் நின்று காற்று வாங்கிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் குணா கொடுத்து விட்ட உணவு நினைவுக்கு வர, “அதை காரிலே மறந்து விட்டுட்டோமே....இந்த நேரம்  எப்படியும் கெட்டு போயிருக்கும். கேட்டா நல்லாயிருந்ததுன்னு சொல்லிட வேண்டியது தான்” தனக்குள் சொல்லிக் கொண்டு,  கணினியை  உயிர்ப்பித்தான். சந்தியாவிற்கு அன்று ஒதுக்கியிருந்த வேலைகள் முடிக்கப் படாமல் இருந்தது. அவள் அதற்கு விளக்கமும் எதுவும் சொல்லவில்லை. அதைப் பற்றி விசாரிக்க அவளை அழைக்க நினைத்தவன், பின் “அவள் மீண்டும் அழுதால்…” என அதை எதிர்கொள்ள தைரியமற்றவனாய், மதுவிற்கு அழைத்தான்.

ந்தியா அன்று அலுவலகம் செல்லவில்லை. ஸ்கேன் முடிவுகள் வரும் வரை அதைப் பற்றி நினைவே இல்லை.  மாலையில் ஸ்கேன் முடிவுகளும் பயப்படும்படி ஒன்றும் இல்லை என தெரிந்து விட எல்லாருக்கும் நிம்மதி. அதன் பிறகு விந்தியாவும் புகுந்த வீட்டிற்கு சென்று விட்டாள்.

அவள் சென்ற பின், மது லக்ஷ்மியை பார்க்க சந்தியா வீட்டிற்கு வர அதே நேரம் சக்தியும் அங்கு ஒரு வாரம் தங்குவதற்கு பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வந்தாள். தோழிகளின் லூட்டி களைகட்டியது. லக்ஷ்மியையும் அதில் சேர்த்துக் கொண்டு சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

லக்ஷ்மியை சமையலறைக்குள் விடாமல் தாங்களே இரவு உணவு சமைக்கிறோம் என மது, சந்தியா, சக்தி சேர்ந்து சமையலறைக்குள் புகுந்து தங்கள் கலாட்டாவை தொடர்ந்தனர். மது சப்பாத்திகளை சுட்டு எடுத்து வைத்து விட்டு, வீட்டின் கொள்ளை புறத்தின் ஓரமாக சிறிய தொட்டி போல கட்டப்பட்டிருந்த சிங்கில் கிடந்த பாத்திரங்களை ஒருவர் தேய்க்க, மற்றொருவர் கழுவ என இருந்த சக்தியும் சந்தியாவும் பார்க்க வந்தாள்.

“சப்பாத்தி வேலை முடிஞ்சது. சாப்பிட வரலாம்” அழைத்தாள் மது.

“நீ நல்லா சமைக்கிறியே? எப்படி?”, கேட்டாள் சக்தி, பாத்திரத்தை கழுவி அடுக்கியவாறு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.