(Reading time: 9 - 17 minutes)

18. கரை ஒதுங்கும் மீன்கள் - அருணா சுரேஷ் 

 Karai othungum meengal

நிறைந்த இருள்....அங்கங்கே அவ்வப்போது மினுக்கும் வெளிச்சப் புள்ளி மனிதர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யும் அடையாளங்கள். நம்மைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் கடந்து போகும் மரங்கள். தயாவின் மன உணர்வுகளை மெதுவாக வெளிக் கொண்டுவரும் மௌனத்துடன் பயணித்தது அந்தப் பேருந்து. நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளுக்கு மத்தியில்

கொட்டக் கொட்டக் முழித்துக் கொண்டு கடந்தகாலத்தை வேண்டா வெறுப்பாக நினைத்துக் கொண்டிருந்தான் தயா.            

ள்ளி வாழ்க்கை இவ்வ்ளோ வெறுப்பைக் கொடுத்திருந்தது என்றால் கல்லூரி வாழ்க்கை அதைவிடக் கடினமாகத்தான் இருந்தது. மார்க் என்னவோ அதிகமாக எடுத்திருந்தாலும் எல்லோரையும் போல் இவனுக்காக இவனுடன் சேர்ந்து திட்டம் போட்டுச் சேர்ந்து படிக்கலாம் என்று இவனுடன் வர யாரும் தயாராக இல்லை என்பதுடன் இவனை அவர்களோடு சேர்த்துக் கொண்டு ஒரே கல்லூரியில் படிக்கலாம் என்று திட்டம் போடவும் யாரும் இல்லாமல்தான் போயிற்று. தீபக் கூட இன்னும் எந்தக் கல்லூரி என்று முடிவு செய்யலைடா என்று இழுத்துக் கொண்டே இருந்த போது 'போங்கடா....போய் ஒழிங்கடா....நானாகவே போய்க்கிறேன் ' என்று ஊரை விட்டவன்தான்.

படிக்க என்று பெங்களுர் வந்தவன் தன்னைப் பெங்களூரைச் சேர்ந்தவன் போலவே மாற்றிக் கொண்டான்.ஆங்கிலம் பேசினால் தன்னுடன் படிப்பவர்கள் தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்று ஆங்கிலம் படிக்க அலையோ அலை என்று அலைந்து திரிந்து இன்ஸ்டிடுயுட் இன்ஸ்டிட்யுட்டாகத் தேடிக் கற்றுக் கொண்டான்.ப்ராண்டெட் ட்ரெஸ் போட்டால் தங்களுடன் சேர்த்துக் கொள்வார்கள் என்று உடுத்தும் உடையெல்லாம் ப்ராண்டெடாகப் பார்த்துப் போட்டுக் கொண்டான். தேவையில்லாமல் 'கூல்' 'கூல்' என்றும் 'டூட்'  'டூட்'என்றும் சொல்லப் பழகிக் கொண்டான். பைக் வைத்திருந்தால் தன்னுடன் ஒட்டிக் கொள்வார்கள் என்று வீட்டில் ஆட்டமான ஆட்டம் ஆடிப் பைக்  வாங்கிக் கொண்டான். தன்னுடன் இருப்பவர்கள் என்னவெல்லாம் செய்தார்களோ எல்லாவற்றையும் குரங்கு தொப்பி விற்பவனின் வித்தைக்கு மயங்கியதைப் போல மயங்கிக் கிடந்தான். ஆனால் இவனின் எந்த வித்தையும் அவர்களை இவன் பால் ஈர்க்க முடியாமலே போயிற்று. சுத்திச் சுத்திக் க்அடைசியில் தனிமையிலேயேதான் தள்ளப் பட்டான். கொஞ்சகாலம் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கிக் கிடந்தான். யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் வேலை வேலையென்று அலைந்ததில் ஆஃபீஸில் நல்ல பேர் எடுக்க முடிந்தது. அதுவே கதியென்று இருபத்திநாலு மணி நேரமும் ஆஃபீஸிலேயே கிடந்தான்.

மனம் இறுக்கிக் கொண்டது. யாரையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே பார்த்தது. யாருடனும் நெருங்க முடியாமல் ஒரு வட்டத்துக்குள் சுருங்கிக் கொண்டது.கூட்டம் இவனை வெறுத்து ஒதுக்க ஒதுக்க பலமடங்காக மனிதர்களை வெறுக்க ஆரம்பித்தான்.சட்டென்று சுடும் சொற்களை அள்ளி எளிதாக வீச முடிந்தது. 'நீங்க என்னடா என்னை ஒதுக்குறது...நான் உங்களைத் தள்ளி வைக்கிறேன்' என்று எல்லோரிடமிருந்தும் ஒதுங்கிக் கொண்டான். யாராவது அன்புடன் ரெண்டு வார்த்தை பேசமாட்டார்களா என்று ஏங்கிக் கிடந்தான்.ஆனால் அப்படி எதுவும் எனக்குத் தேவையில்லை என்று தானாகவே ஒதுங்கிக் கொண்டான். அப்படியிருக்கும்போது யாராவது நட்பு பாராட்டினால் உடனேயே அவர்களை எப்படியாவது தன்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டும் என்பது போலத்தான் பொக்கிஷப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொளவதைப் போலப் பொத்தி வைத்துக் கொள்வான்.

ப்போது நடந்ததுதான் அந்த ஆக்ஸிடென்ட். அதன் மூலம் கிடைத்த ஷைனியை பூனைக்குட்டி கவ்வும் தன் குட்டியைப் போலக் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இறுக்கமான அன்பு வலையில் கட்டிப் போட்டான். கண்மூடித்தனமான அன்பு கூடக் கழுத்தை நெறிக்கும் என்பது தெரியாமல் எறும்பு இழுத்துச் செல்லும் அரிசியைப் போல அலைக்கழித்தான் ஷைனியை. ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்தவன் அப்படியே உறங்கியும் போனான்.

'சாப்பாட்டுக்குப் பதினைஞ்சு நிமிடம் நிற்கும் சார்.' என்ற கண்டக்டரின் சத்தம் கேட்டுக் கண்விழித்தான்.

"எந்த ஊர் சார்?" யாரோ யாரிடமோ கேட்டுக் கொண்டிருந்தார்.

"யாருக்குத் தெரியும்?" என்று அந்த யாரோ சொன்ன பதிலையும் கேட்டுக் கொண்டே இறங்கினான்.

இறங்கிய உடனேயே அங்கங்கே ஒதுங்கி மொபைலில் அழைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் யாரோ ஒருவருடன் தொடர்பு கொண்டு 'நான் இங்கிருக்கிறேன் ' என்று சொல்ல யாரோ ஒருவர் இருந்தார்கள்.

"சாப்பாட்டுக்குப் போட்டிருக்கான்மா...."

"சரிம்மா....நான் பார்த்துக்கிறேன்..."

"நீ பத்திரமா இரும்மா...."

"வெளிக்கதவை நல்லா இழுத்துச் சாத்திப் பூட்டு போட்டுக்கோம்மா..."

"நான் சாப்பிடுறேம்மா...."

"புள்ளைங்க தூங்கிடுச்சா.....?"

"நான் மறுபடிக் கூப்பிடுறேம்மா...."

இப்படி ஒரு விதம் என்றால்

"என்னடா செய்யறது....வேலை இருந்தா போய்த்தானே ஆகணும்..."

"எனக்கு மட்டும் கஷ்டமா இல்லியா...."

"சரிடா....அடுத்த தடவை உன்னையும் கூட்டிக்கிட்டுப் போறேன்"

" கவனமா இருடா"

"ம்ம்மா"

இப்படி ஒரு விதம்.

டனேயே ஷைனியிடம் பேசவேண்டும் போலிருந்தது. நான் இபப்டி ஒண்ணும் சொல்லாமல் உன்னைத் தவிக்க விட்டு வந்தது தப்புத்தாம்மா என்று சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. மொபைலை எடுத்து நம்பரைச் சுழற்றினான்.

"The number you have dialled is switched off" என்று வந்தது. அப்போதுதான் நினைவுக்கு வந்தது ரிப்பேருக்குக் கொடுத்த ஷைனியின் மொபைலை இன்னும் வாங்காமல் விட்டு வைத்திருந்தது. என்ன செய்வதென்று மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.