(Reading time: 12 - 24 minutes)

விவேக் சிங்கபூரிலிருந்து வாங்கி வந்திருந்த பொருட்களில் மூழ்கிப்போயிருந்தாள் ஸ்வேதா. மனோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு உறங்க சென்று விட்டிருந்தான்

அர்ச்சனாவுக்காகவும் ஏதேதோ அள்ளிக்கொண்டுதான் வந்திருந்தான் விவேக்.

ஆனால் அவள் மனம் எதிலுமே செல்ல மறுத்தது. மாடியறையில் சென்று அமர்ந்தாள் அர்ச்சனா.

கண்கள் ஜன்னலின் வழியே சென்று வசந்தின் வீட்டின் மீதே பதிந்திருந்தது.

அவள் அந்த வார்த்தைகளை உதிர்த்த போது அவன் கண்களில் படர்ந்த  அந்த வலி அவளின் மனதிற்குள் வந்து வந்து போனது.

மனதை திசை திருப்பிக்கொள்ள, சமாதான படுத்திக்கொள்ள அவள் எடுத்த எல்லா முயற்சியிலும் தோற்றுப்போனாள் அர்ச்சனா.

ஒரு கட்டத்தில் மனதிற்குள் ஏதோ ஒன்று அழுத்த, அவள் கண்கள் நிரம்பிய நேரத்தில், அங்கே வந்து நின்று திறந்திருந்த வாசல் கதவை தட்டினான் விவேக்.

சட்டென்று அவள் நிமிர அவள் கண்களில் நிரம்பியிருந்த கண்ணீரில் திகைத்துப்போனான் விவேக்

'அவள் கண்ணீர் என்னை ஏன் இப்படி தாக்குகிறது?' அவனுக்கே புரியவில்லை.

'அர்ச்சனா ப்ளீஸ் அழாதே' அவள் அருகில் வந்து அமர்ந்தான்

மெல்ல கண்களை தாழ்த்திக்கொண்டாள் அர்ச்சனா,

தெரியும் நீ அழுதிட்டு உட்கார்ந்திருப்பேன்னு தெரியும் அதுதான் வந்தேன். என்றவன் 'உனக்கு நான் இருக்கேன் அர்ச்சனா என்றான் அவள் முகத்தை நிமிர்த்தி.

கண்களை தாண்டி வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டபடி எழுந்தாள் அர்ச்சனா.

'நீங்க போய் தூங்குங்க ப்ளீஸ்'. என்று அவள் அங்கிருந்து நகர எத்தனிக்க, அவளது கால் கட்டிலின் மீது சற்று வேகமாய் இடித்துக்கொள்ள கட்டை விரல் நகம் உடைந்தே விட்டிருந்தது.

வலியில் துடித்தே விட்டாள் அர்ச்சனா. பதறியே விட்டிருந்தான் விவேக்.

ஸ்வேதாவும் ,மனோவும் உறங்கிவிட்டிருந்தனர்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தன் மருந்துப்பெட்டியுடன் அவள் எதிரில் வந்துநின்றான் விவேக்

'என்னபா நீ பார்த்து போக கூடாதா?' என்றபடி அவளை கட்டிலில் உட்கார வைத்து ,அவள் காலை தன் மடியில் வைத்துக்கொண்டான் விவேக்.

உடைந்த  நகத்தை வெட்டிவிட்டு, ரத்தத்தை துடைத்து,கட்டு போடுவதற்குள் துடித்து தான் போனாள் அர்ச்சனா.

ஒவ்வொரு முறை அவள் துடிக்கும் போதும் அவனுக்குள் வலித்தது.

இரும்மா. இருடா கண்ணம்மா. ஆச்சுடா. ஏதோ ஒரு குழந்தைக்கு கட்டு போடுவதைப்போல், சொல்லிக்கொண்டே கட்டு போடுவதற்குள் அவன் நெற்றி வேர்த்து விட்டிருந்தது. கண்கள் லேசாக கலங்கி விட்டிருந்தன.

வியப்புடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா. 'என் வலி அவனை தாக்குகிறதா?

சில நிமிடங்களில் தெளிந்து விட்டிருந்தாள் அர்ச்சனா.

அவள் அருகில் அமர்ந்தவன் சின்னதான புன்னகையுடன் அவளிடம் கேட்டான், '

இந்த வாரம் வெள்ளிக்கிழமை யாருக்கோ பிறந்தநாளாமே?

பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.

தெரியும் அவளுக்கு. அவளுக்கும் ,விவேக்கிற்கும் ஒரே நாளில்தான்  பிறந்தநாள் வரும்.

நாளை மறுநாள் இருவருக்கும் பிறந்தநாள்.

வெள்ளிக்கிழமை சென்னையிலே எனக்கு பர்த்டே பார்ட்டி. என் friends, வெல் விஷ்ஷர்ஸ் எல்லாரும் வராங்க ,ஸ்வேதாவும் வரா. நீயும் வரியா அர்ச்சனா.?

மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்

நீ இதுவரைக்கும் பர்த்டேக்கு  பார்ட்டி குடுத்து கொண்டாடி இருக்கியா?

இல்லை என்று தலையசைத்தாள் அர்ச்சனா.

குனிந்து அவள் கண்களுக்குள் பார்த்து சொன்னான் 'இந்த வெள்ளி, சனி, ஞாயிறு  ஆபீஸ் லீவுதானே. நீயும் வா அர்ச்சனா. நாம ரெண்டு பெரும் சேர்ந்து கேக் கட் பண்ணலாம். வாட் டூ யு சே?'

'நான் யோசிச்சு காலைலே சொல்றேன்' என்றாள் அர்ச்சனா. நீங்க கீழே போய் தூங்குங்க.

போகவில்லை அவன்.

'எதுக்கு? என்றான் நான் போனதும் நீ அழுதிட்டு உட்காரவா?'  வேண்டாம்.

அவள் உறங்கும் வரை ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தான். அவள் அழுது விடக்கூடாது என்பதே அவன் குறிக்கோளாய் இருந்தது.

எப்போது உறங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை. காலை எழுந்தபோது அவள் கட்டிலுக்கு கீழே ஒரு படுக்கையை விரித்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தான் விவேக்.

அதை பார்த்ததும் சற்று வியந்துதான்  போனாள் அர்ச்சனா.

தூக்கம் கலைந்து எழுந்தவுடன் முதல் கேள்வியாய் கேட்டான் விவேக்

என்ன நாளைக்கு சென்னை வரியா?

பொதுவாக அவள் பிறந்த நாளில் அப்பாவுடனே இருந்திருக்கிறாள்.

ஒரே முறை ,அந்த ஒரே முறை மட்டும் அவள் அப்பாவை பிரிந்திருந்தாள்.அதனால் அவர் பட்ட வருத்தங்கள்..............

வேண்டாம். அது மறுபடியும் நடக்க வேண்டாம்.

ம். வரேன். என்றாள் அர்ச்சனா.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.