(Reading time: 12 - 24 minutes)

ரவு முழுவதும் உறக்கம் கிட்டவில்லை. அதிகாலை கிடைத்த இரண்டு மணி நேர உறக்கத்திற்கு பிறகு, அலுவலகத்திற்கு சற்று தாமதமாக கிளம்பி கொண்டிருந்தான் வசந்த்.

கிளம்பும் நேரத்தில் காரின் சாவி கிடைக்கவில்லை. இரவு இருந்த மன அழுத்தத்தில் அதை எங்கே தூக்கி எறிந்தானோ அவனுக்கே தெரியவில்லை. தனது பைக்கின் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் வசந்த்.

அர்ச்சனாவை அலுவலகத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்து, விவேக் காரிலிருந்து இறங்கிய நொடியில் தன் வீட்டை பூட்டிக்கொண்டு இறங்கினான் வசந்த்..

விவேக்கின் பார்வை நேராக அவன் மீது பதிந்தது. வசந்தை பார்த்த நிமிடத்தில் விவேக்கினுள்ளே கொதிப்பேறியது.

மெல்ல நடந்து வசந்த் வீட்டு தோட்டத்துக்குள் வந்து நின்றவன் 'கங்ராஜூலேஷன்ஸ் மிஸ்டர் வசந்த்' என்று கைகுலுக்கினான்.

சின்னதான புருவ உயர்த்தலுடன் அவனை பார்த்த வசந்தை பார்த்து சிரித்தபடி சொன்னான் விவேக்,

'இல்லை. உங்களுக்கு ப்ரமோஷன் வந்திருக்குன்னு  கேள்விப்பட்டேன் அதுக்குதான்'.

தனது பைக்கில் சாய்ந்துக்கொண்டு அவன் முகத்தை ஆராய்ந்தபடியே நின்றிருந்தான் வசந்த்.

நேற்று அவன் கை அர்ச்சனாவின் தோளை அணைத்தப்போதே,அவன் கண்கள் எதோ சொல்ல விழைந்ததாய் தோன்றியது வசந்துக்கு.

'என்ன சொல்ல வருகிறானாம் அவன்?'

'ஞாபகம் இருக்கா வசந்த். நாம முதல்ல மீட் பண்ணது மனோ நிச்சியதார்தத்துல. ஆனால் அப்போ இருந்தது இதுக்கு நேர் மாறான சூழ்நிலை இல்லையா'?

'இப்போ என்ன வேணும் உங்களுக்கு' என்றான் வசந்த்.

'அர்ச்சனா வேணும்' என்றான் விவேக் நிதானமாய்.

பதில் சொல்லாமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் வசந்த்.

பலமுறை சொல்லியிருக்கிறான் மனோ விவேக்கின் எண்ண ஓட்டங்களை பற்றி. அப்போதெல்லாம் நம்பியதில்லை வசந்த். '

நீ தேவையில்லாம கற்பனை பண்ணிக்காதே மனோ' என்பான் வசந்த். இப்போது மெல்ல புரியத்துவங்குகிறது.

'போதும் இதோட முடிச்சுக்கோங்க மிஸ்டர் வசந்த். இனிமே அர்ச்சனா எனக்கு சொந்தம்.'

'அதை அவ முடிவு. பண்ணனும் மிஸ்டர் விவேக். நீங்க முடிவு பண்ணகூடாது' என்றான் வசந்த்

'பண்ணுவா' என்றான் விவேக் சற்று சூடான குரலில். முடிவு பண்ணிட்டு நான் விவேக்கை தான் கல்யாணம் பண்ண போறேன்னு உங்ககிட்டேயே வந்து சொல்லுவா. பார்க்கறீங்களா?

அவளால் அது முடியவே முடியாது. அர்ச்சனா மீது அப்படி ஒரு நம்பிக்கை வசந்துக்கு.

'பார்க்கலாம். அவ என்னை பார்த்து அந்த வார்த்தையை சொல்லட்டும் அதுக்கு அப்புறம் நான் விட்டுக்கொடுக்கிறேன்.'  என்றான் நிதானமாக.

சட்டென்று எகிரிய கோபத்தில் ' நீ என்னடா எனக்கு விட்டுக்கொடுக்கறது. அவ என் அத்தை பொண்ணுடா' உறுமினான் விவேக்.

கோபம் பொங்கி எழுந்த போதும் ,தன் சுயக்கட்டுப்பாட்டை இழந்து விடாமல், மிக நிதானமான குரலில், அழுத்தமாக சொன்னான் வசந்த்,

'உங்களுக்கு அவ அத்தை பொண்ணு மிஸ்டர் விவேக். ஆனால் எனக்கு அவதான் உயிர்.'

கொதித்துக்கொண்டிருந்த  கோபத்தை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான் விவேக்.

'நீங்க அவ மேல வெச்சிருக்கிற பாசத்தை விட நான் நூறு மடங்கு அதிகமான பாசம்    வெச்சிருக்கேன். என்னாலே அவளுக்காக எதை வேணுமானாலும் விட்டுக்கொடுக்க முடியும். ஆனால் அவளை மட்டும் என்னாலே விட்டுக்கொடுக்க முடியாது வசந்த்' நீங்க அவளை மறக்கறது தான் நம்ம எல்லாருக்குமே நல்லது. புரிஞ்சுக்கோங்க.' வசந்தின் கண்களுக்குள் பார்த்து சொன்னவன், அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாதவனாய் அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்தான்.

வசந்த் பைக்கை உதைத்து கிளப்பிய வேகத்தில் அவனது கோபம் புரிந்தது விவேக்கிற்கு.

பைக்கை சரேலென்று அவன் கிளப்பிக்கொண்டு சென்ற நேரத்தில்,

'கார் இருக்கும் போது பைக் வேண்டாமே வசந்த்.  பைக் எப்பவுமே ரிஸ்க் தான்' அவன் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்டதைப்போல் இருந்தது அவனுக்கு.

லுவலக வேலைகள் எதிலும் மனம் நிலைக்கவில்லை வசந்துக்கு. அவனை பார்ப்பதையே தவிர்த்துக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

மதியம் மூன்று மணிக்கு விவேக்கின் அழைப்பு வந்தது அர்ச்சனாவுக்கு.

'நான் இப்பவே சென்னை கிளம்பறேன். பார்ட்டிக்கு சில ஏற்பாடுகள் பண்ண வேண்டி இருக்கு. நீயும் ஸ்வேதாவும் நாளைக்கு மார்னிங் பிளைட்லே வாங்க.'

மாலை அவள் வீட்டிற்கு வந்ததும் அழைத்தார் அப்பா.

'நாளைக்கு உன் பிறந்தநாள்மா. கண்டிப்பா வருவேதானே அர்ச்சனா?

கண்டிப்பா வருவேன் பா. நாளைக்கு மார்னிங் பத்து மணிக்குள்ளே அங்கே இருப்பேன்.

மறுபடியும் சொன்னார் அப்பா 'கண்டிப்பா வந்திடுமா. அப்பா காத்திட்டிருப்பேன்.'

சிரித்தாள் அர்ச்சனா. 'வந்திடுவேன் பா'

விவேக் ஏதோ பார்ட்டி எல்லாம் ஏற்பாடு பண்றான் போலிருக்கே.

'அதுக்காக வரலைப்பா' நான்.' என்றாள் அர்ச்சனா. பிறந்தநாளுக்கு உங்களோட இருக்கணும்பா அதுக்குதான் வரேன்.

லுவலகத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன வசந்திற்கு. எல்லாவற்றையும் ஓரளவுக்கு முடித்துவிட்டு கிளம்பும் போது நேரம் இரவு எட்டரையை தொட்டிருந்தது

இரவு தூங்காததினாலோ என்னவோ தலை கனத்தது வசந்துக்கு.

பைக்கை நகர்த்திக்கொண்டு கிளம்பினான். மனம் எங்கெங்கோ சுழன்று கொண்டிருக்க, வேகமாக வண்டியை செலுத்திக்கொண்டிருந்தவன் அவன் வீடிருக்கும் தெருவை நெருங்கினான்.

அந்த நேரத்தில் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் அர்ச்சனா.

மனோ வீட்டை ஒட்டிய திருப்பத்தில், வண்டியின் வேகத்தை குறைக்காமலே வசந்த் திரும்பிய போது, எதிரே வந்தது அந்த வேன்.

அந்த வேனை தவிர்ப்பதற்காக அவன் வண்டியை சற்று திருப்ப, அப்போது அங்கே வந்த இன்னொரு வண்டியின் மீது மோதிவிடாமல் இருக்க அவன் பிரேக்கை பிடித்த நேரத்தில்......

அர்ச்சனா மனோ வீட்டு கேட்டின் அருகே வர ,அவள் கண்ணெதிரே, பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டு சில அடிகள் தள்ளி சென்று விழுந்தான் வசந்த்.

நேற்று இதே நேரத்தில் 'எனக்கு உன்னை பிடிக்கலை' என்று உச்சரித்த அதே உதடுகள் இன்று அலறின.  'வ....சந்.......த்'

தடுமாறி எழ முயன்றவனின் காதுகளில் அவள் குரல் தெளிவாய் கேட்டது

.அந்த நொடியில் அவள் தனக்கு போட்டுக்கொண்ட எல்லா கட்டுப்பாடுகளும் நொறுங்கி போக, மனம் அப்படியே  அதிர்ந்து துடித்துப்போக,  அவனை மனம் முழுக்க சுமந்துக்கொண்டிருக்கும் நிஜமான அர்ச்சனாவாய், கேட்டை திறந்துக்கொண்டு, அவனை நோக்கி ஓடினாள் அர்ச்சனா.

தொடரும்

Manathile oru paattu episode # 08

Manathile oru paattu episode # 10

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.