(Reading time: 22 - 43 minutes)

ஸ்வத்தும் அதே இங்கீதத்தை பின்பற்றி வெளியே வந்தமர்ந்து கொண்டான். அவள் கண்கள் மூடி தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க, “தூக்கம் வருதுனா வந்து படுத்துக்கோ” என்று கூறவும் கண் திறக்காமலே அவனை கண்டுக்கொண்டு “இல்லை கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்று கூறி அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருப்பதையே சில மணி துளிகள் பார்த்துக்கொண்டிருந்தவன் உணவு சாப்பிடும் போது பார்த்த படத்தின் நினைவு வந்தது. அதை கண்டு அவள் முகம் மாறுவதையும் மனதில் குறித்துக்கொண்டான்.

“ஆமா நீ ஏன் இப்போ பார்த்த படத்தை பார்த்து முகம் சுளிச்ச அதுவும் அவ்வளவு செண்டிமெண்டல் சீன்ல” என்று அவன் கேட்கவும் அதிகமாக யோசிக்க வேண்டிருக்கவில்லை அனுவிற்கு.  

“பின்ன என்னவாம் ஹீரோ என்ன வேணாலும் ஏமாத்துவாராம் இந்த ஹீரோயினும் கண்ண மூடிட்டு நம்புவாளாம்... சுத்த மடத்தனமா இருக்கு” என்று அவள் இலகுவாக கூறினாள்.

“ம்ம்ம்ம்... ஒரு relationship ல நம்பிக்கைதான் முக்கியம்னு சொல்லுறாங்க... அதுவும் உண்மை தானே”

“இருக்கலாம் அதுக்குன்னு கண்மூடித்தனமான நம்பிக்கையும் முட்டாள் தனம்தான், கூட இருந்த பொண்ணுங்க என்ன சொல்லியும் அவனை பத்தின சந்தேகமே வராதாம் அவளுக்கு அது நம்புகிற மாதிரி இல்லையே” என்று நிதானமாக கூறினாள்...

“ஒரு வேலை பிடிக்காதவங்க அவனை பத்தி தப்பா சொன்னால் அதை அப்படியே நம்பினால் அப்போ அந்த உறவின் மதிப்பு குறைந்து போயிடுமே....” என்று அவன் தன் மனதில் பட்டதை கூறினான். அவன் ஒரு படத்திற்கு எதுக்கு இவ்வளவு விளக்கம் தருகிறான் என்று புரியாமல் என்ன சொல்வது என்று புரியாமல் “இருக்கலாம்” என்று மட்டும் கூறினாள். அவள் கூறியது ஏதோ மனதை உறுத்தியது. பேசாமல் சில மணி நேரம் அமைதியாக இருந்தவன்... “ஏன் அனு....” என்று பேச்சை துவங்கினான், துவங்கியவன் பாதியிலேயே நிறுத்திவிட என்ன என்பதுபோல் புருவம் உயர்த்தி கேட்டாள்... ஒன்றும் இல்லை என்பதுபோல் தலை அசைத்துவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.

அவன் என்ன கூற வந்திருப்பான் என்று யோசித்தவளுக்கு ஒன்றும் பிடிப்படவில்லை அதன்பின் அஹல்யா வந்து உறங்க அழைத்துவிட உள்ளே சென்றுவிட்டாள்.

ருவழியாக 1 வாரம் கரைந்திருந்தது. அஹல்யாவிற்கும் ஓரமாக சந்தேகமாக தான் இருந்தது ஆனால் நவீன் கூறிய அனைத்தையும் நினைக்கையில் கோவமாக தான் வந்தது. ஏதேதோ கூறி அர்ஜுன் அவளை சம்மதிக்க வைத்தான். இருவரையும் அழைத்துபோக காலையிலேயே நவீன் காரோடு வந்துவிட, இருவரும் அவன் காரில் ஏறிக்கொண்டனர். அஹல்யா வந்ததே தங்கையாக அங்கே வந்து எதுவும் பேசபோவதில்லை என்ற கோரிக்கையில்தான்.

கார் வேகமாக திருப்பூரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. நவீனின் உதட்டில் பசைபோட்டு ஒட்டியது போல் புன்முறுவல் ஒட்டி இருக்க, அதை கண்டு அஹல்யாவிற்கும் அர்ஜுனுக்கும் வருத்தமே. மெதுவாக அர்ஜுன் நவீனின் தந்தையிடம் பேச்சு கொடுத்தான்.

“என்ன அங்கிள் உங்க மருமகளை பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டிங்குரிங்க...”

“நான் என்னப்பா சொல்லுறது எனக்கே surprisea இல்லை கூட்டிட்டு போறான்” என்று புட்டை உடைத்தார் அவர். அவர் கூறியதை கேட்டதும் குழம்பி போனவன் “என்னடா இது????” என்று வினவினான் அர்ஜுன்.

“அதெல்லாம் அப்படிதான்...” என்று கண் சிமிட்டினான்.

அவன் செய்வது ஒரு யூகத்தை தருவதாக இருந்தாலும் அதெப்படி வீட்டில் இருப்பவருக்கு தெரியாத அத்தை பெண் இருக்க முடியும். அப்படியே அவன் அர்ச்சனாவை அத்தை பெண் என்றாலும் திடீர் என்று எப்படி அவர் இவனுக்கு அத்தை ஆக முடியும் என்ற ஒரே குழப்பம்....

அவன் குழப்பத்தை எல்லாம் கண்ணாடியின் மூலம் பார்த்தவன், “ரொம்ப யோசிக்காதடா இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும்” என்று கூறி விஷமமாக சிரித்தான்.

நவீன் அர்ஜுன் உரையாடல் இப்படி சென்று கொண்டிருக்க, அஹல்யா ரகசியமாக நவீனின் தாயுடன் பேசிக்கொண்டே வந்தாள்.

“ஏன் ஆன்டி உங்களுக்கு தம்பி பொண்ணு யாரும் இருக்காங்களா?”

“ஹ்ம்ம் இருக்காங்கமா ஆனால் இவன் பிடிக்கொடுத்தால்தானே” என்று சோகமாக கூறியவர். “ஏதோ ஒரு பெண்ணை பார்க்கலாம் அதுவும் சொந்தத்தில்னு ஒரு மாதமா சொல்லிட்டு இருக்கான், சரி யாரு அந்த பொண்ணு எங்களுக்கு தெரியாம இவனுக்கு தெரிஞ்ச சொந்தத்தில் பொண்ணுன்னு பார்க்க ஆவல்ல வந்திருக்கேன்” என்று கூறினார் அவனது தாய் மோகனா... லேசாக யோசிக்க துவங்கியவள் அவரிடமே தொடர்ந்து பேசினாள். “அப்போ அங்கிள்க்கு தங்கச்சி யாராவது இருக்காங்களா?” என்று கூறவும். சட்டென மோகனாவின் முகம் மாறியது, இப்படியும் இருக்குமோ என்று தோன்ற “இருந்தாங்கமா... அவங்க சின்ன வயசில விடுமுறையில் சுற்றுலா போன போது, அவங்க துளைந்து போனதா அடிக்கடி அவர் கூறி வருத்தப்படுவார்”.

“அவங்க துளைந்து போய் எத்தனை வர்ஷம் இருக்கும் ஆன்ட்டி?”

“அது ஆச்சுமா 40 வருடம். அவங்க காணாம போகும் போது 3 வயது கூட ஆகலைன்னு சொல்லுவாரு” என்று கணவரின் வருத்தம் தொற்றிக்கொண்டதால் கொஞ்சம் வருத்ததோடு கூறினார்.   

இப்போது தெள்ளதெளிவாக புரிந்துப் போனது அஹல்யாவிற்கு, அவளுக்கு தான் அன்புக்கரசியின் பழைய வாழ்வை பற்றி தெரியுமே... அவரும் அடிக்கடி சிறு வயதில் தான் துளைந்து போனது, சிறுபிள்ளையாக இருந்துக்கொண்டு செயலற்று இருந்தது. யாரோ ஒரு அன்பு பெற்றோரால் வளர்க்கப்பட்டது, என்று அனைத்தையும் நினைத்து அடிக்கடி புலம்புவது உண்டு. துளைந்துப் போன நவீனின் அத்தை தான் அன்புக்கரசி என்ற யூகம் அவளை பெரிதும் சந்தோஷப்பட செய்தது. முகம் பிரகாசமாக, நவீனிடம் திரும்பி அண்ணா பொண்ணு பார்க்குறதுக்கு பூ பழம் எல்லாம் வாங்கியாச்சா? என்று பொறுப்பாக வினவவும் அர்ஜுன் ஒரு நொடி ஆடிபோனான். என்னடா இவளும் இப்படி மாறிட்டாளே என்று குழம்பி போனான்.

அவளது முகத்தை கண்ணாடி வழியே பார்த்த நவீனின் முறுவல் இன்னும் பெரிதாக “நீயும் அர்ஜுனை போல் மக்காய் இல்லாமல் செம புத்திசாலின்னு நிருபிச்சிட்ட அஹல்யா” என்று கூறவும் இருவரும் சிரித்துக்கொண்டனர்.

இந்த ரகசியத்தை நவீனின் தந்தைக்கும் அர்ஜுனுக்கும் மற்ற மூவரும் கூறவில்லை. தெரியும் நேரம் வரும் பொழுது தெரிந்துக்கொள்ளட்டும்... என்று அமைதிக்காத்தனர்.

கார் அர்ச்சனாவின் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்க, அர்ஜுன் “இப்போ அஹல்யா வீட்டுக்கு ஏன்டா போற? ரெஸ்ட் எடுத்துட்டு போக போறோமா?” என்று வினவவும். நவீனும் அஹல்யாவும் தலையில் அடித்துக்கொண்டனர். அஹல்யா வீட்டரகில் தான் அர்ச்சனாவின் வீடு என்பதை மறந்துப் போனான் அர்ஜுன்.

கார் மெதுவாக சென்று அர்ச்சனாவின் வீட்டின் முன் நிக்க, அர்ஜுன் “என்னடா என்கிட்ட அப்போ இல்லவே இல்லன்னு சொன்ன?” என்று கேள்விகேட்கவும்... “இல்ல மச்சா ஒரு surprisea இருக்கட்டுமேனு” என்று தலையை சொரிந்தான் நவீன். அவனது வழிசலை எல்லாம் பொறுத்துக்கொண்டு அர்ச்சனாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான் அர்ஜுன். வெளியே வந்து பார்த்த அர்ச்சனாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கு நவீன் மட்டுமே நின்றுக்கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அம்மாவிடம் என்ன சொல்லுவது இப்போ என்ன பிரச்சனை நடக்க போகிறதோ என்று அவள் போக்கில் எண்ணிக்கொண்டிருக்க, அன்புக்கரசி வெளியே வந்தார்.

“யாருமா அர்ச்சனா?”

“நான் தான்மா உங்க மருமகன்” என்று தெனாவட்டாக கூறினான் நவீன்.. அவன் கூறியதும் தூக்கிவாரி போட்டது அவளுக்கு. அன்புக்கரசி அவளை பார்க்கவும் அர்ச்சனா இல்லை என்பதுபோல் தலை அசைத்தாள்..

அவர் பொறுமை இழக்காமல் “தெளிவாக புரியுற மாதிரி கொஞ்சம் பேசுபா...” என்று கொஞ்சம் கண்டிக்கும் தோரணையில் பேச, அடுத்து அங்கே என்ட்ரி கொடுத்தது அர்ஜுனும் அஹல்யாவும். “ஆமாம்மா அண்ணா சொல்றது நிஜம்தான்” என்று பரிந்து பேசினாள் அஹல்யா.

அவள் பேசியதை கேட்டு அர்ச்சனாவிற்கு முழுவதும் குழம்பி போக “என்னடி நீயும் உளறுற” என்று சீறினாள். இவர்கள் பேச பேச அன்புகரசியின் முகம் கோவமும் குழப்பத்தையும் மாற்றி மாற்றி காட்டின. அதை உணர்ந்த நவீன் “அத்தை அத்தை நீங்க குழம்பாதீங்க” என்று கூறிவிட்டு “அப்பா...” என்று அழைத்தான், அதுவரை பொறுமையாய் காத்திருந்த சம்பத் உள்ளே நுழைந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.