(Reading time: 10 - 19 minutes)

01. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

ழை!. என்ன அதிசயம் நிகழ்ந்ததோ!??? சென்னையில் இன்று அதிகாலையிலிருந்தே மழை!. நேரம் காலை ஏழு மணி. மழை எப்போதுமே அழகு. விடுமுறை நாளில் மழை ரொம்பவே அழகு.

Ullam varudum thendralசாலையில் நடமாட்டமே இல்லை. இந்த உலகத்தின் மிகப்பெரிய அதிசயம் மழை. மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, விமானம் ஏறி உலக அதிசயங்களை ரசிக்க செல்பவர்களெல்லாம் மழையை பார்த்ததும் வீட்டுக்குள் போய் புகுந்து கொள்கிறார்களே!!!? தனக்குள்ளே சொல்லி சிரித்துக்கொண்டு, செல்லமாய் வருடி தாலாட்டிய அந்த சாரலில் ரசித்து ரசித்து நனைந்துக்கொண்டிருந்தாள் அபர்ணா

அது ஏனோ மழையில் நனைவது அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு மழையை தவற விட்டு விட்டால் கூட எதையோ இழந்தது போலே இருக்கும்.

சிறிது நேரம் மனதார நனைந்து விட்டு தான் தங்கி இருக்கும் ஹாஸ்டல் அறைக்கு வந்தாள் அபர்ணா.  ஈரம் சொட்ட, சொட்ட அவளது தனி அறைக்குள் வந்தவள் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக்கொண்டாள்.

உன்னை பார்த்தா யாராவது காலேஜ் லெக்சரர்ன்னு சொல்லுவாங்களா? அதுவும் மேத்ஸ் லெக்சரர். ஸ்டுடென்ட்ஸ் யாராவது பார்த்தா சிரிக்க போறாங்க. அவள் மனம் அவளை கேலிப்பேசியது

சிரிச்சா சிரிச்சிட்டு போறாங்க. எனக்கு மழையிலே நனையணும், பாட்டு கேட்கணும், கவிதை எழுதணும்.  வாழ்கையை ரசிச்சு ரசிச்சு வாழணும். வாய்விட்டு சொன்னாள் அபர்ணா.

வாழ்கையை ரசித்து ரசித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த அபர்ணாவின் கண்கள் இந்த நிமிடம் வரை  கண்ணீர் என்ற ஒன்றை பார்த்ததில்லை.

நேரம் மதியம் ஒன்று. கண்ணாடி முன்னால் நின்றிருந்தாள் அபர்ணா.

வில்லான புருவங்கள், மீன்களோடு போட்டி போடும் கண்கள், வெண்ணை கன்னங்கள், கோவை பழ உதடுகள் இப்படி எதுவுமே இல்லாத சாதாரண பெண் நம் அபர்ணா.(கதாநாயகின்னா தேவதையா தான் இருக்கணுமா என்ன?)

அபர்ணா நம்ம வீட்டு, நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி ரொம்ப சாதாரண பொண்ணு. நீளமான கூந்தலும், எல்லாரையும் தோற்கடிக்கும் அழகான புன்னகையும் தான்  அவளது பிளஸ் பாயின்ட்ஸ்.

ஒலித்தது அவள் கைப்பேசி. கிளம்பிட்டியா அப்பூ?  கைப்பேசியில் ஒலித்தது விஷ்வாவின் குரல் .

'இதோ நான் ரெடி. நீ எங்கே  இருக்கே?

அ...து....வ...ந்து...... நான் ஒரு வேலையிலே சிக்கிட்டேன். நீ நேரா ஹோட்டலுக்கு  போயிடேன். நான் பத்து நிமிஷத்திலே அங்கே வந்திடறேன்.' என்றான் விஷ்வா.

நினைச்சேன். எந்த பத்து நிமிஷம்? உன் பத்து நிமிஷமா? என் பத்து நிமிஷமா?  உன் பத்து நிமிஷமன்னா ரெண்டு மணி நேரம்னு அர்த்தம். ஒரு நாளாவது சொன்ன டைம்க்கு வந்திருக்கியா நீ?

இல்லை. இல்லை. நீ வேணும்னா  பாரு. இன்னைக்கு கரெக்டா வந்திடுவேன் அப்படி வரலேன்னா ஹோடேல்லே வெச்சே தோப்புகரணம் போடறேன். ஓகே யா?

'இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை. ஆமாம் எந்த ஹோட்டல்?.

ஹோட்டலின் பெயரை சொன்னான் விஷ்வா.

சரி. வெச்சிடறேன். சீக்கிரம் வா'. துண்டித்தாள் அழைப்பை.

வர்கள் இருவரும் பேசுவதை யாராவது கேட்டிருந்தால் உடனே இருவரையும் காதலர்களாகவே நினைத்து கற்பனை செய்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்கள் இருவரும் நண்பர்கள். கல்லூரி நாட்களிலிருந்து உயிர் நண்பர்கள்.

தினமும்  இருவருக்குமிடையில் குறைந்த பட்சம் மூன்று சண்டைகளாவது வரும். அவன் எங்கே இருந்தாலும் தொலைப்பேசியில் அழைத்தாவது சண்டை போடுவாள் அபர்ணா.

ஆனால் இருவரும் பேசிக்கொள்ளாத நாள் என்று இதுவரை வந்ததில்லை. இனிமேலும் வராது என்பது அவள் நம்பிக்கை.

இவர்கள் இருவரின் நட்பை சரியாய் புரிந்து கொள்பவர்கள் மிகக்குறைவு. அது ஏன் என்று இன்றுவரை புரியவில்லை அவளுக்கு.

'ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி மாதிரி பழகறாங்க' என்பார்கள் சிலர்.

அதை கேட்டால் சுள்ளென்று கோபம் வரும் விஷ்வாவுக்கு.

அது என்னது அது? அண்ணன்-தங்கச்சி.  நம்மை நாமே நம்பாம, அண்ணன்- தங்கச்சின்னு ஒரு கவசம் போட்டுட்டு பழகணுமா? நான்சென்ஸ். என்னை பொறுத்தவரை, நான் தங்கசிங்கற வார்த்தைக்கு கொடுக்கிற மரியாதையை விட, friendங்கிற வார்த்தைக்கு கொடுக்கிற மரியாதை அதிகம். ஷீ இஸ் மை friend. ஷீ வில் பீ மை friend for ever.

வன் வார்த்தைகளை நினைத்தபடியே, இதழ்களில் புன்னகை ஓட, துப்பட்டாவை மடித்து பின் செய்த போது மறுபடியும் ஒலித்தது கைப்பேசி. அவள் முகம் மலர்ந்தது .திருச்சியில் இருக்கும் அவள் வீட்டிலிருந்து அழைத்திருந்தார் அவள் அப்பா சந்திரசேகர்.

'அப்பா....' 'சொல்லுங்கப்பா' என்றாள் அபர்ணா.

எங்கே மா இருக்கே?

ஹாஸ்டல்ல தான்பா இருக்கேன். உங்ககிட்டே நேத்தே சொன்னேனே பா. விஷ்வா நேத்துதானே யூ.எஸ் லேர்ந்து வந்தான். அதான் இன்னைக்கு  லஞ்சுக்கு வெளியிலே போலாம்னு சொன்னான். கிளம்பிட்டிருக்கேன்பா.

அப்பாவிற்கு தெரியாமல், அவரிடம் சொல்லாமல் அவள் எதுவுமே செய்வதில்லை. அதற்கான அவசியமும் இருந்ததில்லை. அவள் வீட்டில் இவர்கள் நட்பை சரியாய் புரிந்துக்கொண்டது அப்பா மட்டுமே.

நம்பிக்கை அவருக்கு. தன் மகளின் மீது நம்பிக்கை. எல்லா விஷயத்திலும் தன் எல்லைகள் அவளுக்கு தெரியும் என்ற நம்பிக்கை. தன் வளர்ப்பின் மீது இருக்கும் நம்பிக்கை.

'சரிம்மா. ஜாக்கிரதையாய் போயிட்டுவா' என்றார் அப்பா.

சிறிது நேரம் கழித்து, தனது வேலையை முடித்துக்கொண்டு, ஹெல்மெட்டை அணிந்துக்கொண்டு, தனது வண்டியை நகர்த்திக்கொண்டு கிளம்பினான் விஷ்வா.

வழியில் இருந்த சிக்னலில் அவன் தன் வண்டியை நிறுத்திய போது அவனருகில் வந்து நின்றது இன்னொரு இரு சக்கர வாகனம்.

அதை ஒட்டிக்கொண்டு வந்தவனும் தலை கவசம் அணிந்திருந்தான். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத போதிலும், ஏனென்றே புரிந்துகொள்ள முடியாமல் இருவருக்குள்ளும் ஒரே நேரத்தில் கோபமும், அழுத்தமும் பரவியது.

மனதில் எழுந்த அழுத்தத்துடன் விஷ்வா மெல்ல திரும்பி அவனை பார்த்த அதே நொடியில் அவனும்  திரும்பினான், ஹெல்மெட்டின் உள்ளே இருக்கும் முகம் ஒருவருக்கு ஒருவர் தெரியவில்லை.

அது ஏனோ அங்கே நிற்கவே முடியாமல் விஷ்வாவினுள்ளே எரிச்சல் மண்டியது. சிக்னல் நிறம் மாற, அருகில் நின்றவன் பைக்கை உதைத்து கிளப்பிய வேகத்தில் அவன் மனநிலை விஷ்வாவுக்கு புரியத்தான் செய்தது.

விஷ்வா சென்ற திசைக்கு நேர் எதிர் திசையில் சென்ற அவன் தனது பைக்கை அந்த ஹோடேலின் வாசலில் கொண்டு நிறுத்தினான்.

அது அபர்ணாவும் விஷ்வாவும் வருவதாக முடிவு செய்திருந்த அதே ஹோட்டல்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.