(Reading time: 10 - 19 minutes)

 னது அறையை பூட்டிக்கொண்டு கீழே இறங்கிய அபர்ணா, ஸ்கூட்டியை இயக்கி  அந்த ஹோட்டலை அடைந்தாள்.

வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, நகர்ந்தபோது கண்ணில் பட்டது அந்த இரு சக்கர வாகனம். சரியான நேர்கோட்டில் நேராக நின்றது அந்த பைக். அதை பார்த்தும் அவள் இதழ்களில் ஒரு புன்னகை மலர்ந்தது. அது யாருடையது என்று அவளுக்கு நன்றாய் தெரியும்.

அந்த வண்டிக்கு சொந்தக்காரனை பற்றி சொல்ல வேண்டுமானால் அவன் ஒரு  perfect பத்மநாபன். அந்த perfect பத்மநாபனின் பெயர் பரத்வாஜ். சென்னையின் அந்த அரசு கல்லூரியில் அவள் வேலைபார்க்கும் அதே கணிதத்துறையின் assistant professor பரத்வாஜ்

நேரம் தவறாமையில் துவங்கி ,அவனது  நடை, உடை, பார்வை, அவன் செயல்கள், என எல்லாவற்றிலும் அப்படி ஒரு நேர்த்தி மிளிரும். அவன் தேவை இல்லாமல் பேசி அவள் பார்த்ததே இல்லை. யோசித்து, அளவெடுத்து, செதுக்கிய வார்த்தைகள் மட்டும் தான் வெளியே வரும். 

முப்பது, முப்பத்தி ஓரு  வயதிற்குள் அவன் இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு இந்த நேர்த்தியும் ஒரு காரணம் என்றே தோன்றும் அவளுக்கு.

அவன் போல் இருந்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறாள் அபர்ணா. ஆனால் ஏனோ முடிவதில்லை.

அவனும் வந்திருக்கிறானா என்ன?  யோசித்தபடியே உள்ளே  சென்று அமர்ந்தாள் அபர்ணா.

பாவம் அவளுக்கு என்ன தெரியும்? அவனுக்கும் விஷ்வாவுக்கும் இடையில் இருக்கும் கோபங்களும், மனப்போராட்டங்களும்......,

விஷ்வா இன்னும் வரவில்லை. அலைப்பாய்ந்த அவள் கண்களுக்கு பரத்தும் தென் படவில்லை.

சின்ன பெருமூச்சுடன் கைப்பேசியின் ஹெட் போனை காதில் மாட்டிக்கொண்டு தன் இருக்கையில் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் அபர்ணா. காதிற்குள் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அவள் மெல்ல கண்களை திறந்த நொடியில், அவள் அமர்ந்திருந்த மேஜைக்கு இரண்டு மேஜைகள் தள்ளி இருந்த இருக்கைக்கு போனது அவள் பார்வை. சரியாய் அந்த நொடியில். மேஜையின் மீது கைகளை ஊன்றிக்கொண்டு கைபேசியில் பார்வையை பதித்து எதையோ படித்துக்கொண்டிருந்த பரத், தன் இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்தான்.

'இ.....தோ இ.......தோ எ.....ன் பல்.......லவி' அவள் காதிற்குள்  பாடல் ஒலித்துக்கொண்டிருக்க  அவள் கண்கள் மெல்ல மெல்ல விரிந்தன. அவனை பார்த்த நிமிடத்திலேயே மனம் அவனிடம் தாவி ஓடிவிடுவதை  போல் உணர்வு பரவியது அவளுக்குள்ளே

தினமும் டக்கின் செய்ய பட்ட முழுக்கை சட்டையில்  இருப்பவன், இன்று  ஜீன்ஸ்  டி-ஷர்டில், ரொம்பவே இயல்பாக இருந்தான் அவன். தன் கையிலிருந்த கைபேசியில் பார்வையை பதித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

அவள் கண்கள் மெல்ல மெல்ல விரிந்த அந்த நொடியில்  ஹா....ய் என்று சிரித்தபடியே வந்து ,எப்படி கரெக்டான டைமுக்கு வந்திட்டேனா? என்றபடியே அவள் எதிரில் அமர்ந்தான் விஷ்வா.

'ஆ......ஹா... perfect டைமிங். உனக்கு திருஷ்டிதான்  சுத்தி போடணும்' என்றபடியே காதில் இருந்த ஹெட் போனை கழற்றினாள் அபர்ணா..

அவன் மலர்ந்து சிரித்த நொடியில் 'சிரிக்காதே. பங்க்சுவாலிட்டின்னா என்னன்னு நீ அவர்கிட்டே கத்துக்கணும்' தன்னையே அறியாமல் சட்டென சொல்லிவிட்டிருந்தாள் அபர்ணா.

அவளுக்கென்ன தெரியும். அவனிடமிருந்து கற்றுக்கொள்வதென்ன, அவனை பார்ப்பதையே விஷ்வா விரும்பமாட்டான் என...

அவ.......ரா..? .எவ....ரு....? என்று பார்வையை சுழல விட்டவனின் கண்ணில் நல்ல வேளையாக படவில்லை பரத். சற்று முன் அவன் சிக்னலில் சந்தித்த அதே பரத். கைப்பேசியில் கண் பதித்திருந்த பரத்தின் பார்வையும் நல்ல வேளையாக நிமிரவில்லை.

யாரு அப்பூ? என்றான் விஷ்வா.

'யாருமில்லை நீ ஏதாவது ஆர்டர் பண்ணு' என்று பேச்சை மாற்றினாள் அபர்ணா. ஏனோ அந்த நேரத்தில் அவனிடம் எதையும் சொல்ல விரும்பவில்லை அவள்.

அவன் கண்கள் மெனு கார்டில் பதிந்த நொடியில் அவள் கண்கள் மெல்ல மெல்ல நிமிர்ந்தன. விஷ்வாவை தாண்டி சென்றது அவள் பார்வை.

சாப்பிட துவங்கி இருந்தான் பரத்.

வன் வகுப்பெடுப்பது கூட தனி அழகுதான்  .எப்போதும் வகுப்பறையில் நுழைந்தவுடன் சரியாய் இரண்டு நிமிடங்கள் மௌனமாய் நிற்பான். அவன் பார்வையிலேயே  வகுப்பறை தன்னாலே ஒழுங்காகும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து 'ரெடி?' என்ற கேள்வியுடன் பாடத்தை துவக்குவான் அவன். அமைதியான அந்த வகுப்பறையில் அவன் கணீர் குரல் மட்டுமே எதிரொலிக்கும். மாணவ மாணவிகள் ஏதோ ஒரு மந்திரத்தில் கட்டுப்பட்டவர்களாக அமர்ந்திருப்பார்கள்.

அவள் கல்லூரியில் சேர்ந்த பிறகு, இந்த ஆறு மாதங்களில் எத்தனையோ நாட்கள், அவளுக்கு வகுப்பு இல்லாத நேரங்களில் அவன்  வகுப்புக்கு வெளியே சற்று தள்ளி அமர்ந்து அவன் பாடம் நடத்தும் அழகை ரசித்து கேட்டு மகிழ்ந்திருக்கிறாள்.

அவன் எழுத்துக்கள் கரும்பலகையே அழகாக்கி விட்டது போல் தோன்ற ,அதை ரசித்தபடியே நின்றிருக்கிறாள்.

என்ன சாப்பிடறே? என்றான் விஷ்வா

ம்...?.ம்...?  ..என்னது....?

அது சரி.! எங்கே இருக்கு உன் கவனமெல்லாம்? என்ற விஷ்வாவின் குரலில்  சட்டென தன்னிலை பெற்றவளாய் நீயே எதாவது ஆர்டர் பண்ணு விஷ்வா. ப்ளீ.......ஸ் என்றாள் அபர்ணா.

அவளை ஏற இறங்க பார்த்தவன், சில நமிடங்கள் கழித்து சர்வரை அழைத்து தேவையானதை சொல்லிவிட்டு, இரு கை கழுவிட்டு வந்திடறேன் என்று எழுந்தான்  விஷ்வா.

அதே நேரத்தில் ,சரியாய் அதே நேரத்தில் சாப்பிட்டு முடித்து, கை கழுவ எழுந்தான் பரத்.

வாஷ்பேசினில் கை கழுவிக்கொண்டிருந்தான் விஷ்வா. அவனருகே இருந்த இன்னொரு வாஷ்பேசினில் கையை கழுவிக்கொண்டு தனது கைகுட்டையில் கையை துடைத்தபடியே நிமிர்ந்த பரத்தின் கண்கள். அவன் முன்னால் இருந்த அந்த பெரிய கண்ணாடியில் பதிய அதில், அருகில் நின்றிருந்த விஷ்வாவின் முகம் தெளிவாய் தெரிந்தது.

சரேலென திரும்பினான் பரத். அதே வேகத்தில் திரும்பினான் விஷ்வா. இருவர் கண்களும் சந்தித்து கொண்ட அந்த நிமிடத்தில் இருவருக்குள்ளும் ஒரு புயலே அடித்து ஓய்ந்தது.

தொடரும்...

Go to episode # 02

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.