(Reading time: 19 - 37 minutes)

02. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

ருவரும் சில நொடிகள் அப்படியே நின்றுவிட்டிருந்தனர். இருவருமே எதிர்பார்க்காத இந்த சந்திப்பு. இரண்டு வருடத்திற்கு பிறகான திடீர் சந்திப்பு.

ஒருவர் கண்களை ஒருவர் சந்தித்த அந்த நிமிடத்தில் இருவருக்குள்ளும் ஒரே கேள்வி எழுந்தது.

Ullam varudum thendral

'அது எப்படி உன்னால் எனக்கு துரோகம் செய்ய முடிந்தது.? அந்த நேரத்தில் ஒரு நிமிடம் கூட  என்னை பற்றி நினைத்து பார்க்க முடியவில்லையா உன்னால்?

கண்களில் கோபம் பரவ பரத் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, இதயம் பற்றி எரிவது போல் இருந்தது விஷ்வாவிற்கு.

அதற்கு மேல் அங்கே ஒரு நொடி கூட நிற்க விரும்பாதவனாய் அங்கிருந்து விறுவிறுவென நடந்து இருக்கையில் வந்து அமர்ந்தான் விஷ்வா.

அவன் முகத்தை பார்த்து திகைத்து போனாள் அபர்ணா 'என்னாச்சு விஷ்வா.?'

பதில் சொல்லவில்லை அவன். தன் உள்ளங்கைகளில் முகத்தை புதைத்துக்கொண்டு தன்னை ஆசுவாச படுத்திக்கொள்ள முயன்றான் விஷ்வா.

'என்னாச்சு விஷ்வா?. கேட்கறேன் இல்ல. யார் கூடயாவது சண்டையா? அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள் அபர்ணா.

பதில் சொல்லாமல் மேஜை மீதிருந்த தண்ணீரை எடுத்து கடகடவென குடித்தான் விஷ்வா. ஒரு நிதானமான சுவாசத்திற்கு பிறகு சட்டென புன்னகைதான் 'ஒண்ணுமில்லைடா கூல்'

கூலா? கொதிச்சு போய் வந்தே? அப்புறம் கூல்ங்கிறே? என்னாச்சு விஷ்வா? என்கிட்டே சொல்லகூடாத கூடாத விஷயமா?

'அதெல்லாம் ஒண்ணுமில்லை அப்பூ'. என்றான் ஒரு ஆழமான சுவாசத்துடன். இப்போ ஏதாவது பேசினா பழசு எல்லாம் ஞாபகம் வரும். அப்புறம் இன்னைக்கு fullஆ மூட் இருக்காது. இன்னொரு நாள் சொல்றேனே. ப்ளீஸ்.

ஒரு சின்ன பெருமூச்சுடன் நிமிர்ந்தவளின் கண்கள் பரத் அமர்ந்திருந்த மேஜைக்கு போக அங்கே அவன் இல்லை. 'அதற்குள் எங்கே சென்றான் இவன்.?'

கை கழுவுமிடத்திலிருந்து விறுவிறுவென வந்தவன் பில்லுக்கான பணத்தை கொடுத்துவிட்டு ஹோடேலை விட்டு கோபமாக வெளியேறியதை கவனிக்கவில்லை அபர்ணா.

அதை கவனித்திருந்தால் கூட இருவரையும், விஷ்வாவை பற்றி அவளுக்கு தெரிந்த விஷயங்களையும் வைத்து அவள் மனம் ஏதாவது கணக்கு போட்டிருக்கும். கவனிக்கவில்லை அவள்.

அதற்குள் விஷ்வா ஆர்டர் செய்தவைகள் வந்துவிட சாப்பிட துவங்கினார்கள் இருவரும்.

திடீரென்று ஏதோ நினைவு வந்தவளாய் சட்டென கேட்டாள் அபர்ணா 'ஜனனியை போய் பார்த்தியா இல்லையா விஷ்வா.?

அவனுக்குள்ளே திடுக்கென்றது. எப்போதும் அபர்ணாவிடம் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டித்தான் பழக்கம் அவனுக்கு. எதையும் மறைத்து பழக்கமில்லை. ஆனால் இப்போது ஜனனி விஷயத்தில்.......

பதில் சொல்லு விஷ்வா....

ம்... ஆங்... பார்க்கணும். ரெண்டு நாளிலே போய் பார்க்கறேன்.

என்ன விஷ்வா நீ? யூ எஸ் லேருந்து நீ நேரா பெங்களூர் தானே போயிருக்கணும்? ஏன் விஷ்வா ? ஏதாவது ப்ராப்ளமா?

அடடா........... எவடா இவ? கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு ரெண்டு நாளிலே போய் பார்க்கிறேன் போதுமா? என்றான் நிமிராமல்.

'அதுக்கில்லை விஷ்வா, கொஞ்ச நாளா ஜனனி என்கிட்டே பேசறதில்லை. நான் போன் பண்ணா எடுக்கறதில்லை அதுதான் கேட்டேன்' என்றாள் தயக்கமான குரலில்..

திடுக்கென்று நிமிர்ந்தான் விஷ்வா. பின்னர் சட்டென சமாளித்துக்கொண்டு 'ஏதாவது பிஸியா இருந்திருப்பா. நான் என்னாச்சுன்னு கேட்கிறேன்.' அடுத்து என்ன சாப்பிடறே சொல்லு. ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்....? எங்க அப்பூவுக்கு ரொம்ப பிடிக்குமே....  மெல்ல பேச்சை மாற்றினான் விஷ்வா.

அவள் மனம் சமாதானம் அடையவில்லை. விஷ்வாவுக்கும் ஜனனிக்கும் இடையில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது? திரும்ப திரும்ப அவளுக்குள்ளே அதே கேள்வி சுழன்றது.

வீட்டை அடைந்திருந்தான் பரத். மனதை அழுத்திய நினைவுகளுடன், பைக்கை நிறுத்திவிட்டு நடந்த போது எதிர்ப்பட்டார் அவர். அவரை பார்த்தவுடன் அவன் மனம் சட்டென லேசாகிப்போனது.

எப்போதுமே அவரை பார்த்தவுடன் பரத்தின் முகத்தில் தானாகவே ஒரு புன்னகை பிறக்கும்.

நம் பரத்தை நிற்க வைத்து, அவன் தலையில் கொஞ்சம் அதிகமாகவே வெள்ளையடித்து, ஒரு கண்ணாடி மாட்டி, உதட்டில் ஒரு நிரந்தர புன்னகையை ஒட்டிவிட்டால் அவன் இவாராகி விடுவான்..

அவர்தான் அவன் தாத்தா. அச்சு அசலாய் பரத் அவன் தாத்தாதான்

வெள்ளை பைஜாமா ஜிப்பாவில், அழகான புன்னகையுடன் நின்றிருந்தார் அவர். வயதில் இருக்கும் முதுமை எப்போதும் அவர் உடலிலோ, மனதிலோ தெரிந்ததில்லை.

'டேய் உன் கார் சாவி எங்கேடா?' என்றார் தாத்தா. 'குடு நான் கொஞ்சம் வெளியே போகணும்'

நீங்க தனியா கார் ஓட்டிக்கிட்டா? 'உங்களுக்கு எண்பத்திரண்டு வயசாச்சு தாத்தா.' என்றான் பரத்.

'அதுதான் எண்பத்திரண்டு வயசாயிடிசில்லே இனிமே என்னடா பயம்.? எப்பவாயிருந்தாலும் இனிமே எனக்கு ஆக போறது ஒண்ணே ஒண்ணுதான். குடு சாவியை.'

'அதுக்கில்லை தாத்தா. நீங்க எங்கே போகணும்னு சொல்லுங்க. நானும் கூட வரேன் இன்னைக்கு நான் free தான்'.

நான் போற இடத்துக்கெல்லாம் உன்னை கூட்டிட்டு போக முடியாதுடா .நான் என் லவ்வரை பார்க்க போறேன் அங்கே வந்து நீ நந்தி மாதிரி நிப்பியா?.

ஓ! இந்த வயசிலே இதெல்லாம் வேறயா? சிரித்தான் பரத்.

ஏன்டா?  உனக்கு யாருமில்லைன்னு பொறாமையா இருக்கா? குடுடா சாவியை.

நோ! என்றான் பரத். உங்களை தனியா காரை எடுக்க விட மாட்டேன்.

போ.......டா.... என்றார் தாத்தா நான் ஆட்டோலே போறேன். இல்லைனா நடந்தே போறேன். 'இனிமே உன் கார்லேயோ, பைக்கிலேயோ ஏறினேன்னா பாரு' கோபமாக கிளம்பி நடந்தவரை புன்னகையுடன் பார்த்தபடியே நின்றிருந்தான் பரத்

அது எப்படி இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாய், உற்சாகமாய் வளைய வருகிறாரோ தாத்தா!.  வியப்பாய் இருந்தது அவனுக்கு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.