(Reading time: 19 - 37 minutes)

 

னம் நிறைந்த மகிழ்ச்சியுடன், அவன்  மீதிருந்த நேசத்தை மொத்தமாய் அப்படியே தன் இதயத்துக்குள்ளே செலுத்திக்கொள்வதைப்போல் ஆழமாய் சுவாசித்தாள் அபர்ணா. சில்லென்ற காற்று அவளை அப்படியே தழுவி சென்றது.

மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் எழுந்து நின்றான். அவன் கண்கள் மறுபடியும் சுழன்றன. யாரும் கண்ணில் தென்படவில்லை. யோசித்தபடியே நடந்தான் பரத்.

அந்த நிமிடத்தில், படகின் பின்னால் இருந்து யாரோ அவனை கவனிப்பது போல் தோன்ற, நடந்தவன் ஒரு நொடி சட்டென்று நின்று திரும்பிப்பார்த்தான்.

அவன் பார்த்து விடக்கூடாது என்று நினைத்து பதுங்கிக்கொண்டவளை காற்று ஏமாற்றி விட, படகை தாண்டி பறந்த அவள் சேலை தலைப்பு அவன் கண்ணில்  பட்டு விட்டிருந்தது. சட்டென்று அதை இழுத்து சொருகிக்கொண்டாள் அபர்ணா.

சில நொடிகள் யோசித்தபடியே நின்றவன், யாருடனும் கண்ணாமூச்சி ஆடும் பொறுமை இல்லாதது போல் கை கடிகாரத்தை பார்த்தபடியே திரும்பி  நடந்தான்.

ஆனால் அவன் மனம் மட்டும் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது. யார் அது? அது நிச்சியமாக அவனக்கு தெரிந்தவளாகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. அவன் கண்ணில் பட்ட அந்த புடவை தலைப்பு அவன் நினைவில் நன்றாக பதிந்திருந்தது.

னது இரு சக்கர வாகனத்தின் அருகே வந்தவனின் கண்களில் பட்டது. அங்கே நின்றிருந்த அவள் ஸ்கூட்டி . 'இது அபர்ணாவினுடையதாயிற்றே!!!!

மனம் ஏதோ சொல்ல விழைய ,இடம் வலமாய் தலையசைத்துக்கொண்டான் பரத். பொதுவாக ஒரு விஷயத்தை சரியாக ஆராயாமல் எப்போதுமே அவன் எந்த முடிவுக்கும் வந்துவிடுவதில்லை. ஆனாலும் மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்த அந்த சம்பவம் மட்டும் அவனை இன்னமும் குழப்பிக்கொண்டே தான் இருக்கிறது.

என்ன இருக்கிறது அவளுக்குள்ளே? மனதில் ஓடிய குழப்பங்களுடனே தனது பைக்கை கிளப்பினான் பரத்.

'எது எப்படி போனாலும் இது போன்ற காதல் விவகாரங்களில் நான் மாட்டிக்கொள்வதாக இல்லை. அவள் மனதிற்குள் அப்படி ஏதாவது துளிர் விடுவது போல் தெரிந்தால் முளையிலே துண்டித்து விடும் வழிகளும் எனக்கு தெரியும்' என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவனின் மனம் மட்டும் நிலைக்கொள்ளவில்லை.

மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் மறுபடியும் அவன் நினைவிலாடியது.

மூன்று நாட்களுக்கு முன்னால் சில மாணவர்கள் ஒரு  பிரச்சனையை அவனிடம் கொண்டு வர, அவர்களுடன் கல்லூரி மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தான் பரத்.

'திஸ் இஸ் ரிடிகுலஸ். எப்படியா இப்படி எல்லாம் யோசிக்கறீங்க? ஒரு பையனும் பொண்ணும் நல்ல friendsஸா இருக்கிறது ரொம்ப நல்ல விஷயம். இப்படியெல்லாம் கேவலமா யோசிச்சு அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடாதீங்க'

சரியாய் அந்த நொடியில் அவர்களை கடந்து சென்ற அபர்ணாவின் காதில் அந்த வார்த்தைகள் விழுந்தன.

மாணவர்கள் சென்றதும் ,வகுப்பறையை நோக்கி நடந்தவனின் அருகில் ஓடி வந்து நின்றாள் அபர்ணா. கண்களில் நிறைந்திருந்த மகிழ்ச்சியுடன் கேட்டாள் 'நீங்க இப்போ சொன்னது உண்மைதானே.? மனசார தானே சொன்னீங்க?'

அவள் எதை குறிப்பிடுகிறாள் என்று புரிந்துக்கொள்ளவே சில நொடிகள் பிடித்தது அவனுக்கு. அவள் தவிப்பு அவனுக்கு வியப்பாய் இருக்க எதுவுமே பேசாமல் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் பரத்.

இல்லை...... இப்போ சொன்னீங்களே ஒரு பையனும் பொண்ணும் நல்ல friendsஸா இருக்கிறது ரொம்ப நல்ல விஷயம். இப்படியெல்லாம் கேவலமா யோசிச்சு அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிடாதீங்க' அப்படீன்னு...... அப்போ ஒரு பையனும் பொண்ணும் friendsஸா இருந்தா நீங்க கரெக்டா புரிஞ்சிப்பீங்கதானே? அவங்களை பிரிக்கணும் நினைக்க மாட்டீங்க அப்படிதானே?

என்ன வேண்டுமாம் இவளுக்கு.? கைகளை பின்னால் கட்டிக்கொண்டு எதுவுமே பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் பரத்.

சொல்லுங்க அப்படிதானே?

சில நொடிகள் அவள் முகத்தை ஆராய்ந்தவன் மெல்ல 'ஆமாம்' என்று தலையசைத்தான்.

ப்ராமிஸ்? அவன் முன்னால் கை நீட்டினாள் அபர்ணா.

அவன் புருவங்கள் மெல்ல உயர்ந்தன. 'இது என்ன விளையாட்டு.? இதற்கெல்லாம் தயாராக இல்லாதவனாய், அந்த இடத்தை விட்டு அவன் அகல முயல, சட்டென வழிமறித்தாள் அபர்ணா.

ப்....ளீஸ்.... ப்ராமிஸ் பண்....ண மாட்.....டீங்களா? நீங்க ப்ராமிஸ் பண்ணா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ப்ளீ......ஸ் என்றாள் கெஞ்சும் குரலில்,

மெல்ல கண்களை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்தான் பரத்.

அந்த கண்களில் நிரம்பி இருந்த தவிப்பையும், கெஞ்சலையும் பார்த்தவனால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

என்னவென்றே தெரியாத ஏதோ ஒன்று அவனை செலுத்த ,அவள் எதற்கு கேட்கிறாள் என்றே யோசிக்காமல், சொல்லப்போனால் அவனே அறியாமல் அவள் கை மீது கை வைத்துவிட்டிருந்தான் பரத்.

சில நாட்களாய் மனதை உறுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு குழப்பம் சட்டென விலகிவிட்ட  மகிழ்ச்சியில் 'தாங்க் யூ. 'தாங்க் யூ. 'தாங்க் யூ ஸோ மச். என்று சொல்லிவிட்டு மனம் எங்கும் நிரம்பியிருந்த  சந்தோஷத்தில் அங்கிருந்து ஓடியே விட்டிருந்தாள் அபர்ணா.

அதன் பிறகு பலமுறை யோசித்து பார்த்துவிட்டான், நான் எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறேனே? யாரிடமும் இப்படி தோற்று போனதில்லையே? அந்த நிமிடத்தில் நான் அவளிடம் எப்படி தோற்றுப்போனேன்.? எப்படி ,எதற்காக அவளுக்கு வாக்குறுதி கொடுத்தேன்? பதில் கிடைக்க வில்லை அவனுக்கு.

பொதுவாக கொடுத்த வாக்குகளை மீறுவதில்லை அவன். ஆனால் இந்த வாக்கு அவனை எப்படி புரட்டி போட போகிறது, எங்கே கொண்டு செல்ல போகிறது என்று அப்போது தெரியவில்லை அவனுக்கு. 

தொடரும்...

Go to episode # 01

Go to episode # 03

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.