(Reading time: 19 - 37 minutes)

 

ஸ்கூட்டியை அந்த கடையின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தாள் அபர்ணா. ஹோட்டலிலிருந்து கிளம்பியவள், அவளது ஹாஸ்டலில் இருக்கும் ஒரு தோழி வாங்கி வர சொல்லி இருந்த ஏதோ ஒரு பரிசு பொருளை வாங்குவதற்காக அந்த கடைக்கு வந்திருந்தாள்.

கடையை சுற்றி பார்வையை சுழல விட்டபடியே நடந்தவளுக்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அப்படியே நின்றேவிட்டாள் அபர்ணா.

'நாம் வாங்க வந்ததை எப்போது வேண்டுமானாலும் வாங்கிகொள்ளலாம். அதை விட சுவாரசியமான விஷயம் ஒன்று இங்கே இருக்கிறதே. அதை முதலில் கவனிப்போம்' என்று யோசித்தபடியே அங்கே நின்றிருந்தவரை நோக்கி நடந்தாள்.

அவர் அருகில் வந்து, அவரை பார்த்து வியந்து போனவளாய் சிறிது நேரம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவள், பின்னர் மெதுவான குரலில் கேட்டாள் நான் உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?

சட்டென வியந்து திரும்பியவர் அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு கேட்டார் 'நீ யாருமா?'

அது... அது வந்து... நீங்க ப..ரத்... பரத்வாஜ் சாரோட தாத்தாவா?

அவர் இதழ்களில் சின்னதாய் ஒரு புன்னகை ஓடியது. 'ஆமாம்'

'ஓ! ரியலி??? ரெண்டு பெரும் அப்படியே ஒரே மாதிரி இருக்கீங்க' சிரித்தாள் அபர்ணா. என்ன வாங்க வந்தீங்க?

நாளைக்கு பரத்துக்கு பிறந்தாநாள் அதுதான் அவனுக்கு ஏதாவது வாங்கலாம்னு வந்தேன்.

நா...ளைக்கு பர,,,,த்துக்கு பிறந்த.....நாளா??? இது நமக்கு தெரியாம போச்சே!!!!!!!!!!!!!!! என்றாள் தனக்குள்ளே.

அவன் பிறந்தநாள் எல்லாம் கொண்டாட மாட்டான். பிறந்த நாள் கொண்டாடுற அளவுக்கு நான் என்ன சாதிச்சேன்னு கேட்பான். பிறந்த நாளைக்கு புது டிரஸ்கூட  போட மாட்டான் அதனாலே அவன் ரசிக்கிற மாதிரி வேற ஏதாவது நல்ல பொருளா வாங்கிக்கொடுக்கணும்னு பார்க்கிறேன். என்றார் தாத்தா.

'உங்க பேரனுக்கு  பிடிச்ச மாதிரி gift தானே? நான் வாங்கி தரேன் வாங்க' என்றவள் நானும் உங்களை தாத்தானு கூப்பிடலாமா? என்றாள்

'தாராளமா கூப்பிடு. அதுக்கு முன்னாடி நீ யாருன்னு சொல்லுமா.'

'அதெல்லாம் சீக்ரெட்' என்றாள் அபர்ணா. அதெல்லாம் உங்களுக்கு தெரியணும்னா நீங்க எனக்கு friend ஆகணும். ஓகே யா?  friends??? என்று அவர் முன்னால் கை நீட்டினாள் அபர்ணா. புன்னகையுடன் கை குலுக்கினார் தாத்தா.

வாங்க உங்க பேரனுக்கு gift வாங்குவோம் அதுக்கப்புறம் நான் யாருன்னு சொல்றேன்.

ரு புத்தக கடைக்குள் அழைத்து சென்றாள் அபர்ணா. அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் தாத்தா.

அவளை சந்தித்த இந்த பத்து நிமிடத்திற்குள், பரத்தை பற்றி பேசும் போதெல்லாம் அவள் முகம் பிரகாசமாவதை  கவனித்துக்கொண்டே இருந்தார் அவர்.

'உங்க பேரனுக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும். இருங்க வரேன்'.

'நல்ல ரொமான்டிக் நாவலா ஏதாவது எடும்மா. அதை படிச்சிட்டாவது அவன் யாரையாவது லவ் பண்றானா பார்க்கலாம்' என்றார் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

யாரு உங்க பேரனா.? வாய்ப்பேயில்லை. அவர் என்ன படிப்பார்னு எனக்கு தான் தெரியும். ஒண்ணு மேத்ஸ் இல்லன்னா பிலாசபி.

புத்தகங்களை அலச துவங்கினாள். ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்து,  சில பக்கங்களை திருப்பி, அதில் சில வரிகளை படித்து, பின்பு தனக்குதானே தலை அசைத்துக்கொண்டு அதை வேண்டாமென்று ஒதுக்கி விட்டு இன்னொன்றை எடுத்து.............

அதை பார்க்கும் போது....... சபரி ராமனுக்கு கனிகளை சுவைத்து சுவைத்து பார்த்து கொடுத்தாளாமே ஏனோ அது நினைவுக்கு வந்தது அவருக்கு.

அவன் மீது அவளுக்கு இருக்கும் அக்கறையும் அன்பும் தெளிவாய் புரிந்தது அவருக்கு .

சில நிமிடங்கள் கழித்து மூன்று புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் நீட்டினாள்

இதெல்லாம் படிப்பானாமா அவன்?

படிப்பாராவா? இந்த புக்கையெல்லாம் பார்த்ததும் அவர் முகம் அப்படியே மலர்ந்து போகலைன்னா என்னை தேடி வந்து அடிங்க. சிரித்தாள் அபர்ணா.

'அப்படி.....யா? பா.....ர்க்கலாம்'  சிரித்தபடியே  வாங்கிக்கொண்டார் தாத்தா. 'சரி நீ யாருன்னு சொல்லு'

'என் பேர் அபர்ணா. நானும் உங்க பேரனும் ஒரே காலேஜ்லே வேலை பார்க்கிறோம்.'

'அப்படியா' என்றபடி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டே இருந்தார்.

சில நொடிகள் கழித்து மெல்ல கேட்டாள் அபர்ணா ' உங்க வீட்டிலே உங்க ரெண்டு பேரை தவிர வேறே யார் யார் இருக்கீங்க?'

சட்டென கேட்டார் தாத்தா 'ஏன்மா? வீட்டை பத்தியெல்லாம் அவன் எதுவும் சொன்னதில்லையா உன்கிட்டே'

யார் அவரா? அவர் என்கிட்டே ஜாஸ்தி பேசினதே இல்லையே!

வியந்து போனார் அவர் 'அவனுடன் அதிகம் பேசாமலே அவனை பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாளா? என்று யோசித்தவர் மெல்ல புன்னகைத்த படியே அவளிடம் ரகசியமான குரலில் சொன்னார்

'எங்க வீட்டிலே இருக்கிற மத்த எல்லாரையும் விட, முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கு. ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர். பரத் perfectன்னா அது டபுள் perfect. ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து பார் அப்புறம் வரவே மாட்டே.' சிரித்தார் தாத்தா.

அப்படியா.... யார் அது?

நீ ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து பாரேன் தெரியும் உனக்கு...... ஒரு உண்மையை சொல்றேன் தெரிஞ்சுக்கோ. எங்க வீட்டிலே நான் மட்டும் தான் கொஞ்சம் நல்லவன். என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்ல,

தன்னையறியாமல் அடுத்த நொடி சட்டென சொல்லிவிட்டிருந்தாள் 'ஏன் தாத்தா? உங்க பேரனுக்கு என்ன?  தங்கக்கட்டி.

சொல்லிவிட்ட பிறகுதான் தான் என்ன சொன்னோம் என்று அவள் தலைக்கு ஏற மெல்ல தாழ்ந்த கண்களுக்குள் வெட்க ரேகைகைகள் ஓட துவங்கின.

தாத்தாவின் இதழ்களில் புன்னகை ஓட துவங்கியது. 'பரத்தை ரசித்து ரசித்து தன் மனதிற்குள் பூட்டி வைத்திருக்கிறாளா இந்த பெண்? பார்க்கலாம். இந்த புத்தகங்களை அவனிடம் கொடுத்து பார்க்கலாம். இவள் அவனை எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறாள் என்று தெரிந்து விடும்.' யோசித்தபடியே அவளிடமிருந்து விடைப்பெற்று கிளம்பினார் தாத்தா.

ரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஹாஸ்டலில் தனது அறையில் யோசித்தபடியே படுத்திருந்தாள் அபர்ணா. 'நாளை பரத்துக்கு பிறந்தநாள். அவள் பரத்துக்கு பிறந்தநாள்.

மனம் அவனிடம் எப்படி இப்படி ஒட்டிக்கொண்டது என்றே புரியவில்லை அவளுக்கு. இந்த ஆறு மாதங்களாய் அவனை பார்க்கும் போதெல்லாம் மனம் அவனை தேடி ஓடும்.

ஆனால் சில நாட்கள் முன்பு வரை மனதின் ஓரத்தில் ஒரு குழப்பம் மட்டும் இருந்துக்கொண்டே இருந்தது. 'எனக்கும் விஷ்வாவுக்கும் இடையிலான நட்பை எப்படி புரிந்துக்கொள்வான் பரத்.?' விஷ்வாவுடனான நட்பு காலத்துக்கும் வேண்டும் என்பதில் எப்போதுமே தெளிவாய் இருக்கிறாள் அவள்.

மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்த சம்பவத்தில் அந்த குழப்பம் மொத்தமாய் விலகியே விட்டது.

புன்னகையுடன் புரண்டு படுத்தாள் அபர்ணா. நாளை பரத்தை எப்படியாவது வாழ்த்திவிட வேண்டும். கல்லூரியில் எல்லார் முன்னிலையிலும் வாழ்த்தினால் கண்களாலேயே எரித்து விடுவானே அவன்.? என்ன செய்யாலாம்.? சட்டென்று  ஒரு மின்னல்.

யோசித்தபடியே விஷ்வாவின் எண்ணை அழுத்தினாள் அபர்ணா. 'நாளைக்கு காலையிலே ஒரு அஞ்சரை மணிக்கு போன் பண்றியா விஷ்வா? . நான் சீக்கிரம் எழுந்துக்கணும்'.

அஞ்சரை மணிக்கா? நீயா? என்ன விசேஷம்?

'விசேஷம் ஒண்ணுமில்லை.' என்றாள் இதழ்களில் புன்னகை ஓட .'கொஞ்சம் வேலை இருக்கு. நீ போன் பண்றியா?'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.