(Reading time: 19 - 37 minutes)

 

'ண்டிப்பா. அப்பூ சொல்லி நான் ஏதாவது செய்யாம இருந்திருக்கேனா?'

'சும்மா டயலாக் எல்லாம் அடிக்காதே. என் கூட கோவிலுக்கு வான்னு சொல்றேன். ஒரு நாளாவது வந்திருக்கியா நீ?' என்றாள் அபர்ணா.

'ஹேய்! என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசறே பார்த்தியா?' அவன் குரல் தேய...

சட்டென இறங்கி விட்டாள் அபர்ணா 'சரி சரி விடு நான் ஒண்ணும் சொல்லலை. நீ சாப்பிட்டியா?

ஆச்சுடா......

சரி நிம்மதியா தூங்கு. குட் நைட் விஷ்வா.

'குட் நைட் டா'. அழைப்பை துண்டித்தான் விஷ்வா.

அவர்கள் இருவருக்கும் இடையில் இது ஒரு பழக்கம். இரவு அவள் அழைத்து 'குட் நைட்' சொல்லாமல் அவன் உறங்குவதில்லை. காலையில் விஷ்வா அழைத்து 'குட் மார்னிங்' சொல்லாமல் அவள் படுக்கையை விட்டு எழுவதில்லை.

சில வருடங்களுக்கு முன்னால் துவங்கிய பழக்கமிது. அவன் மனதால் மிகவும் தளர்ந்து போயிருந்த நேரமது. அவன் உயிராய் நினைத்திருந்த ஒரு ஜீவன் அவனை விட்டு போன நேரமது. அந்த நேரத்தில் தான் அபர்ணாவின் நட்பு அவனை தூக்கி நிறுத்தியது.

பழைய நினைவுகளில் மூழ்கிப்போனால் உறக்கம் கெட்டுப்போகும். காலை ஐந்தரை மணிக்கு எழுவதற்காக கைப்பேசியில் அலாரம் வைத்து விட்டு, அதில் ஏதோ ஒரு பாடலை ஒலிக்க விட்டு அதை கேட்டுக்கொண்டே உறங்கிப்போனான் விஷ்வா.

றவைகள் மிக உற்சாகமாய் அந்த நாளின் விடியலை கொண்டாட சத்தம் எழுப்பிக்கொண்டிருக்க, மனம் முழுக்க சந்தோஷத்துடன் கிளம்பிக்கொண்டிருந்தாள் அபர்ணா.

குளித்து முடித்து, அழகான மெரூன் நிற சேலையை நேர்த்தியாய் உடுத்தி இருந்தாள். அவள் தோளை தாண்டி  உஞ்சலாடியது பூ வேலைப்பாடுகளுடன் கூடிய முந்தானை.

தனது கை கடிகாரத்தில் மணி பார்த்தாள். நேரம் 6.15 தனது ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு பறந்தாள் அபர்ணா. அவளுக்கு ஸ்கூட்டி ஓட்ட கற்றுக்கொடுத்ததே விஷ்வாதான். 'ஏன் இப்படி பறக்கிற?. மெதுவாதான் போயேன்'. விஷ்வாவின் குரல் காதில் கேட்பது போல் இருந்தது.

இப்போது மெதுவாக போக முடியாது. சரியாய் 6.45க்கு கடற்கரையை விட்டு கிளம்பிவிடுவானே அவன்.

கடற்கரை சாலை ஓரத்தில் ஸ்கூட்டியை நகர்த்திக்கொண்டு சென்ற போது அங்கே நின்றிருந்தது அவனது இரு சக்கர வாகனம். உதடுகளில் ஓடிய புன்னகையுடன் அவன் வாகனத்தை ஒட்டியே தன்னுடையதை நிறுத்தினாள் அவள்.

டற்கரைக்கு வந்து, தினசரி காலையில் உடற்பயிற்சியும், நடை பயிற்சியும் செய்வது பரத்தின் வாடிக்கை.

சில்லென்ற காலை நேர கடற்காற்று அவளை ஓடி வந்து தழுவிக்கொள்ள, அவள் கண்கள் அவனை தேடிக்கொண்டிருக்க கடற்கரை மணலில் நடந்தாள் அபர்ணா.

சட்டென தென்பட்டான் அவன்.....  தூரத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் பரத்,

இவ்வளவு தூரம் வரும் வரை எதுவுமே தோன்றவில்லை அவளுக்கு. அவனை பார்த்த மாத்திரத்தில் அவளுக்குள்ளே ஏதோ ஒன்று எட்டிப்பார்த்தது. சின்னதான ஒரு தயக்கமும் வெட்கமும் அவள் நடையின் வேகத்தை மெல்ல குறைத்தது. அது எப்படி சட்டென்று அவன் முன்னால் சென்று நின்று வாழ்த்துவது.?

இன்னொரு விஷயமும் இருக்கிறது. சட்டென்று அவன் முன்னால் சென்று வாழ்த்தினால் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவள் முகத்தை நேராக பார்த்து சொல்வான், 'எனக்கு இதெல்லாம் பிடிக்காது.' புன்னகையுடன் கலந்த ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடம்

'ஆனால் எப்படியும் அவனை வாழ்த்தியே ஆக வேண்டும். என்ன செய்யலாம்? 'யோசித்தபடியே அவன் கண்ணில் பட்டுவிடாமல் ஓரமாய் நின்றவளின் கண்ணில் பட்டது அந்த குழந்தை. தனியே மணலில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தை.

அதன் பெற்றோரர்கள் கண்ணில் படவில்லை. அருகில் இங்கே எங்காவது நடை பயிற்சி செய்துக்கொண்டிருக்ககூடும். (குழந்தையை இவ்வளவு கேர்லெஸ்ஸா விட்டுட்டு என்ன வாக்கிங் வேண்டிகிடக்கு?!!!!)

அதன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவள், அந்த தேவதையின் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு கேட்டாள்,

குட்டிப்பாப்பா பேரென்ன?

'அனுராதா' என்றது அந்த தேவதை.

ஹை...என்று சிரித்தபடியே அதன் கன்னத்தில் முத்தமிட்டவள் மெல்லக்கேட்டாள் 'அனு பாப்பா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுமா?'

'ம்.'......... அழகாய்  தலையசைத்தது அந்த குழந்தை.

அங்கே இருக்கார் பார்த்தியா அந்த அங்கிள், அவருக்கு இன்னைக்கு பர்த்டே. அவர்கிட்டே இந்த சாக்லேட் கொடுத்திட்டு 'ஹாப்பி பர்த்டே' சொல்லிடறியா? தனது கைப்பையிலிருந்த சாக்லேட்டை அதனிடம் நீட்டியபடி கேட்டாள் அபர்ணா.

பொதுவாகவே யாரிடமும் எந்த பரிசையும் வாங்க மாட்டான் அவன். அது அவனுடைய கொள்கை. இந்த சாக்லேட்டையாவது வாங்கி கொள்வானா? பார்க்கலாம்.

அவனை நோக்கி ஓடியது அந்த குழந்தை. அங்கிருந்த ஒரு படகின் பின்னால் பதுங்கியபடி நின்றவளின் கண்கள் மட்டும் அவன் மீதே இருந்தன. சுவாசிக்க கூட தோன்றவில்லை அவளுக்கு.

அருகில் வந்து நின்று சிரித்த குழந்தையின் அருகே மண்டியிட்டு அமர்ந்தான் பரத்.

அங்கிள் உங்களுக்கு இன்னைக்கு பர்த்டேவா?

ஒரு நொடி வியப்பில் கண்கள் விரிந்து புருவங்கள் உயர, சற்று யோசித்தபடியே 'ம்...... ஆமாம். என்றான் பரத்.

'ஹாப்பி பர்த்டே' என்றபடி சாக்லேட்டை நீட்டியது அந்த தேவதை.

படகின் பின்னால் பதுங்கிக்கொண்டு, மனதில் இருந்த தவிப்புடன் சொன்னாள் 'ப்ளீஸ் வாங்கிக்கோ  பரத்.'

வாங்கிக்கொள்ளவில்லை அவன். 'ஆமாம். உனக்கு இதை கொடுத்தது யாரு.? என்றான் நிதானமான குரலில்

அந்த ஆண்ட்டி...... அந்த குழந்தை கை காட்டிய திசையில் பார்த்தவனின் கண்ணில் யாரும் தென்படவில்லை. யாராக இருக்கும் அது?  அறிந்துக்கொண்டுவிடும் ஆவலில்  அவன் கண்கள் துறுதுறுவென  அலைபாய்ந்தன . அபர்ணாவின் இதயம் படபடத்தது.

'ப்ளீஸ் வாங்கிக்கோங்க அங்கிள்.' என்று அந்த குழந்தை சொல்ல மெல்ல திரும்பி அதை பார்த்தவன், அதன் பேச்சை தட்ட முடியாமல் அதை கையில் வாங்கிகொண்டான்.

'அப்பா.....டா' என்று அவளிடம் ஒரு நிம்மதி பெருமூச்சு எழ அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா. சில நொடி யோசனைக்கு பிறகு அந்த சாக்லேட்டை மெல்ல பிரித்தவன்   'இந்தா இதை நீயே சாப்பிடு'  என்றபடி புன்னகையுடன் அதை அதனிடம் நீட்டினான்.

ஒரு நொடி தவித்தே போனாள் அபர்ணா. படகின் பின்னால் வாய்விட்டு சொன்னாள் 'பரத் ப்ளீஸ் நீ கொஞ்சமாவது எடுத்துக்கோயேன்'

அந்த நொடியில் அந்த குழந்தைக்கு என்ன தோன்றியதோ அந்த சாக்லேட்டை உடைத்து ஒரு துண்டை அவன் வாயில் போட்டு விட்டு மீதியை எடுத்துக்கொண்டு ஓடியே விட்டிருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.