(Reading time: 16 - 32 minutes)

03. உள்ளம் வருடும் தென்றல் - வத்ஸலா

டற்கரையிலிருந்து வீடு திரும்பியவனை வரவேற்றது தாத்தாவின் புன்னகை. அவர் கையில் இருந்தன நேற்று அவர் வாங்கி வந்த புத்தகங்கள்.

'ஹாப்பி பர்த்டே டா கண்ணா' என்று .அவனை அணைத்துக்கொண்டார் தாத்தா.

ஒரு சின்ன புன்னகையுடன் 'தேங்க்ஸ் தாத்தா' என்றவன் தனது அறைக்குள் நுழைய எத்தனிக்க, அவனை வழிமறித்து அந்த புத்தகங்களை அவனிடம் நீட்டினார்.

Ullam varudum thendral

'நேத்து ரெண்டு மூணு புக் வாங்கினேன்டா இதெல்லாம் நீ படிப்பியா பாரு' என்றவர் அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார் .

சில நொடிகளில் அபர்ணா சொன்னதை போலவே அவன் முகம் மலர்ந்துதான் போனது

'தா......த்தா! சான்ஸ்லெஸ். டூ குட். மூணுமே நான் படிக்கணும்னு நினைச்சிட்டிருந்த புக்ஸ். எப்படி தாத்தா இவ்வளவு கரெக்டா வாங்கிட்டு வந்தீங்க? என்றான் மகிழ்ச்சியாய்.

புன்னகையையே பதிலாக்கியவர் சற்று வியந்து தான் போயிருந்தார். பரத்துடன் அதிகம் பேசாமலேயே அவனை இவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கிறாளே அபர்ணா.? இப்படி ஒரு பெண் கிடைக்க அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா?

அவர் மனம் ஏதேதோ நடக்க வேண்டுமென்று விரும்பியது. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நாம் நினைத்தபடியே நடந்து விடுமா என்ன? பரத் உள்ளே சென்ற பிறகும் பல எண்ண ஓட்டங்களுடனே நின்றிருந்தார் தாத்தா.

நேரம் காலை 8.45

சாப்பிட்டு முடித்து கல்லூரியை அடைந்திருந்தாள். ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவர்களது staff  ரூமை அடைந்தாள் அபர்ணா.

அவள் உள்ளே நுழைந்த நொடியில் அங்கே அமர்ந்திருந்த பரத்தின் கண்கள் சரேலென விரிந்தன

அவள் தோளை தாண்டி அழகாய் உஞ்சலாடியது அந்த புடவை தலைப்பு. படகின் பின்னாலிருந்து காற்றிலாடிய அவளது புடவை தலைப்பு.

அது அவனுக்கு எல்லாவற்றையும் கிட்டத்தட்ட தெளிவு படுத்தி விட்டிருந்தது.

அவன் பார்வை அவளை விடாமல் பின்தொடர்ந்துக்கொண்டே இருந்தது. அவள் உள்மனம் அவளுக்கு அதை உணர்த்திக்கொண்டே இருந்தது.

சில நிமிடங்கள் கழித்து அவனது மேஜைக்கு அருகில் வந்து அதன் மீதிருந்த அன்றைய வகுப்புகளுக்கான அட்டவணையின் மீது  கண்கள் பதித்தாள் அபர்ணா.

கண்களில் படர்ந்திருந்த லேசான தீவிரத்துடன் அவன் பார்வை அவளை ஊடுருவியது. அவள் இதயத்துக்குள்ளே லேசான அதிர்வலைகள் படர்ந்தன.

'ஒரு வேளை எல்லாவற்றையும் புரிந்துக்கொண்டு விட்டானா? எல்லார் முன்னாலும் தன் கோபத்தை காட்டி விடுவானா? சுவாசம் அழுத்தமாவது போல் தோன்ற கண்களில் படர்ந்த லேசான பயம் கலந்த தவிப்புடன் மெல்ல  கண்களை நிமிர்த்தினாள் அபர்ணா.

நாற்காலியில் பின்னால் சாய்ந்து அமர்ந்தபடியே அவளை கண்களால் மெல்ல மெல்ல அளந்தான் பரத்.

அப்படியே மெல்ல நிமிர்ந்த அவன் கண்கள் அவள் கண்களை சந்தித்த அந்த நொடியில், அதில் பரவியிருந்த லேசான பயம் அவனை ஏதோ செய்ய, அவனே அறியாமல் அவன் கண்களில் இருந்த கோபம் அப்படியே விலகி விட, சட்டென பார்வையை திருப்பிக்கொண்டான்.

என்ன தோன்றியதோ? அடுத்த நொடி சரேலென எழுந்து அந்த அறையை விட்டு விறுவிறுவென வெளியேறினான் பரத்.

வகுப்பறையை நோக்கி நடந்தவனின் மனம் சுழன்றுக்கொண்டிருந்தது. தனக்குள்ளே கேட்டுக்கொண்டான் 'அவளிடம் நான் ஏன் இப்படி தோற்றுப்போகிறேன்? அவனையும் மீறி அவள் அவனை எப்படியோ கொள்ளை அடித்து செல்வது போலே தோன்றுகிறது. அது எப்படி, எதனால் என்று மட்டும்  புரியவேயில்லை அவனுக்கு.

இல்லை இது போன்ற விளையாட்டுக்கெல்லாம் நான் தயாராக இல்லை. இதை ஆரம்பத்திலேயே நிறுத்தியாக வேண்டும். யோசித்தபடியே நடந்தான் பரத்

லுவலகத்தில் அமர்ந்திருந்த விஷ்வாவின் கண்கள் கணினியில் பதிந்திருக்க, அன்று வந்திருந்த ஈமெயில்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

திரையில் அந்த மெயில் விரிய அதை  பார்த்த மாத்திரத்தில் அவன் முகம் அப்படியே இறுகிப்போனது. எவ்வளவு நேரம் அதையே வெறித்துக்கொண்டிருந்தானோ அவனுக்கே தெரியவில்லை.

அவனை பொறுத்தவரை அப்படி ஒன்றும் அதிர்ச்சியான செய்தி இல்லைதான் அது. சொல்லப்போனால் அது அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததுதான் என்றாலும் மனதின் ஓரத்தை அது சுருக்கென தைக்கத்தான் செய்தது.

நாளை திருமணம். அவன் மனதார நேசித்த ஜனனிக்கு நாளை திருமணம். அந்த செய்தியை அவனுக்கு தெரிவித்துவிடும் விதமாக ஈ-மெயிலில் அனுப்பியிருக்கிறாள் திருமண பத்திரிக்கையை.

அவளுடன் பேசியே பல மாதங்கள் ஆகிறது. ஆனால் நிச்சியமாய் அவன் காதலில் பொய் இல்லை. மனதார உருகி உருகித்தான் நேசித்தான் அவளை.

தனக்காக அவன் உயிரை அவள் விட சொன்னால் கூட விட்டிருப்பான். ஆனால் அவள் விட சொன்னது நட்பை. அபர்ணாவுடனான அவனது நட்பை.

அபர்ணாவை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தபோது இயல்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தாள் ஜனனி.

சில நாட்களுக்கு பிறகுதான் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக துவங்கியது. ஏன் காலையிலே நீ போன் பண்ணாதான் அந்த மகாராணி எழுந்துப்பாங்களோ?

நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நான் என் friends எல்லாரையும் விட்டுடறேன் நீயும் எல்லாரையும் விட்டுடு. உனக்கு நீ எனக்கு நான்.

மெது மெதுவாய் ஒவ்வொன்றாய் வந்தது. இவையெல்லாம் வளர்ந்து அந்த காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

இது எதுவுமே அபர்ணாவுக்கு தெரியாது. சொல்லவும் விரும்பவில்லை அவன்.  சொன்னால் அவள் என்ன செய்வாள் என்று அவனுக்கு நன்றாய் தெரியும் அவன் காதல் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அவனை விட்டு விலக முயல்வாள் அவள்.  அவனுக்கு அதுதான் நரகம்.

தலையை குலுக்கிக்கொண்டு எழுந்து கேண்டீனை நோக்கி நடந்தான் விஷ்வா.

அந்த நேரத்தில் ஒலித்தது அவன் கைப்பேசி. திரை ஒளிர்ந்தது ' இந்துஜா'

நடந்தபடியே 'ஹலோ' என்றான் விஷ்வா

மறுமுனையில் மௌனம் நிலவியது. எத்தனை நாட்கள் ஆயிற்று அவன் குரல் கேட்டு.!

ஹலோ என்ன நிலாப்பொண்ணு எப்படி இருக்க? எத்தனை நாளச்சு உன்கிட்டே பேசி என்றான் விஷ்வா

அவள் இதழ்களில் புன்னகை ஓடியது. இந்துஜா என்றால் நிலவின் மகள் என்று பொருள். அவன் அவளை  நிலாப்பொண்ணு என்றே அழைப்பான்.

ஜனனி விஷயம் தெரிந்துக்கொண்டுதான் அழைத்திருந்தாள் அவள். எப்போதுமே விஷ்வாவின் சந்தோஷம் இந்துவுக்கு முக்கியம். அதனால் தானே அவர்கள் இருவருக்கும் நடுவில் வராமல் தனது மனதை மறைத்து...

ரொம்பவே தளர்ந்து போயிருப்பானோ என்று நினைத்து அழைத்த இந்துவுக்கு அவனது உற்சாகமான  பேச்சு கொஞ்சம் நிம்மதியை தந்தது.

ஹலோ பேசப்போறியா இல்லை வெச்சிடவா? என்றான் விஷ்வா.

பேசறேன். பேசறேன். ஒரு முக்கியமான விஷயம் கேட்கதான் போன் பண்ணேன். உன் தாடி எவ்வளவு சென்டிமீட்டர் வளர்ந்திருக்கு?

எது?

இல்லை. விஷயம் கேள்விப்பட்டேன் அதான் அவளை நினைச்சு நினைச்சு நீ தாடி வளர்த்திட்டிருப்பியோன்னு பயமா போச்சு. ப்ளீஸ் வேண்டாம் விஷ்வா. சும்மாவே உன் மூஞ்சியை பார்க்க முடியாது. இதிலே தாடியெல்லாம் வளர்த்தேனா சுத்தி இருக்கறவங்க எல்லாம் பாவம்.

'ஹலோ! என்ன நக்கலா? நான் எதுக்குடி தாடி வளர்க்கணும். என்னை விட்டுட்டு போனதுக்கு உன் friendதான் தாடி வளர்க்கணும். சொல்லு அவகிட்டே'  என்றான் அழுத்தமாக.

சற்று தழைந்த குரலில் கேட்டாள் நிஜமாவே உனக்கு வருத்தம் இல்லையா விஷ்வா?.

'நாட் அட் ஆல்' சிரித்தான் விஷ்வா.

'பொய் சொல்லாதே'

நிஜமா. நான் எப்பவும் போலே சந்தோஷமாதான் இருக்கேன்.

இந்துவிடம் ஒரு நிம்மதி புன்னகை எழுந்தது.. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அழைப்பை துண்டித்தாள் இந்து. விஷ்வாவிடம் கூட சொல்லாமல் அவனை மனதிற்குள் சுமந்துக்கொண்டிருக்கும் இந்து.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.