(Reading time: 16 - 32 minutes)

 

மாலை வகுப்புகள் முடிந்து தனது கைப்பையை தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பிய அபர்ணாவை பின்தொடர்ந்தன பரத்தின் விழிகள்.

சில நொடிகள் யோசித்தவன் ஒரு முடிவுடன் எழுந்தான். 'என் மனதில் உள்ளவற்றை அவளிடம் தெளிவாய் சொல்லிவிடுவதுதான் நியாயம். என் மனதில் எந்த ஆசையும் இல்லாத போது அவள் ஆசைகளை வளர்த்துக்கொண்டு பின்னர் கண்ணீர் சிந்துவதில் எந்த நியாமும் இல்லை.

சிறிது இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்து நடந்தான் பரத். 'அவளிடம் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். சரியான வார்த்தைகளை தேடியபடியே நடந்தான்.

பெண்களுக்கு மட்டுமே ஆண்டவன் கொடுத்த வரமா இந்த உள்ளுணர்வு?  திரும்பி பார்க்காமலேயே அவன் பின்னால் வருவதை அவள் மனம் அவளுக்கு உணர்த்திவிட்டிருந்தது. அவளது நடையின்  வேகம் மெல்ல குறைய அவளை நெருங்கினான் பரத்.

இருவருக்கும் நடுவில்  சிறிது இடைவெளி இருக்க இருவரும் ஒன்றாக நடந்தனர்.

அவன் ஏதோ சொல்ல விழைவது மட்டும் புரிந்தது அவளுக்கு. அபர்ணாவின் இதயம் படபடபடவென துடித்தது.

சுவாசம் சற்று தடுமாற நடந்தபடியே மெல்ல கண்களை நிமிர்த்தி சின்னதான தவிப்புடனும் படபடப்புடனும் அவன் கண்களை அவள் சந்தித்த, நொடியில், அவன் ஏதோ சொல்ல முனைய.,

டேய் பரத்....' என்ற குரல் அவனை கலைத்தது. அழைத்தவன் பரத்தின் நண்பன் சௌந்தர்.

முகம் மலர்ந்து போனவனாய் பரத்தின் கையை பற்றி குலுக்கினான் அவன். எப்போதுமே பேச வாய் திறந்தால் மூடவே மாட்டான் சௌந்தர்.

டேய்! எப்படி டா இருக்கே? இந்த காலேஜ்லே தான் இருக்கியா? நான் என் சிஸ்டரை கூட்டிட்டு போக  வந்தேன். ரெண்டு வருஷம் ஆச்சுடா உன்னை பார்த்து........அவனை தன் தோளோடு அணைத்துக்கொண்டான் சௌந்தர்.

இருவரையும் பார்த்தபடியே அங்கேயே நின்று விட்ட அபர்ணாவை சௌந்தரின் அடுத்த சில வார்த்தைகள் அப்படியே புரட்டிப்போட்டன.

சாரிடா பரத். நீ நேர்லே வந்து கூப்பிட்டும் உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியலை. நான் திடீர்னு லண்டன் போக வேண்டியதா போச்சு.

விக்கித்து போனாள் அபர்ணா. என்ன சொல்கிறான் இவன்?  அதிர்ச்சியில் கண்கள் விரிய இருவரையும் மாறி மாறி பார்த்தபடியே நின்றிருந்தாள். பரத்துக்கு திருமணம் ஆகிவிட்டதா?

மெல்ல நிமிர்ந்த பரத்தின் கண்கள் அவள் முகத்தில் பதிந்தன. தனது வேலையை சௌந்தர் சுலபமாகிவிட்டதை போலே தோன்றியது அவனுக்கு.

இவன் சொல்வது நிஜம்தானா அவள் கண்கள் பரத்தின் முகத்தை ஆராய்ந்தன.

ஒரு நொடி, அந்த திருமணம் பரத்தின் கண் முன்னே வந்து போக ஒரு பெருமூச்சு எழுந்தது அவனிடம். எத்தனை பேர் வந்திருந்தார்கள் அந்த திருமணதிற்கு.! அப்போது குடும்பத்தில் எல்லார் மனதிலும் சந்தோஷமும், கோலாகலமும் மட்டுமே நிறைந்திருந்தது. மலர்களும், வாழ்த்துக்களும், சந்தோஷமுமாய்.........

அப்புறம் எப்படி இருக்காங்க உன் wife?  சௌந்தரின் கேள்வியில் கலைந்து திரும்பி அவன் முகத்தை பார்த்துக்கேட்டான் பரத்,

ம்,,,,? என்னது....?

இல்லைடா. உன் . wife எப்படி இருக்காங்கன்னு கேட்டேன்.

'ம்...... .அவளுக்கென்ன என்ன? பிரமாதமா இருக்கா.' அழுத்தம் திருத்தமாக சொன்னபடியே நிமிர்ந்த பரத்தின் கண்கள் அபர்ணாவின் கண்களை நேராக சந்தித்தன.

அந்த வார்த்தைகளில் மொத்தமாய் வாடிப்போனது அவள் முகம். ஏனோ அந்த முக வாட்டத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் சட்டென பார்வையை திருப்பிக்கொண்டான் பரத்.

அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாதவளாய் அங்கிருந்து விறுவிறுவென நடந்தாள் அபர்ணா. அவன் பார்வை சில நொடிகள் அவள் சென்ற திசையிலேயே இருந்தது.

திருமணம் ஆகிவிட்டதா பரத்துக்கு? தனக்குள்ளே மறுபடி மறுபடி கேட்டுகொண்டே நடந்தாள். ஒரு வேளை தாத்தா சொன்ன அந்த double perfect charachter அவன் மனைவி தானா? நான் தான் எதுவுமே தெரியாமல் ஆசைகளை வளர்த்துக்கொண்டேனா?

தனது ஸ்கூட்டியின் அருகே சென்றவள் அதை கிளப்பிக்கொண்டு நகரக்கூட மனமில்லாமல் யோசித்தபடியே அப்படியே நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து சௌந்தரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்தான் பரத். தனது வண்டியினருகே வந்தவனின் பார்வை அங்கே நின்றிருந்தவளின் மீது பதிய, ஒரு நொடி கண்களை நிமிர்த்தி அவனைப்பார்த்தவள் சட்டென வண்டியை நகர்த்திக்கொண்டு கிளம்பினாள்.

அவள் மனநிலை அவனுக்கு புரியாமலில்லை. ஏமாற்றத்தின் வலி என்னவென்று அவனுக்கும் தெரியும். தொடக்கத்திலேயே அதை அனுபவித்து விட்டால் வலி கொஞ்சம் குறைவாகவே இருக்கும் என்பதும் தெரியும்..

போதும். இந்த கல்யாண விளையாட்டை இன்னொரு முறை விளையாட நான் தயாராக இல்லை!.

'தேங்க்ஸ் டா சௌந்தர்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட படியே தனது வண்டியை கிளப்பிக்கொண்டு நகர்ந்தான் பரத்.

சாலையில் சற்று தூரத்தில் தெரிந்தது அவள் வண்டி. சௌந்தரின் வார்த்தைகளையே நினைத்துக்கொண்டு வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் அபர்ணா.

அவன் கூப்பிட்டால் காதில் விழாத கண்ணுக்கெட்டிய தொலைவில்தான் சென்று கொண்டிருந்தாள் அவள்.

ஏன் என் பார்வை அவளை நோக்கி செல்கிறது? வேண்டாம் எல்லாம் முடிந்துவிட்டது. இனி அவள் என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள். தனக்குள்ளே சொல்லிக்கொண்டே வண்டியை செலுத்தினான் பரத்.

வேகமாக சென்று கொண்டிருந்த வாகனங்களுக்கிடையே புகுந்து அவள் சாலையை கடக்க முயன்ற போது அவளை கடந்து சென்ற அந்த இரு சக்கர வாகனத்தை தவிர்க்க முயன்று அவள் அருகே வந்துவிட்ட அந்த பேருந்தை கவனிக்காமல், ஒரு நொடி நிலைதடுமாறி....

சற்று தூரத்திலிருந்து இதை பார்த்தவனின் இதயம் சில நொடிகள் நின்றே போனது. 'அப.....ர்ணா....' உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் பதறியே போனான் அவன்.

அந்த பேருந்தின் ஓட்டுனர் ஏதோ ஒரு ஜென்மத்தில் அவளுக்கு உடன் பிறந்தவராய் இருந்திருக்க வேண்டுமோ? கடைசி நேரத்தில் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி விட்டிருந்தார்.

தப்பித்தாள் அவள். வாகனங்கள் சில நொடிகள் ஸ்தம்பிக்க எல்லாரிடமும் திட்டு வாங்கிக்கொண்டு சாலையை கடந்து சென்று விட்டிருந்தாள் அவள். அங்கே ஏதோ ஒரு சந்தில் திரும்பி அவன் கண்ணிலிருந்து மறைந்து போனாள்.

சாலையின் ஓரத்தில் சென்று தனது வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினான் அவன். அந்த காட்சி  தந்த பதற்றத்திலிருந்து வெளியே வரவே இயலவில்லை அவனால்.

ச்சே! எவ்வளவு அஜாக்கிரதையாய் வண்டி ஓட்டுகிறாள் இவள். அப்படி என்ன சிந்தனையாம் அவளுக்கு.?

உடனடியாகவே பதில் புரிந்தது. கண்களை மூடி  இடம் வலமாய் தலையசைத்துக்கொண்டான் பரத்.

வேறென்ன இருக்க முடியும்? சற்று முன் நடந்தவைகளை நினைத்துக்கொண்டேதான் சென்றுக்கொண்டிருப்பாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.