(Reading time: 16 - 32 minutes)

 

சில நிமிடங்கள் கழித்து ஒரு பெருமூச்சுடன் தனது வண்டியை கிளப்பினான் பரத்.

தனது வீட்டை அடைந்த பின்னரும் கண் முன்னே கண்ட அந்த காட்சியை அவனால் மறக்க முடியவில்லை.

அந்த நினைவுகளுடனே வீட்டினுள் அவன் நுழையவும், சில பலூன்கள் சத்தத்துடன் வெடித்து அவன் மீது பூமழை பொழியவும் சரியாக இருந்தது. அந்த பலூன்களின் சத்தத்தில் ஒரு நொடி திடுக்கிட்டுதான் போனான் பரத்.

அவன் இருந்த மனநிலையில் 'மெனி மோ...ர் ஹா....ப்பி ரிட......ர்ன்ஸ் அண்ணா' என்று சிரித்த அவனது தங்கையின் மீது சட்டென பாய்ந்தான். '

'ச்சே! அறிவிருக்கா உனக்கு?. இப்போ எனக்கு பர்த்டே கொண்டாடுறது ரொம்ப முக்கியம் பாரு! இடியட்'.!  தன் மீது விழுந்த பூக்களை தட்டிவிட்ட படியே தனது அறைக்குள் கட்டிலில் சென்று அமர்ந்தான் பரத்.

மனம் அபர்ணாவினிடமே சென்றது. 'இந்த பெண் நல்லபடியாக இருப்பிடம் போய் சேர்ந்தாளா இல்லையா.?' ஒரு முறை அவளை அழைத்து பார்த்துவிடலாமா?

உள்ளே வந்தார் அவன் தாத்தா. 'உனக்கு இருக்கிறது ஒரே தங்கச்சி. ஏண்டா அதுகிட்டே போய் இப்படி பாயறே?' என்று அவர் கேட்ட போதுதான் தான் தன் தங்கையை திட்டியதே அவன் தலைக்கு ஏறியது.

இல்லை தாத்தா... அது ....வந்து... அவனுக்கே இது எப்படி நடந்தது என்று புரியவில்லை. பொதுவாக அவன் யாரையும் இப்படி சட்டென காயப்படுத்தி விடுவதில்லை. கோபம் வந்தால் பேசவே மாட்டான். அப்படியே பேசினாலும் மிக நிதானமாக யோசித்தே பேசுவான்.

'பாவம்டா அது' என்றார் உனக்காக 'ரெண்டு மணி நேரம் செலவு பண்ணி பலூனெல்லாம் கட்டி, நீ வரியா வரியான்னு வெயிட் பண்ணி... ஏண்டா இப்படி கோப படறே..? 'அடுத்த வருஷம் உன் பிறந்தநாளைக்கு அது இங்க இருக்குமோ கல்யாணம் ஆகி வேற வீட்டுக்கு போயிடுமோ தெரியலை.'  

இல்லை தாத்தா நான் வேற ஒரு டென்ஷன்லே.... நா...ன் நான்  வந்து அவளை சமாதான படுத்தறேன் நீங்க போங்க.

சரி என்று நகரப்போனவரிடம் 'தாத்தா உங்க மொபைல் ஒரு நிமிஷம் கொடுங்களேன்' என்றான் பரத்.

தன் கைப்பேசியிலிருந்து அவளை அழைக்க வேண்டாம் என்றே தோன்றியது அவனுக்கு!. வேண்டாம்! அவளுக்கு எந்த சலனத்தையும் கொடுக்க வேண்டாம்.

தாத்தாவின் கைபேசியிலிருந்து அபர்ணாவை அழைத்தான் பரத்.

ஹாஸ்டலில் அமர்ந்திருந்தவளின் கைப்பேசி ஒலித்தது. அன்று தாத்தாவின் எண்ணை வாங்கிக்கொள்ளவில்லை அவள்.

திரையில் ஒளிர்ந்த எண்ணை பார்த்து யாராக இருக்கும் என்று யோசித்தபடியே 'ஹலோ' என்றாள் அபர்ணா.

அவள் குரல் அவன் காதில் விழுந்த அந்த நொடியில் அவனுள்ளே வார்த்தையில் விவரிக்க முடியாத ஒரு நிம்மதி பரவியது.

மறுமுனையில் மௌனமே இருக்க மறுபடியும் 'ஹலோ நான் அபர்ணா பேசறேன். 'என்றாள் அவள்.

கைப்பேசியை காதில் வைத்தபடியே நின்றிருந்தவன் சில நொடிகள் கழித்து எதுவுமே பேசாமல் அழைப்பை துண்டித்தான்.

ஹாலில் தாத்தாவுடன் அமர்ந்திருந்தாள் அவன் தங்கை.

என்ன தாத்தா? பிளான் பண்ண டயலாக்கெல்லாம் கரெக்டா சொன்னீங்களா இல்லையா? இன்னும் எந்த ரியாக்ஷனும் காணோமே.

இரு இரு என்றார் தாத்தா. ஏதோ போன் பேசிட்டிருக்கான். இன்னும் கொஞ்ச நேரத்திலே வருவான் பாரு. சாரிடா செல்லம். அண்ணன் வேற டென்ஷன்லே இருந்தேன்னா அதுதான் உன்னை திட்டிட்டேன். அப்படின்னு.....

சில நிமிடங்கள் கழித்து முகம் கழுவி, உடை மாற்றிக்கொண்டு தன் தங்கையின் அருகில் வந்து அமர்ந்து அவள் தோளை அணைத்து சொன்னான் 'சாரிடா செல்லம். அண்ணன் வேற டென்ஷன்லே இருந்தேன்னா அதுதான் உன்னை திட்டிட்டேன்.'

தாத்தா சொன்ன அதே வார்த்தைகளை அவன் சொல்ல பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிய படியே  முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.

ஹேய்! அதான் சாரி சொல்லிட்டேன்ல. இன்னும் கோபம் போகலியா உனக்கு? சரி வேணும்னா நீ எனக்கு ஏதாவது பனிஷ்மென்ட் கொடுத்திடு.

சட்டென திரும்பியவள் 'நான் என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் செய்வியா?' என்றாள் துறுதுறு பார்வையுடன்.

கண்டிப்பா.

'அப்போ போய் புது டிரஸ் போட்டுட்டு வா.' தன்னிடம் இருந்த புது உடைகள் கொண்ட கவரை அவனிடம் நீட்டினாள்.

புன்னகையுடன் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் தாத்தா.

எது? புது டிரஸ்ஸா? இன்னைக்கா? அதெல்லாம் எனக்கு பிடிக்காதுடா. இன்னொரு நாள் போட்டுக்கறேனே.

ஹலோ சார்!. நமக்கு பிடிக்காததை செய்யறதுக்குபேர் தான் பனிஷ்மென்ட். இது கூட தெரியாம நீ என்ன assistant professer? ஓடு. ஓடு சீக்கிரம். அப்படியே கிளம்பி நாம கபாலீஸ்வரரை பார்த்துட்டு ஹோட்டல் போயிட்டு வருவோம்.

ஹேய் என்னது இது? வரிசையா லிஸ்ட் போடறே?

ப்ளீஸ்ண்ணா என்றாள் நாளைக்கு நம்ம ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஊரிலிருந்து வந்தாச்சுன்னா அவ்வளவுதான். எங்கே போறதுனாலும் ரெண்டு நாள் முன்னாடியே அப்ளிகேஷன் போட்டு பெர்மிஷன் வாங்கணும். அதுக்கு முன்னாடி இன்னைக்கு அப்படியே ஜாலியா சுத்திட்டு வந்திடலாம்  ப்ளீஸ் சீக்கிரம் கிளம்பு.

சரி ஓகே. ஆனால் புது டிரஸ் வேண்டாம் ஒகேயா.?

நோ. நீ இப்போ புது டிரஸ் போடலேன்னா நாலு நாள் உன்கிட்டே பேச மாட்டேன்.

அதற்கு மேல் எதுவுமே பேசமுடியாமல் கையில் கவருடன் நகர்ந்தான் பரத்.

கோவிலுக்கும், ஹோட்டலுக்கும் போவதும் மட்டுமே அவள் நோக்கம் அல்ல. அப்படியே மனதில் வேறொரு கணக்கும் போட்டுக்கொண்டிருந்தாள் அவள்.

நேரம் இரவு 7.30

னது ஹாஸ்டல் அறையில் அமர்ந்திருந்த அபர்ணா சுழன்றுக்கொண்டிருந்த மனதை திசை திருப்ப வேண்டி கணினியை உயிர்ப்பித்தாள்.

அதே நேரத்தில் தனது வீட்டில் அமர்ந்திருந்தான் விஷ்வா. ஜனனியின் நினைவாக அவனிடம் இருந்தவைகளையெல்லாம் குப்பையில் போட்டுக்கொண்டிருந்தான்.

பிரிந்து சென்ற காதலியை கூட மறுபடியும் பார்க்கும் போதுகூட தோன்றாத வலியையும், வேதனையும் அவள் நினைவுகள் தரக்கூடும். அவள் இன்னொருவன் மனைவியாகி விட்ட பிறகு அவள் நினைவுகள் எதுவுமே எனக்கு தேவையில்லை.

அப்போது அவன் கண்ணில் தட்டுபட்டது அவள் புகைப்படம்.

என்னதான் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்று அவன் சொல்லிக்கொண்டாலும் அவள் புன்னகை அவனை ஒரு முறை உலுக்கத்தான் செய்தது. மனதில் பொங்கிய அழுத்தத்துடன் அதை கிழித்து குப்பையில் போட்டுவிட்டு அப்படியே சோபாவில் சாய்ந்தான்

அதே நேரத்தில் அங்கே ஹாஸ்டலில் அபர்ணாவின் கணினி திரையில் சிரித்தது அந்த ஈமெயில். . ஜனனியின் திருமண பத்திரிக்கை.

அதிர்ந்து குலுங்கி எழுந்தாள் அபர்ணா. ஜனனிக்கு நாளை திருமணமா? என்னவாயிற்று? ஏன் விஷ்வா என்னிடம் எதையுமே சொல்லவில்லை?

அவள் சொந்த கவலைகள் எல்லாம் மறந்து போக ஸ்கூட்டியை  எடுத்துக்கொண்டு விஷ்வாவை பார்க்க பறந்தாள் அபர்ணா.

வீட்டின் கதவு திறந்திருக்க சோபாவில் படுத்து கிடந்தான்  விஷ்வா. ஏனோ மனம் ஆறவில்லை கண்களை மூடிக்கொண்டிருந்தவனின் உதடுகள் புலம்பின எப்படி ஜானும்மா என்னை விட்டுட்டு போனே?

மூடிய கண்களுக்குள் நீர் சேர துவங்கிய அந்த நிமிடத்தில் ஒரு கரம் அவன் நெற்றியில் பதிந்து அவன் தலையை கோதியது.

சட்டென கண் திறந்தவனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அவள். அவளை பார்த்தவனின் கண்கள் சரேலென விரிந்தன.

அங்கே அமர்ந்திருந்தவள் இந்துஜா. காலையில் அவனுடன் தொலைபேசியில் பேசிய இந்துஜா. நம் பரத்வாஜின் ஒரே தங்கை இந்துஜா.! 

தொடரும்...

Go to episode # 02

Go to episode # 04

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.