(Reading time: 18 - 35 minutes)

காதல் நதியில் – 01 - மீரா ராம்

 தய சூரியன் தன் பொன்னிற கதிர்களால் இருள் போர்வையை விலக்கி அவனின் ஆட்சியை நிலைநிறுத்த ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். பறவைகளும் அவனுக்குத் தன் சம்மதத்தைத் தருவதாய் சிறகை அடித்து சத்தமிட்டுக் கொண்டே வானத்தில் பறந்தது.

kathal nathiyil

அலாரம் அடித்து விழித்துப் பார்த்தால் மணி 6 காட்டியது. சோம்பலுடன் கைகளை முறித்தபடி கடிகாரத்தை பார்த்தவள் சோக புன்னகை ஒன்று சிந்தினாள். அதன் ரகசியம் இந்த 6 மாதங்களில் அவள் அறியாததா என்ன ?. எண்ணங்களிலிருந்து விடுபட்டு வெளியே எட்டிப்பார்த்தாள்.

விதவிதமான மலர்களின் நடுவே அந்த ரம்யமான நிலைக்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லையென்ற முகபாவத்தில் கண்ணில் நீரோடு அங்கே அமர்ந்திருந்த தன் தோழியைப் பார்த்ததும் துயரத்தின் நிழல் தன் மனதில் படிவதை உணர்ந்தாள் ஷன்வி என்ற ஷன்விகா.

எவ்வளவு சந்தோசமாக இருந்தவள்... கண்ணீருக்கு அர்த்தம் கேட்கும் இவளா இன்று கண்ணீரே வாழ்க்கை என்றாகிப் போனாள் ??.. ஒரு பெருமூச்சோடு அவளிடம் நெருங்கி அவளின் தோளில் கை வைத்தாள். தன் மேல் ஒரு கரம் விழுகவும்  திடுக்கிட்டு விலகி நிமிர்ந்தவள் அந்த கரம் தன்னுடைய தோழியுடையது என்று அறிந்துகொண்டு பதட்டம் குறைந்து மறுபடியும் அமர்ந்தாள் அந்த கல் பெஞ்சில்... ஒரு தொடுதலுக்கே இப்படி பயப்படுகிறாளே... பாவம்.. இவள் நெஞ்சில் ரணங்களோ ???.... சொல்லவும் மாட்டேன்கிறாள்... ஹ்ம்ம்...என்று எண்ணமிட்டபடி தோழியை அழைத்தாள்...

ரிகா உள்ளே போகலாமா ??... ஸ்கூலுக்குப் போக வேண்டாமா ?.. இங்கேயே இருந்தால் நேரம் ஆகிடுமே அதனால் தான் என்று அவளைப் பார்த்தாள்... சிறு தலை அசைப்பு மட்டுமே அவளிடமிருந்து பதிலாக வந்தது..

ஷன்விக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... ஆறு மாதங்களாய் அதிகாலை 4 மணிக்கே விழித்தெழுவதும், தனக்காக அலாரம் ஆறு மணிக்கு வைத்துவிட்டு தன் தூக்கம் கலையாமல் எழுந்து வெளியே இந்த பெஞ்சில் அமர்வதும்.. ஷன்விக்கு பழகிப்போன விஷயங்கள் தான் என்றாலும்… இன்று போல் என்றாவது அவளின் தோள் மேல் கைவைத்தால் நெருப்புப்பட்டது போல் ஏன் உடனே பயப்படுகிறாள்.. என்ற காரணமும் அவளால் அறியமுடியவில்லை...

எத்தனை தான் பேசினாலும் ஹ்ம்ம், ம்ஹூம் , சரி, இதைத்தவிர அவள் இந்த பாதி வருடத்தில் வேறெதுவும் பேசாமல் இருந்ததும் நினைவுக்கு வந்தது... இவளை எப்படி மாற்றப்போகிறோம் என்று கவலையோடு ரிகாவை பின்தொடர்ந்து சென்றாள்....

ஷன்வி குளித்து முடித்து சாப்பிட அமர்ந்தாள்.. அங்கே செல்லம்மாப்பாட்டி அக்கறையுடன் அவளுக்கு சாப்பாடு பரிமாறினார்.. இந்த பாட்டிக்கு தான் எங்கள் மேல் எவ்வளவு அன்பு... அவள் இங்கு வந்த 3 வருட காலத்திலும் சரி, இப்போது கொஞ்ச நாட்களாய் இங்கே தங்கி இருக்கின்ற ரிகாவிடத்திலும் சரி, உண்மையான பாசத்துடனே நடந்து கொண்டார் பாட்டி...

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமான ஊட்டியில் தான் ஷன்வி பிறந்தாள்... அங்கே அவளின் தந்தை ராமச்சந்திரன் மிகப்பெரிய தொழிலதிபர்...  சிறு வயதிலே தாயை இழந்தவள் ஆறு வருடங்களுக்கு முன்னால் நடந்த கார் விபத்தில் தகப்பனாரையும் இழந்து விட்டாள்... கல்லூரியில் அடி எடுத்து வைத்த வருடமே இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது... அப்போது அவளுக்கு ஆதரவாய் இருந்தது ரிகாவும் அவளுடைய குடும்பமுமே...

ரிகா நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவள்... சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு சிறு கிராமம்... கல்லூரி இருவரும் சென்னையில் படித்ததால் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்... ரிகா கலகலப்பான பெண்.. வாய் ஓயாது பேசிக்கொண்டிருப்பதே அவளின் முக்கிய வேலை... எந்த நேரமும் அரட்டை.... துறுதுறுப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பாள்... ஷன்வி-ரிகா என்றாலே ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவிகள் தானே... எங்கே எந்த அராஜகம் செய்துட்டு இருக்கிறார்களோ தெரியலை என்று தான் அவர்கள் வகுப்பு தோழிகள் கிண்டல் செய்வார்கள்...

அப்படி இருந்தவளா இன்று இப்படி ஆகிப்போனாள் ???.. எவ்வளவு முயற்சித்தும் ஷன்வியினால் ரிகாவைப் பற்றி கவலைப்படாமல் இருக்கமுடியவில்லை... 

ராம் கிட்ஸ் ஸ்கூல் என்ற பெயர்ப்பலகையை தாங்கிய கட்டிடத்திற்குள் இருவரும் சென்றனர்... ஸ்கூட்டியை நிறுத்தியவள் திரும்பிப்பார்த்தாள்.. ரிகா பின்சீட்டிலிருந்து இறங்காமல் அப்படியே இருந்தாள். ரிகா ஸ்கூல்வந்துவிட்டோம் என்றதும் சாவிகொடுத்த பொம்மையாய் இறங்கினாள்.

ரிகாவின்  கைப்பிடித்தப்படி ஷன்வி அங்கிருந்த பிரின்சிபால் அறைக்குள் நுழைந்தாள்... அங்கே வாசலில் நின்றிருந்த பியூன் சேகர் அவளை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு மேடம், இன்று அட்மிஷன் செய்ய நிறைய பேர் வருவாங்க.. அவங்க எல்லோரையும் எப்போது உங்க அறைக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னால் ஒவ்வொருத்தராக உள்ளே வர சொல்லிவிடுவேன்... ஹ்ம்ம்...சரியா பத்து மணிக்கு அனுப்புங்க... அதற்குள் என் கையெழுத்து வாங்க வேண்டிய ஃபைல் எல்லாம் எடுத்துட்டு வாங்க என்று உத்தரவிட்டாள்... சரிங்க மேடம் என்று சேகர் போய்விட்டான்...

கையை திருப்பி மணி பார்த்தாள்  9.30 மணி.. ரிகா எங்கோ வெறித்து நோக்குவதும் அவளுக்கு புரிந்தது.. இப்படியே விட்டால் இவள் சரி வர மாட்டாள் என்றெண்ணியபடி, அவளை அழைத்தாள்... பதில் இல்லை... மீண்டும் சத்தமாக அழைக்கவே, அதிர்ந்து ஷன்வியை பார்த்தாள்... Class ரூமிற்கு போகலாம் வா என்று அவளை இழுத்துச் சென்றாள்…

அங்கே ஒவ்வொரு குழந்தையும் அழகாக கை நீட்டி தலை அசைத்து கொஞ்சும் குரலில் ரைம்ஸ் சொல்லிக்கொண்டிருந்ததை பார்த்தனர் இருவரும்.... ரிகா வைத்த கண் வாங்காமல் அந்த பிஞ்சு மழலைகளைப்பார்த்தாள்... தாமும் அது போல் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே... எந்த வித பிரச்சனைகளும் அறியாமல் சிரித்துக்கொண்டே இருந்திருக்கலாமே என்று எண்ணியவளின் மனது சட்டென்று பதில் சொன்னது நீயும் அவ்வாறு இருந்தவள்தான் ஒரு வருடத்திற்கு முன்பு வரை...

அப்பொழுதெல்லாம் பிரச்சனை வந்தாலும் அவள் அதை எதிர் கொள்ள தயங்கியதே இல்லை.. அதை எதிர்த்துப்போராடும் வல்லமை அவளிடத்தில் இருந்தது.. இன்று ???. கேள்வி தான் இருக்கிறதே தவிர விடை இல்லை... ஏன் நான் மாறிப்போனேன்  ??... அவளுக்குள்ளே உழன்று கொண்டிருந்த நேரம் அவள் காலில் ஏதோ உராய்ந்து விழுந்தது போல் இருந்தது… என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில் திரும்பி பார்த்தாள்...

அங்கே ஒரு ஐந்து வயது குழந்தை தரை வரைத் தொங்கிய தண்ணீர் பாட்டிலுடன் நின்று கொண்டிருந்தாள்..

"சாரி மிஸ்… தெரியாம, கை தவறி விழுந்துட்டு... உங்களுக்கு அடி பட்டுடுச்சா??"

ரிகா முகத்தில் லேசான சிரிப்பு  பல நாட்களுக்குப் பின்னே எட்டிப்பார்த்தது...

அவள் அந்த சிறுபெண்ணின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள் கண்களில் துளிர்த்த நீரோடு...

"ஐயோ மிஸ் அழாதீங்க...ரொம்ப வலிச்சிடுச்சா???... நான் வேணா தடவி விடவா" என்று  கேட்டதும் அவளின் கண்ணீர் பெருக்கெடுத்தது...

தன் மெல்லிய விரல்களால் அந்த சிறு பெண் அவளின் கண்ணீரை துடைத்து விட்டு, "நீங்க  அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு... ப்ளீஸ் அழாதீங்க எனக்காக" என்று சொன்னது தான் தாமதம் என்பது போல் அவள் அந்த குட்டிப்பெண்ணை இறுக்கி அணைத்துக்கொண்டு கதறி அழுதுவிட்டாள்..

ஷன்வி அவளை சமாதானப்படுத்த குனிந்த போது ரிகாவின் உதடுகள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது திரும்ப திரும்ப… அழுகையினூடே சொன்னதால் அது ஷன்விக்கு புரியவில்லை… ஷன்வி ரிகாவை எழுப்பி அவளை சரி செய்தாள்… அப்பொழுதுதான் சிறு குழந்தையின் முன் இப்படி நடந்துகொண்டோமே என்று யோசித்தவளின் துப்பட்டாவை யாரோ இழுப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டு யாராக இருக்கும் என்ற நினைவில் திரும்பியவள், அங்கே அந்த குட்டிப்பெண் அவளின் துப்பட்டாவை பிடித்தபடி அவளைப்பார்த்து புன்னகைத்தாள்… அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டாள் ரிகா…

“வலி போயிடுச்சா??... இப்போ சரி ஆயிடுச்சா?? எனக்கு அடிபட்டுச்சுனா நானும் இப்படித்தான் கட்டிபிடிச்சுப்பேன்.. நீங்களும் என்ன மாதிரியே இருக்கீங்க… “ என்று சொல்லி ரிகாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் அந்த குட்டிப்பெண்…

அவளின் முறுவல் மிகவும் நீண்டதை கவனித்த ஷ்ன்விக்கு நிம்மதியாக இருந்தது..

“யார் இந்த குட்டிப்பொண்ணு?!?!?... வந்த கொஞ்ச நேரத்திலேயே ரிகாவை சிரிக்க வைத்துவிட்டாளே!!… குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று இதனால் தான் சொல்கிறார்கள் போல…. ஹ்ம்ம்”…

“மிஸ் உங்க பெயர் என்ன???”

“ரிகா…”

“உன் பெயர் என்ன மா???”

“…………………..அபி….”

அந்த பெயரைக் கேட்டதும் அவள் உடம்பில் ஓர் அதிர்வு உண்டானது…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.