(Reading time: 15 - 30 minutes)

 

ன்றும் போல் அன்றும் நாள் வேகமாக சென்றது. மறுநாள் விடியலுக்காக அனைவருமே காத்திருந்தனர். அஹல்யா அர்ஜுன், நவீன் அர்ச்சனா அனைவரும் தேஜு நிரு ஒழுங்காக நினைத்ததை செய்து முடிப்பார்களா என்ற வருத்தம் கலந்த எதிர்பார்ப்பிலும்... தேஜுவோ நாளை தன் தோழிக்கு என்ன காரணம் சொல்லி அழைப்பது என்ற யோசனையிலும், நிரஞ்ஜனோ நாளை எப்போதும் போல் தோழன் புத்திசாலிதனமாக யோசிக்காமல் ஏமாந்துவிடவேண்டும் என்று வேண்டுதலிலும், அஸ்வத்தோ நாளை தன்னிடம் தோழன் ஏமாந்துபோகபோவதை பற்றியும் என்று அவரவர் அவரவர் சிந்தனையில் தொலைந்து போயிருந்தனர். இப்படி பலரும் பல யோசனைகளில் இருக்க, அனு மட்டும் ஒன்றுமே அறியாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

அஸ்வத் இந்த நினைவுகளில் இருந்தாலும், மனதில் உறுத்த துவங்கியது. தனக்காக திருமணத்தை தள்ளி போடும் நட்பு, தான் பேசாமல் இருப்பதால் திருமணத்தை பற்றி பேசாமல் மனதிலேயே வருத்தப்படும் பெற்றோர், சேர்த்து வைக்க நினைக்கும் சொந்தங்கள், இதை எல்லாம் தாண்டி தன் மனம் மாற காத்திருக்கும் தன்னவள்... இன்னும் எத்தனை பேரின் பொறுமையை தான் சோதிப்பது என்று தனக்கு தானே நொந்துக்கொண்டான். அனுவிடம் பேசவேண்டும் என்ற ஆவல் மீண்டும் எழுந்தது ஆனால் இம்முறை மாறாத முடிவாக எழுந்தது... எந்த முகத்தோடு பேசுவது? மன்னித்துவிடு இந்த ஒரு வருவார்த்தை போதுமா அவள் வலியை ஆற்ற? பேசுவாளா? பலதை யோசித்தபின், நாளை அவர்களின் நாடகம் முடிந்ததும் அனுவை சென்று பார்க்கலாம், கண்டிப்பாக பேசியே ஆகவேண்டும் என்று ஒரு புன்சிரிப்போடு முடிவெடுத்தான். அந்த நினைவிலேயே உறங்கியும் போனான்.   

றுநாள் காலை என்னவென்று சொல்ல தெரியாத ஒரு பயத்துடனே எழுந்தாள் அனு. உறக்கம் கெடும் அளவுக்கு எதுவும் கனவு வந்துவிடவில்லை ஆனால் ஏதோ ஒரு நினைவு அவளை அந்த நாளை இனியதாக துவங்க விடாமல் செய்தது. என்றும் இப்படி தோன்றியதில்லையே என்று மனம் சிறிது சஞ்சலபடவும் எழுந்தவள் கண்மூடி தன் கணேஷிடம் இன்று நாள் நன்றாக இருக்கும் படி வேண்டிகொண்டு எழுந்தாள்.

எப்போதும் போல் காலையிலேயே கிளம்பி வானொலி நிலையத்திற்கு சென்று தன் நிகழ்ச்சியை தொகுக்க துவங்கிவிட்டாள்.

“ஹாய் மேடம்...” என்று உற்சாகமாக வரவேற்றான் வருண்.

“ஹாய்...” என்று புன்சிரிப்போடு கூறினாலும் குரலில் சுரத்தே இல்லை அனுவிற்கு...

“என்ன அதிசயம் அனுவின் குரல் வயொலின் வாசிக்குது....”

எதுவும் கூறாமல் வெறும் புன்சிரிப்புதான் தந்தாள்.

“எல்லாத்துக்கும் இப்படி சிரிச்சே மலுப்புடி...” என்று கிண்டல் செய்தாலும் அவளிடம் இருந்து விஷயத்தை கறக்க முடியாது என்று அவனுக்கும் தெரியும்.. எத்தனை முறை இப்படி விசாரித்திருப்பான் ம்ம்ம்ம் ஹ்ம்ம் சரியான கல்லூனி மங்கி என்று மனதிலேயே அர்ச்சனை செய்துவிட்டு... அருகில் இருந்த காகித பூவை எடுத்து நீட்டி “you are so sweet anu” என்று அதை நீட்டினான். எதிர்பார்க்காத செய்கையால் அனு சிரித்துவிட, அந்த புன்னகையோடே காகித பூவை வாங்கிக்கொண்டாள்... ஹப்பாடா ஏதோ நம்மாள முடிந்தது என்று நினைத்துக்கொண்டான்.

அதன் தொடர்ச்சியாக நிகழ்ச்சியும் நன்றாகவே சென்றது.

“ஹாய்....எல்லாருக்கும் காலை வணக்கம்... என்ன ஜாக்கிங் போனவங்க எல்லாம் கரெக்டா ஷோ கேட்க வந்துட்டிங்களா? wifeக்கு காய் வாங்கிதர போனவங்க கையில ஒரு காப்பியோட உட்காந்தாச்சா ஷோ கேட்க வந்தாச்சா? காலைலேயே டென்ஷன் பண்ற குட்டீஸ், husband, பால் காரர், பேப்பர் பையன் எல்லாரையும் திட்டி முடுச்சு ரிலாக்ஸ் பண்ண ரேடியோ on பண்ணியாச்சா லேடீஸ்? சரி எல்லாரும் ரெடியா? இப்போ எப்பவும் போல, உங்கள கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண, உங்க டென்ஷன் எல்லாம் குறைக்க நான் வந்திட்டேன்... நீ வளவளன்னு பேசி டென்ஷன் ஏத்தாதன்னு சொல்றது கேட்குது சோ ஷோவ்கு போகலாம்... இன்னைக்கு டாபிக் என்னன்னா? யாரையாவது திட்டிட்டு அச்சோ இவ்வளவு திட்டி இருக்க வேணாமேனு நினைச்சு நீங்க பீல் பண்ணி இருந்தாலோ, ச்சே நம்ம தப்பு பண்ணிட்டமோ சாரி சொல்லிருக்கனுமோனு நீங்க பீல் பண்ணாலோ உடனே கால் பண்ணுங்க, வெளிபடைய ஒத்துக்குங்க... அட்லாஸ்ட் தப்புகளே மன்னிப்பதற்கு தானே...” என்று துவங்கினாள்    

“ஹலோ...”

“ஹாய் அனு அக்கா...”

“ஹே மது என்ன சீக்கரம் எழுந்திட்ட போல?”

“ஹா ஹா ஆமா அக்கா...”

“சூப்பர்... சரி சொல்லு உனக்கு என்ன பாட்டு வேணும்? யார்கிட்ட சாரி சொல்ல போற?”

“பாட்டு உங்க இஷ்டம்... சாரி என் ப்ரிண்ட் கீர்த்தனாக்கு”

“ஏன் நீ என்ன பண்ணின?”

“அதுவா என்னோட ஹீரோ பென்ன அவள் தான் தொலைசிட்டானு நினைச்சு திட்டிட்டே... ஆனா அதை இன்னொரு பொண்ணு எடுத்து வச்சு விளையாடிட்டு இருந்தா... அதுனால இப்போ கீர்த்தி என்கிட்ட பேச மாட்டிங்குறாள்... அதான் நான் ரொம்ப சோகமா இருக்கே...” என்று அழுகாத குறையாக கூரியவளின் கூற்றில் தன் பிரச்சனை நினைவுவர... மௌனமானவள் மறுகணம் சுதாரித்தாள்.

“அச்சோ... 5த் படிக்குற குட்டி பொண்ணுக்கு எவ்வளவு பெரியயயய கவலை... சரி கவலையே படாத கீர்த்தனா சீக்கரமே பேசிடுவா ஓகே வா? நீயும் இனிமே அப்படி செய்ய கூடாது சரியா?  கீர்த்தி குட்டி... பாவம் மது சீக்கரம் பேசுமா..” என்று தன் பங்குக்கு சொல்லிவிட்டு அவர்களுக்காக ஒரு அழகான பாடலை போட்டுவிட்டாள் அனு.  

அவள் செல்லமாக கொஞ்சி கொஞ்சி பேசியதில் மனம் நிம்மதி அடைந்தது மதுவுக்கு மட்டுமல்ல அஸ்வதிற்கும் தான். காலையில் அனுவின் குரல் தான் அலாரம் அவனுக்கு... அவளின் நிகழ்ச்சியை ரசித்து கண்மூடி கேட்டுக்கொண்டிருந்தவன் புன்முறுவலோடு எழுந்தான். யாரும் அறியா அந்த ஒரு நொடி மௌனமும் இவன் கருத்தில் பதிந்தது... “அடியே அழகி நீயும் இந்த சின்ன பொண்ணு மாதிரி தானே சிணுங்குவ... சாரிமா இன்னைக்கு எல்லாம் சரியாகிடும்” என்று மனதில் நினைத்தவண்ணம் எழுந்தான். அவனின் விடியல் ரம்மியமாகவே இருந்தது.

தொகுத்து முடித்து வீடு திரும்பியதும் மீண்டும் மனம் பழைய பாட்டை படித்தது. காலை எழும்பொழுது இருந்த அந்த உணர்வு... நிகழ்ச்சி தொகுக்கும் பொழுது எழுந்த அஸ்வத்தின் நினைவு என்று மனம் குழம்பியது. ஹேமாவின் காபிக்காக காத்திருந்தவள் அதை தந்துவிட்டு அருகிலேயே ஹேமா அமரவும்... காப்பியை மேஜை மீது வைத்துவிட்டு தாயின் மடியில் படுத்துக்கொண்டாள். அனு சோர்ந்து போகும் போதெல்லாம் செய்வது தான் என்பதால் ஹேமா எதுவும் கூறாமல் அமைதியாக தலை கோதினார்.

“அனு...”

“ம்ம்ம்ம்...”

“என்னாச்சுடா?”

“ஒன்னுமில்லையே...”

“ஒன்னுமில்லையா சரி....”

“....”

“நிஜமாவே ஒண்ணுமில்லையா?”

“ஆமாமா....”

“ம்ம்ம்ம்... தேஜு நிரஞ்ஜன் engagement திருப்தியா இருந்ததில்ல...” என்று பேச்சை துவங்கினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.