(Reading time: 8 - 15 minutes)

05. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

ரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த தயனிக்கு சட்டென விழிப்பு வந்தது. தூக்க கலக்கமற்ற முழு விழிப்பு.

ஷ்........................ஷ்...................

ஷ்.............................ஷ்..............

Katraga naan varuven

தரையில் துணி இழுபடும் சத்தம்.

அது மெல்ல அதிகரிக்க உடை தரையில் இழுபட யாரோ நடை பயிலும் சத்தம் அது என புரிந்தது.

மற்றபடி செவிகளில் மாயான அமைதி.

உடல் இறுகியது.

அத்தனை திசுக்களும் அலர்ட் நிலை.

அடி வயிற்றில் இருந்து மேலெழும்பியது ஒரு விபரீத உணர்வு.

இதயத்தை தவிர எதுவும் அசையவில்லை. உடலுக்குள் பரவியது ஒரு சூடு.

காற்றில் மெல்ல கலந்து வந்தது அந்த நறுமணம். அடி மனதில் எமிலி அக்காவின் ஞாபகம்.

‘இறந்து பத்து வருடம் இருக்குமா?’

உடல் உள்ளம் அத்தனையிலும் பரவியது அந்த எமிலியின் அருகாமை.

அறை முழுவதும் பரவி இருப்பது எமிலி.

இவள் சுவாசத்திலும் அந்த தொடுகை.

கற்றை குளிர் காற்று முகம் தொட்டு சுருண்டு புகை போல் இவளுக்கு இடபக்கம் மையம் கொள்வதாய் ஒரு மனகாட்சி.

பார்க்காதே என உள்மனம் ஓலமிட்டாலும் வெளி மனதில் ஒரு பயமற்ற தூண்டல். கருவிழிகளை மட்டும் உருட்டி இடபுறம் பார்த்தாள்.

காற்றாய், திரவமாய் ஜடப்பொருளாய் விரைத்த வெளிர் சடலமாய் எமிலி!!!!

“வேண்டாம்......வேண்டாம் பப்பு.....இது வேண்டாம்....”

அழுகையும் கெஞ்சலுமாய் ஆரம்பித்த குரல்.

அவளது அன்பான எமிலி அக்கா......இவளது தாய் இறந்த பின்பு இவளை கண்ணுக்கு கண்ணாய் வைத்து பாதுகாத்த காப்பாளர்.....பாச உணர்வு இவளுள்.??????!!!!!!

இவளை காப்பாற்ற முயன்ற முயற்சியில் ஜெயித்து அதன் விளைவாக தான் வாகன சக்கரத்தில் சிக்கி சின்னா பின்னமாகிய எமிலி அக்கா......பயங்கரமாய் அக் கோர காட்சி கண்ணில் வந்தது.

8 வயதில் பார்த்ததானாலும், இன்னும் இவ்வளவு தெளிவாய், சித்திரமாய் உள்மனதில் இருக்கின்றதா?

அந்த விபத்தில்...அழகு எமிலி அலங்கோல எமிலியாகி கோரமாக......மனதில் தெரிந்தபடியே கண் முன் மாறிக்கொண்டிருந்தாள் எமிலி.

அழகு மெழுகு முகம் சிதைந்து எலும்பு துருத்த, புழுவரித்த அழுகிய பிண்டமாய்......குப்பென்ற துர் நாற்றம்.

வீல் என அலற வேண்டும், அபிஷேக்கை அழைக்க வேண்டும்....மூளைக்கு மட்டும் தான் புரிகின்றது. உடல் இவளுக்கு உடன் படவில்லை.

“க...கஷ்.....ட்டஅ..அ....பட்டு...........உ....உனக்காக.....அ..... வ...வந்தேன்......ப....ப...ப்பு......போ......றேன்.....ப்...ப..ப்பு...........அ...அ....து.  வே....வேண்...டா.....ஆ...........”

மணல் சுருளாய் மாறி, காற்று கற்றையாகி சுருண்டு சுவர் கடந்தாள் அந்த எமிலி.

வாயும் வார்த்தையும் இவள் வசப்பட்டபோது மெத்தை வரை நனைத்திருந்தது வியர்வை.

பீ........அபிப்பா.....”அலறியபடி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவனை அப்பிப் பிடித்தாள்.

“என்னடா......என்னாச்சுடா....?” அடுத்த கணம் அரவணைத்திருந்த அபிஷேக்கின் குரல் அவளை ஆசுவாசபடுத்தியது.

“கனவு கண்டியா அம்மு?”

கனவா அது? யோசித்தாள் தயனி. இருக்கும். என்ன ஒரு பயங்கரமான உணர்வு.

“ம்,” முனங்கியவள் அவன் மார்பில் இன்னுமாய் புதைந்தாள். பார்த்த பயங்கரம் மனம் விலகியது. ஒரு நிசப்தம் மனதில்.

அவளுக்காக ஜெபித்தவனின் அரவணைப்பில் தூங்கிப்போனாள் மனையாள்.

று நாள் தூங்கி விழிக்கும்போது இயல்பாகி இருந்தாள் இளையவள். வழக்கம் போல் அவளுக்கு முன்பாக எழும்பி இருந்த அபிஷேக் அவள் பார்வை படும் தூரத்தில் வாட்ரோபிலிருந்து எதையோ எடுத்து கொண்டிருந்தான்.

கிளம்ப முழுவதுமாக தயாராகி இருந்த அவன் புறத்தோற்றம் ரசித்தாள். கிளர்ந்தது இளமிதயம்.

‘அழகுடா நீ!’ தன் ஆடவனை காதல் கலகம் செய்ய பிறந்த புது ஆவலில் படுக்கையை விட்டு இறங்கியவளின் காலில் மிதிபட்டன மணல் துகள்கள்.

சிலீரிட்டது  இதயம்.

இது நேற்று எமிலி நின்ற இடம்.

முகம் வெளிர வேர்வை முத்துக்கள் உடல் ஊற குனிந்து பார்த்தால்...சிதறிய மணல்  சிறிது........சிறிதும், பெரிதுமாய் ரத்த புள்ளிகள்......, அதன் அருகே ஆங்காங்கே......சிறு புழுக்கள்...... இவள் பாதம் தொடங்கி எமிலி வெளியேறிய சுவர் வரை.

பேச்சு வரவில்லை. தொப்பென்று மெத்தையில் அமர்ந்தாள்.

“என்னடா செல்ல குட்டி...சீக்கிரமே விழிச்சாச்சு போல.....” இவள் அசைவு கேட்டு திரும்பிய அபிஷேக் அவள் அமர்ந்திருக்கும் விதம் பார்த்து வேகமாக அருகில் வந்தான்.

“என்னடா அம்மு குட்டி திரும்பவும் கனவா?” யோசனையிலும் கரிசனையிலும் அவன் நெற்றியில் விழுந்தன சுருக்கங்கள்.

பீதியுடன் ஒற்றை விரலால் தரையை சுட்டினாள்.

“என்னடாமா?” குனிந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கேட்டான்.

“என்னது....? ஒன்னுமில்லையே!”

அவசர அவசரமாக இவள் எழுந்து பார்த்தால் எதுவும் இல்லை.

காலால் தரையை தேய்த்து பார்த்தாள். சுத்தத்தின் சத்தம் கேட்டது அதில். தரையில் அமர்ந்து கையால் தடவி கூட பார்த்தாள். மணலோ, மாம்ச ரத்தமோ அதன் சுவடு கூட அங்கு இல்லை.

இரவில் கண்ட காட்சியையும் இப்பொழுது பார்த்தவற்றையும் பதற பதற சொன்னாள் தயனி.

தன் கைகளுக்குள் அவளை காத்தபடி பொறுமையாய் கேட்டிருந்தான் அபிஷேக்.

“குட்டிமா...சின்ன வயசில இருந்து ஒரு வகையில் கஷ்டமான...சில கொடூரமான...சூழ்நிலைகள பார்த்து வளர்ந்திருக்க...அந்த மனகாயம்...இப்படி கனவா...பயமா வெளிபடுது.....மனசுவிட்டு நீ என்ட்ட பேசுறல்ல...இது குறஞ்சிடும்....ஸ்டில்...தேவபட்டா கவுன்சிலிங் எடுத்துக்கோமா....”

அவன் சொல்லும் போது சம்மதமாக தலையாட்டினாள்.

அது ஏன்  இத்தனை நாள் தனியாய் இருந்த எப்போதும் வராத பயங்கர கனவு...கனவுதானா அது?  இப்போது துணையோடு சுகமாய் இருக்கையில் வருகின்றது? என்ற கேள்வியை உணராமல் போனது பெண் மனம்.

“அழுக்கு பாப்பாவா இருந்தாலும் அழகு பாப்பாவா இருக்கியே தயூ குட்டி” கணவனாய் மணந்தவளை அணைத்தான்.

பயம் பதற்றம் எல்லாம் எங்கோ போக கட்டியவனின் தொடுகை மாற்றத்தில் துவள தொடங்கியிருந்தாள் பெண்.

சிறியதாய் சிணுங்கியது அபிஷேக்கின் அலை பேசி. அழைப்பின் ஒலி அளவு அதிகரிக்க அந்த இணைப்பை ஏற்றான் அவன். தொடங்கிய தொடுகை தடைபட்டது.

அன்று ரிஷப்ஷன் நேர்த்தியாய் நடந்தேறியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.