(Reading time: 18 - 36 minutes)

 

அந்த வரிகள்தான் அவள் மனதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்தது.

வீட்டை அடைந்தனர் இருவரும்.

உள்ளே நுழைந்தவுடன் ஏதாவது குடிக்கறியா அப்பூ? என்றவன் அய்யோ! டீ தான் இருக்கு. நீ காபிதானே குடிப்பே. எனக்காக ஒரு நாள் டீ குடிக்கிறயா? கண்களை சுருக்கி விரித்துக்கேட்டான் அவன்.

'விஷ்வா...... நீ என்ன கொடுத்தாலும் குடிப்பேன்.' புன்னகைத்தாள் அவள். புன்னகையுடன் உள்ளே சென்றான் அவன்.

சில நிமிடங்கள் கழித்து இரண்டு கப் டீயுடன் வந்து அவள் அருகில் அமர்ந்தான் விஷ்வா.

ஏனோ அவனை பார்க்க, பார்க்க கண்களில் நீர் சேர்ந்துக்கொண்டே இருந்தது. அதை அவன் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள் அபர்ணா. 'அவனிடம் எதையும் கேட்டு, எதையும் கிளறவும் விரும்பவில்லை அவள். இனி நடக்கப்போவதைதான் பார்க்க வேண்டும்.

ஒரு கப்பை அவளிடம் நீட்டிவிட்டு 'உனக்கு கல்யாணமாடா? என்னாலே நம்பவே முடியலை போ .எனக்கு இப்பவே உன் கல்யாணத்தை பார்க்கணும் போலே இருக்கு. நீ வெட்கப்படுறதை நான் பார்க்கணும். வெட்கமெல்லாம் படத்தெரியுமா அப்பூ உனக்கு?

சாதரணமாக இருந்திருந்தால் அவனை இந்த கேள்விக்கு பதிலாய் அவனை அடித்திருப்பாள். இப்போது எதையுமே சொல்லாமல் டீயை சுவைத்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.

'ஹேய்! கல்யாணமாகி போனதுக்கு அப்புறமும் எனக்கு ஒருநாளைக்கு ஒரு தடவையாவது போன் பண்ணிடுடா. உன் கூட பேசாம என்னாலே இருக்க முடியாது.' மிக சாதரணமாக, விளையாட்டுத்தனமாகத்தான் சொன்னான் அவன்.

அவன் பக்கம் மெல்ல திரும்பின அவள் கண்கள். கட்டுப்படுத்தவே முடியாத வெள்ளம் கண்களுக்குள். எப்படி அவன் தோளில் சாய்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. இதுவரை அப்படியெல்லாம் அவள்  செய்ததும் இல்லை.

தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாமல் குலுங்கி குலுங்கி அழ துவங்கினாள் அபர்ணா.

அவள் தலையை வருடியபடியே கேட்டான். 'அப்பூ... என்னாச்சுடா....? நான் சாதாரணமா... விளையாட்டுக்கு... என்னமா... ஏதாவது பிரச்சனையா..

அதெ..அதெல்லாம் ஒண்ணுமில்லை..

பின்னே...

எனக்கு அழணும் விஷ்வா... எதுவும் கேட்காதே விஷ்வா ...ப்ளீஸ் அழ விடு.... குலுங்கி குலுங்கி அழுதுக்கொண்டிருந்தாள் அபர்ணா.

'மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் மொழியாகும்'

அங்கே கண்ணீர் மொழியாகிக்கொண்டிருந்தது. அவன் நட்புக்கு அது சமர்ப்பணமாகிக்கொண்டிருந்தது.

விஷ்வாவின் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு கிளம்பி சென்று விட்டிருந்தாள் அபர்ணா. இந்த இரண்டு நாட்களில் நடந்த எதை பற்றியும் அவளிடம் சொல்லவில்லை விஷ்வா.

காலையிலிருந்து புன்னகையை பறிமாறிக்கொண்டதொடு சரி அபர்ணாவும் பரத்தும். மற்றபடி வேறெதுவுமே பேசிக்கொள்ளவில்லை இருவரும். இருவர் மனமும் வெவ்வேறு திசையில் எங்கெங்கோ பயணித்துக்கொண்டிருந்தது.

கல்லூரி முடிந்து எல்லாரும் கிளம்பிவிட்டிருந்தனர்.  கிளம்பும் நேரத்தில்  அவனருகில் வந்தாள் அபர்ணா.

அவன் கண்களை சந்தித்த நொடியில் மனம் கொஞ்சம் லேசானது போல் தோன்ற சொல்லிவிடலாமா அவனிடம். அப்பா திருமணதிற்கு சம்மதித்ததை சொல்லி விடலாமா? என்று யோசித்தவளை, அவன் முகத்தில் ஓடிய வருத்த ரேகைகள் என்னமோ செய்தன.

'என்னாச்சு ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க?  என்றாள் அவள்.

சின்ன பெருமூச்சுடன் சொன்னான் ' மனசு சரியில்லைடா'

ஏன்பா? அவள் இதமான குரல் அவனை அப்படியே வருடிக்கொடுத்தது. எல்லாவற்றையும் அவளிடம் கொட்டி  விட தயாரானது மனது.

சொல்றேன் வா. அவளுடன் கிளம்பினான் அவன்.

சில நிமிடங்கள் கழித்து அவன் கார் நகர்ந்துக்கொண்டிருக்க அவன் அருகில் அமர்ந்திருந்தாள் அபர்ணா.

என்னதிது? என்றாள் அபர்ணா. இவ்வளவு சோகமா. எதிலேயோ பெரிசா தோத்து போயிட்ட  மாதிரி. எங்க ப்ரோபசர் சிங்கமில்லையா? உங்களை இப்படி பார்க்க நல்லாவே இல்லை.'

மெல்ல திரும்பி அவளைப்பார்த்து புன்னகைத்தான். அவள் கண்களில் நிரம்பி இருந்த நேசம் அவனை வருடியது.

ஏனோ சட்டென அவள் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும்போலே தோன்றியது அவனுக்கு.

சின்ன புன்னகையுடன் அவன் கேசத்தை கலைத்தபடி கேட்டாள் என்னாச்சுப்பா?

தங்கச்சியோட சண்டைடா என்றான் அவன். நேத்திலேர்ந்து அவளோட பேசறதில்லை.

இவ்வளவுதானா? நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன்  என் அண்ணனோட நான் போடாத சண்டையா.?  விடுங்க எல்லாம் சரியாகும்.

இல்லைடா. என் அத்தை பையன் ஆபீஸ்லே..... எல்லார் முன்னாடியும்,...... அதுவும் அவன்., அந்த கடங்காரன் முன்னாடி வெச்சு நான் முக்கியமில்லைன்னு சொல்லிட்டாடா....

அத்..தை பையனா... உங்க அத்தைக்கு பையன் இருக்காரா ? அவரை உங்களுக்கு பிடிக்காதா? ஏன்?  மனதின் மிகச்சின்னதான ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒன்று சுருக்கென்று தைத்து மறைய, மெல்லக்கேட்டாள் அபர்ணா.

அது ஒரு மகாபாரதம் அப்புறம் சொல்றேன். அவன் ஒரு ராஸ்கல். இவளை தன் பக்கம் இழுத்திட்டான் அபர்ணா.

ரா......ஸ்கல் ரா......ஸ்....கல் ' பற்களை கடித்துக்கொண்டு. கைகளால் ஸ்ட்யரிங்கை குத்தியபடி  அவன் சொல்ல கொதித்தது அவன் மனம்.

அவள் கை மெல்ல எழுந்து ஸ்டீயரிங் மீதிருந்த அவன் கையை மெல்ல அழுத்த அவன் குரல் கொஞ்சம் இறங்கியது அவ என் தங்கச்சிடா. அவனக்கு போய் சப்போர்ட் பண்ணிட்டு. அவன் எனக்கு என்னவெல்லாம் செஞ்சிருக்கான் தெரியுமா?

சில நொடிகள் அவனிடம் மௌனம் நிலவியது, பின்னர் தோற்றுப்போய் தழைந்த குரலில் மெல்லச்சொன்னான் என் தங்கச்சி என்னை விட்டு போயிடுவாளோன்னு பயமா இருக்குடா... அப்படியெல்லாம் ஆகாதில்ல?

அதெல்லாம் எதுவும் ஆகாது. நீங்க ஏன் இப்படி தேவை இல்லாம........ என்றவளின் மனது எதையோ இணைத்து கணக்குபோட்டது.

ஆமாம் உங்க அத்தை பையன் பேரென்ன? 

தொடரும்...

Go to episode # 09

Go to episode # 11

{kunena_discuss:726}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.