(Reading time: 18 - 36 minutes)

 

சென்னையில் அதே நேரத்தில் தனது வீட்டுக்கு வந்திருந்தான் பரத். மனம் முழுவதும் அழுத்தமும் குழப்பமுமாய். சோபாவில் அமர்ந்திருந்தான் அவன்

சில நிமிடங்கள் கழித்து வீட்டுக்குள் நுழைந்தாள் இந்து

மெல்ல அவன் அருகில் வந்தாள். நொடிப்பொழுதில் வெளிவந்த வார்த்தைகள். அது பரத்தை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று அறியாமல் இல்லை அவள்.

அ...ண்....ணா.... ஏதோ சொல்ல விழைந்தது அவள் மனமும், குரலும், ஆனால் எதையுமே கேட்கும் மன நிலையில் இல்லை பரத்.

எதுவுமே பேசவில்லை அவன். தன் அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தான் பரத். எத்தனை கட்டுப்படுத்தியும் தனது கண்களில் நீர் சேர்வதை அவனால் தடுக்கவே முடியவில்லை.

ஸ்வினியை பற்றிய எண்ணங்களுடனே வீட்டுக்குள் நுழைந்தாள் அபர்ணா. செருப்பை கழற்றி விட்டு, அவள் உள்ளே நுழைய எத்தனித்த போது வீட்டினுள் சில புதிய குரல்கள் கேட்டன

யார் வந்திருப்பார்கள்? என யோசித்தபடியே உள்ளே நுழைந்தாள் அபர்ணா.

அங்கே கூடத்தில் அமர்ந்திருந்தனர் அவர்கள் இருவரும். சுதாகரனும், ஜனனியும். அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் அபர்ணாவின் அண்ணி மீரா.

ஜனனியை பார்த்த மாத்திரத்தில் சுள்ளென்று பொங்கியது அபர்ணாவுக்கு. 'இவள் எப்படி  இங்கே வந்து  தொலைத்தாள்?

ஆனால் அங்கே எதையும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாதே!!! கொஞ்சம் இறுகிப்போன முகத்துடன், அவளையே பார்த்துக்கொண்டு அபர்ணா நின்றுவிட அப்போது தான் நிமிர்ந்த ஜனனி கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.

'அபர்ணா, இவன் சித்தப்பா பையன் டாக்டர் சுதாகர். உனக்கு ஞாபகம் இல்லையா.? இவங்க கல்யாணத்துக்கு தான் உங்கப்பா சென்னை வந்தார்.' நான் தான் கல்யாணத்துக்கு போக முடியலை. அதனாலே தான் இவங்களை விருந்துக்கு வீட்டுக்கு கூப்பிட்டேன். இன்னைக்கு டைம் இருந்ததாம் கார்லே கிளம்பி வந்திட்டாங்க' என்றாள் அவள் அண்ணி.

ஓ! கஷ்டப்பட்டு புன்னகைத்தவளுக்கு சுருக்கென்று உறைத்தது. 'அய்யோ! அந்த திருமணதிற்கு விஷ்வாவும் போயிருந்தானே? அப்படியென்றால் ஜனனியின் திருமணத்தை கண்ணால் பார்த்தானா அவன்.? இறைவா!!!! எவ்வளவு  வலித்திருக்கும் அவனுக்கு?

சுதாகரனின் பார்வையும் அபர்ணாவை சேர புன்னகைத்த படியே அவனைப்பார்த்து சொன்னாள்  மீரா 'என்ன அப்படி பார்க்கிறே? இவளை எங்க கல்யாணத்திலே பார்த்தது இல்லையா நீ இவ என்னோட நாத்தனார் அபர்ணா.

எங்கெங்கோ தேடி இழுத்து இதழ்களில் புன்னகையை ஓட விட்டாள் அபர்ணா. அதே நேரத்தில் அபர்ணா என்ற பெயர் சுதாகரனை ஈர்த்தது.

எஸ்!.எஸ்! பார்த்திருக்கேன். ஆனா பெயரை மறந்திட்டேன். 'அபர்ணா....' நல்ல பெயர். என்றான் அவன். அவன் மனம் ஒரு முறை விஷ்வாவிடம் சென்று வந்தது.

'எக்ஸ்கியூஸ் மீ. நீங்க பேசிட்டிருங்க. நான் வந்திடறேன்.' நகர்ந்தாள் அபர்ணா. அங்கே நிற்க முடியவில்லை அவளால்.

ள்ளே தன் அறைக்குள் சென்றவளின் கண்களில் நீர் சேர்ந்தது. 'விஷ்வா.. மனதிற்குள் எவ்வளவு துடித்தாயோ? நீ ஏன் என்னிடம் எதையுமே சொல்லவில்லை?

மீரா எழுந்து உள்ளே போக, ஜனனியின் பக்கம் திரும்பினான் சுதாகரன். மௌனச்சிலையாய் அமர்ந்திருந்தாள் அவள்.

அவள் முகம் மாற்றமென்ன அவள் சுவாசத்தில் சின்ன மாற்றம் எழுந்தால் கூட அதை உணர்ந்துக்கொள்பவன் தானே சுதாகரன்.

ஹேய்! என்னாச்சு திடீர்னு என்னமோ மாதிரி ஆயிட்டே? நல்லா தானே பேசிட்டிருந்தே அபர்ணா வந்ததும் என்னாச்சு?

ம்? என்று அவன் பக்கம் திரும்பினாள் ஜனனி 

இல்லை. அபர்ணா வந்ததும் என்னாச்சுன்னு..... அவள் கண்களை படித்தபடியே கேட்டான் சுதாகரன்.

பதில் சொல்லவில்லை அவள்.

அ.....ப.....ர்.....ணா???? கேட்டான் அவன்.

'ம்.' ஆம் என தலையசைத்தாள் ஜனனி.

'ஓ! என்றவனுக்குள் பல யோசனைகள் ஓடத்துவங்கின. சில நொடிகளில் சட்டென இயல்பானவன் 'சரி. அதுக்கு ஏன் இவ்வளவு டல்லா ஆயிட்டே. வா சாப்பாடு ரெடியான்னு பார்க்கலாம். எங்க அக்கா சமையல் சூப்பரா இருக்கும்.'  அவளை எழுப்பிக்கொண்டு நகர்ந்தான் அவன்.

சாப்பிட்டு முடிந்த பிறகு மதியம் கொஞ்சம் உறங்கிவிட்டிருந்தார்கள் ஜனனியும், மீராவும்.. 

ஜனனியின் மீது மனதின் அடியில் இருக்கும் கோபம் சட்டென வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே தனது அறையை விட்டு வெளியே வரவேயில்லை அபர்ணா.

ஏதோ யோசனையுடனே இங்குமங்கும் நடந்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுடன் அபர்ணாவின் அறையின் வாசலில் வந்து திறந்திருந்த அவள் அறைக்கதவை மெல்ல தட்டினான் சுதாகரன்  .'நான் உள்ளே வரலாமா? நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.'

கட்டிலில் அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்தாள். சில நொடிகள் அவனை யோசனையுடன் பார்த்தவள் 'ம். வாங்க' என்றாள்.

உள்ளே வந்து அங்கே இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவன், அவளை பார்த்து உட்காருங்க என்றான்.

அவன் எதிரில் கட்டிலில் அமர்ந்தாள் அவள். 'சொல்லுங்க'

எப்படி துவங்குவது என்று யோசித்தவன் மெல்ல விஷ்வா உங்க பெஸ்ட் friend இல்லையா? என்றான்..

'ம்.' என்றாள் அபர்ணா. வெரி பெஸ்ட் friend.

அவரையும், ஜனனியும் பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியும் இல்லையா?

வியப்பில் அபர்ணாவின் புருவங்கள் உயர்ந்து இறங்கின. 'இவனுக்கும் எல்லாம் தெரியுமா? தெரிந்தும் இவ்வளவு இயல்பாய் இருக்கிறானா?

ம். தலையசைத்தாள் அபர்ணா.

எங்க கல்யாணத்துக்கு அவர் வந்து இருந்தார் உங்களுக்கு தெரியுமா?

'ம். இப்போதான் தெரிஞ்சது' என்றாள் அபர்ணா.

'நான் ஜனனிக்கு தாலிக்கட்டின அந்த நிமிஷத்திலே என்னை சுத்தி இருந்தவங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்த்துனாங்கன்னுதான் நினைச்சேன். ஆனா அந்த நேரத்திலே ஒரு மனசு வெந்து துடிச்சிட்டிருந்திருக்குன்னு எனக்கு தெரிஞ்சப்போ ஏனோ என்னாலே தாங்கிக்கவே முடியலை அபர்ணா.

இமைக்க மறந்துப்போய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அபர்ணா.

அவங்க ரெண்டு பேரிலே யார் மேலே தப்பு அப்படின்னு நான் ஆராய்ச்சி பண்ண விரும்பலை. ஆனா விஷ்வாவுக்கும் எப்படியாவது, ஏதாவது நல்லது நடக்கணும்னு  என் மனசு தவிக்குது உங்களாலேதான்  அது முடியும்னு எனக்கு தோணுது அபர்ணா என்றான் அவன்.

அவன் பேச பேச வியந்துப்போய் அமர்ந்திருந்தாள் அபர்ணா.  இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா ஒரு மனிதனால்? அவள் கண்களில் நீர் சேர்ந்து விட்டிருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.