(Reading time: 14 - 27 minutes)

 

கௌரி சீக்கிரம் சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பி.  அம்மா, அப்பா என்னவோ ஏதோன்னு பார்க்கறா பாரு.”, என்று ஹரி தன் யோசனையிலேயே மூழ்கி இருந்த கௌரியை  உலுக்கினான்.

“இல்லப்பா, இந்த ஒண்ணரை  வருஷமா நான் வேலைக்கு போய் சம்பளம் வாங்கினதுல 5000 மட்டும் ஆத்துல கொடுக்க சொல்லிட்டு மத்ததை பாங்க்ல போட சொல்லிட்டேள்.  அதெல்லாம் சேர்ந்து ஒரு மூணு லட்சம் இருக்கு.  அதை அப்படியே நீங்க கல்யாண செலவுக்கு எடுத்துக்கணும்ப்பா ப்ளீஸ்.  பொண்ணு சம்பாதிச்சதை எப்படி தொடரதுன்னு அப்படினெல்லாம் சொல்லாதீங்கோப்பா. இது நான் சம்பாதிக்கறேன் அப்படின்னு சொல்லலை, ஒரு கல்யாணம்னால் எத்தனை செலவிருக்கும்ன்னு ஓரளவுக்கு எனக்கும் தெரியும்ப்பா.  ப்ளீஸ் அதுனாலதான் சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்கோ.”, மிகத் தயக்கத்துடன் இறைஞ்சியபடியே கௌரி பேச, தன் விளையாட்டுப் பொண்ணா இத்தனை தெளிவா பேசறதுன்னு ஜானகி கண்களிலிருந்து அருவி கொட்ட ஆரம்பித்துவிட்டது.

“ஏம்மா எல்லா பணத்தையும் எங்ககிட்ட கொடுத்துட்டு நீ என்ன பண்ண போறே.  கல்யாணத்துக்கு அப்பறம் மாப்பிள்ளை, இத்தனை நாளா நீ வேலைக்கு போய் வாங்கின சம்பளத்தையெல்லாம் என்ன பண்ணினேன்னு கேட்டா என்ன சொல்லுவே”, என்று கனிவுடன் கேட்டார்.

“அப்பா போன வாரம் கௌஷிக் ஆபீஸ்க்கு போன் பண்ணினார்.  அப்போ அவர்தான் உங்ககிட்ட எல்லா பணத்தையும் கொடுக்க சொன்னார்.  அவர் சொல்லாட்டாலும் நானே இந்த வாரம் உங்க கிட்ட இதைப்பத்தி பேசறதாதான் இருந்தேன். அதுக்குள்ள அவரே போன் பண்ணிட்டார். “, என்று கௌரி தலை குனிந்தபடி சொல்ல, இன்னும் அவளுக்கு பயம், எங்கே அப்பா தான் பேசுவதை  தவறாக  நினைத்து கொள்வாரோ என்று.

ரொம்ப சோகமாக போவதால் நம் ஹரி நடுவில் புகுந்து, “அதுதானே பார்த்தேன்,  நம்ம கௌரிக்காவது இந்த மாதிரி யோசனை எல்லாம் வரதாவது.  பரவா இல்ல கௌரி, உனக்கும் சேர்த்து நம்ம மாப்பிள்ளை நன்னாவே யோசிக்கிறார்.”  என்று சூழ்நிலையை சகஜமாக்க முயன்றான்.

இத்தனை நடந்தும் ஜானகி வாய் திறக்கவில்லை.  ராமன் ஜானகியைப் பார்த்து, “என்ன ஜானு, ஒண்ணுமே பேச மாட்டேங்கற”,  என்று கேட்க .

 “இல்லைனா, இது நம்ம கௌரியான்னு இருக்கு.  எத்தனை பொறுப்பா பேசறா பாருங்கோ.  நீங்க எங்க தப்பா நினைச்சுக்கப் போறேளோன்னு தயங்கித் தயங்கி பேசறா.  என்னோட பயம் எல்லாம் போய்டுத்து.  நன்னாவே புக்காத்துல போய் சமாளிச்சுப்பா”, என்று ஜானகி  சந்தோஷக்  கண்ணீருடன் பேச சற்று நேரம் நெகிழ்ச்சியாக சென்றது.

“கௌரி நீ உன் பணம் மொத்தத்தையும் எங்க கிட்ட கொடுக்க வேண்டாம்.  அதுலேர்ந்து ஒரு லட்சம் மட்டும் அப்பாகிட்ட கொடு.  மத்தது உன் பேர்லே இருக்கட்டும்.  புது ஊருக்கு போகப்போறே.  வேலை மாத்தல் கிடைச்சா பரவா இல்லை, அப்படி இல்லாம அங்க போயிட்டு தேடறா மாதிரி இருந்தா, உன் கையிலயும் கொஞ்சம் பணம் வேணும்மா, எல்லாத்துக்கும் நீ மாப்பிள்ளை கையையே எதிர்பார்க்கறா  மாதிரி  இருக்கக்கூடாது கௌரி”. 

“ஆமாம் கௌரி, அப்பா சொல்றது ரொம்ப கரெக்ட்.  உன்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கறது நல்லதுதான். நான் உங்க அப்பாவைக்  கல்யாணம் பண்ணிண்டு  புக்காத்துக்கு  வந்த உடனே என் மாமியார் என் கையில பீரோ சாவியைக் கொடுத்துட்டு எனக்கு ஏதானும்  செலவு வந்தா  எடுத்துக்க சொன்னார்.  அதே மாதிரி உங்கப்பாவும், முதல் நாளே எனக்கு ஒரு பர்ஸ்ல பணத்தைப் போட்டு சின்ன சின்ன விஷயத்துக்கும் நீ என்னண்ட கேட்டுண்டு இருக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.   அதனால எனக்கு கஷ்டம் தெரியலை.”, என்று தன் கணவன் புகழ் பாடத் துவங்க.

ஹரி நடுவில் புகுந்து,  “சூப்பர்ம்மா, திருவாளர்  ராமன் சார்,  கல்யாணம் ஆன அன்னைலேர்ந்தே தான் ஒரு அக்மார்க் காதல் கணவர் அப்படின்னு ப்ரூவ் பண்ணிட்டார் போல இருக்கு”,  என்று கலாய்க்க ஆரம்பித்தான்.

ஹரி கிண்டலுக்கு  முகம் சிவந்தபடியே ஜானகி, “எல்லாருக்கும் அந்தக் கொடுப்பினை இருக்காது ஹரி.   இதே அலமுக்கு கல்யாணம் ஆகி வந்த புதுசுல கஷ்டமா போச்சு.  எங்கம்மாவும் சாவியைக் கொடுக்கலை.  என் தம்பியும் பணம் கொடுக்கலை. பாவம் ரொம்ப கஷ்ட்டப் பட்டுட்டா.  கல்யாணம் முடிஞ்சு வந்த புதுசுல என்னண்டையும் நிறைய பேச மாட்டா. ஒரு நாளைக்கு பாட்டி ஆத்துக்குப் போறச்ச கடைக்குப் போய் கொத்தமல்லி வாங்கக் கூட அவாளண்ட காசு வாங்கிண்டு இருந்த அலமுவைப் பார்த்து விஷயம் தெரிஞ்சுண்டு, என் தம்பிகிட்ட சொல்லி அவளுக்குன்னு கொஞ்சம்  பணம் தனியா  கொடுத்து வைக்க  சொன்னேன்.  அதனால  கௌஷிக் ஆத்து மனுஷாகிட்ட  உனக்கு   சகஜமாகறவரை  உன் கையிலயும் பணம் இருக்கட்டும் கௌரி.”    என்று முடித்தாள்.

“அம்மா நீ என்ன நம்ம அலமு மாமி மாதிரி கௌரி அவாளண்ட வாயை மூடிண்டு இருப்பான்னு நினைச்சியா.  அதெல்லாம் பாவம் அந்த மாமிதான் இவளண்ட பைசாக்கு நிக்கணும்.  சிங்கப்பூர் போனப்பறம் கௌஷிக் நிக்கணும்.  இவள்லாம் ஊரையே விக்க  வெல பேசற ஆளு”

“ரொம்ப சரியா சொன்ன ஹரி.  அம்மா நீ இவன் சொன்னதை  நன்னா நோட் பண்ணி வச்சுக்கோ.  இவனுக்கு கல்யாணம் ஆனா கண்டிப்பா பீரோ சாவியை இவன் பொண்டாட்டிகிட்ட கொடுத்துடாத.  அவளே நல்லவளா இருந்தாலும், இவன் அது எதுக்கு அம்மா, அப்பாக்கு செஞ்சுண்டுன்னு சொல்லிடுவான்”,  பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம் என்று ஹரியுடன் மல்லுக்கு நின்றாள்.

ப்பொழுதும் போல் பேச வந்த விஷயம் ட்ராக் மாறிப் போவதை அறிந்து நடுவில் குறிக்கிட்ட நாட்டாமை, “கௌரி அம்மா சொன்னதை கேட்ட இல்ல, என்ன பண்ணப் போறே”,  என்று முதலில் பேச ஆரம்பித்த விஷயத்திற்கு வந்தார்.

 “நீங்க ரெண்டு பேரும் சொல்றா மாதிரியே பண்ணிடலாம்ப்பா.  நான் செக்குல sign பண்ணிக் கொடுக்கறேன்.  நீங்க உங்க அக்கௌன்ட்ல போட்டுடுங்கோ.  அப்போதான் ஒரே இடத்துல இருந்து செலவழிக்க சுலபமா இருக்கும்.”

“சரிமா.  ஒண்ணும் அவசரம் இல்லை.  பார்த்துக்கலாம்.  ஜானு இப்போ நாம உக்கார்ந்து ஒரு கணக்கு போடலாம்.  அவாத்துல எதுவும் வேண்டாம்ன்னு சொன்னாலும் நாம செய்யறதை செய்யத்தான் வேணும்.  இப்போ கௌரி கொடுக்கற 1 லட்சம், என் அக்கௌன்ட்ல ஒரு 2 லட்சம் இருக்கு.  இது சாப்பாட்டு செலவுக்கு போறும். வேற என்னன்னு சொல்லு.”

“இல்லைன்னா சாப்பாடு மட்டும்ன்னு இல்லாம மொத்தமா கான்ட்ராக்ட்ல விட்டுடலாம்.  நமக்கும் சுலபம்.  நாமளே ஒண்ணு ஒண்ணும் வாங்கிண்டு இருந்தா, வேலைதான் ஜாஸ்தி.  அப்பறம் ஏதானும் மறந்துட்டாலும் கடைசி நேரத்துல ஓடிண்டு இருக்கனும்.   கான்ட்ராக்ட்ன்னா நாம போய் எறங்கறதுலேர்ந்து  கட்டு சாதக் கூடை வரைக்கும் எல்லாம் அவா பொறுப்பு.  நாம வர்றவாளை கவனிச்சுண்டா போரும்”

“அதுவும் சரிதான்.  நமக்கும் கோபாலனை விட்டா எடுத்துப் போட்டு செய்யறதுக்கு ஆள் கிடையாது.  எல்லாத்துக்கும் அவனையே ஏவிண்டு இருக்கறதும் கஷ்டம்.  நீ சொல்றா மாதிரியே கான்ட்ராக்ட்லயே விட்டுடலாம்.   அப்போ ஒரு 4 லட்சம் போட்டுக்கறேன்”

“ம்ம் அது சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.  நாம அவாத்துல மேல போடறதா சொன்ன  1௦ சவரன் நகை  வாங்கணும்.  அதுக்கு ஒரு 2 லட்சம் ஆகும்.  நாம கட்டின 1 லட்சம் நகை சீட்டு இன்னும் 2 மாசத்துல முடியறது.  அதுனால மேல்கொண்டு  1 லட்சம் அட்ஜஸ்ட் பண்ணினா போரும்.  அதைத் தவிர சத்திரம், துணி மணி இந்த செலவெல்லாம் ஒரு 4 லட்சம் வரும்.  மொத்தமா இன்னும் ஒரு ஆறுலேர்ந்து ஏழு லட்சம் வரை தேவைப்படும்ன்னா”, ஜானகி finance மினிஸ்டரை விடப் படு வேகமாகக் கணக்கு போட்டாள்.

“அப்பா அம்மா சொல்றதைப் பார்த்தா கிட்டத்தட்ட ஒரு கல்யாணம் பண்ண எட்டுலேர்ந்து ஒம்பது லட்சம் வரை செலவாகும் போல இருக்கு.  நான் 2 லட்சத்துக்கு உங்களுக்கு செக் தரேன்ப்பா, நோ சொல்லாதீங்கோ.  பாக்கி இருக்கற பணம் போரும்.  என் வேலை ஒண்ணும் பிரச்சனை இருக்காதுன்னு என் டீம் லீடர் சொல்லிட்டார்.  அதுனாலக் கவலைபடாதீங்கோ.  நான் இங்க இருந்து போகும்போதே வேலையோடதான் போவேன்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.