(Reading time: 11 - 22 minutes)

 

அப்போ பனிரெண்டாம் தேதியே வச்சுக்கலாம்.   சாப்பாடுக்கு யாரை சொல்லப் போறேள்.”,  முக்கால்வாசிக்  கல்யாணத்தில்  தகராறு வரக் கூடிய  விஷயத்திற்கு வந்தார் பத்து.

“நான் பார்த்த மூணு இடத்திலுமே, சத்திரம் புக் பண்ணனும்ன்னா அவாளோட  சமையக்காராளதான் புக் பண்ணனும்ன்னு சொல்லிட்டா.  மாம்பலத்துல பார்த்த மண்டபத்து  சமையக்காரர் மணி ஐயர்.  வடபழனில பார்த்ததுல சாமா ஐயர்.  இவா ரெண்டு பேருமே நன்னாப் பண்ணுவான்னு விஜாரிச்ச வரைக்கும் எல்லாரும் சொன்னா.  மணி ஐயர் சாப்பாடு நானே ரெண்டு மூணு இடத்துல சாபிட்டுருக்கேன்.  ரொம்ப நன்னா இருந்தது.  இப்போதைக்கு மாம்பலம் சத்திரம் 10,12,13 ப்ரீயாதான் இருக்கு. அதனால  உங்களண்டையும் பேசிட்டு அதையே  புக் பண்ணலாமான்னு பார்க்கறோம்.”

“உங்களுக்கு சரின்னா எனக்கு ஒண்ணும் அப்ஜெக்சன் இல்லை ராமன்.  ரூம்ஸ் எத்தனை இருக்கு.  வரவா தங்கறதுக்கு இடம் போறுமா”

“மொத்தம் 10 ரூம்ஸ் இருக்கு.  3 floors.  சாப்பாடு கீழ கிரௌண்ட்  ஃப்ளோர்ல ,     மேடை அப்பறம் 3 ரூம்ஸ் நடு ஃப்ளோர்ல ,   மூணாவது மாடில பாக்கி 7 ரூம்ஸ் இருக்கு. லிஃப்ட் இருக்கறதால ஒண்ணும் கவலை இல்லை.  நவம்பர் மாசம் அதனால AC கூட தேவைப் படாதுன்னு நினைக்கறேன்.  அப்படியே இல்லாட்டாலும்  6 ரூம்ல AC இருக்கு.  வேணுங்கறவா அந்த ரூம்ல தங்கிக்கலாம்.  அப்படியே போறாட்டாலும் பக்கத்துலையே நல்ல ஹோட்டல் இருக்கு, அங்க வேணும்ன்னாலும் ரூம்ஸ் புக் பண்ணிக்கலாம். ”,  என்று விளக்கினார் ராமன்.

ம்மளைப் பேச விடாமல் அது என்ன இவர்களே எல்லாம் பேசுவது, என்று நடுவில் புகுந்த லக்ஷ்மி, (மாமி இது உங்களுக்கே நன்னா இருக்கா, நீங்க இருக்கறச்ச மாமாவே எப்பவோதான் வாயைத் தொரக்கறார்.  அதுவும் பொறுக்கலையா உங்களுக்கு),  “எங்காத்து சைடு முக்காவாசிப் பேர் சென்னைலதான் இருக்கா. அதனால மண்டபத்துல ரொம்ப நெருங்கினவா ஒரு 50 பேர் தங்கினா ஜாஸ்தி.  அதனால இருக்கற ரூம்ஸ் போறும்ன்னு நினைக்கிறேன்”

“ஆமாம் மாமி எங்காத்து சைடும் மனுஷாக் கம்மிதான்.   இங்கயும் ஒரு முப்பது, நாப்பது பேர் தங்கினா ஜாஸ்தி.”, என்று லக்ஷ்மிக்கு ஒத்து ஊதினார் ஜானகி.

“அப்பறம் என்ன ராமன்,  அவாளே நோ அப்ஜெக்ஷன் செர்டிபிகெட் கொடுத்துட்டா. நீங்க தாராளமா அதையே ஃபிக்ஸ் பண்ணிடுங்கோ.  எங்க உங்கப் பையன் ஹரியைக் காணும்.”

“அவன் ஏதோ புக் வாங்கணும்ன்னு அவன் சீனியர் ஆத்து வரைக்கும் போய் இருக்கான்.  வர நேரம்தான்”, என்று ராமன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஹரி உள்ளே வந்தான்.

கௌரி ஹரியின் பிரதாபங்களை அப்பொழுதுதான் கூறி இருந்ததால், ஸ்வேதா அந்த அமுக்குணி பிள்ளையாரை ஆவலாகப் பார்த்தாள்.  ஆனால் அவனோ கௌரியிடமிருந்து தன்னைக் காக்க வந்த தெய்வமாகப் பத்து சாரை படு பரவசமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். (Confirmed bachelor தாண்டா ஹரி நீ.  இப்படி ஒரு சூப்பர் figure உன்னைப் பார்க்கறது கூடத் தெரியாம அவ அப்பாவை பார்த்துண்டு இருக்க.  இவன் தேற மாட்டான் ஸ்வேதா.   கௌரி  நீ சொல்றா மாதிரி ஹரி  ரமண மகரிஷிதான்.)

 “வாப்பா ஹரி, எப்படி இருக்க.  கடைசி வருஷம் இல்லை.  ப்ராஜெக்ட் கிடைச்சுடுத்தா.  காம்பஸ் எப்போ வரப் போறா”

“நன்னா இருக்கேன் மாமா.  ப்ராஜெக்ட் விஷயமாதான், என்னோட சீனியரைப் பார்த்துட்டு வரேன்.  அவரோட கம்பெனிலேயே வாங்கிக் கொடுக்கறேன்னு சொல்லி இருக்கார்.  காம்பஸ் இன்னும் வர ஆரம்பிக்கலை.  செப்டம்பர்க்கு மேல வருவாளா இருக்கும்.”

தன் பக்கம் கொஞ்சமும் திரும்பாமல் தன் அப்பாவைப் பார்த்தே பேசும் ஹரியை எப்படித் தன் பக்கம் திருப்புவது என்று ஸ்வேதா யோசனையில் ஆழ்ந்தாள்.  (ஸ்வேதா ஹரியைப் பார்த்த உடனே தம்தன, தம்தனன்னு இளையராஜா  மியூசிக் போட ஆரம்பிச்சுட்டாரா.  ஆனால் நீ அவனுக்கு உன் மனசைப் புரிய வைக்கறதுக்குள்ள உனக்கு அறுபதாம் கல்யாணமே வந்துடுமே. )

“என் பொண்ணு ஸ்வேதா உனக்குத் தெரியுமே.  அவ இப்போ  இரண்டாவது வருஷம் போய்  இருக்கா.  மெயின் EEE.”, என்று தன் பொண்ணை மறுபடி ஒரு முறை ஹரிக்கு அறிமுகம் செய்தார். 

“ஓ ஹலோ எப்படி இருக்கேள்”, என்று பெயருக்கு அவள் பக்கம் திரும்பி கேட்டுவிட்டு மறுபடி பத்துவையேப் பார்த்து பேச ஆரம்பித்தான் ஹரி.  ஸ்வேதா இவன் வேலைக்கு ஆக மாட்டான் போல இருக்கே என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

“அப்பறம் ராமன் நான் உங்ககிட்ட கொடுக்கறதா சொன்ன 2 லட்சம் செக் இன்னைக்குக் கொண்டு வந்திருக்கேன்.  இப்போவே கொடுத்துட்டா உங்களுக்கு செலவு பண்ணும்போது ஈஸியா இருக்கும் இல்லையா”

“அச்சோ இதுக்கு என்ன அவசரம் இப்போ.  எனக்கு எப்படி மறுக்கறதுன்னு தெரியலை.  ப்ளீஸ் நீங்க கொடுக்க வேண்டாமே.”, என்று மறுபடி ஒரு முறை சொல்லிப் பார்த்தார் ராமன்.

“மூச், நீங்க ஒன்னும் சொல்லக் கூடாது.  இன்னும் சொல்லப் போனா பாதிக்குப் பாதி கொடுக்கணும்.  அதுதான் ஞாயம்.  ஆனால் நீங்க அதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொன்னதால இதைக் கண்டிப்பா வாங்கிண்டுதான் ஆகணும்.  கல்யாணத்துக்கு வரப் போறது ரெண்டு பக்கத்து மனுஷாளும்தானே.  அப்படி இருக்கறப்போ செலவு மட்டும் எதுக்காக பொண்ணாத்துக்காரா மட்டுமா பண்ணனும்.  அது தர்மமே இல்லை.  பழைய காலத்துல எல்லாம் பொண்ணுக்கு சீர், செனத்தி அத்தனையும் பையன் கொடுத்து  கல்யாணம் பண்ணிப்பானாம்.  அதுதான் சரி.”

“இவர் சொல்றது ரொம்ப சரி மாமா.  பொண்ணாத்துக்காராளை கசக்கி புழிஞ்சு கல்யாணம் பண்ணச்சொல்றது என்ன ஞாயம் சொல்லுங்கோ.  கல்யாணம்ங்கறது சந்தோஷமா செய்யற விஷயமா இருக்கணும், அச்சோ செலவுக்கு என்னடா பண்றதுன்னு முதல்லேர்ந்து அவாளை கலங்க வைக்கற விஷயா இருக்கக் கூடாது.” என்று கூறி தான் பத்துவின் லக்ஷ்மி என்று நிரூபித்தார்.

“மாமி சத்யமா சொல்றேன்.  இந்த மாதிரி சம்மந்தம் கிடைக்க கௌரி கொடுத்து வச்சிருக்காளோ இல்லையோ, நாங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கோம்.  எந்த விதத்திலும் எங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு பார்க்கறேள் பாருங்கோ, நீங்க நிஜமாவே உசந்தவாதான்.”, என்று ஜானகி உணர்ச்சிவசப்பட்டுப் கண் கலங்க ஆரம்பித்தார்.

“அச்சோ மாமி என்ன இது, நல்ல விஷயம் பேசறச்ச கண் கலங்கிண்டு.   கௌரி இனிமே  எங்காத்துப் பொண்ணு.  அதனால ஆத்துப் பொண்ணுக்குதான் இதை செய்யறோம்.  அதுவும் இல்லாம என்னைப் பொருத்தவரைக்கும், மத்த உறவுகளை விட, சம்மந்திகள் உறவுதான் சுமுகமா இருக்கணும்.  அவாளுக்குள்ளதான் புரிதலும், விட்டுக் கொடுத்துப் போறதும்  நிறைய இருக்கணும்.  அப்போதான் நம்ம குழந்தைகளும் சந்தோஷமா இருப்பா.  என் அம்மா, அப்பாவைக் கஷ்டப்படுத்தினவாதானே இவான்னு கௌரியோ,  எங்க அம்மா, அப்பாவை மதிக்காதவாதானே இவான்னு கௌஷிக்கோ நினைச்சுட்டா அவா வாழ்க்கையே பிரச்சனை ஆயிடும். “, என்று கூறி விஸ்வரூபம் எடுத்து நின்றார் லக்ஷ்மி.

இது எதுடா ஓவர் சென்டிமென்டாக போகிறதே என்று நடுவில் புகுந்த ஸ்வேதா, “ மன்னி, பாருங்கோ, எங்க அம்மா எத்தனை நல்லவா, இதுக்காகவானும் நீங்க  கல்யாணம் முடிஞ்சு எங்காத்துக்கு வந்தப்பறம் சமைக்கறேன்னு சொல்லி கொடுமைப் படுத்தக்கூடாது”, என்று சம்மந்தமே இல்லாமல் கடிக்க ஆரம்பித்தாள். 

சம்மந்தம் இல்லாமல் ஸ்வேதா நடுவில் பேசினாலும், அவளின் பேச்சு செண்டிமெண்ட் மோடிலிருந்து எல்லாரையும் சாதா மோடிற்கு மாற்றியது.  ஹரியையும் அவளின் இந்தப் பேச்சு திரும்பிப் பார்க்க வைத்தது.  

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.