(Reading time: 8 - 16 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 10 - ஜெய்

ஜானு, நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன்.  சாயந்தரம் வர்றதுக்கு லேட் ஆகும்.  கவலைப்படாதே.”

“அப்ளிகேஷன் ஃபார்ம் எடுத்துண்டுட்டேளா?  வேற ஏதானும் அது கூட கொடுக்கணும்ன்னா அதையும் ஒண்ணுக்கு ரெண்டு வாட்டியா சரி பார்த்து எடுத்துக்கோங்கோ”

“இல்லை ஜானு, வெறும் ஃபார்மும் அப்பறம் நாம மாசா மாசம் பணம் கட்டினதுக்கு அவா என்ட்ரி போட்டப்  பாஸ்புக்கும் மட்டும் கொண்டு வரச் சொல்லி இருக்கா.  அதையும் எடுத்து வச்சுண்டுட்டேன்.”

Gowri kalyana vaibogame

“எதுக்கும் நீங்க அந்த ரசீது எல்லாம் கூட எடுத்து வச்சுக்கோங்கோன்னா.  திடீர்ன்னு எங்கயானும் என்ட்ரி தப்பா இருந்தா அப்பறம் அதுக்காக இன்னொருக்கா அலையறா மாதிரி ஆயிடப் போறது.”

“நீ சொல்றதும் கரெக்ட்தான்.  அதையும் எடுத்து வச்சுக்கறேன்.  நேக்கு நேரமாறது.  கிளம்பட்டா.”

“இன்னைக்கு ஃபார்ம் கொடுத்தா எத்தனை நாளுல பணம் கிடைக்கும்ன்னு ஏதானும் சொன்னாளா?”

“அதிகபட்சம் ஒரு வாரத்துல வந்துடும்ன்னு சொன்னா.  எப்படியும் இன்னும் ரெண்டு மாசத்துல முடியற சீட்டுதானே.  அதனால ரொம்ப ஒண்ணும் ஃபோர்மாலிட்டீஸ் இருக்காதுன்னு சொன்னா.”

“சரி அப்போ அடுத்த வாரத்துல போய் நகை எல்லாம் வாங்கிண்டு வந்துடலாம்.  இன்னும் 2 மாசம்தான் கல்யாணத்துக்கு இருக்கு.  ஏதானும் ஆர்டர் கொடுத்து செய்யணும்ன்னாலும் அப்போதான் time இருக்கும்.  அப்படியே வச்சுக் கொடுக்கறதுக்கும் ஜவுளி வாங்கிடலாம்.  பத்திரிகை கொடுக்கும்போதே அதையும் சேர்த்துக் கொடுத்துடலாம்.”

“நீ சொல்றதும் சரிதான்.  இல்லைனா இருக்கற சாமானோட எல்லாருக்கும் வச்சுக் கொடுக்கறத வேற தூக்கணும்.”

“சரின்னா, இன்னைக்கு கௌரியும் லேட்டா தான் வருவேன்னு சொல்லி இருக்கா.  ஹரியும் கோபால் ஆத்துக்கு அவனோட ப்ராஜெக்ட் விஷயமா பேசப் போயிட்டு லேட்டாதான் வருவேன்னு சொன்னான்.  நீங்களும் வரதுக்கு ஏழு மணி ஆயிடும்.  அதனால நான் வைத்தி ஆத்து வரைக்கும் போயிட்டு வரட்டா?  அம்மாவையும், அலமுவையும்  பார்த்தே நாள் ஆச்சு.”

“சரிம்மா.  ஜாகிரதையா போயிட்டு வா.  பஸ் எறங்கி ஆட்டோ வச்சுண்டு போ.  வெயில்ல அல்லாடிண்டு போகாதே.  அப்படியே உங்கம்மா வந்து இங்க இருக்கானா கூட்டிண்டு வா.”

“இல்லைனா இப்போ வேண்டாம்.  நாம பத்திரிகை கொடுக்க, கடைக்குப் போகன்னு அலைஞ்சிண்டு இருப்போம்.  அம்மாவால எல்லா இடத்துக்கும் வர முடியாது.  தனியா ஆத்துல இருக்கணும்.  அதைவிட கல்யாணம் முடிஞ்சப்புறம் கூட்டிண்டு வரலாம்.  அப்பன்னா இன்னும் கொஞ்சம் நாள் கூட இருப்பா.   சரி, நீங்க பார்த்துப் போயிட்டு வாங்கோ.”

“சரி  ஜானு, உனக்கு எப்படி தோணறதோ அப்படியே பண்ணு. அப்பறம் நீ எதுக்கும் கௌரிக்கு ஒரு 7 மணி வாக்குல போன் பண்ணு ஜானு.  அவக்கூட யாரும் வரலைன்னா தனியா ஆபீஸ் காப்ல வர வேண்டாம்ன்னு சொல்லு.  பஸ்லயே வரட்டும்.  நானோ, இல்லை ஹரியோ போய்க் கூட்டிண்டு வரோம்.  நான் கிளம்பறேன்.”

“தேவைப்படாதுன்னா.  நான் கார்த்தாலயே கேட்டுட்டேன்.  நம்ம தெருலேர்ந்து ரெண்டு தெருத்தள்ளி அவா ஆபீஸ்ல வொர்க் பண்ற ரெண்டு பசங்க இருக்கா.   அவாளும் கௌரி டீம்தானாம்.  அவாளுக்கும் இன்னைக்கு கால் இருக்கு.  எல்லாரும் ஒண்ணாதான் வருவோம்ன்னு சொல்லிட்டா.  அதனால நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்கோ.”

லுவலகத்திற்கு  வந்து மட மடவென வேலையை முடித்த ராமன் தன் மேலாளரிடம் சொல்லிக்கொண்டு finance கம்பெனி நோக்கி சென்றார்.  அங்கு செல்லும்போதே அந்தக் கம்பெனி இருந்த வணிக வளாகத்தின் வாயிலில் ஏகப்பட்ட பேர் பதட்டத்துடன் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருக்க ராமனுக்கு மூளையில் அபாய மணி அடிக்க ஆரம்பித்தது.  மேலே மூன்றாவது மாடியில் இருந்த அந்தக் கம்பெனி வாயிலுக்கு சென்று பார்க்கும்பொழுது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது, அறுபது பேர் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள்.  அவர்களை அங்கிருந்த செக்யூரிட்டி கலைந்து போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார்.  ராமனுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. 

“என்ன சார் ஆச்சு.  ஏன் எல்லாரும் வாசல்ல நின்னு கத்திக்கிட்டு இருக்காங்க”, என்று தன் அருகில் நின்றிருந்த நபரைக் கேட்டார் ராமன்.

“என்ன சார் சொல்றது.  இந்த நாசமாப் போன சீட்டு கம்பெனி முதலாளி மொத்தப் பணத்தையும் தூக்கிட்டு ஓடிட்டானாம்.   காலைலேர்ந்து இங்க பணம் கட்டின ஜனங்க எல்லாம் வந்து கத்திட்டு இருக்கறதால போலீஸ் வந்து பார்த்துட்டு கம்பெனியை  இழுத்து மூடி சீல் வச்சுட்டு போய்ட்டாங்க.   நாமப் போட்ட பணத்தை யார்க்கிட்ட போய்க் கேக்கறதுன்னு கூட தெரியலை.  கஷ்டப்பட்டு சேர்த்த பணம் சார்.”, என்று புலம்ப ஆரம்பித்தார்.

இதைக் கேட்டவுடன் ராமன் அதிர்ந்து தள்ளாடியபடியே தரையில் அமர்ந்து விட்டார்.  அவரின் வெளிறிய முகத்தைப் பார்த்த பக்கத்திலிருந்த மனிதர், “சார், சார் என்னாச்சு சார்.  இங்க பாருங்க.  இந்தாங்க இந்தத் தண்ணியைக் குடிங்க.”, என்று தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை ராமனிடம் தந்தார்.

அதை வாங்கிப் பருகும் எண்ணம் கூட இல்லாமல் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்த ராமனைப் பார்த்தவர் அந்தத் தண்ணீரிலேயே கொஞ்சம் எடுத்து முகத்தில் தெளிக்க,  அதிர்வுடன் தன் நிலைக்கு வந்தார் ராமன்.

“என்ன சார், நீங்களும் பணம் போட்டு இருக்கீங்களா இங்க.  என்னோடது ஒரு அம்பதாயிரம் போட்டிருந்தேன்.  அத்தனையும் போச்சு போல இருக்கு.”

“ஆமாம் சார்.  நான் நாலு லட்சம் போட்டிருந்தேன்.   என்  பொண்ணுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.  ஐயோ அதுக்கு என்னப் பண்ண போறேனோ தெரியலையே?”, என்று மடங்கி அமர்ந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தார் ராமன்.

அவர் அழுவதைப் பார்த்து அவரை சுற்றி மக்கள் கூட ஆரம்பிக்க, ஆளுக்கு ஆள் சீட்டுக் கம்பெனியை எதிர்த்துக் கத்த ஆரம்பித்தார்கள்.

கூச்சலும் குழப்பமும் அதிகமாவதைக் கண்ட செக்யூரிட்டி மீண்டும் போலிசை வரவழைக்க, அவர்கள் வந்து கூடியிருந்த மக்களிடம் பேச ஆரம்பித்தார்கள்.

ராமனின் அருகிலிருந்த நபர், “இந்த நாய்ங்களை எல்லாம் நடு ரோட்டுல நிக்க வச்சு சுடணும்.  ஒருத்தர் ஒருத்தரும் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சப் பணம்.  எப்படிதான் தூக்கிட்டு ஓட மனசு வருதோ.  நாம  கொடுக்கற சாபம் எல்லாம் வீணாப் போகாது சார்.  இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது பாருங்க.”, என்று ஆற்றாமையில் பொரிய ஆரம்பித்தார்.

அவருக்கு அருகிலுருந்த மற்றொரு பெண்மணி, “என் புருஷனுக்கு இன்னும் ஒரு வாரத்துல ஆபரேஷன்.  அதுக்குப் போட்டு வச்சிருந்த பணத்தை எடுக்கலாம்ன்னு வந்தா இப்படி ஆகிப் போச்சே.  ஐயோ இப்போ எப்படி பணத்தைப் புரட்டப் போறேன்”, என்று அழ ஆரம்பிக்க.

பொதுமக்கள் கத்துவதையும் அழுவதையும்  பார்த்த போலீஸ் ஆபீசர், “ஏன் சார், அவனுக்கு இத்தனை சாபம் விடறீங்களே.  நீங்க கவனமா இருந்தா அவன் ஏன் சார் தூக்கிட்டுப்  போகப்போறான்.  எமாறரவங்க இருக்கறவரை எமாத்தறவங்களும் இருக்கத்தான் செய்வாங்க.  எத்தனை நியூஸ் சானெல் டிவில வருது.  வாரத்துக்கு ஒரு வாட்டி எதுனா சீட்டுக் கம்பெனிக்காரன் ஏமாத்திட்டு ஓடிட்டான்னு அதுல காட்டறாங்க.  அதை எல்லாம் பார்த்துட்டும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இப்படி வந்து விழுந்தீங்கன்னாஅப்புறம் அவஸ்தைப் பட வேண்டியதுதான்.  அரசு வங்கிகள் எத்தனை இருக்கு.  அதுல பணத்தைப் போட்டு வச்சிருந்தீங்கன்னா இப்போ புலம்ப வேண்டிய அவசியமே இல்லையே.”, என்று கூற, அவர் கூற்றில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லாமல் மறுபடியும் மக்கள் கத்த ஆரம்பித்தார்கள்.

அவர்களை அடக்கிய போலீஸ் ஆபீசர், “இங்க நின்னு கத்தறதால ஒரு பிரயோஜனமும் இல்லை.  யார் யார் எத்தனை பணம் போட்டீங்க அப்படிங்கறதை ஒரு ஸ்டேட்மெண்ட்டா எழுதி போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்துடுங்க.  கூடவே உங்க ரசீது காப்பி ஒண்ணும் கொடுத்துடுங்க.  அவனைப் பிடிக்க எல்லா சைடும் போலீஸ் போய் இருக்கு.  முடிஞ்ச வரை சீக்கிரம் பிடிச்சுடுவோம்ன்னு நினைக்கிறேன்.  இப்போக் கத்தாம அமைதியாக் கலைஞ்சு போங்க.”, என்று கூறி சக போலீசாரை வைத்து பொதுமக்களை வெளியேற்றினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.