(Reading time: 14 - 28 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 11 - ஜெய்

ட்டோவிலிருந்து  இறங்கி வீட்டிற்குள் வந்த ராமன் ஹால் சோபாவில் சென்று கண்ணை மூடி அமர்ந்து விட்டார்.

அவர் வருவதைப் பார்த்து காபியுடன் ஹாலிற்கு வந்த ஜானகி அவர் கண்மூடி அமர்ந்திருக்கும் தோற்றத்தைப் பார்த்து உடம்பு ஏதேனும் சரியில்லையோ என்று அவரசமாக அவர் அருகில் வந்து, “என்னன்னா என்ன ஆச்சு, உடம்புக்கு ஏதானும் முடியலையா? ஏன் இப்படி உக்கார்ந்துண்டு இருக்கேள்?”, என்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் கண்ணையும் திறக்காமல் ராமன் அமர்ந்திருக்க ஜானகி மீண்டும், “வெயில்ல போயிட்டு வந்தது ஏதானும் முடியலையா, தலை வலிக்கறதா.  ஏதானும் சொன்னாத்தானே தெரியும்.”, என்று  மீண்டும் கேட்க.

Gowri kalyana vaibogame

கண்ணைத் திறந்த ராமனின் கண்களிருந்து கண்ணீர் வர ஆரம்பித்து.  அவர் அழுவதைப் பார்த்து பதைபதைத்த ஜானகி, “என்னனா என்ன ஆச்சு, தயவு செஞ்சு சொல்லுங்கோளேன்.  நீங்க அழறதைப் பார்த்தா நேக்கு படபடான்னு வரது.”, என்று தானும் அழ ஆரம்பித்தார்.

“நாம மோசம் போய்ட்டோம் ஜானகி.  எல்லாம் என்னோட தப்புதான்.  ஐயோ இப்போ எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே?”, என்று மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்,

அவர் பேசுவதில் ஒரு வரிக்கூடப் புரியாமல் ஜானகி முழிக்க, “தயவு செஞ்சு கொஞ்சம் புரியறா மாதிரி பேசறேளா.  என்ன ஆச்சு?  ஆபீஸ்ல ஏதானும் பிரச்சனையா.  வேலைல ஏதானும் தப்பு பண்ணிட்டேளா? சொல்லுங்கோளேன்.”

அவள் பதறுவதைப் பார்த்த ராமன் தன்னைத் திடப் படுத்திக் கொண்டு, “ஜானகி நாமப் பணம் போட்டு வச்சிருந்த சீட்டுக் கம்பெனி ஓனர் பணத்தைத் தூக்கிண்டு ஓடிட்டான்.  அந்தக் கம்பெனியும் போலீஸ் இழுத்து மூடி சீல் வச்சுட்டா.”

“ஐயோ என்னன்னா சொல்றேள், கிட்டத்தட்ட நாலு வருஷமா அந்தக் கம்பெனி நன்னாத்தானே போயிண்டு இருந்தது.  உங்களோட ப்ரிண்ட்ஸ் எல்லாம்கூட அதுல பணத்தைப் போட்டு இருந்தாளே. அந்த நம்பிக்கைலதானே நீங்களும் போட்டேள்.”

“ஹ்ம்ம் என்ன சொல்றதுன்னு தெரியலை ஜானகி.  நம்ம போறாத வேளை வேற என்ன சொல்ல.”, நாம் செய்யும் ஒரு செயல் எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கும்போது விதியின் மேல் எல்லாரும் பழி போடுவதைப் போல ராமனும் போட்டார்.

“அவனுக்கு இப்பப்போய் பணத்தைத் தூக்கிண்டு போற கெட்டப் புத்தி வரணுமா.  அந்த இன்ஸ்பெக்டர் சொன்னது  தப்பே இல்லை.  பணத்தை சீக்கிரம் பெருக்கலாம்ன்னு அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் திரும்ப  வருமான்னு உத்தரவாதம் இல்லாத எடத்துல கொண்டுப் போய்க் கொட்டினது என்னோட  தப்புதானே.  நீ கூட அதுல எல்லாம் போட வேண்டாம்ன்னு எத்தனை வாட்டி என்கிட்ட சொன்ன.  நான்தான் அறிவு கெட்டுப்போய் அதுலக் கொண்டுபோய் கொட்டினேன்.”, ராமன் இயலாமையில் என்ன சொல்வதென்று தெரியாமல் புலம்ப ஆரம்பித்தார்.

ருவரும் திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து வெளிவரத் தெரியாமல் புலம்பிக்கொண்டு உட்கார்ந்திருக்க ஹரி உற்சாகமாக உள்ளே நுழைந்தான்.  தன் மனநிலைக்கு முற்றிலும் மாறுப்பட்ட சூழ்நிலை வீட்டினுள் நிலவ என்ன ஆயிற்று என்ற யோசனையுடன் ராமனிடம் சென்று, “என்னப்பா ரொம்ப சோகமா இருக்கேள்?  நல்ல விஷயம் சொல்லலாம்ன்னு நான் சந்தோஷமா வந்தா நீங்க இப்படி டல் அடிக்கறேளே.” என்று கேட்டான்.

வீட்டினுள் நுழைந்த உடனேயே அவனைக் கலவரப்படுத்த வேண்டாம் என்று நினைத்த ஜானகி என்ன சந்தோஷமான விஷயம் என்று ஹரியிடம் கேட்டார்.  இவர்கள் பேசுவது எதையும் காதில்  வாங்காமல் விட்டத்தை வெறித்தபடியே உட்கார்ந்து இருந்தார் ராமன்.

“எனக்கு காம்பஸ் இன்டர்வியூல  இன்போஸிஸ்ல வேலை கிடைச்சுடுத்தும்மா.  ப்ராஜெக்ட் முடிஞ்ச உடனேயே வந்து சேர சொல்லி இருக்கா.  அதையும் தவிர கோபால் அண்ணா ஆபீஸ்க்கு போன வாரம் அவரோட ஹெட்டை பார்க்கப் போனேன்  இல்லை.  அவரும் ப்ராஜெக்ட் முடிஞ்சுட்டு வந்து பார்க்க சொல்லி இருக்காராம்.  இன்னைக்கு அண்ணா சொன்னார்.  சோ ஏதானும் ஒரு இடத்துல வேலைல சேர்றா  மாதிரி இருக்கும்மா.”

“ரொம்ப சந்தோஷம்டா கண்ணா.  நீ கஷ்டப்பட்டு படிச்சது வீண் போகலை பாரு.  படிப்பு முடியறதுக்கு முன்னாடியே வேலை ரெடியா இருக்கு.”

“அது சரி, ஏம்மா எத்தனை சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கேன்.  அப்பா இப்படி கொஞ்சம் கூட ரியாக்ஷனே இல்லாம இருக்கார்.  என்ன ஆச்சு.”, என்று ஜானகியிடம் கவலையுடன் கேட்டான் ஹரி.

ஜானகி சீட்டுக் கம்பெனி மூடிய விவரத்தை ஹரியிடம் கூற, “அச்சோ இப்போ என்னம்மா பண்றது.  கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம்தானே இருக்கு.  இன்னும் ஒண்ணுமே வாங்க ஆரம்பிக்கலையேமா.”, என்று தானும் கவலைப்பட ஆரம்பித்தான்.

அவன் கூறியதைக் கேட்ட ராமன் மறுபடி கண்ணீர் விட ஆரம்பிக்க, “அப்பா அழாதீங்கோ.  இப்போ தைரியமா இருக்க வேண்டிய நேரம்.  அடுத்து என்னப் பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்ப்பா.”, என்று தைரியமூட்ட ஆரம்பித்தான்.

“என்ன பண்ண ஒண்ணும் தெரியலைடா ஹரி.  மண்டபத்துக்குப் பணம் கொடுத்ததோட அப்படியே நிக்கறது.  மத்த வேலை ஒண்ணுமே ஆரம்பிக்கலை.”

“ஹ்ம்ம் நம்மகிட்ட அந்த நாலு லட்சம் இல்லாம மத்தப் பணம் எத்தனை இருக்குப்பா.”

“அது கைல ஒரு 2 லட்சம் இருக்கு, நகை சீட்டு 1 லட்சம், அப்பறம் கௌரி கொடுக்கறதா சொன்ன 1 லட்சம், பத்து சார் கொடுத்த 2 லட்சம்.  இதுதான் மொத்தப் பணம்.  இதுல மண்டபத்துல கட்டினது அப்பறம் நகை சீட்டைத் தவிர 3 லட்சம்தான் இருக்கும். இன்னும் சமையற்காரர்க்கு கொடுக்கணும்.  அப்பறம் துணிமணி, நகை எல்லாம் வாங்கணும்.  என்னதான் சிக்கனமா பண்ணினாக்கூட 3 லட்சம் கண்டிப்பா வேணும்டா. அது இல்லாம முடியாது.”

“ஏம்ப்பா, இந்த ஃப்ளாட்டை  வேணா அடகு வச்சுடலாமா?”

“இன்னும் லோன் முடியலை ஹரி.  அதனால அது முடியாது.”

“ஓ நாம, பத்து மாமாகிட்ட பேசிப் பார்க்கலாமேப்பா,  அந்தப் பத்து சவரன் நகையை அப்பறமா போடறதா வேணா சொல்லிப் பார்க்கலாமே. கல்யாணத்தையும் கொஞ்சம் சிம்பிள்ளா பண்றோம்ன்னு வேணா சொல்லிப் பார்க்கலாம்.”

“பத்து சார்  போடவே வேண்டான்னுதான் ஹரி சொல்லுவார். அவா ஒரு டிமாண்டும் பண்ணவே இல்லை.   பத்து சார் சொன்ன ஒரே விஷயம் வர்றவாளை நன்னா கவனிக்கணும் அப்படிங்கறதுதான்.  நாமளே போடறோம்ன்னு சொல்லிட்டு இப்போப் போய் முடியாதுன்னு எப்படி சொல்றது ஹரி.  ரெண்டாவது இந்த விஷயம் எதுவுமே கௌரிக்கு தெரியக் கூடாது.  அம்மா, அப்பா இத்தனைக் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணப் போறாளான்னு யோசிச்சு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிடுவா அவ.  ஏற்கனவே என்னோட அறிவு கெட்டத்தனத்தால பணத்தை இழந்தது போறும்.  அவளுக்கு வந்திருக்கற நல்ல சம்பந்தத்தையும் இழக்க வேண்டாம்.”

“அப்பா என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம் பேசறேள்.  எல்லாருக்கும் ஏதானும் ஒரு விஷயத்துல சறுக்கல் வர்றது சகஜம்தான். இதுக்காக உங்களை நீங்களே வருத்திக்காதீங்கோ.  இத்தனை நாள் நீங்கதானே எங்க ஒருத்தர் ஒருத்தருக்கும் பார்த்துப் பார்த்து செஞ்சேள்.  அந்தப் பணம் மொத்தமாப் போனதா ஏன் இப்போவே எதிர்மறையா நினைக்கணும்.  நீங்க யாரையும் ஏமாத்தாம  கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சப் பணம்.  அது இன்னைக்கு இல்லாட்டாலும், என்னைக்கானும் உங்ககிட்ட கண்டிப்பா வந்து சேரும்.  அந்தக் கவலையை விடுங்கோ.  இப்போ 3 லட்சத்துக்கு என்ன வழின்னு மட்டும் பார்க்கலாம்.  நீ ஏம்மா ஒண்ணுமே பேச மாட்டேங்கற.”

“என்ன பேசறதுன்னே தெரியலைடா ஹரி.  எனக்கு நன்னாத் தெரிஞ்ச ஒரே ஆள், என் தம்பி வைத்திதான்.  அவனாலயும் 3 லட்சம் பொறட்டறது  எல்லாம் கஷ்டம்டா.  ஏதோ பத்தாயிரம், இருவதாயிரம்ன்னா அவனண்ட கேக்கலாம்.”

“அச்சோ பாவம்மா, மாமாவைத் தொந்தரவு பண்ண வேண்டாம்.  அப்பறம் இந்தக் கஷ்டத்துல உதவ முடியலையேன்னு வருத்தப்படுவா.  உங்க ஆபீஸ்ல லோன் ஏதானும் போட முடியுமாப்பா.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.