(Reading time: 14 - 28 minutes)

 

ல்லை ஹரி, இது தனியார் கம்பெனிங்கறதால லோன் எதுவும் எடுக்க முடியாது. PF லோன் வேணா ட்ரைப் பண்ணலாம்.   அதுக்கூட ரொம்ப வராது.”

“ஏன்னா இப்போ போடறதா சொன்ன பத்து  சவரன்லல அஞ்சு சவரன் என்னோட நகையை அழிச்சுப் பண்ணிடலாம்.  பாக்கி அஞ்சு சவரன்க்கு பைசா சேர்த்தாப் போறும்.”

“என்ன ஜானகி பேசற.  எல்லாத்தையும் அழிச்சுட்டு நீ வெறுங் கழுத்தோட நிப்பயா.”

“அது ஒண்ணும் பிரச்சனை இல்லைனா.  மூலைக்கு மூலை கவரிங் கடை வந்தாச்சு.  அங்க வாங்கிப் போட்டுண்டாப் போச்சு.  இப்போலாம் கவரிங் நகைக்கும், நிஜ நகைக்கும் வித்தியாசமே தெரியறதில்லை. அப்பறம் சொந்தக்காரா எல்லாருக்கும் துணி வாங்கறதா இருந்தோம்.  அதை வேண்டாம்ன்னு வைக்கலாம்.  அதுவே ஒரு அம்பதாயிரம் கொறையும். ”

“அது நன்னா இருக்குமா ஜானகி.  மொதக் கல்யாணம்.  இதுக் கூட பண்ணலையான்னு எல்லாரும் கேப்பாளே.”

“அப்பா, மத்தவா கேப்பா அப்படிங்கறதுக்கெல்லாம் நாம செலவுப் பண்ண முடியாதுப்பா.  நமக்கு எது முடியும் அப்படின்னுதான் பார்க்கணும்.  அம்மா, உன் நகையை மாத்தறதை கடைசி ஆப்ஷனா வச்சுக்கலாம்.  அப்பா  நீங்க எதுக்கும் உங்க ஆபீஸ்ல கேட்டுப் பாருங்கோ.  கோபால் அண்ணா இப்போதான் வீடு வாங்கறதுக்கு அட்வான்ஸ் கொடுத்தார்.  இல்லன்னா அவர்கிட்ட இருந்து வாங்கி இருக்கலாம்.  நான் எதுக்கும் அவருக்கு தெரிஞ்சவா யார்க்கிட்டயானும் கடனா வாங்கித் தர முடியுமான்னு கேக்கறேன்.  கொஞ்ச நாள்தான் கஷ்டப்படணும், நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேனா கவலையே இல்லை.”

“ஹரி நீ பேசப் பேச புதுசா தெம்பு வந்தா மாதிரி இருக்குடா.  சாயங்காலம் ஆத்துக்குள்ள நொழையும்போது என்னப் பண்ணப் போறோமோன்னு தவிச்சுண்டு வந்தேன்.  இப்போ எது வந்தாலும் சமாளிக்கலாம்ன்னு தோணிடுத்து. தேங்க்ஸ்டா ஹரி. மனசுல பாதி பாரம் கொறைஞ்சா மாதிரி இருக்கு.”

“என்னப்பா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டு.  இப்போ நான் சொன்னது எல்லாம், நீங்க கொஞ்சம் யோசிச்சிருந்தா உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.  இது மாதிரி எத்தனை கஷ்டங்களை நீங்க உங்க வாழ்க்கைல பார்த்திருக்கேள்.  பணம் கொஞ்சம் கூட and பொண்ணு கல்யாணம் அப்படிங்கறதால உங்களுக்கு அடுத்து எண்ணப் பண்ணனும்ன்னு தெரியாமப் போச்சு, அவ்வளவுதான்.”

“இல்லைடா ஹரி, நான் பண்ணினது தப்புதானே.  என்னோட பேராசையால எத்தனை பணம் போச்சு.  நீயும் அம்மாவும் கொஞ்சம் கூட அதை சொல்லிக்காட்டாம இருக்கறது இன்னுமே கஷ்டமா இருக்குடா. நீ என்னதான் பணம்  வந்துடும்ன்னு சொன்னாலும் எனக்கு நம்பிக்கை இல்லை.”

“என்னன்னா இப்படி எல்லாம் பேசறேள்.  உங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னா அது எங்களுக்கும்தானே.  உங்களை இப்போ நாங்க குத்திப் பேசறதால அந்தப் பணம் வந்துடப் போறதா.  இதே தப்பை நான் பண்ணி இருந்தாலும், அதை எப்படி சமாளிக்கறதுன்னுதானே நீங்களும் யோசிச்சிருப்பேள்.”

ராமன் ஓவராக வருத்தப்படுவதைப் பொறுக்காத ஹரி, “என்னப்பா உங்களுக்குப் பெரிய பேராசை.  சப்போஸ் அந்தப் பணம் வந்திருந்தா நீங்க என்ன அதை எடுத்துண்டு உலக சுற்றுப் பயணமா போய் இருப்பேள்.  அதையும் எங்களுக்காகத்தானே செலவு பண்ணி இருப்பேள்.  அந்த அளவுக் கூட உங்களை புரிஞ்சுக்காம இருப்போமாப்பா நாங்க.”, என்று ஆறுதலாக சொல்ல, ஜானகி தன் மகனைப் பெருமையுடன் பார்த்தாள்.

“அப்பா இனி நீங்க பணம் போனதைப் பத்தி யோசிக்காம, அது இல்லாம, எப்படி சமாளிக்கலாம்ன்னு மட்டும் பாருங்கோ.  நீங்க நாளைக்கு உங்க ஆபீஸ்ல கேட்டுட்டு சொல்லுங்கோ.  அப்படி ஆபீஸ்ல பணம் கிடைக்கலைன்னா, நான் சண்டே கோபால் அண்ணாகிட்ட கேட்டுப் பார்க்கறேன்.  எதுவும் ஒத்து வரலைன்னா.   கடைசியா நாம பத்து மாமாகிட்டையே பணம் போன விஷயத்தை சொல்லி, அந்த பத்து சவரன் நகையை இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுப் போடறதா சொல்லிடலாம்.  பாக்கிக்கு இப்போ இருக்கற பணம், அம்மா நகை அதெல்லாம் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.”

“சரிடா ஹரி, நான் நாளைக்குப் பேசிட்டு சொல்றேன்.  ஜானு நீ நாளைக்கு நம்ம கிட்ட இருக்கற பைசா எல்லாத்துக்கும் ஒரு கணக்கு எழுதி,  அந்த நாலு லட்சம் இல்லாம சமாளிக்க முடியுமான்னு பாரு.  கௌரிக்கு வாங்கப்போற நகையை அதுல சேக்காத.  உன் நகையையும் சேர்க்காத.”

“சரின்னா.  நான் கணக்குப் போட்டு வைக்கறேன்.”,  என்று ஜானகி பேசிக்கொண்டிருக்கும்போதே ஆபிசிலிருந்து வந்த கௌரி வீட்டு வாசலில் காலிங் பெல் அடிக்க, அனைவரும் பேச்சை அப்படியே நிறுத்தினார்கள்.

ஜானகி,  ஹரியையும், ராமனையும் பேசாதிருக்குமாறு கண்ணைக் காட்டியபடியே கிரில் கதவைத் திறந்தாள்.  கௌரி என்ன இது எல்லாரும் ஏதோ கணக்கு அப்படின்னு பேசிண்டு இருந்தா நாம் வந்த உடன் நிறுத்தி விட்டார்களே, அப்பா மூஞ்சி வேற சரி இல்லை என்று யோசித்தபடியே உள்ளே நுழைந்து ராமனின் அருகில் உட்கார்ந்தாள்.

“என்னப்பா, ஏதோ ரொம்பத் தீவிரமா கணக்கு பத்தி பேசிண்டு இருந்தேள்.  நான் வந்த உடனே பேச்சை நிருத்திட்டேள். என்ன விஷயம்?” என்று கௌரி ராமனிடம் கேட்க, அவர் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஜானகியைப் பார்த்தார்.

“ஏண்டி வந்த உடனே கைய, காலைக் கூட அலம்பல.  அப்படியே வந்து உட்கார்ந்துட்டு அப்பாவை கேள்வி வேறக் கேக்கறியா.  போய் மொதல்ல டிரஸ் மாத்திண்டு மூஞ்சி அலம்பிண்டு வா.  அப்பா எங்கயும் போக மாட்டார்.  வந்து உன் விசாரணைக் கமிஷனை ஆரம்பிக்கலாம்.”, ஜானகி ஆபத்பாந்தவியாக ராமனை பதில் சொல்லுவதில் இருந்துக் காப்பாற்றி கௌரியின் கையைப்  பிடித்து எழுப்பி உள்ளறைக்கு தள்ளிக்கொண்டு வந்தார்.

“என்னம்மா நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து டிரஸ் மாத்தினா ஆகாதா.  அதுக்குள்ள என்னை எதுக்கு ரூம்குள்ள  கடத்திண்டு வந்த.”, ஜானகி இழுத்து வந்த கோவத்தில் கடுப்படித்தாள் கௌரி.

“ஆமாம்டி உன்னைக் கடத்திண்டு வந்து உங்க அப்பாக்கிட்ட பணம் கறக்கலாம்ன்னு இருக்கேன்.  கேள்வி கேக்கறாப் பாரு.  அப்பாவே கல்யாண வேலைல ஏகப்பட்ட டென்ஷன்ல இருக்கார்.  நீ வேற அவரை கேள்விக் கேட்டு இன்னும் படுத்தாத.”

“ஏம்மா ஏதானும் பிரச்சனையா?  பணம் ஏதானும் போறலையா. அதுதான் அப்பா வருத்தமா இருக்காளா?”, சரியான பாயிண்ட்டை பிடித்தாள் கௌரி.

இந்தக் கேள்வியெல்லாம் மடக்கி மடக்கி கேக்கத் தெரியும் என்று அலுத்தபடியே  என்ன பதில் சொல்வதென்று ஒரு நிமிடம் யோசித்த ஜானகி அவளைத் திட்டுவதைப் போல் பேச்சை மாத்தலாமா என்று ஒரு நொடி யோசித்து, அது சரியாக வராது அப்பறம் அவள் ராமனிடமே நேரடியாக கேட்டு விடுவாள்.  அவரால் ஓரளவிற்கு மேல் சமாளிக்க முடியாது என்று தானே பதில் சொல்ல தயாரானாள் ஜானகி.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.