03. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா
கண்களில் சிவப்பேற அவளையே பார்த்துக்கொண்டு நின்றது அது. அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள் அவள். அறையெங்கும் மயான அமைதி.
வேண்டும். அவள் வேண்டும் எனக்கு. அவளை என்னுடன் அழைத்து சென்று விடவேண்டும்.
மாதும்மா...... மா...து..ம்மா...... 'நாம போயிடலாம் வா' அறையில் எரிந்துக்கொண்டிருந்த இரவு விளக்கு சட்டென அணைந்துப்போக, அந்த பூனைக்குள்ளிருந்து மெல்ல எழுந்தது அந்த உருவம்.

யாரோ தன்னை பிடித்து இழுப்பது போன்ற ஒரு உணர்வு. உடல் முழுவதும் ஒரு வித அழுத்தம். புரண்டுப்படுத்தாள் மாதங்கி.
அவள் உறக்கம் கொஞ்சம் கலைய கனவில் ஒரு குரல். அவளது அம்மாவின் குரல் 'போகாதேன்னு சொன்னேனே உன்னை. அந்த கிணத்து பக்கத்திலே போகாதேன்னு சொன்னேனே உன்னை. ஏன் போனே? வந்திடுச்சு.... அது ......வந்திடுச்சு ...
வந்தது. அவளை மிக நெருங்கி வந்தது அந்த புகை வடிவம்.
மறுபடி அம்மாவின் குரல் 'உன்னையும் கொன்னுடும். தண்ணிக்குள்ளே அழுத்திக்கொன்னுடும். அய்யோ அது உன் பக்கத்திலே வருதே .....அய்யோ என்னாலே ஒண்ணும் பண்ண முடியலையே........
உடல் முழுவதும் மரத்துப்போனதைப்போல் ஒரு உணர்வில் எழ முயன்றாள் மாதங்கி.
சுவாசம் அழுந்த, உடலெங்கும் ஒரு வித வலி பரவ, கண்களை திறக்க எண்ணி அவள் முயல, இமைகள் பிரிய மறுத்தன.
மாதும்மா.... மாது செல்லம் வா... வா... போயிடலாம்... இனிமே உன்னை என்கிட்டே இருந்து யாரும் பிரிக்க முடியாது. வா .... அவள் காதருகே அந்த குரல்.
உடல் மொத்தமும் குலுங்க, சரேலென கண் திறந்தாள் மாதங்கி.
அறையில் ஒரு துளி வெளிச்சம் இல்லை. கண்களுக்கு எதுவுமே தென்படவில்லை. வியர்வையில் மொத்தமாய் நனைந்திருந்தாள் அவள். இதயத்தை அப்படியே கவ்வி இழுத்தது பயம். ஏதோ ஒரு சக்தி அவளை பற்றி தனது பக்கம் இழுப்பதை போலே உணர்ந்தாள் அவள்.
என்ன நடக்கிறது என்னை சுற்றி,? முகுந்தனின் இருக்கிறானா போய்விட்டானா?
இங்கேதான் இருக்கீங்களா? முகுந்தனை தேடி மெல்ல குரல் கொடுத்தாள் அவள் .பதிலில்லை. எந்த சத்தமும் இல்லை அந்த அறையில்.
இருட்டில் அவள் கை மெல்ல நகர ஏதோ ஒன்று மெத்தன தட்டுப்பட்டது. அது அந்த பூனையின் உடல்.
தெரியவில்லை அவளுக்கு. அது பூனையின் உடல் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் அலறியே விட்டிருப்பாள்.
என்னது? என்னது அது? புரியாமலே கையை சட்டென இழுத்துக்கொண்டாள் அவள்.
எழுந்து அமர சத்தியமாய் தைரியம் இல்லை. அவள் உடலின் ஒவ்வொரு அங்குலத்திலும் நடுக்கம்.
கனவில் கேட்ட அம்மாவின் வார்த்தைகள் நினைவில் வந்தன. வந்திடுச்சு... அது..... வந்திடுச்சு... கொன்னுடும் உன்னையும் தண்ணிக்குள்ளே அழுத்தி கொன்னுடும்..... அம்மா இறந்துபோய் நீரில் மிதந்துக்கொண்டிருந்த காட்சி கண் முன்னே வந்து போனது.
அம்மா இருந்த போது அடிக்கடி சொல்வாள் 'அந்தக்கிணத்து பக்கம் மட்டும் எப்பவுமே போகாதே மாதங்கி.
ஏன் மா?
அதிலே பேய் இருக்கு.
சிரிப்பாள் மாதங்கி. அம்மா இறந்து போகும் வரை அவளும் இதையெல்லாம் நம்பவில்லை தான். ஊரிலே இருக்கிறவங்களை எல்லாம் விட்டுட்டு அது என்னை தான் பிடிச்சுக்க போகுதா?
சொன்னதைக்கேள். கேள்வியெல்லாம் கேட்காதே 'என்பாள் அம்மா. அதற்கு மேல் அந்த கேள்விக்கு சரியாய் பதில் கிடைத்ததில்லை.
கிணற்றுக்குள் பார்த்தேனே அதுவா? அந்த பேயா? யார்? யார் அது? அது ஏன் என்னை கொல்ல வேண்டும்? அது என்னை தேடி இங்கேயே வந்து விட்டதா? ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு. பயத்தின் உச்சத்தில் செயலற்றுப்போயிருந்தது அவள் மூளை.
எங்கிருந்தோ சில்லென்ற காற்று வீசியது. குளிர் அடிப்பது போல் உணர்வு. உடல் நடுங்க போர்வையை இழுத்துப்போர்த்திக்கொள்ள அவள் முயல, அவள் கால் அசைந்ததில் கொஞ்சம் கலகலத்தது அவள் கொலுசு.
அடுத்த நொடி அவள் கால்களை ஏதோ ஒன்று வருடுவதைப்போலே தோன்றியது. அவள் கால்களை இழுத்துக்கொள்ள முயல அது அவள் கால்களை பிடித்து இழுத்தது.
முதுகெலும்பில் துவங்கி உடல் முழுவதும் சிலீரென்று திகில் பரவ, தனது கால்களை அவள் விடுவித்துக்கொள்ள முயல, அவளால் இயலவில்லை..
பயத்துடனே அவள் கண்கள் மெல்ல நகர அவள் கால்களின் அருகே அவள் கண்ணில் பட்டன அவை. அவளையே பார்த்துக்கொண்டிருந்த அந்த சிவப்பு நிற கண்கள், அவளை பார்த்து பளிச்சென சிரித்துக்கொண்டிருந்த அந்த வெள்ளை நிற பற்கள்.
இதயம் துடிப்பது கிட்டத்தட்ட நின்றுபோக அதிர்ந்து, குலுங்கி சத்தமாய் அலறிவிட நினைத்தபோதும் குரல் எழவில்லை. தனது மொத்த சக்தியும் திரட்டி ஆ.... வென அலற முயன்ற நேரத்தில்........
அறைக்குள்ளே ஆளரவம். சட்டென விடுப்பட்டன அவள் கால்கள். போர்வையை விலக்கி, தட்டுத்தடுமாறி எழுந்து, தடுக்கி விழப்போய் சமாளித்துக்கொண்டு அவள் அங்கிருந்து ஓட எத்தனித்த போது மோதிக்கொண்டாள் அவன் மீது.
எதன் மீது மோதிக்கொண்டோம் என்றே தெரியமால் திடுக்கிட்டு மொத்தமாய் நடுங்கி அவள் விலக, ஒளிர்ந்தது அந்த அறையின் இரவு விளக்கு.
அவனை பார்த்த மாத்திரத்தில் அவன் கையை சட்டென இறுக்கமாக பற்றிக்கொண்டவள் நடுங்கும் குரலுடன் சொன்னாள்
அது... அங்கே.... அது.... வார்த்தைகள் வெளிவர வில்லை. வெளிறிப்போயிருந்த கண்களில் மழை.
என்னதுடா?
பேய்.. அது இங்கே வந்தது....
.எங்கேடா? ஒண்ணுமில்லையே இங்கே?
இருவர் கண்களும் அறையை சுற்றி சுழல அங்கே ஒன்றுமே தென்படவில்லை.
போய்விட்டிருந்தது அது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பூனைக்குள் புகுந்து அந்த அறையை விட்டு வெளியேறி விட்டிருந்தது அது.
சரி விடுப்பா கனவு ஏதாவது கண்டிருப்பே.' என்றான் அவன்.
குழப்பமும், பயமும் சேர்ந்து அழுத்த இல்....லை. இல்....லை நான் பார்த்தேன் நிஜமா. என் காலை பிடிச்சு அது... அது.... என்னை கொன்னுடும்.... 'சிறு குழந்தையாய் அவன் தோள் சாய்ந்து குலுங்க துவங்கினாள் மாதங்கி. சில நிமிடங்கள் பதில் பேசாமல் அவள் தலையை வருடிக்கொண்டிருந்தான்
சில நிமிடங்கள் கழித்து சுதாரித்து விலகினாள். பின்னர் மெல்ல நீங்க இங்கேயேதான் இருந்தீங்களா? என்றாள்.