(Reading time: 16 - 32 minutes)

 

 “வாடா கோபால், ஓ வாங்கோ சம்மந்தி.  என்ன திடீர்ன்னு கிளம்பி வந்திருக்கேள்.”, ராமன் எல்லாரும் ஒன்றாக வருவதைப் பார்த்து இவர்கள் ஒன்றாக வந்தார்களா, இல்லை தனித்தனியாகவா என்ற குழப்பத்துடன்  வரவேற்றார்.

“ஹ்ம்ம் வந்துட்டோம்.  எப்படி இருக்கேள் ராமன்.  இந்தப் பக்கம் பத்திரிக்கை கொடுக்கற வேலை இருந்தது.  சரி அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாமேன்னு வந்தோம்.  எங்க பசங்க ரெண்டு பேரையும் காணும்.”

“கௌரி  ஆபீஸ் போய் இருக்கா.  ஹரி படிச்சுண்டு இருக்கான்.  உங்க பக்கத்துல உக்கார்ந்து இருக்கறது, கோபால்.  ஹரியோட friend.  எங்காத்துல மூத்த பையன் மாதிரி.  என் ரெண்டு பசங்களுக்கும் குருன்னே சொல்லலாம்.  படிப்போ, இல்லை வேலையோ எந்த சந்தேகம் வந்தாலும் ரெண்டு பேரும் போய் நிக்கற இடம் இவாமாதான் இருக்கும்.”, என்று கோபாலை அவருக்குத் தெரியாதோ என்று பத்துவிடம் அறிமுகப்படுத்தினார் ராமன்.

இவர்களின் பேச்சுக் குரலைக் கேட்டு சமையலறையிலிருந்து வெளியில் வந்த ஜானகி பத்துவையும், லக்ஷ்மியையும் வரவேற்று அவர்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.  அதற்குள் ஹரியும் ஹாலிற்கு வந்து வந்தவர்களை வரவேற்றபடியே கோபால் அண்ணாதானே  வருவதாக சொன்னார், இவர்கள் எங்கிருந்து அவருடன் வந்தார்கள் என்று அவனும் குழப்பத்துடன்  ராமனின் அருகில் அமர்ந்தான்.

“ஹ்ம்ம் தெரியும் ராமன். ஆக்சுவலா நாங்க எல்லாரும் சேர்ந்துதான் வந்தோம்.  என் பொண்ணு ஸ்வேதாவும், இவரோட தங்கை ஹேமாவும் ஒரே காலேஜ்தான்.  ஸ்வேதா இன்னைக்கு கார்த்தால அவாத்துக்குப் போய் இருந்தா.  அவளை திரும்பக் கொண்டு வந்து விட இவர் வந்து இருந்தார்.”, என்று கூற ஹரி தான் பேசியபோது ஹேமா வீட்டில் இருந்தாளா, என்ற அதிர்ச்சியுடன் கோபாலைப் பார்க்க அவன் ஹரியிடம் ஆமாம் என்று தலை ஆட்டினான்.

“ஓ அப்படியா.  சந்தோஷம்.  ஸ்வேதா எப்படி இருக்கா.  ரெண்டாவது வருஷம் இல்லை.  படிப்பு எப்படி போயிண்டு இருக்கு.”

“ஆமாம் ராமன்.  படிப்புக்கென்ன.  அது பாட்டுக்கு மலை மாதிரி இருக்கு.”

“அது சரிதான்.  இந்தக் காலத்துப்  பசங்களுக்குப் பாவம் படிக்க ஏகப்பட்டது இருக்கு.  நீங்க இங்க யாராத்துக்குப் போகணும்.  பக்கத்துலையா?”

“ஆமாம் ராமன்.  பல்லாவரத்துல என்னோட ஒண்ணு விட்ட தம்பி இருக்கான்.  அங்கதான் போறோம்.”,  எப்படி பேச வந்த விஷயத்தை ஆரம்பிப்பது என்று தெரியாமல் பத்துவும் ஜாங்கிரி சுத்திக் கொண்டிருந்தார்.  லக்ஷ்மி மாமி இன்னும் எத்தனை நேரம் என்று மாமாவைப் பாசப் பார்வை பார்க்க, அவர் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். 

“மாமி உங்களுக்கு உள்ள வேலை எதுவும் இல்லைனா, நீங்களும் இப்படி வந்து உக்காருங்கோ.  நாங்க உங்களண்ட முக்கியமா ஒரு விஷயத்தைப் பத்தி பேசத்தான் வந்திருக்கோம்.”, என்று பேச்சை ஆரம்பித்தார் பத்து.

“சொல்லுங்கோ சம்மந்தி.  கல்யாணத்துக்கு வாங்கற லிஸ்ட்ல எதையானும் சேர்க்கணுமா.  முன்னாடி சொல்றதுக்கு மறந்து போயட்டேளா.  எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்கோ.  இன்னும் ரெண்டு மாசம் இருக்கே. வாங்கறது ஒன்னும் கஷ்டம் இருக்காது.”, ராமன்,  பத்து கட்டாயமாக கல்யாணத்திற்கு வாங்க வேண்டிய பொருள் பற்றியோ இல்லை கல்யாணத்தன்று  நடக்க வேண்டிய சம்ப்ரதாயங்கள் குறித்தோதான் பேச வந்திருப்பார் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் கேட்டார்.

“இல்லை இல்லை.  இது அதைப் பத்தினது இல்லை.  சரி நேரடியா விஷயத்துக்கு வரேன்.  இன்னைக்குக் கார்த்தால ஹரி கோபால் ஆத்துக்குப் பண விஷயமா பேசப் போய் இருந்தான் இல்லையா.  அவன் பேசின மொத்த விஷயத்தையும் ஹேமாவும், என் பொண்ணு ஸ்வேதாவுமா கேட்டுட்டா.  இப்போ புரிஞ்சிருக்குமே.  நாங்க எதைப் பத்தி பேச வந்திருக்கோம்ன்னு.”, மிகத் தெளிவாக விளக்கி விட்டதாக நினைத்து லக்ஷ்மியை மிதப்பாக ஒரு பார்வை பார்க்க, லக்ஷ்மி அதற்கு திரும்பி இதற்கு நீங்க ஜாங்கிரியே சுத்தி இருக்கலாம் என்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.  AS usual  சொதப்பிடோமா என்று  பத்து மாமா மற்றவர் முகங்களைப் பார்க்க,  கோபாலைத் தவிர  அனைவரின் முகங்களும் அச்சோ உண்மை தெரிந்து இவர் கல்யாணத்தை நிறுத்த சொல்லத்தான் வந்திருக்கிறாரோ என்று அதிர்ச்சியில் இருந்தது.

“சாரி ராமன், ஆஞ்சநேயர் ‘கண்டேன் சீதையை’ ன்னு சொன்னா மாதிரி, நானும் இந்தக் கல்யாணம் எல்லா விதத்திலும் ரொம்ப சிறப்பா நடக்கப் போறது, அதை பத்திக் கவலைப்படாதீங்கோன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சிருக்கணும்.  விஷயத்தை டைரக்ட்டா சொன்னதுல கொஞ்சம் அதிர்ச்சி ஆகிட்டேள்ன்னு நினைக்கறேன்.  கவலையேப்படாதீங்கோ.   எல்லாம் ஜாம் ஜாம்ன்னு பண்ணிடலாம்.”, என்று கூறி இப்பொழுதாவது சரியாகப் பேசினாரா என்று தெரிந்து கொள்ள லக்ஷ்மியைப் பார்த்தார்.  மாமி சைடிலிருந்து  ம்ஹூம் நோ ரியாக்ஷன்.  

ராமன் கலங்கிய குரலில், “சாரி சம்மந்தி.  நானே இந்த விஷயம் நடந்த உடனே உங்களை வந்துப் பார்த்துப் பேசி இருக்கணும்.  ஆனால் நான் பண்ணின முட்டாள்த்தனத்தை வந்து சொல்றதுக்கு கஷ்டமா இருந்தது.  ஆனால் ஒரு உத்திரவாதம் தரேன்.  எப்பாடுபட்டானும் கௌரி கல்யாணத்தை எந்த விதக் குறையும் இல்லாம நீங்க எதிர்பார்த்ததை விட நன்னாவே நடத்திடுவேன்.   பணம் எங்கயும் கிடைக்கலைன்னாலும் இந்த வீடு  இருக்கு.  இதை வித்துடலாம்.   நான் பண்ணின தப்புக்குப் பரிகாரம் பண்ணினா மாதிரி ஆய்டும். இன்னும் ஒரு நாலு லட்சம்தான் தேவைப்படறது.  அதுலயும் கோபால் ஒரு லட்சம் தரேன்னு சொல்லி இருக்கான்.  இன்னும் 3 லட்சம்தான்.  எப்படியானும் ஏற்பாடு பண்ணிடறோம்.”, என்று அவசர அவசரமாக சொல்லி முடித்தார்.

“மாமி எங்களுக்கு கொடுத்தத் தண்ணியை கொஞ்சம் உங்காத்து மாமாக்குக் கொண்டு வந்து கொடுங்கோ.  ஏன் இத்தனை வருத்தப்படறேள் ராமன்.  அப்படி நீங்க இருக்கற வீட்டை வித்துக்  கல்யாணம் பண்ண  சொல்ற அளவுக்கு நாங்க என்ன சீரியல்ல வர்ற சம்மந்தியா.”

“அச்சோ நான் உங்களை தப்பா நினைச்சு அப்படி சொல்லலை.  பொண்ணுக்குப் பண்ண வேண்டியது என் கடமைதானே.  அதைத்தான் சொன்னேன்.”, தான் பேசிய பேச்சை எங்கே பத்து தவறாகப் புரிந்து கொண்டாரோ என்று மீண்டும் பதட்டப்பட்டார் ராமன்.  இவர்கள் பேச ஆரம்பித்தவுடன் கலங்கிய ஜானகியின் கண்கள் இப்பொழுது கண்ணீர் சிந்த ஆரம்பித்தது.

தான் உள்ளே பூராமல் சரியாக வராது, என்று தீர்மானத்திற்கு வந்த  லக்ஷ்மி மாமி ஜானகியின் அருகில் சென்று அமர்ந்து அவர் கண்ணைத் துடைத்து, “அச்சோ மாமி என்னதிது, அழுதுண்டு.  மொதல்ல கண்ணைத் தொடைங்கோ.  ஏதோ போறாத வேளை. பணம் போச்சு.  திருப்பதி உண்டியல்ல போட்டதா நினைச்சுக்கோங்கோ.  நாங்க இப்போ வந்தது இருக்கறதை வச்சிண்டு எப்படி கல்யாணத்தை நடத்தலாம் அப்படின்னு பேசறத்துக்குத்தானே தவிர வேறெதுக்கும் இல்லை.  சோ கலங்காம இருங்கோ.”

“ஆமாம் ராமன்.  வருத்தப் படாம அடுத்து என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்.  நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டேளா.  என்ன சொன்னா.”

“ஹ்ம்ம் நேத்துக் கூட போயிட்டு வந்தேன்.  இன்னும் அவனைப் பிடிக்கலை.  எங்க இருக்கான்னு தெரியலைன்னு சொல்றா. இவா என்னைக்குப் பிடிச்சு நமக்கு என்னைக்குப் பணம் வந்து சேர்றது.  எனக்கு அந்தப் பணம் வரும்ன்னு நம்பிக்கையே போச்சு.  மாமி சொல்றா மாதிரி அதைக் கோவிலுக்குக்  கொடுத்ததா நினைச்சுக்க வேண்டியதுதான்.”

“இல்லை ராமன்.  அவனைப் பிடிச்சாச்சு.  வெளில சொன்னா பணம் போட்டவா எல்லாரும் வந்து போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி தகராறு பண்ணுவான்னு இன்னும் வெளில சொல்லாம இருக்கா.”

“என்ன சொல்றேள்.  அவனைப் பிடிச்சாச்சா.  உங்களுக்கு யார் சொன்னா. நேத்து அங்க போனோனக் கூட இன்னும் அவன் எங்க இருக்கான்னு தெரியலை.  தமிழ் நாட்டுல இல்லை.  ஆனால் இந்தியாவை விட்டும் போகலைன்னு எல்லாம் கதை கதையா சொன்னாளே.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.