(Reading time: 29 - 58 minutes)

காதல் நதியில் – 18 - மீரா ராம்

நான் நாளைக்கே வெளிநாடு போகணும் மயூ... ஒரு மாதத்தில் வந்துவிடுவேன்... அப்புறம் உனக்கும் பத்மினிக்கும் டிரான்ஸ்ஃபர் கிடைத்தாலும் கிடைக்கலாம் பெங்களூருக்கு இந்த மாதத்திலே... அப்படி கிடைக்கும் பட்சத்தில் நானும் வந்துவிடுவேன் அங்கே நேரே... என்று அவன் சொல்லிக்கொண்டே போக, அவள் அமைதியாக இருந்தாள்...

என்ன மயூ... நான் பேசிட்டிருக்கேன்.. நீ ஒன்னும் சொல்லாம இருக்க... என்னாச்சும்மா... என்றபடி அவளின் அருகே வந்து அமர்ந்தவனை இமைக்காமல் பார்த்திருந்தவள், ரிகாவிற்கு பெங்களூர் போனாலும் ஒன்றுதான், இல்லையென்றாலும் ஒன்றுதான்... பச்.... என்றவளிடம், யாரு ரிகா?... ஏனிந்த சலிப்பு என்று வினவினான் முகிலன்...  

வேற யாரு எல்லாம் அந்த சாகரிகா @ பத்மினி தான்... என்று விட்டேற்றியாக பதில் சொன்னவள், அவள் இன்னும் அப்படியே தாங்க இருக்குறா... ஒரு மாற்றமும் இல்லை... அவள் இழப்பு பெரிது தான்... ஆனாலும் அதைக் கடந்து அவள் வரணும் தானே?... ஆனால் அவள்... என்று இழுத்தவள், அவள் நடவடிக்கை எல்லாம் புதிதாய் இருக்குதுங்க... சாகரின்னு சொல்லக்கூடாதாம், பத்மினின்னு சொல்லக்கூடாதாம்... ரிகான்னு மட்டும் தான் சொல்லணுமாம்... கண்டிஷனா போடுறா... நானும் சரின்னு இப்போ எல்லாம் ரிகான்னு தான் கூப்பிடுறேன்...

kathal nathiyil

அவள் தோழி தானே நீ... அப்போ நீதான் அவளை மாற்றணும்... முயற்சி பண்ணினால் முடியாதது எதுவுமில்லைடா... என்றவன், அவளைக் கொஞ்சம் விட்டுப்பிடி மயூ... நாம எல்லாரும் சேர்ந்து அவளை மாற்றிடலாம்... இப்போ எல்லாம் நிறைய பேருக்கு ரிகான்னு தான் பேரு வைப்பாங்க போல... பாரு நம்ம ஆஃபீசில் கூட அம்ரிகா, அத்வைத்ரிகா, அப்புறம் யாரு அந்த பொண்ணு ஆ... வேத்... என்று சொல்லிக்கொண்டே போனவன் குரல் மயூரி முறைத்த முறைப்பில் காணாமல் போனது...

ஹ்ம்ம்.. சொல்லுங்க... இன்னும் சாருக்கு எத்தனை ரிகா தெரியும்?... போங்க ஒவ்வொரு ரிகா பயோடேட்டாவையும் கலெக்ட் பண்ணி வைங்க... உங்க ஃப்யூச்சரில் யூஸ் ஆகும்... என்றவள் உண்மையில் கொதித்துக்கொண்டிருந்தாள்...

மயூ.... நான் சும்மா தாண்டா சொன்னேன்... நம்ம ஆஃபீஸில் வேலைப் பார்க்குறவங்க பெயர் கூட தெரிந்து வைச்சுக்கலைன்னா நானெல்லாம் என்ன ப்ராஜெக்ட் ஹெட்?... என்றவன் ஏண்டா நாம் இப்படி சொன்னோம் என்று நிஜமாகவே நொந்து போனான்...

ஓ.... அப்படியா?... அதான் முதல் வேலையா பத்மினி பெயரை தெரிஞ்சுக்க முயற்சி பண்ணீங்களா?... பேருக்கு தான் தங்கை எல்லாம்... இப்போ நான் சொல்லுற வரை அவ பேரு தான் சாகரிகான்னு உங்களுக்கு தெரியுமா???... ஏன்னா அவ தங்கை லிஸ்ட்... பட் மத்த பொண்ணுங்க எல்லாம் வேற லிஸ்டில் அல்லவா இருக்குறாங்க... இன்னும் வரிசையா லிஸ்டா போடுங்க... நான் போறேன் என்றபடி சென்றவளை வழிமறித்து நிறுத்தினான் முகிலன்...

மயூ... நான் ரிகா என்ற பேரு நிறைய பேருக்கு இருக்குன்னு தாண்டி சொன்னேன்... அதுக்கா இப்படி கோபம் உனக்கு?... என் வாழ்க்கையில் காதலி என்ற லிஸ்டிலும், மனைவி என்ற லிஸ்டிலும் நீ மட்டும் தாண்டி இருக்குற... அது உனக்குப் புரியவே புரியாதாடி... நான் உன் முகில் மயூ.... இன்னும் தெளிவா சொல்லணும்னா நான் மயூரிமுகிலன்... என்று ஏக்கமும் காதலும் சூழ சொல்பவனிடம் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள் மயூரி... அவன் சொன்னதும் உண்மைதானே... அது அவளுக்குப் புரிந்தமையால் வாய்மூடிக்கொண்டாள்...   

அவளின் மௌனம் அவனுக்கு அவளின் நிலையைப் புரிய வைக்க, மெல்ல அவளை நெருங்கியவன், ஹ்ம்ம்... மயூ... நாளைக்கு கிளம்பிடுவேன்... ஹ்ம்ம்... நியாபகம் வைச்சுக்குற மாதிரி எதாவது கொடுத்தால் நல்லாயிருக்கும்... என்றபடி அவளைப் பார்க்க, அவள் அவனை விடாமல் அடிக்க ஆரம்பித்தாள்..

ஷ்....ஆ....... வலிக்குதுடி... அய்யோ... மயூ.. விடுடி... என்று அவன் கத்த, நல்லா வலிக்கட்டும்... அப்போ தான் நல்லா நினைவிருக்கும் என்று அவள் மேலும் சிரித்துக்கொண்டே அடிக்க, அவன் அவள் கையை சட்டென மடக்கிப் பிடித்து அவளைத் தன் பக்கத்தில் இழுத்தான்... எதிர்பாராத இந்த செயலில் அவள் அவன் மேல் விழ, அவன் அவளை இதுதான் சமயம் என்று இறுக்கிப் பிடித்து அணைத்துக்கொண்டான்... அவன் அணைப்பில் அடங்கியவளுக்கு அவனை எதிர்க்கும் எண்ணமே இல்லை துளியும்... அவன் நெஞ்சில் ஒன்றிக் கொண்டாள்...

சிறிது நேரம் கழித்து தன் கைககளை தளர்த்தியவன், அவள் முகத்தை கையிலேந்தி, ஒரு மாசம் உன்னை விட்டு இருக்கணும்டி... இங்கே தினமும் உன்னைப் பார்த்துட்டு திடீரென்று உன்னைப் பார்க்காமல் இருக்கணும்னா கொஞ்சம் கஷ்டமாயிருக்குடி... என்று சிறுபிள்ளையாய் சொல்லியவனின் கைகளைப் பிடித்துக்கொண்டவள், அதில் மென்மையாக இதழ் பதித்துவிட்டு, என் முகில் சீக்கிரம் என்னிடம் வந்துடுவாங்க, பிரிவும் காதலுக்கு வலு சேர்க்கும் ஆயுதம் தாங்க.... ஒருமாசம் தானே... சட்டென்று ஓடிப் போயிடும்... நான் என் முகிலுக்காக காத்திட்டிருப்பேன்... என்றவளை இன்னும் அதிகமாக அணைத்துக்கொண்டவன், அவள் கண்களில் தெரிந்த காதலில் தன்னை மறந்தான்... மயூ.................. என்றவன் குரலே அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதை உரைக்க, அவள் வெட்கத்துடன் விழி தாழ்த்திகொண்டாள்... அவளின் வெட்கம் அவனை மேலும் கிறங்கவைக்க, மயூ........ இன்னைக்கு மட்டும்டி... ப்ளீஸ்... வித் ய்வர் பர்மிஷன்டி... என்றபடி அவள் முகத்தை நோக்கி குனிந்தான்...

அன்றிரவு டைரியுடன் தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள் சாகரி... அதுவே தன்னுடன் இறுதி வரைக்கும் வரும் என்ற நம்பிக்கையில் அதனுடன் உறவாடிக்கொண்டிருந்தவள், மயூரியின் சத்தமான அழைப்பில் சுதாரித்தாள்...

ஏண்டி... இங்கே ஒருத்தி, கத்திக்கிட்டிருக்கேனே... அது உன் காதில் விழுகாதா?... எப்ப்ப பாரு அந்த டைரியோடவே பேசிட்டிரு... அப்படி என்ன தான் ரகசியம் பேசுறன்னு ஒருநாள் உன் டைரியை எடுத்துப் பார்க்கலைன்னா பாருடி... அன்னைக்கு உன்னை பேசிக்கிறேன்... என்றாள் மயூரி...

அவள் சொன்னதை கண்டுகொண்டதாக சிறிதும் காட்டிக்கொள்ளாமல், ஆமா... முகிலன் அண்ணா என்னைக்கு ஊருக்கு கிளம்புறார்?... என்றவளை முறைத்த மயூரி,

நீ எல்லாம் திருந்தவே மாட்டடி... உன்னை எல்லாம் விட்டு தான் பிடிக்கணும்... என்றவள்., நாளைக்கு ஆதர்ஷ் அண்ணாவும் வெளிநாட்டுக்கு போறாராம்... நாம போகணும் நாளைக்கு வழி அனுப்ப... புரிந்ததா?... உன் அருமை அண்ணன் என் தங்கச்சியை பார்த்துட்டு தான் போவேன்னு அடம்பிடிக்கிறார்... அதனால் நீயும் வர்ற..... என்றவள் கட்டளைப் பிறப்பித்துவிட்டு சென்றுவிட்டாள்...

டைரியின் பக்கங்களை புரட்டியவள், இரண்டு நாட்களுக்கு முன் அவனை சந்திக்க வர சொன்னதை நினைத்துப் பார்த்தாள்...

அன்று அவள் போன் செய்து வர சொல்லியதும், ஆதர்ஷிற்கு தலை கால் புரியவில்லை... என்னவளைப் பார்க்க போகிறேன்... என் சீதை என்னிடம் திரும்பி வரப் போறா... என்ற உற்சாகத்துடன் அவள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே சென்று காத்திருந்தான் அந்த கடற்கரையில்...

கடல் அலைகள் அவன் காலை தொட்டு தொட்டு விளையாடிச் சென்றது... அது அவனுக்கு அவளே அவனிடம் விளையாட்டு காட்டி ஓடி பிடித்து விளையாடுவதை போல் இருந்தது...  என் கடல் இளவரசியே சீக்கிரம் வந்துவிடுவாயல்லவா என்னிடம்... என்று அந்த கடல் நீரை அள்ளிக்கொஞ்சிக்கொண்டிருந்தவனின் அருகே அந்த மாலை நேர வெயிலால் ஒரு நிழல் தெரிய, அது தன்னவளுடையது என்று அறிந்தவன், அதை நோக்கி கை நீட்ட, அவள் நிழல் பட்டென்று விலகியது...

அதிர்ச்சியுடன் அவளை திரும்பி பார்த்தவன், அவள் கைகளில் பெரிய பையுடன் நிற்பதை பார்த்து குழம்பி போனான்... சரி அவளிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவன் பேச ஆரம்பிக்க எண்ணியபோது, அவள் அதை அவனிடம் கொடுத்து வாங்கிக்கோங்க என்றாள்... இதில் என்ன இருக்குடா என்றபடி அவன் பார்க்க, எனக்கு சொந்தமில்லாதது இவை எல்லாம் இனி என்றாள் அவள்... புரியாமல் அதனை வாங்கி திறந்து பார்த்தவன், சற்றே தள்ளாடிவிட்டான்... அவள் கையால் வரைந்த அவனின் ஓவியம், அதன் பின் அவன் அவளுக்கு பரிசளித்திருந்த புடவை, அவனும் அவளும் இருக்கும் ஒரு வண்ணப்படம், இந்தப்படம் அவன் அவளுக்கு கொடுத்தது... அவனின் தூரிகையில் அவளை நிறுத்தி அவன் முதன் முதலில் வரைந்த வண்ணச்சித்திரம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.