(Reading time: 29 - 58 minutes)

வனைக் கண்டதும் அவளின் விழிகள் கொண்ட உவகையை அவன் வாழ்நாள் உள்ளவரை மறக்கமாட்டான்... நீர் கோர்த்து அவனைத் தேடி உருகியது அவளின் கண்கள்...  எங்கே கண் சிமிட்டினால் தான் தேடல் மூலமாக உருகி கண்ணில் உண்டாக்கிய காதல் வழிந்து தரை சிந்திடுமோ என்று இமை ஆடாத பார்வையோடு தன் காதல் நீரை தனக்குள்ளே புதைத்துக்கொள்ள சித்தமானாள் அவள்...

ராம் என்று அவன் பெயர் உச்சரித்து அவன் தோளில் தலை சாய்த்து அவளின் அத்தனை துயரங்களையும் சொல்லி அவளின் சுமை இறக்க முயன்று அவள் அவனை நெருங்கினாள்... நீரின் சுழற்சியில் தான் அகப்பட்டிருப்பதையும் மறந்து...

தன் காதல் நதியுடன் கலந்து விட அந்த கடல் இளவரசி துடித்ததை அந்த நதியும் உணர்ந்து அவளருகே வேகமாக நெருங்க, சட்டென்று மயூரியின் அழைப்பில் உயிர் பெற்றனர் இருவரும்....

அவன் இன்னும் அதே எதிர்பார்ப்புடன் நிற்க, அவள் சில கண மாய உணர்வினால் ததும்பி ஏங்கிய மனதை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாள்...

எப்படி நான் மறந்து போனேன்... என் நிலையை... என்றவள் உடல் வேர்க்க ஆரம்பிக்க, பயம் வந்து தொற்றிக்கொண்டது அவளை...

அவளின் பதட்டத்தையும், பயத்தையும் கவனித்தவன் அவளுக்கு ஆறுதல் சொல்ல முயல, போயிட்டு வாங்க முகிலன் சார்... என்று அவனிடம் சொல்லியவள், ஹவ் அ நைஸ் ஜர்னி... என்று ஆதர்ஷைப் பார்த்து சொன்னாள் உதட்டில் உருவாக்கிக்கொண்ட செயற்கை புன்னகையுடன்...

ஹ்ம்ம்... என்றவன் இதழ்கள் விரக்தி புன்னகை ஒன்று சிந்தியதும், அவளை நோக்கி தலை அசைத்து விடைபெற்றான் அவளின் ஆதர்ஷ் ராம்...

முடிந்தது என் காதல் நதியின் பயணம்... நட்ட நடு நதியில் என்னவனை நீரினுள் மூழ்க செய்துவிட்டு நான் மட்டும் கரையேறி வந்துவிட்டேன் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல்... இனி எனக்குள் துடிக்கும் இதயத்தில் ஓசை எழவே எழாது... என் ஆசையை போல... என்றெண்ணியவள் இரண்டு நாட்கள் மயூரியுடன் இருந்தாள்... பின் அவளுக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்... காகிதத்துண்டில், என்னை தேட முயற்சித்தால் நான் உயிரோடிருக்க மாட்டேன்... இப்படிக்கு ரிகா... என்ற வாசகம் மட்டுமே மயூரி கண்டாள் சாகரியின் அறையில்...

இவள் வெளியேறிய மறுநாள், ஆதர்ஷிற்கு கோதை போன் செய்தார்... என்னப்பா எப்படியிருக்க... என் மருமக எப்படியிருக்காப்பா?... இன்னும் வருத்தமா தான் இருக்கிறாளா?... அவளை கல்யாணம் செய்துக்க ஆதர்ஷ் சீக்கிரமே... நீ அவளுடன் இருந்தால் அவள் சரியாகிவிடுவாள்... என்று பேசிக்கொண்டே போன அன்னையிடம் தன் உண்மை நிலையை உரைக்க முடியாமல் தத்தளித்தான் அவன்...

இனி என் வாழ்வில் திருமணத்திற்கு இடமில்லைம்மா... என் சந்தோஷத்தை மொத்தமாக நான் தொலைத்துவிட்டேன்... இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம்மா என் திருமணம் பற்றியும் சரி, என் காதல் பற்றியும் சரி... என்றவனை அதற்கு மேலும் கேள்வி கேட்டு துன்புறுத்த விரும்பவில்லை கோதை நாச்சியார்...

ஒரு வாரத்திற்குப் பின், மயூரி பெங்களூருக்கு செல்வதாய் முடிவானது... வீட்டை காலி செய்கையில், சாகரியின் அறையில் உள்ள அலமாரியில் அவளது சில உடைகளும், ஒரு டைரியும் இருந்தது... அவளது உடைகளை எடுத்து வைத்துக்கொண்டவள், அந்த டைரியையும் எடுத்துச்சென்றாள்... பல முறை அதைப் படிக்க அவள் எண்ணியதுண்டு... ஆனால் அவள் அதை செய்யவில்லை... ஒரு வேளை அவள் செய்திருந்தால் சாகரியின் வாழ்வில் விளையாடிய விதியைப் பற்றி தெரிந்திருக்கும்... ஓர் உண்மை காதல் சாகாமல் பிழைத்திருக்கும்... அந்த விதி தன் தோழியின் வாழ்வில் விளையாடிய கோரத்தாண்டவம் பற்றியும் அறிந்திருப்பாள்... ஹ்ம்ம்.... நடக்கவில்லையே... எதுவுமே....

ஜனா மரணப்படுக்கையிலிருந்த போது, பர்வதத்திற்கு தகவல் சொல்லிய ஆதர்ஷே அவரை மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆனது... மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்ற தகவல் கேட்டவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்துவிட்டார்... ஊரிலிருந்து கோதையை வர சொல்லி அவரைப் பார்த்துக்க சொல்லிவிட்டு தான் ஆதர்ஷ் சாகரியின் ஊருக்கு வந்து அவர்களுடன் இருந்தான்... தாயிடம் பர்வதம்-ஜனா-தினேஷ் உறவை பற்றி சொல்லியிருந்தவன், தன் காதலியின் முழுப் பெயரை சொல்லத்தவறியிருந்தான்.... அதுமட்டுமன்றி பர்வதத்திற்கு சாகரியின் பெயர் மட்டுமல்ல, அவளையும் தெரியாது... ஏனென்றால் இருவரும் பார்த்துக்கொண்டது கிடையாது...   பர்வதமும் ஜனாவின் இறப்பிற்கு பின், வாய் மூடிக்கொள்ள, கோதையும் மௌனமாய் பொறுத்திருக்க வேண்டியதாகிவிட்டது... அது மட்டும் கோதை மௌனத்திற்கு காரணம் அல்ல, யாரிடமும் நீங்கள் என்னைப் பற்றியும் என் சீதை பற்றியும் கேட்டறியக்கூடாது, மீறி கேட்டால், நான் இந்தியாவிற்கே திரும்பி வரமாட்டேன் என்று மிரட்டிவைத்திருந்தான் ஆதர்ஷ்...

இப்போது ஆதர்ஷ் ஒரு வருடகாலம் வெளிநாட்டில் தங்க முடிவெடுத்த பின், மயூரிக்கு துணையாக பர்வதம் அவளுடன் இருந்தார் பெங்களூரில்..

ஒருவருடம் மின்னல் வேகத்தில் அனைவருக்கும் நகர்ந்தது... ஆனால் சாகரிக்கும் ஆதர்ஷிற்கும் மட்டும் அது சுமையாக இருந்தது... சென்னையிலிருந்து வெளியேறிவள் அடைக்கலம் புகுந்தது மும்பையில் தான்... அங்கே உள்ள ஆர்.வி.எல் இன்டெர்நேஷனல் கம்பெனியில் வேலையில் சேர்ந்தாள்... அங்கே உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்தாள்... அவளுடன் ஒரு பெண்ணும் இருந்தாள்... இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்து கொள்வார்களே தவிர, வேறெதுவும் பேசி கொண்டது கிடையாது... அதற்கான சந்தர்ப்பத்தை சாகரி ஏற்படுத்திக்கொண்டதும் இல்லை... இடையில் தினேஷிற்கு ஓரிருமுறை தொடர்பு கொண்டு பேசினாள்... அவ்வளேவே...

ஆதர்ஷின் பிறந்தநாள் அன்று கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தாள்... அவன் நலமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டவள் அங்கேயே அமர்ந்துவிட்டாள்... அர்ச்சகர் அர்ச்சனை செய்து பூவை அவளிடம் கொடுத்தார்... அதை வாங்கியவளுக்கு சென்னையில் கோவிலில் நடந்த சம்பவங்கள் நினைவு வந்தது... அவனைப் பிரிந்த தருணத்திலிருந்து அவள் பூ சூடிக்கொள்வதில்லை... இன்று அர்ச்சகர் கொடுத்த பூவை தூரப் போடவும் மனமில்லாமல், தலையில் வைக்கவும் முடியாமல் திண்டாடினாள் சாகரி...

கையில் வைத்திருந்த மல்லிகை அவளைப் போலவே வாடி காணப்பட்டது... மல்லிகை என்னவனின் உள்ளங்கவர்ந்த ஒன்று... சொன்னாரே அன்று, முதல் நாள் சந்தித்த வேளையில், எப்போது இதே போன்று மல்லிகையை உன் கூந்தலில் சூடி வாசம் பிடிக்கப் போகிறேன் என்று...   அது கனவாகவே போய்விட்டதே ராம்... என்று கவலை கொண்டவள், அந்த மலரையே பார்த்திருந்தாள்... அதனுடன் மானசீகமாக தன் மனதில் உள்ளதை எல்லாம் பேசிக்கொண்டிருந்தாள்...

என் நிலைமை உனக்கும் தெரிந்ததனால் தான் நீயும் என் போல் வாடுகிறாயா மலரே... என் மனதின் வலி உனக்கு புரிகிறது தானே?... ஹ்ம்ம்... என்னை அறிந்து கொண்டது நீ மட்டும் தான்... உன் வாடிய நிலையை கண்டு கொண்டதும் நான் மட்டும் தான்... என் நிலையைப் பார்த்தாயா மலரே... படங்களில் அடுத்தடுத்த காட்சி மாறுவது போல், இந்த கொடிய காலமும் மாறாதா???.. இந்த காலம் காட்டிய திசையில் சென்று கொண்டிருக்கும் என் வாழ்க்கையின் பாதையும் மாறாதா?... என்று ஏங்கியவள் மனதில் விரக்தி பொங்க, எது மாறினாலும், யார் மாறினாலும் இந்த பாவையின் இதயத்தில் குடிகொண்டிருக்கும் துயரமும் மாறாது... எனது இந்த அலங்கோல நிலையும் மாறாது என்றாள் மலரிடம்... கண் மூடி அவள் கலங்குகையில் காட்சியாய் அவன் உருவம் தோன்றியது அவளின் கண்களில் கலந்து... கண்களில் வந்தவன் நினைவில் வர மட்டும் நேர தாமதமா ஆகும்?... அவளின் நியாபக அலைகளில் நீந்தி அவள் மனதில் நிறைந்து நின்றான் ஆதர்ஷ்... நெஞ்சில் நிறைந்தவனை கைப்பிடிக்க அவள் உள்ளம் விழைந்தது மிக... ஆனால் அதற்கு தான் இனி வழியே இல்லையே என்ற எண்ணம் வர, அப்படியே சோர்ந்து போனவள், அவரோட வாழ்க்கையில் எனக்கு ஒரு இடமே கிடையாதா?... நாங்க ஒன்று சேரவே மாட்டோமா?... அவர் எனக்கு மாலையிடும் அந்த திருநாள், என் மணநாள் வரவே வராதா?... என்று அழுதாள் நேரம் செல்வது கூட தெரியாமல்...

இரவின் அமைதியும் மறுநாள் விடியலும் அவளுக்கு நிகழ்காலத்தை தெரிவிக்க, மெல்ல எழுந்து சாலையின் ஓரம் நடந்தபடி சென்றாள்... அந்த நேரம் தான் அவ்னீஷ் அந்த பாதையில் வந்து கொண்டிருந்தான்... தடுமாறியபடி எதிரே வந்த வாகனத்தில் மோதாமலிருக்க அவனது காரை ஒடித்து திருப்பியவன், சாலையின் ஓரம் சென்று கொண்டிருந்த சாகரியின் மீது மோதிவிட்டான்... அந்த விபத்தில் தான் அவள் தன் சுயநினைவை இழந்தாள் முற்றிலும்... அதன் பின் ஹரீஷ் அவளைக் காப்பாற்றி தன் வீட்டிற்கு அழைத்து வரும் நேரத்தில் தான் அவள் காணாமல் போனாள்... அப்போது நிகழ்ந்த நிகழ்வுகள் தான் அவள் அவ்னீஷ் மீது வருத்தம் கொள்ள காரணமாயிருந்தது... அதன் பின் சாகரி மூலம் ஷன்வியை தொடர்பு கொண்டு ஊட்டியில் அவளுடன் தங்க வைத்தான் ஹரீஷ்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.