(Reading time: 29 - 58 minutes)

தன் பின், சாகரி ஊட்டி வந்து அபியை சந்தித்தது, அனுவின் நட்பு, கோதையின் பாசம் எல்லாம் எதேச்சையாக நிகழ்ந்தவை தான்... ஆனால் ஆதி சாகரியைப் பார்த்த பார்வையில் ஒரு உரிமை தெரிந்ததை கோதை கண்டு கொண்டார்... மகனின் சீதை ஒருவேளை இவள் தானோ என்ற எண்ணம் தனக்குள் ஏற்படுவதையும் அவரால் தடுக்க முடியவில்லை... கணவரிடம் அவர் இதைப் பற்றி கூறிய போது அவர், மகனின் திருமணம் அந்த ரிகாவுடன் தான் என்று பேசுவோம்... அதற்கு அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதை பொருத்து மேற்கொண்டு முடிவு செய்வோம் என்று கூறினார்... அவர்களின் திட்டப்படி கோதையும் சுந்தரமும், அவனின் திருமணப் பேச்சை ஆரம்பிக்க, அவன் முதலில் மறுத்தான்... பின் பெண் யார் என்று தெரிந்து கொள் என்று கூறி ரிகா என்ற பெயரை சொன்னதும் அவனின் பதிலில் மாற்றம் வந்தது... முதலில் அந்த பெண்ணிடம் கேளுங்கள்… சம்மதித்தால் பார்ப்போம் என்றான் அதுவரை திருமணத்திற்கு மறுத்தவன்... அந்த பதிலே அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்க, இந்த பிறவியில் அவள் ஒருத்தி மட்டுமே உனக்கு மனைவி… அதையும் நீ பார்க்கத் தானே போகிறாய்… என்று தைரியமாய் கூறினார்கள் கோதையும் சுந்தரமும்...

சாகரியை விட்டுப் பிரிந்து சென்றவன் ஒரு வருடம் கழித்து இந்தியாவிற்கு வந்தான் மீண்டும்... வந்தவன், அனுவின் மகள் தன்னை அர்ஷ் அர்ஷ்... என்று அழைப்பதைக் கண்டு சிரித்தான் முதலில்... பின்னர் அவள் தெளிவாக தர்ஷ் என்று உச்சரித்த போது தன் சீதை இந்த குழந்தையின் வார்த்தைகள் மூலம் தன்னருகில் இருப்பதை போல் உணர்ந்தான்.. ஆனால் அவளை எக்காரணம் கொண்டும் அபி என்று மறந்தும் அவன் அழைக்கவில்லை... குட்டிமா என்றே அழைக்க பழகியிருந்தான் அவள் பிறந்தது முதல்.. எனினும் அவ்வப்போது அபி என்று அழைத்தான் தான்... சாகரியைப் பிரிந்து வந்த பின் அவன் அபி என்ற பெயரை உச்சரிக்க மறுத்தான்... அப்படி அழைத்தால் எங்கே அவளை தான் தொலைத்து விட்டதை மற்றவருக்கு தன் முகமும், தன் நடுங்கிய வார்த்தைகளும் தெரியப்படுத்திவிடுமோ என்று அஞ்சியே அவன் குட்டிமா என்று அழைத்தான் அபியை...

மரணத்தின் பிடியில் இருந்து அவளை மீட்டுகொண்டிருக்கும்போது அவளையும் அறியாமல் அவள் உதிர்த்த வார்த்தைகளை கோர்வையாக கோர்த்தான் ஹரீஷ்... அது சொன்னது ஒன்று தான்... அவள் ஒருவனை காதலித்திருக்கிறாள்... அதன் பின் அவனைப் பிரிந்திருக்கிறாள்... அவனுடன் வாழ தனக்கு கொடுத்து வைக்கவில்லை என்றும், அவனைக் கஷ்டப்படுத்திட்டேன் என்றும் உளறியிருந்தாள் மயக்கத்தில்... இது மட்டுமல்லாது அவனின் பெயரை அவள் அடிக்கடி முணுமுணுத்தாள் அவள் சுயநினைவில்லாத அந்த 6 நாட்களும்... அந்த பெயரில் தான் ஹரீஷ் சுதாரித்தது... அது தன் நண்பனின் பெயராய் இருக்கிறதே என்று அவன் நினைத்தான்... அது பற்றி அவளிடம் கூற வேண்டும் என்று அவன் எண்ணி அவளை வீட்டிற்கு அழைத்து வர முடிவெடுத்த போது தான், அவள் காணாமல் போனாள்... தேடி அலைந்து அவளை மீட்டுக்கொண்டு வந்தவன், அவளிடம் பேச முயற்சிக்க, அவளோ அவளின் காதல் பற்றி தெரிந்து கொண்டதை உரைத்தாள்... மேலும் தான் அவனோடு வாழ தகுதியில்லாதவள் என்றும் கூறினாள்... நீ சென்னையில் வேலை பார்த்தாய், ஒருவரை காதலித்தாய், அதன் பின் உன் வாழ்வில் நடந்த நிகழ்வில் அவனை வேண்டாம் என்றாய், பெற்றவர்களை இழந்தாய், இப்போது எல்லா உண்மையும் தெரிந்து கொண்டாய் என கூறியிருக்கிறார்கள் அவளைக் கடத்தியவர்கள்... அவளை சென்னையில் கடத்தியபோது நிகழ்ந்ததை அவளிடம் சொல்லியிருக்கிறார்கள்... ஆனால் அவள் அதை மட்டும் மறைத்து ஹரீஷிடம் மற்றவற்றை கூறினாள்... ஆனால் அவளை கடத்திய ஆள் அவளிடம் சொல்லாத ஒன்று தினேஷ், மயூரி,முகிலன் பற்றியது தான்...

மும்பையில் தான் கடத்தப்பட்டு அனுபவித்த மன அளவு சித்ரவதையை அவள் அவனிடம் சொல்லியிருந்தாலும், உடல் அளவிலும் அவள் காயம் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவனாய் அறிந்து கொண்டான்… அவளின் உடலில் உள்ள காயங்கள் அதை அவனுக்கு பறைசாற்றியது துல்லியமாய்...

ஷன்வியின் ஊரும் ஊட்டியில் இருக்க, அது அவனுக்கு வசதியாய் போனது... ஆதர்ஷின் வரவை எதிர்நோக்கி காத்திருந்த நேரத்தில் தான் ஆதர்ஷ் வீட்டில் பங்க்ஷன் ஒன்று உண்டானது... அதில் ஆதர்ஷ் சீதையைப் பார்த்து தடுமாறியது, அவன் விழிகள் அவளிடத்தில் கொண்டாடிய உரிமையை ஹரீஷும் கண்டுகொண்டான்... அவனின் சந்தேகமும் உறுதியானது... தன் தங்கையின் காதலன் இவன் தான் என்றும் அவன் நம்பினான்... மேலும், முகிலனின் வார்த்தைகள், மயூரி இவளைத் தேடுகிறாள் என்ற உண்மை என அனைத்தும் ஒரு சேர, ரிகா வாழ்வின் சிக்கலின் முனை தனக்கு கிடைத்துவிட்டது என்ற நிறைவுடன் தான், அவன் அவளுக்கு நினைவு தப்பி போன விஷயத்தை முகிலன், ஆதர்ஷிடம் தெரிவித்தான்...

ஆனால் ஆதி எதிர்பார்க்காத ஒன்று அவள் தன்னை மறந்தது... சாகரியும் அவனை சந்தித்த நொடியிலிருந்து அவன் வசம் தன் மனம் இழுக்கப்படுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தாள்... கடைசியில் இன்று அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது... அவனை நேசித்து நட்டாற்றில் தவிக்க விட்டு அவனின் அழகான காதலை கொன்று புதைத்த பாவி அவள் தான் என்ற நிஜம் அவளை சுட்டு பொசுக்கியது...

அவனைக் காயப்படுத்திய அவளின் விழிகளில் அவனுடன் வாழ வேண்டுமென்று அவள் கண்ட கனவு கலைந்து, அவனின் நியாபகங்கள் அவள் உயிரில் நுழைந்து பரவி, அவளை மேலும் வதைத்து அவள் கன்னங்கள் கண்ணீர் அருவியை வரவேற்றது.... ராம் என்று தன்னவனின் பெயரை உதட்டில் முத்தமிட்டு உச்சரித்தவள், இத்தனை நாள் நான் காதலித்தவர் யார் என்று தேடினேனே என்னையும் உன்னிடத்தில் தொலைத்துவிட்டு என்னைக் காணவில்லை என... என் கண்ணீர் துளிகள் ஒன்று சேர்ந்து மாலை உருவாக்கி சூடுகிறதே உங்களுக்கு அதுவும் கனவில் மட்டும்... என்று துடித்தவள் நடுங்கும் தன் அதரங்களை தடுக்கும் வழி தெரியாது அசையாது நின்றாள்...

“விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே...

உயிரிலே உன் நினைவுகள் தளும்புதே...

கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே...

முத்தமிட்ட உதடுகள் உளருதே...

நான் என்னைக் காணாமல் தினம் உன்னைத் தேடினேன்...

என் கண்ணீர் துளியில் நமக்காக ஓர் மாலை சூடினேன்...”

அதே நேரம் அங்கே ஆதர்ஷின் நிலையோ பரிதாபமாக இருந்தது... அவனுக்குக்கொடுத்த வலியை அவள் உணர்ந்த நேரம், அங்கே அவனும், பழைய நினைவலைகளில் நீந்தி மெல்ல வெளிவந்தான்... அவனது உயிரில் உறைந்து குருதியில் கலந்தவளை கண்ணிற்குள் கொண்டு வந்தவன், நான் வாழும் என் இந்த வாழ்வு உனக்காக மட்டும் தாண்டி சகி... என்று உன் விழியில் விழுந்தேனோ அன்றே என்னை உன்னிடத்தில் தொலைத்துவிட்டேன்... இன்று நீயில்லாமல் தினமும் செத்து செத்துப் பிழைக்கிறேன் உன்னையும் என் மனதில் உயிரோடு சுமந்து கொண்டு.... திடீரென்று காணாமல் போய் என் வாழ்க்கையை புரட்டி போட்டாயே அந்த ஒரு வாரம்... அது என் சாபமா?... என்னை காதல் நதியில் தனியொரு ஓடத்தில் நிறுத்தி மூழ்கடித்துவிட்டு நீ கரையேறி சென்றாயே... ஏனடி சகி?...

“உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி...

உனக்கென வாழ்கிறேன் நானடி...

விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி...

உயிருடன் சாகிறேன் பாரடி...

காணாமல் போனாயே என் வாழ்க்கை சாபமா?...

நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஓடமா....???”

அவளின் புகைப்படம் நெஞ்சோடு ஒன்றியிருக்க, அவனின் விழி நீர் அவளது முகத்தில் விழுந்தது... அந்த நொடி அவள் இமை நனைந்தது மீண்டும்... அவனை தன் தோழிக்கும் தெரியாமல் காதலித்து ரகசியமாய் அவனின் காதல் நதியில் பயணித்து, கண்களில் ஏராளமான கனவு கண்டு இன்று அத்தனையும் தூக்கி கொடுத்துவிட்டு காற்றில் அவனது ஸ்பரிசத்தை உணர்ந்து அவனது கரத்தோடு தன் கரம் சேர்க்க முயற்சித்து, எதிரே அவனும் இல்லாது அருகில் அவன் வார்த்தை என்ன தன் நிழல் கூட துணைக்கு இல்லாது தன் காதலை தொலைதூரம் விரட்டியடித்த நிதர்சனம் அவளுக்கு புரிய, இந்த நொடி தீயில் வெந்து சாம்பலானாலும் என் காதல் மாறாது... வாழும்... என்னை எரித்து காற்றோடு திரிய விட்டாலும் உங்களின் மீது மோதி விழும் பூக்களாகவேனும் நான் பிறப்பெடுப்பேன் ராம்... என்றவள் அவனை வரைய ஆரம்பித்தாள் தனது டைரியில்...

“இமைகளிலே கனவுகளை விதைத்தேனே...

ரகசியமாய் நீரூற்றி விதைத்தேனே...

இன்று வெரும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்...

உன் கையோடு கை சேரத்தான்...

உன் உருவம் இல்லை... என் நிழலும் இல்லை...

இனி என் காதல் தொலைதூரம் தான்...

நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே...

அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.