தலை சுற்றியே விட்டது அவனுக்கு... அதிலிருந்து அவன் வெளிவர சில நிமிடங்கள் ஆனது... கண்களில் கேள்வியுடன் வலியையும் காட்டியவனிடத்தில், சரியாக ஒரு வருடம் வரை நீங்கள் இங்கே இந்தியாவில் இருக்கக்கூடாது... என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது... என்னைப் பற்றி யாரிடமும் நீங்கள் விசாரிக்க கூடாது, தினேஷ் அண்ணனிடம் கூட... நீங்கள் என்னை காதலித்ததைப் பற்றி யாரிடமும் தானாக சொல்லக்கூடாது எக்காரணம் கொண்டும்... இது என் மேல் ஆணை... உங்கள் பெற்றோருக்கு மட்டும் உங்கள் காதல் தெரிந்தது தெரிந்ததாகவே இருக்கட்டும்... என் பெயர் கூட அவர்களுக்கு சரியாக தெரியாது அல்லவா... நல்லது தான்... இனி அவர்கள் கேட்கும் போது நீங்கள் என்னைப் பற்றி எதுவும் கூறக்கூடாது... வேண்டுமென்றால் நான் இறந்து.... என்று அவள் சொல்லுமுன்பு... இன்றிலிருந்து மூன்றாம் நாள் நான் இங்கே இருக்கமாட்டேன்டா... என்னவளின் ஆணையை மீறி நான் நடக்கமாட்டேன் என்று உணர்ச்சியற்ற குரலில் சொல்லியவன், கடைசியாக சொன்னாயே அதை மட்டும் இனி என்றைக்கும் உரைத்துவிடாதே குட்டிமா... என் சகிக்கு எதுவும் ஆக்ககூடாது வார்த்தைகளில் கூட... என்றான் தொண்டை அடைக்க... என்னுள் இருக்கும் என் சீதை நான் உயிரோடு இருக்கும்வரை என்னுடனே இருப்பாள் என் நெஞ்சத்தில்... என்றவன் அவளைப் பார்க்க, அவள் கல்லென நின்றிருந்தாள்... அதற்கு மேலும் அங்கு அவனால் நிற்க முடியவில்லை... போகிறேன்.... என்றவன் தன் கலங்கிய விழிகள் சிந்தும் கண்ணீரைப் பொருட்படுத்தாது உயிரற்றக் கூடாய் சென்று கொண்டிருந்தான் அந்த கடற்கரையில்...
அவன் செல்லும் திசையையேப் பார்த்துக்கொண்டிருந்தவள், அவனின் பாதசுவடு அருகில் அமர்ந்தாள் தட்டென்று... கொன்று விட்டேன் என்னவனின் மனதை... அய்யோ.... இப்படி நிலைகுலைந்து போறாரே... இதற்கெல்லாம் நான் தானே காரணம்... நான் எதற்கு இன்னும் உயிரோடு இருக்கிறேன்... என்றவள் பரந்து விரிந்த கடலை நோக்கி ஓர் எட்டு வைக்கையில் அவனின் வார்த்தைகள் அவள் செவியில் விழுந்தது...
என் சகிக்கு வார்த்தைகளில் கூட எதுவும் ஆக்ககூடாது என்று நான் சொன்னேன் தானே... நீ இப்போது உயிரோடு அவளை கொல்லப் போகிறாயா?... சரி... கொன்றுவிடுடா... முதலில் என்னை... பிறகு என்னவளை... என்று கோபம் பொங்க நின்றிருந்தான் ஆதர்ஷ் அவளின் பின்னே...
அவள் திரும்ப, ரத்தமென சிவந்திருந்த நான்கு விழிகளும் அங்கே சந்தித்துக்கொண்டது... நீ ஏன் இப்படி பண்ணுற, நடந்துக்குற, ஏன் என்னை விலக சொல்லுற, இது எதையுமே நான் கேட்கமாட்டேன்.... நான் கேட்கக்கூடாதுன்னு தான் நீயும் இப்படி எல்லாம் பேசி என் சீதையை கஷ்டப்படுத்துற... பரவாயில்லை... என் மனசுக்குள்ள இருக்குறவளை நான் பார்த்துப்பேன்... ஆனா என்எதிரில் நிற்கிற என் உயிரை என் சகியை நீ உயிரோட பார்த்துக்கிட்டா போதும்... இந்த ஒன்று மட்டும் செய் போதும்... ப்ளீஸ்... அவளை சாகடிச்சிடாத... அவ இல்லன்னா நான் நா..............ன்............. என்றவன் கை எடுத்து கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டான்...
நான் உயிரோடு இருப்பதே உங்களுக்காகத்தான் ராம்... உங்களுக்காக மட்டும் தான்... அதை நான் ஒரு நொடி மறந்து போனேனே.... என்னவனை காயப்படுத்திவிட்டேனே என்ற எண்ணத்தில் என் நிலையை மறந்து போனேனே... நான் சாக மாட்டேன்... எத்தனை சித்ரவதை என்றாலும் அனுபவிப்பேன்... சாகமாட்டேன்... என் ராம் வாழணும்... என் தர்ஷ் சந்தோஷமா வாழணும்... என் தர்ஷ் என்று சொல்லும் உரிமையை கூட இழந்தவள் ஆனேனே... அய்யோ.... என்று மனதிற்குள் கத்தியவள், அங்கேயே இருட்டும் வரை இருந்து அழுது அழுது ஓய்ந்து போனவள் மெல்ல வீடு திரும்பினாள்...
அவளை விட்டு அவன் சென்றவாறு காட்டிக்கொண்டு அவள் அழுவதை தடுக்க முடியாமல் இயலாமையோடு அவளையே மறைந்திருந்து வெறித்து பார்த்திருந்தான் ஆதர்ஷ்... பின் அவள் கிளம்புகையில் அவளுக்கும் தெரியாமல் அவளை வீடு வரை பின் தொடர்ந்தவன், பத்திரமாக அவள் உள்ளே செல்லும் வரை காத்திருந்துவிட்டு பின்னரே அங்கிருந்து கிளம்பினான்...
காரின் பின் சீட்டில் மௌனமே பிரதானமாக கொண்டு அமர்ந்திருந்தனர் ஆதர்ஷும் சாகரிகாவும்... முன் சீட்டில் சற்று நகைத்தபடி வந்து கொண்டிருந்தனர் முகிலனும் மயூரியும்... வெளியே கண்களைப் பதித்திருந்தாலும், தன்னவன் தன்னைப் பார்க்கின்றானா என்று கவனித்துக்கொண்டே வந்தாள் சாகரி... அவனுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை போலும்... அவன் அவளை மட்டுமே பார்த்திருந்தான்... முகிலனும் மயூரியும் இருக்கும் நிலைமையில் சத்தியமாக தன்னை கவனிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவன் பார்வை மொத்தமும் அவளிடம் இருந்தது...
விமான நிலையமும் வந்துவிட, மயூரியும் முகிலனும் காரிலிருந்து இறங்கி முன்னே சென்று கொண்டிருக்க, ஆதர்ஷ் தயங்கி நிற்க, சாகரியும் நின்றாள்...
அவளை விட்டுப்பிரிய வேண்டுமென்று நினைத்தாலே அவன் உள்ளம் பதறியது... நெஞ்சம் துடித்தது அவனுக்கு...
அந்த துடிப்பு அவளுக்கு கேட்டதோ என்னவோ, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்... என் மனம் என்னிடமே இல்லைடி... உன்னிடம் தான் இருக்கிறது... எனில், மனசே இல்லாமல் எப்படிடீ போவேன், எனக்குள்ள என்னமோ பண்ணுதுடி சகி... நான் இல்லாம வாழ்ந்துடுவியா சகி?... எனக்கு பயமா இருக்குடி உன்னை விட்டு போக... என் நிலைமை உனக்குப் புரியாதா சீதை?... என்னை போக சொல்லாதே குட்டிமா... ப்ளீஸ்... என்று அவன் கண்கள் கெஞ்ச, அவள் தவித்தாள்...
மனதை கல்லாக்கிக்கொண்டு உள்ளே போகலாம்... என்றபடி முன்னே சென்றாள் விருட்டென்று...
சட்டென, தன் வாழ்வே இருளடைந்து போனது போல் உணர்ந்தான் ஆதர்ஷ்... அவள் பின்னே அவனும் செல்ல, அங்கு விளக்குகள் ஒளிர்ந்தது... சிறு இளநகை அவனின் இதழ்களில் உண்டானது...
அவன் அவளருகே நடந்தான்.... அவன் சிரிப்பிற்கான காரணத்தை அவளிடம் தெரிவித்தான்... நீ இல்லாத என் வாழ்வு இருள் சூழ்ந்த இரவு போல, அதே நேரம் நீ காட்டி செல்லும் பாதை ஒளி பொருந்திய பகல்... இரண்டுமே எனக்கு நீதாண்டி சகி... நீ இல்லன்னா நான் கரைந்து போவேண்டி அந்த காரிருளில்... எனக்கு வழி காட்டி என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்திடுடா சகி... நீதாண்டி என் உயிர்... உன் பக்கத்தில் இருந்து வாழும் வாழ்வை எனக்கு வரமா கொடுடி சகி... என்றவன் அவளை நெருங்க, அவள் விலகி அவன் அடுத்து உள்ளே செல்லும் பாதையின் ஓர் ஓரத்தில் சென்று நின்று கொண்டாள்...
அதைப் பார்த்தவன் மனம் வலித்தது மிக... என்னைப் போக வேண்டாமென்று தடுக்க மாட்டியா சகி?... உனக்குள்ளே ஒளித்து கொள்ள மாட்டாயா என்னை?... ஏன் இப்படி என்னை எங்கேயோ கண் காணாத தூரத்துக்கு அனுப்பி வைக்கின்றாய்?... என்னை தனிமை தீயில் போட்டு அழுத்தாதே சீதை... அது என்னைவிட எனக்குள் இருக்கும் உனக்கு தான் வலிக்கும்... என்னை போக சொல்லாதே என்றான் வேதனையோடு....
அவனின் வேதனை அவளைக்கொல்ல, மெல்ல மயூரியின் பக்கம் சென்று நின்று கொண்டாள்... அவன் அவளின் பாராமுகம் கண்டு அகன்று விட்டான் அங்கிருந்து... மயூரியின் அருகே நின்றாளே தவிர, மனமெல்லாம் அவனே நிறைந்திருந்தான்... எண்ணம், கவனம் என அனைத்தும் அவன் மட்டுமே... என் உள்ளத்தில் அடிக்கும் புயலை நான் தடுக்கும் வழி தெரியாது தவிக்கின்றேனே... என் இடக்கண் துடித்து நம் பிரிவை உறுதி செய்கிறதே ராம்... இந்த பிரிவு காலத்தில் என்னை மறந்துடுவீங்களா ராம்?... என்று அவனைத் தேடி அலைந்தன அவள் கண்கள் அவனைக் காணாது....
அவனை தான் விரட்டி விட்டாய் அல்லவா?... பின் என்ன கேள்வி உனக்கு அவனிடத்தில் என்னை மறந்து விடுவாயா என்று... உன்னை அவன் மறந்திட வேண்டுமென்று தானே விரும்பினாய்... அவன் நீ இல்லாமல் வாழ வேண்டுமென்று தானே ஆசைப்பட்டாய்... இப்போது அது தானே நடக்கிறது... பின் ஏனிந்த துயரம் உனக்கு... சிரி... நன்றாக.... என அவள் உள் மனம் அவளை வசைபாடியது...
அவளின் தேடும் விழிகளைக் கண்டு கொண்டவன், எதற்கு சீதை இந்த பிரிவு?... யாருக்காக?... பார்... உன்னை விட நான் உன்னை நன்கு அறிவேன்... ஒரு நிமிடப் பிரிவைக்கூட தாங்காமல், என்னைக்காணாது தவிக்கும் உன் விழிகளை கேளடி பெண்ணே... அது சொல்லும் அந்த தேடல் உனக்கு தெரிவிக்கவில்லையா என் மீதான உன் காதலை... என்றவன் தன்னைக் காணாமல் தவிக்கும் அவளை அதற்கு மேலும் துடிக்க விடாது அவளின் முன் வந்து நின்றான்...