(Reading time: 16 - 32 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 15 - ஜெய்

டுவில் எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதியாக அனைத்தையும் கேட்ட லக்ஷ்மி, “ஹ்ம்ம் கஷ்டம்தான்.  ஆனால் நாம கௌரி ஆத்துக்குப் பணம் கொடுக்க வேண்டாம்.”, என்று கூறி அனைவர் தலையிலும் பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டார்.

முதலில் அதிர்ச்சியிலிருந்து வெளியில் வந்த பத்து, “லஷ்மி உன்கிட்ட இருந்து இப்படி ஒரு பதிலை  எதிர்பார்க்கலை.  இது வரை எல்லா விஷயத்திலுமே நல்ல விதமாத்தானே முடிவு எடுத்திருக்க.  இப்போ ஏன் திடீர்ன்னு இப்படி பேசற.  கௌரியாத்துல  ஒரு பிரச்சனைனா அதுக்கு நம்மளால முடிஞ்ச உதவி செய்யணும் இல்லை.  நீ இப்படி சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு லக்ஷ்மி.”

இத்தனை வருட தாம்பத்யத்தில் தன்னை புரிந்து கொண்டது இத்தனைதானா என்ற பார்வையை தன் கணவரிடம் செலுத்திய லக்ஷ்மி மற்ற இருவரின்  மனநிலை எப்படி இருக்கிறது என்று அறிய பார்வையை சுழற்றினார்.  கோபால் அப்படியே அதிர்ந்த நிலையிலேயே இருக்க ஸ்வேதாவின் புருவம் யோசனையில் சுருங்கி இருந்தது.  தான் விளக்கம் கொடுக்காமல் தீராது என்று பெருமூச்சுடன் லக்ஷ்மி பேச ஆரம்பித்தார்.

Gowri kalyana vaibogame

“நீங்க உங்க நிலைலேர்ந்தே யோசிக்கறேளே.  நீங்க பணம் கொடுத்தா அதை அவா எப்படி எடுத்துப்பான்னு யோசிச்சேளா.  ஒண்ணும் இல்லை,  அன்னைக்கு கல்யாண செலவுல பாதி ஏத்துக்கறோம்ன்னு சொன்னதுக்கே அதை மறுத்து வெறும் ரெண்டு லட்சம்தான் அந்த மாமா வாங்கிண்டார்.  அதுவும் நீங்க அத்தனை தூரம் வாதாடினப்பறம்.  இப்போ அவா பணத்தை தொலைச்சுட்டு நிக்கறப்போ நாம உதவி செய்யறோம்ன்னு போய் நின்னா அவா மனசளவுல எத்தனை கஷ்டப்படுவா.  பணம் போன கஷ்டத்தை விட இதுதான் பெரிய கஷ்டமா இருக்கும்.”, என்று கூற, ச்சே இப்படி ஒரு விஷயம் இருப்பதை யோசிக்காமல் விட்டோமே என்று பத்து மிகவும் வருந்தினார்.  கோபால், மனதிற்குள் கௌரி குடும்பம் இவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவதில் தப்பே இல்லை என்று நினைத்தான்.

“சாரிடி லக்ஷ்மி.  நிஜமாவே நான் யோசிக்கலை.  அவாளுக்கு கஷ்டம் அப்படின்ன உடனே முதல்ல உதவி செய்யணும் அப்படிங்கறதுதான் தோணித்து.  நாம கொடுத்தா அதை வாங்க அவாளுக்கு எத்தனை தர்ம சங்கடமா இருக்கும்னு தோணாமப்  போச்சு.  உன்னையும் யோசிக்காம திட்டிட்டேன்.  சாரி.”

“அது பரவா இல்லைனா.  விடுங்கோ.  நீங்களும் நல்லது பண்ணனும்ன்னுதானே யோசிச்சிருக்கேள்.  சரி விடுங்கோ, இப்போ நாம மொதல்ல இதை எப்படி சரி பண்றதுன்னு யோசிக்கலாம்.”

“ஏம்ப்பா கோபால்.  நாங்க நேரடியா கொடுக்காம உன்கிட்டக்க கொடுத்து நீ அதை உன் பணம் அப்படின்னு சொல்லிடேன்.  அப்போ பிரச்சனை இல்லை இல்ல.  உனக்குன்னா அவா உடனே அடிச்சு பிடிச்சுத்  தர வேண்டாம்.  மெதுவா ஹரி வேலைக்குப் போயிட்டு கொஞ்சம் ஸ்திரம் ஆன உடனே வாங்கிக்கறேன்னு சொல்லிடலாம்.  அப்போ அவாளுக்கும் திருப்பி தர்றது கஷ்டமா இருக்காது.  என்ன சொல்ற?”, என்று அடுத்த யோசனையை பத்து கோபாலிடம் கூறினார்.

“இல்லை சார்.  நான் ஒரு மூணு மாசம் முன்னாடிதான் வீடு ஒண்ணு புக் பண்ணினேன்.  அதுக்கு முக்காவாசிப் பணத்தைக் கொடுத்துட்டேன்னு கௌரியாத்துல எல்லாருக்கும் தெரியும்.  அதனால நான் கொடுத்தேன் அப்படின்னா கண்டிப்பா நம்ப மாட்டா.”, என்றான்.

“ஓ அது அப்போ சரி வராது.  சரி நாங்க கொடுக்கற பணத்தை பேசாம வெளில வட்டிக்கு வாங்கிக் கொடுத்ததா சொல்லிக்  குடுத்துடு.  அப்போ அவா மறுக்க வாய்ப்பில்லையே.”, என்று அடுத்த ஆப்ஷன் சொன்னார் பத்து.

“அதுவும் சரி வராதுன்னா.  ஏன்னா வெளில வட்டிக்கு வாங்கினா கண்டிப்பா அடுத்த மாசத்துல இருந்து அவா திரும்பக் கொடுத்துதான் ஆகணும்.  ஹரி வேலைக்குப் போக எப்படியும் இன்னும் ஒரு ஆறு மாசம் இருக்கு.  அது வரைக்கும் அவாளால  கட்டாயமா வட்டி கட்ட முடியாது.”

“இப்போ இதுக்கு என்னதான் தீர்வு.  எந்தப் பக்கம் போனாலும் இடிக்கறது.  நாம வேணா கல்யாணத்தை கோவில்ல வச்சுப் பண்ணிட்டு ரிசெப்ஷன் மட்டும் கொஞ்சம் நன்னாப் பண்ண சொல்லலாமா.”

“பத்திரிகை அடிச்சுப் பாதிப் பேருக்கு மேல நாம கொடுத்தாச்சு.  இப்போப்  போய் ஒவ்வொருத்தர்கிட்டையும்  சொல்லிண்டு இருக்க முடியாது.  ரெண்டாவது நம்மாத்துலையும் சரி அவாத்துலையும் சரி.  இதுதான் மொத கல்யாணம்.  அதை ஆடம்பரமா பண்ணாட்டாலும் ஒரேயடியா கொரைச்சும் பண்ண வேண்டாமே. “

“ஏம்மா அப்பா சொல்றது எல்லாம் வொர்க் அவுட்  ஆகாதுங்கறே.  ஆனா கல்யாணமும் நன்னா  நடக்கணும் அப்படின்னா எப்படிமா.  ஒண்ணு நாம பணம் கொடுக்கணும்.  இல்லை கல்யாணம் சிம்பிளா நடக்கணும்.  இப்போதைக்கு இந்த ரெண்டு ஆப்ஷன்தான் இருக்கு.”, என்று ஸ்வேதா நடுவில் பூந்து கூறினாள்.

 “ஹ்ம்ம் அது சரிதான்.  கோபால்,  ஏன் இத்தனை விஷயமும் கௌரிக்கு தெரியக் கூடாதுன்னு அவாத்துல நினைக்கறா?”, லக்ஷ்மி  மாமி கேட்க அவர்களிடம் உண்மையை சொல்லலாமா வேண்டாமா என்று கோபால் இங்கி பிங்கி போட ஆரம்பித்தான்.

“எதுவா இருந்தாலும் சொல்லுப்பா.  நாங்க தப்பா நினைக்க மாட்டோம்.”

“அது வந்து மாமி.  அவளுக்கு உண்மை தெரிஞ்சா இத்தனை கஷ்டத்துக்கு நடுவுல எனக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிடுவாளோன்னு அவாளுக்கு பயம்.  அதுதான் சொல்லலை.”

“கௌரியைப் பார்த்தா அப்படி சடார்ன்னு முடிவு எடுக்கற ஆள் மாதிரி தெரியலையே.  எங்களைப் பத்தி தெரியாதப்போ அவ அந்த மாதிரி நினைச்சிருக்கலாம்.  இப்போ கிட்டத்தட்ட கல்யாணம் நிச்சயம் ஆன நாள்லேர்ந்து தினம் நான் அவளோட பேசிண்டு இருக்கேன்.  கௌஷிக் பத்தியும் இப்போ ஓரளவு புரிஞ்சுண்டு இருப்பா.  இன்னும் அதே மாதிரி யோசிக்க மாட்டான்னு நினைக்கறேன்.  சரி நாம இங்க உக்கார்ந்துண்டு பேசறதை விட நேராக் கிளம்பி சம்மந்தி ஆத்துக்குப் போலாம்.  அங்க போயிட்டு எல்லாரும் சேர்ந்து பேசி என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம்.”

“அச்சோ மாமி.  என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடறேள்.  நான் உங்களண்ட வந்து பேசினதே அவாளுக்குத்  தெரியக் கூடாதுன்னு நினைச்சேன்.  இப்போ நீங்க நேராவே அங்கப் போலாம் அப்படிங்கறேள்.  அதெல்லாம் சரியா வராது.  ஹரி  எங்காத்துலையே யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சான்.  இப்போ உங்களுக்கே தெரிஞ்சு போச்சுன்னா ரொம்ப மனசு கஷ்டப்படுவான் மாமி.”,  கோபால் இவர்களிடம் எல்லாவற்றையும் கூறிய தன்னை  ஹரி தவறாக நினைக்கப் போகிறானே  என்று வருத்தத்துடன் லக்ஷ்மியிடம் மறுத்துப் பேசினான்.

“இல்லைப்பா நீ ஏன் அங்கப் போக வேண்டாம்ன்னு சொல்றேன்னு நேக்கு நன்னாப் புரியறது.  ஆனால் இதைப் பத்தி எல்லாரும் கலந்து பேசாம  முடிவு எடுக்க முடியாது.  அப்படி எடுக்கற முடிவும் யாருக்கும் பாதகம் இல்லாம எடுக்கணும்.  அதனாலதான் நேர அவாத்துக்கேப் போய் பேசலாம்ன்னு சொல்றேன்.  ஏன்னா, நீங்க பாலு அண்ணாக்கு போன் பண்ணி என்னாச்சுன்னு கேளுங்கோளேன்.  அதையும் தெரிஞ்சுண்டு நாம கௌரியாத்துக்குப் போகலாம்.”

“ஆமாம்ப்பா கோபால்.  எனக்கும் லக்ஷ்மி சொல்றதுதான் சரின்னு தோணறது.  மொதல்ல அவாளுக்கு எங்க கிட்டப் பேச கஷ்டமாதான் இருக்கும்.  அதை நான் சரி படுத்திடறேன்.  நீ கவலைப்படாதே.   நீ ஹரிக்கு போன் பண்ணி அவாத்துல எல்லாரும் ஆத்துல இருக்காளான்னு மட்டும் கேட்டு வச்சுக்கோ.  சரி லக்ஷ்மி நான் பாலுக்கிட்டக்க  பேசிட்டு வரேன்.  நீ அதுக்குள்ள தயாராய்ட்டேன்னா நாம கிளம்பலாம்”, என்று அவர்களிடம் கூறிவிட்டு தன் நண்பருக்குப் போன் செய்தார் பத்து.

பத்து அவர் நண்பரிடம் பேசி முடிக்க, கோபாலும் ஹரிக்கு போன் செய்து அவன் அங்கு வருவதாகக் கூறினான். 

“ஸ்வேதா நீ ஆத்துல இருக்கியா.  இல்லைனா கௌரியாத்துக்குப் பக்கத்துலதானே ஹேமா ஆம்.  அங்க போற வழில உன்னை அவாத்துல எறக்கி  விட்டுட்டு நாங்க போகட்டுமா.    பண விஷயம் பேசும்போது நீ அங்க இருந்தா அவாளுக்கு சங்கடமா இருக்கும் அதுக்குதான்  கௌரியாத்துக்கு  வர வேண்டாம்ன்னு சொல்றேன்”

“இல்லை வேண்டாம்மா.  நான் ஆத்துலேயே இருக்கேன்.  எனக்கும்  கொஞ்சம் எழுதறதுக்கு இருக்கு.  அதை முடிக்கறேன்.”, அவளுக்கு ஹரியை சைட் அடிக்கும் வாய்ப்பை அம்மா தட்டி கழிக்கிறாரே என்று ஆதங்கம்.  கோபால் ஹேமாவை அழைத்து தான் ஹரி வீட்டிற்கு செல்வதாக சொல்ல, ஸ்வேதாவைத் தவிர அனைவரும் கிளம்பி கௌரி வீட்டிற்கு சென்றார்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.