(Reading time: 10 - 20 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 17 - ஜெய்

வா வா கௌரி.  வாங்க சார்.”, என்று கௌரி குடும்பத்தாரை வரவேற்றபடியே பத்துவை பார்த்தான் மணி.

“ஹலோ மணி.  இவர்  கௌஷிக்கோட  அப்பா.”, பத்துவை அறிமுகப்படுத்தினாள் கௌரி.

“ஓ உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் சார்.    என் மாமனார் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்திடுவார். சாரி, ஏதோ டிராபிக்ல மாட்டிக்கிட்டார் போல இருக்கு.”

Gowri kalyana vaibogame

“பரவா இல்லை மணி.  எங்க சுதா, பசங்க எல்லாம் காணும்?” என உள்ளே வந்து அமர்ந்தபடியே கௌரி கேட்டாள்.

“பசங்களை கூட்டிட்டு சுதா வெளில போய் இருக்கா.  இங்க அவங்க இருந்தா நம்மால ஃப்ரீயா  பேசமுடியாது.  ரெண்டாவது பசங்க உன்னைப் பார்த்துட்டாங்கன்னா அப்பறம் அவங்களோடதான் நீ விளையாடணும் அப்படின்னு அடம் பண்ணுவாங்க.  அதுதான் அவ பக்கத்துல மால் வரைக்கும் போயிட்டு ஒரு மணி நேரம் சுத்திட்டு வரேன்னுட்டு போய் இருக்கா.”

“அச்சோ சாரி சார்.   எங்களால நீங்க உங்க குடும்பத்தோட இருக்கற டைம் கெட்டுப் போச்சு.”, ராமன் வருத்தப்பட, அப்படி எல்லாம் இல்லை என்று மணி  மறுத்துக் கொண்டிருக்கும்போதே மணியின் மாமனார் உள்ளே நுழைந்தார். 

“டேய் பாலு, நீ எங்கடா இங்க?  நீதான் சாரோட  மாமனாரா?”

“டேய் பத்து.  நீதானா இது.  மாப்பிள்ளை என் ஆபீஸ்ல வேலை செய்யற பொண்ணுக்கு பிரச்சனை அப்படின்னு சொன்னார்.  நானும் யாரு என்ன அப்படின்னு விவரம் எல்லாம் கேக்கல.  சோ உன் சம்மந்தி வீடு தானா அது”

“எனக்கும் உன் மாப்பிள்ளையைப் பார்த்த உடனே எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.  கல்யாணத்துக்கு அப்பறம் பார்க்கலை இல்லை.  அதுதான் சட்டுன்னு அடையாளம் தெரியலை.    இவர்தான் எனக்கு சம்மந்தி ஆகப் போறவர்.  பேரு ராமன்.  ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன்.” - பத்து இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

“வணக்கம் சார்.  நேத்திக்கே பத்து போன் பண்ணி எல்லா விஷயமும் சொன்னாரு.  நான் சொன்ன விவரத்தையும் அவர் உங்ககிட்ட சொல்லி இருப்பார்ன்னு நினைக்கறேன்.”

“வணக்கம் சார்.  ஆமாம் எல்லாமே சொன்னார்.   நீங்க அரசியல்வாதிக்கு பயந்துட்டு அப்பாவி மக்கள் வயத்துல அடிக்கறீங்கன்னும் சொன்னார்.  நான் இப்படி பட்டுன்னு பேசறேன்னு நினைக்காதீங்க.  எத்தனை பேர் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் அது.  அந்த நாசமாப் போறவன்கிட்ட இல்ல மாட்டிருக்கு.” என  ராமன்,  பத்து அவரை அறிமுகப்படுத்தியதற்கு மாறாகக் கத்த ஆரம்பித்தார்.

“ராமன் என்ன இது, எதுக்கு இப்போ உணர்ச்சிவசப்படறேள்.”, பத்து ராமனை அமைதிப்படுத்த.

“விடு பத்து.  அவர் கோவம் அவருக்கு.  நீ கொஞ்ச நேரம் பேசாத.  நான் அவர்கிட்ட நேரடியாப் பேசிக்கறேன்.  சார் நீங்க சொன்னா மாதிரி, அந்தப் பணம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதுதான்,  நான் மறுக்கலை.  அதை எந்த அளவு பாதுகாப்பா வச்சிருக்கணும்.  ஆனால் நீங்க எல்லாம் என்ன பண்ணினீங்க.  அதே நாசமாப்போறவன்  அதிக வட்டி தரேன்னு சொன்னான் அப்படின்னுதானே கொண்டு போய் போட்டீங்க.  ஏன், இப்போ எல்லாரும் தினம் ஒரு வாட்டி போலீஸ் ஸ்டேஷன் வந்து போறீங்களே.  பணம் போடறதுக்கு முன்னாடி எத்தனை இடத்துல அந்தாளைப் பத்தியோ, இல்லை அந்த சீட்டுக் கம்பெனி பத்தியோ விசாரிச்சீங்க.  தப்பு நடந்த உடனே அடுத்த நிமிஷம் போலீஸ் அவன் கைல விலங்கை மாட்டி அதுக்கு அடுத்த நிமிஷம் உங்க கைல பணம் வரணும்ன்னு மட்டும் எதிர்பார்க்கறீங்க.    அது நடக்கலைனா போலீஸ்காரன் கெட்டவன்.  அந்தாள்கிட்ட பணம் வாங்கிட்டான் அப்படி, இப்படின்னு பேச வேண்டியது.”

பேச்சு திசைமாறிப் போவதைப் பார்த்த மணி நடுவில் புகுந்து, “சரி மாமா, போனது போயாச்சு.  அடுத்து என்னப் பண்றதுன்னு பேசலாம்.  நீங்க அவங்களை குத்தம் சொல்றதாலையோ, இல்லை அவங்க உங்களை குத்தம் சொல்றதாலையோ எதுவும் மாறப் போறதில்லை.  அந்த ஆள் இப்போ எங்க இருக்கான் அப்படிங்கற விவரமாச்சும் தெரிஞ்சுதா?”எனப் பேச்சை திசை மாற்றினான்.

“அது சரிதான் மாப்பிள்ளை. ஆனால் தினம் தினம் மக்கள் வந்து, என்னமோ நாங்க அத்தனைப் பணத்தையும் வாரி வளைச்சு வச்சிருக்கறா  மாதிரி பேசும்போது கோவம் வருது.  அந்த ஆள் இதே ஊருலதான் தெம்பா உக்கார்ந்து இருக்கான்.  நான்தான் முடிவெடுப்பவன்னா எப்போவோ அவனைக் கைது பண்ணி இருப்பேன்.  எனக்கு மேல, அவங்களுக்கு மேலன்னு ஏகப்பட்ட பேர் இருக்கறதால,  எங்கக் கை கட்டப்பட்டிருக்கு.  அவ்வளவுதான்.”

“சார் உங்க நிலைமை புரியுது.  நாங்கப் பண்ணினதும் தப்புதான்.  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுதான் அந்தத் தப்பை பண்ணினோம்.  இப்போ என்னதான் சார் இதுக்குத் தீர்வு?  எங்கப் பணம் திரும்பி வரவே வராதா?”

“இல்லை ராமன்.  நான் அப்படி சொல்லவே இல்லை.  இப்போதைய சூழ்நிலையை மட்டும்தான் விளக்கினேன்.  என்னவோ போலீஸ்காரன் எல்லாம் உக்கார்ந்து விரல் சூப்பிட்டு இருக்கறா மாதிரியே எல்லாரும் நினைக்கறாங்க.  அவங்களுக்கு மேலேர்ந்து வர்ற பிரஷர் எவ்வளவுன்னு புரிய மாட்டேங்குது.  உங்க friend தற்கொலை முயற்சி பண்ணினது. அப்பறம் பணம் கிடைக்காம  ஆபரேஷன் பண்ண முடியாம வாடிக்கையாளர் இறந்து போனது இதெல்லாம் வச்சுத்தான் நாங்க இப்போ கவர்ன்மென்ட்டுக்கு பிரஷர் கொடுத்துட்டு இருக்கோம்.  கொஞ்சம் வெயிட் பண்ணித்தான் ஆகணும்.  இதுல எல்லாம் இன்னைக்கு நினைச்சா நாளைக்கே தீர்வு கிடைக்காது.”, பாலு அவர் பக்க நியாயத்தை விளக்கினார்.

“அப்பா யாருப்பா உங்க friend தற்கொலை முயற்சி பண்ணினது?”, என்று கௌரி கேட்க, ராமன் தன் அலுவலக நண்பன் ராமுவைப் பற்றிக் கூறினார்.  இன்னும் எத்தனை விஷயங்கள் இதைப் போல மறைத்துள்ளார்கள் என்று கௌரி மறுபடி ஆரம்பிக்க, பத்து அவளை அடக்கி இப்பொழுது முக்கியமாகப் பேச வேண்டியதைப் பேசி முடிக்கலாம் மத்த சண்டையை வீட்டிற்குப் போய் வைத்துக் கொள்ளலாம் என்று கூற,  கௌரி ராமனைப் பார்த்தவாறே அமைதியானாள்.

அதன் பின் கௌரி பாலுவிடம் திரும்பி, “அங்கிள், நீங்க ஏன் இன்னும் மீடியாக்குத் தெரிவிக்காம இருக்கீங்க?” என்று கேட்க,

“மீடியா மட்டும் என்னம்மா ஏதானும் ஒரு கட்சிக்கு சார்பாதானே இருக்கு.  ஏதானும் ஒரு சானல் நடுநிலையா இருக்குன்னு சொல்லுப் பார்ப்போம்?” எனத் திருப்பிக் கேட்டார் பாலு.

“அதுதான் அங்கிள், நானும் சொல்றேன்.  இப்போ அந்த ஆளுக்கு எந்த அரசியல் கட்சி சப்போர்ட் பண்ணுதோ, அதுக்கு எதிரா இருக்கற சானலைப் பிடிப்போம்.  நம்ம லைட்டா பத்தி விட்டாப் போரும்,  அவங்க அதை ஊதி ஊதி பெரிசாக்கிடுவாங்க.  அதே மாதிரி அந்தக் கட்சிக்கு  எதிரான பேப்பர்க்கும்  நியூஸ் கொடுத்தாப் போரும், விஷயத்தை பெரிசாக்கறதை அவங்க பார்த்துப்பாங்க.”

“நீ சொல்றது ஒரு விதத்துல வொர்க் அவுட் ஆகும்னாலும், நாங்க அந்த மாதிரி ஒரு சானலையோ இல்லை ஒரு பத்திரிகைக்காரனையோ கூப்பிட முடியாது கௌரி.  எல்லார்க்கிட்டயும் சொல்லும்போது அந்த ஆள் உஷாராகி ஊரை விட்டு ஓடாம பார்த்துக்கணும்.  சோ இதுல நிறைய காம்ப்ளிக்கேஷன்ஸ் இருக்கு.  ராமன் சார், எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க.  நான் என் மேலதிகாரிகள்கிட்ட பேசிட்டு சொல்றேன்.”

“சரி பாலு, நீ வேண்டிய டைம் எடுத்துக்கோ.  முடிவு அட்லீஸ்ட் பணம் போட்டவங்களுக்கு சாதகமா இருக்கட்டும்.”

“பார்க்கலாம் பத்து,  நான் இப்போதைக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்க விரும்பலை.  எதுவா இருந்தாலும் ரெண்டு நாள் கழிச்சு சொல்றேன்.” என்று முடிக்க பாலுவிடம் நன்றி கூறி,  மணியிடம் கூறிக்கொண்டு அனைவரும் புறப்பட்டார்கள்.

வேளச்சேரி வந்து சேர்ந்த ஹரியும், லக்ஷ்மியும் கால் டாக்ஸியை விட்டு இறங்க, லக்ஷ்மி ஹரியிடம் திரும்பி, “ஹரி காரை வெயிட் பண்ணச் சொல்லிட்டு... அதுலயே திரும்பி போகப் போறியா எப்படி?”, என்று கேட்க, அதற்கு ஹரி தான் பஸ்ஸிலேயே போவதாகக் கூற, லக்ஷ்மி கால் டாக்ஸிக்கு பணம் கொடுப்பதை மறுத்து, பணத்தைக் கொடுத்த ஹரி கிளம்புவதாகச் சொல்ல,

“என்ன ஹரி இது, இத்தனை தூரம் வந்துட்டு ஆத்துக்குள்ள வராமப் போற? உள்ள வந்து ஒரு காபி குடிச்சுட்டுப் போ.”

“இல்லை மாமி, அம்மாத் தனியா இருப்பா.  அப்பாவும், கௌரியும் போன விஷயம் என்னாச்சோன்னு கவலைப்பட்டுண்டு வேற இருப்பா.  அதுனால நான் இப்படியே கிளம்பறேன்.  இன்னொரு நாளைக்கு வரேன்.”

“அதெல்லாம் ஒரு பத்து நிமிஷத்துல ஒண்ணும் ஆயிடாது.  நீ உள்ள வா.”, என்று கட்டாயப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.