(Reading time: 10 - 20 minutes)

 

வாசலில் அழைப்பு மணியின் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்த ஸ்வேதா அம்மாவுடன் ஹரியும் வந்திருப்பதைப் பார்த்து முதலில் அதிர்ந்து, பின்னர் மகிழ்ந்தாள்.  ஹரிதான் இது ஏதுடா இந்தப் பொண்ணு நம்மை இப்படி பார்க்கறது என்று குழம்பிப் போனான். (அது அப்படிதான் ஹரி, இந்தப் பார்வை எல்லாம் விவேகானந்தர்க்கு புரியாது.)

“எங்கம்மா அப்பா?  நீங்க மட்டும் வரேள்”, என்று ஸ்வேதா ஹரியைப் பார்த்தபடியே லக்ஷ்மியிடம் கேட்க, அவர் கௌரி வீட்டில் நடந்ததைக் கூறினார்.  பின்னர் ஹரி மறுத்தும் அவர் அவனுக்கு காபி கலந்து எடுத்து வர உள்ளே செல்ல,  ஹரி மேலயும், கீழையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.   ஸ்வேதாவிற்கு ஹரியுடன் பேசவேண்டும், ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறியபடியே உட்கார்ந்திருந்தாள்.

பின்னர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “சாரி நான்தான் கோபால் அண்ணாகிட்ட விஷயத்தை சொல்லிடலாம்ன்னு சொன்னேன்.”, என்று தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் ஆரம்பித்தாள்.

ஹரி இவ என்ன சொல்றா என்று ஒன்றும் புரியாமல், “நீங்க என்ன சொல்றீங்க.  கோபால் அண்ணா என்ன சொன்னார்?”, என்று கேட்க

“நான் உங்களை விட சின்னவதானே என்னை நீ, வா, போன்னே கூப்பிடலாம்”, என்று ஸ்வேதா கூற, இப்போ இதுதான் ரொம்ப முக்கியம் என்ற பார்வை பார்த்த ஹரி, “சரி, கோபால் அண்ணா என்ன சொன்னார்ன்னு சொல்லு.”, என்று கேட்டான்.

“இல்லை நீங்களும், கோபால் அண்ணாவும் பேசினதை நான்தான் அப்பாம்மாக்கிட்ட சொல்லிடலாம்ன்னு சொன்னேன்.”, என்று கூற, ஹரி பல்லைக்கடித்தபடியே, ஒட்டுக் கேட்டதை எத்தனை பாலிஷ்டா சொல்றா பாரு என்று முறைத்தான்.

“சாரி, நான் கூட நீங்க பேச ஆரம்பிச்ச உடனேயே அங்க இருந்து போயிடலாம்ன்னு சொன்னேன்.  ஆனா ஹேமாதான் இல்ல அங்கேயே இருக்கலாம் அப்படின்னு சொல்லிட்டா.  அவளுக்கு நீங்க என்ன பேசிக்கப் போறீங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம்.”, என்று சொல்ல, “ஏன் அது உனக்கு இல்லையா?” என்பது போல் ஸ்வேதாவைப் பார்த்தான் ஹரி.

“கோபால் அண்ணா  நான் விஷயத்தை அப்பாக்கிட்ட சொல்லிடலாம்ன்னு சொன்னோன முதலில் மறுத்துட்டு அப்பறம் வேற வழி இல்லாமதான் ஒத்துண்டார்.”

“அது எல்லாம் சரிதான்.  ஆனால் உங்க அப்பா, அம்மா இதை சரியான முறைல எடுத்துண்டதால போச்சு.  இல்லைனா கல்யாணம் நிக்கற வரை போய் இருக்குமே. அதை யோசிச்சியா.  அதே மாதிரி கௌரியும் உங்கம்மா, அப்பால்லாம் இருந்ததால எங்க அப்பாக்கிட்ட ரொம்பக் கேள்வி கேக்கலை.  அவ மணி சார் ஆத்துக்குப் போயிட்டு வந்தப்பறம் என்னல்லாம் கேக்கப் போராளோன்னு இப்போவே எனக்குப் பயமா இருக்கு.  நீ இங்க வந்து சொல்றதுக்கு முன்னாடி அட்லீஸ்ட் எங்கக்கிட்ட ஒரு வார்த்தையானும் சொல்லி இருக்கலாம் இல்லையா.”

“எனக்கு எங்க அம்மா, அப்பா பத்தி நல்லாத் தெரிஞ்சதாலதான் இங்க வந்து சொல்லலாம்ன்னு சொன்னேன்.  எந்த நேரத்துலயும் அவாளால உங்க அம்மா, அப்பாவைப் பத்தி தப்பாவே நினைக்க முடியாது.  அவா முடிஞ்ச வரைக்கும் இதுக்கு உடனே தீர்வு கண்டு பிடிக்கத்தான் பார்ப்பாளே ஒழிய, எப்படி கல்யாணத்தை நிறுத்தலாம் அப்படினெல்லாம் யோசிக்க மாட்டா.”

“கல்யாண விஷயத்துல சரி, ஆனால் என்னதான் அப்பா வெளில காமிச்சுக்காட்டாலும், உள்ளுக்குள்ள அவருக்கு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சு போச்சேன்னு கஷ்டமாதான் இருக்கும்.  ஏற்கனவே அவர் பண்ணின தப்பை நினைச்சு தினம் தினம் வருத்தப் பட்டுண்டு இருக்கார்! ”

“உங்க அப்பா விஷயத்துல நீங்க சொல்றது கரெக்ட்தான்.   ஆனால் எங்க அம்மா மன்னிக்கிட்ட... பட்டுன்னு விஷயம் சொல்லிட்டா.  இந்த மாதிரி உங்களால சொல்லி இருக்க முடியுமா?  இன்னைக்கு ஒருநாள் கஷ்ட்டப்பட்டாலும் இப்போ கௌரி மன்னிக்கும் தெரிஞ்சதால எல்லாருமா கலந்து பேசி முடிவு எடுக்கலாம் இல்லையா? ஒரு ஒரு வாட்டியும் மன்னிக்கு தெரிஞ்சுடுமோன்னு  பயந்து பயந்து பேச வேண்டாமே!”,  ஹரியிடம் தான் செய்த காரியத்தால் நன்மை மட்டும்தான் நடந்து இருக்கிறது என்பதை முடிந்த வரை புரிய வைக்க முயன்றாள்.

“ஹ்ம்ம் அது சரிதான்.  இருந்தாலும் நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி ஒட்டுக் கேக்கற வேலை எல்லாம் பண்ணாம... இருக்கப் பாருங்கோ.”, என்று சொல்ல,

“நான் உங்களைப் பார்த்துட்டு பேசத்தான் வந்தேன்.  ஒட்டுக் கேக்க ஒண்ணும் வரலை.” என்றாள் ஸ்வேதா. 

ஹரி நம்பறா மாதிரியே இல்லையே என்று பார்க்க, “எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் ஹரி, உங்களோட பேசத்தான் வந்தேன். ஒட்டுக் கேக்க எல்லாம் வரலை”, என்று மனதில் பேசுவதாக நினைத்து வெளியில் பேச, ஹரி அதிர்ந்து போய் ஸ்வேதாவைப் பார்த்து, “என்ன உளர்ற?” என்று கத்தினான்.

 தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.