(Reading time: 10 - 19 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 18 - ஜெய்

 னக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் ஹரி, உங்களோட பேசத்தான் வந்தேன். ஒட்டுக் கேக்க எல்லாம் வரலை”, என்று மனதில் பேசுவதாக நினைத்து ஸ்வேதா வெளியில் பேச, ஹரி அதிர்ந்து போய் அவளைப் பார்த்து, “என்ன உளர்ற?” என்று கத்தினான்.

ஐயோ கடவுளே மனதில் பேசுவதாக நினைத்து வெளியில் சொல்லிவிட்டோமே இப்பொழுது என்ன செய்வது என்று ஒரு நொடி யோசித்த ஸ்வேதா, இந்த ஜென்மத்தில் ஹரியாக நம்மைப் பார்ப்பது எல்லாம் நடக்காத காரியம், இதில் எங்கிருந்து அவன் நம்மளை லவ் பண்ணுவது, இப்பொழுது தெரிந்ததும் நன்மைக்குதான், என்று ஹரியைப் பார்த்து, “இதில் உளறல் எங்கிருந்து வந்தது?”, என்று கேட்டாள். ஹரி இவள் என்ன லூஸா என்பதைப்போல் பார்த்தான்.

“இது உளறல் இல்லாம என்ன, சரி உனக்குப் பிடிக்கும்ன்னா எந்த விதத்தில் சொல்ற, கௌரியோட தம்பி அப்படிங்கற முறைலையா?”

Gowri kalyana vaibogame

“இல்லை ஹரி. நான் கல்யாணம் பண்ணிக்க நினைக்கறவர் அப்படிங்கற முறைலதான் பிடிக்கும் “

“உனக்கு என்ன வயசாச்சு. இப்போதான் படிக்கவே ஆரம்பிச்சிருக்கே. அதுக்குள்ள லவ் பண்ற அளவுக்கு வந்தாச்சு. அதுவும் என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?”

“அவா அவா அஞ்சாங்க்ளாஸ், ஆறாங்க்ளாஸ்லேயே லவ் பண்றா. நான் காலேஜ் செகண்ட் இயர் வந்தாச்சு. இப்போத்தானே பண்றேன். ஒருத்தரை லவ் பண்றதுக்கு ரொம்ப வருஷம் தெரிஞ்சிருக்கணும்ன்னு ஒண்ணும் அவசியம் இல்லை, ஒரு நிமிஷம் போறும்”

இது தேறாத கேஸ் என்று நினைத்த ஹரி ஸ்வேதாவை எரிச்சலுடன் பார்த்து, “ஏகப்பட்ட சினிமா பார்ப்ப போல இருக்கே.... அதுலதான் இந்த மாதிரி லூசுத்தனமா பார்த்த உடனே காதல், பார்க்கமையே காதல், சாப்பாடு போட்டாக் காதல், தண்ணி கொடுத்தா காதல்ன்னு எல்லாம் வரும். இது படிக்கற வயசு. ஒழுங்கா அந்த வேலையை மட்டும் பாரு. நல்லா படிச்சு முன்னேறி அம்மா, அப்பாக்கு நல்ல பேரு வாங்கிக் கொடுக்கணும்ன்னு மட்டும் நினை.”

“நான் எங்க படிக்க மாட்டேன்னு சொன்னேன். நான் உங்களை கிட்டத்தட்ட 3 மாசமா லவ் பண்ணிண்டு இருக்கேன். இருந்தாலும் மாசாமாசம் கிளாஸ்ல வைக்கற எல்லா டெஸ்ட்லயும் நான்தான் முதல் மார்க். லவ் பண்ணினா படிக்க முடியாதுன்னு யாரு உங்கக்கிட்ட தப்பு தப்பா சொன்னது”

வீட்டிற்குள் வந்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்த மாமியை மனதிற்குள் திட்டிய படியே, “இங்க பாரு ஸ்வேதா, எல்லா அம்மா, அப்பாக்குமே ஒரு கனவு இருக்கும். நம்ம பசங்களுக்கு நாமதான் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் .......”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே நடுவில் புகுந்த ஸ்வேதா, “ஆனால், உங்களைத்தான் எங்க அம்மாப்பாக்கு ரொம்பப் பிடிக்குமே, அப்பறம் என்னக் கவலை?”

அய்யய்யோ இவளோட முடியலை என்று நினைத்த ஹரி, “கௌரியோட தம்பியா என்னைப் பிடிக்கறது வேற, அவாப் பொண்ணுக்கு பிடிச்சவனா பார்க்கறது வேற. அதனால இந்த நினைப்பை எல்லாம் மூட்டைக் கட்டி பரண் மேலப் போட்டுட்டு படிக்கற வழியைப் பாரு”, என்று புரிய வைத்தான்.

ரிக்கு வரி அவன் படிப்பைப் பற்றியேப் பேச கடுப்பான ஸ்வேதா, “கௌரி மன்னி உங்களை விவேகானந்தர் அப்படின்னு சொல்றதுல தப்பே இல்லை. அது எப்படி உங்களை லவ் பண்ணினா நான் படிக்கவே மாட்டேன்னு நீங்களாவே ஒரு முடிவுக்கு வரலாம். ஏன் உங்களுக்கு என்னை பிடிக்கலை? நான் பொண்ணு, நானே வந்து உங்க கிட்ட ப்ரப்போஸ் பண்ணினதுனாலையா?”, என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.

“ச்சே ச்சே, பிடிச்சிருக்குன்னு சொல்ல ஆணென்ன, பெண்ணென்ன. அதெல்லாம் நான் தப்பாவே சொல்லலை. ஆனால் படிக்கறப்போ காதலிக்கறது கண்டிப்பாத் தப்பு. காலேஜ் போற வயசுல இந்த மயக்கம் எல்லாம் வர்றது சகஜம்தான். அதை avoid பண்ணிட்டு நம்ம லைஃப்ல நாம முன்னேறணும் அப்படிங்கற குறிக்கோள் மட்டும்தான் இருக்கணும். “

“ஹரி, உங்களை லவ் பண்றதால நான் படிப்பை கோட்டை விட மாட்டேன் ஹரி. ஓகே நான் நீங்க சொல்றதை ஒரு சவாலாவே எடுத்துக்கறேன். யுனிவர்சிட்டி கோல்ட் மெடல் வாங்கிக் காட்டறேன். அப்போவானும் என்னைக் கல்யாணம் பண்ண ஒத்துப்பேளா?”

இந்த மாமிக்கு காபி கலக்க இத்தனை நேரமா, நம்மைக் காப்பாத்த வரவே மாட்டாளா என்று சமையல் அறையையே ஏக்கமாகப் பார்த்த ஹரி, லக்ஷ்மி மாமி வரும் அறிகுறியேத் தெரியாததால், “ஸ்வேதா எல்லா அம்மாப்பாக்கும் தன்னோட பசங்களைத் தன்னைவிட உயர்ந்த இடத்தில் வைக்கணும் அப்படிங்கற எண்ணம்தான் இருக்கும். அதுவும் தன்னோடப் பொண்ணை நம்மளைவிட அந்தஸ்துல உசந்த இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் அப்படின்னுதான் நினைப்பா. பணத்தால உங்க அந்தஸ்த்துக்கு நாங்க குறைஞ்சவாதான்.”, என்று ஹரி பேசிக்கொண்டிருக்கும்போதே மறுபடி நடுவில் புகுந்தாள் ஸ்வேதா.

“ஹரி, இத்தனை நாளா அம்மா, அப்பாக்கூட பழகியும் அவா பணத்துக்குத்தான் முன்னுரிமைத் தருவான்னு யோசிக்கறேள். அது எப்படின்னுதான் தெரியலை. ஓகே, இப்போதைக்கு இது எதுவும் தேவை இல்லை. நான் உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதை மறந்துடுங்கோ. நான் என்னோட படிப்பை மட்டும் பார்க்கறேன்”

“ஸ்வேதா, கோவப்படாம நான் பேசினதை யோசிச்சுப் பாரு, இப்போ இல்லாட்டாலும் கண்டிப்பா பின்னாடி ஒரு நாள் நான் சொன்னது சரிதான்னு புரியும்”.ஆமாம், இந்த சாமியார் பெரிய பொழிப்புரை நடத்திட்டார். அது அப்படியே எனக்குப் புரிய. என்று உள்ளுக்குள் பொரிந்து தள்ளினாள்.

ஹரியின் பொறுமையை முடிந்த வரை சோதித்துக் கடைசியாக காப்பியுடன் வந்தாள் லக்ஷ்மி மாமி. அதைக் குடித்து இருவரிடமும் சொல்லிக் கொண்டு ஹரி கிளம்ப, மாமி ஸ்வேதாவை முறைக்க ஆரம்பித்தாள். ஸ்வேதா அய்யய்யோ அம்மா நாங்க ரெண்டு பேரும் பேசினதைக் கேட்டுடாப் போல, இப்பொழுது என்ன செய்வது என்று திகைக்க, “ஏண்டி அந்தப் புள்ளையாண்டான், எத்தனை பொறுப்பாப் பேசறான். நீ ஏன்தான் இப்படி இருக்கியோ. ஒழுங்கு மரியாதையா, எல்லா நினைப்பையும் மூட்டைக் கட்டி வச்சுட்டு படிக்கற வேலையைப் பாரு”, என்று கத்த, ஸ்வேதா அவள் ரூமிற்கு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.