(Reading time: 6 - 12 minutes)

01. விழிகளிரண்டு..! - அன்பு சுடர்

லங்கைகள் அணிந்தும் பிறர் அறியாமல் நடை பயிலும் அந்த நதியின் மெல்லிசைக்கு சிரித்தும் அசைந்தும் ஆடி கொண்டிருக்கும் அம்மஞ்சள் மலர்களை நோக்கியே வெகு  நேரம் அமர்ந்திருந்தான் முகிலன்.

அவனுக்கு அது புதிதல்ல.வானத்தை பார்ப்பதும்,பின் மண்ணள்ளி நதியில் கரைப்பதும் அவனுக்கு ஏதோ ஒரு புதிய உற்சாகத்தை அளித்து கொண்டே இருந்தன. “நேரம் ஆகுதுடா சீக்கிரம் விடுதிக்கு போகணும்..மணி இப்பவே அஞ்சே கால் ...ஆறு மணிக்கு மேல போன அந்த வார்டன் உள்ள விடமாட்டாருடா..” கெஞ்சி கொண்டே நிற்கும் பஷீரின் குரல் முகிலனின் காதுகளில் விழவே இல்லை.கடிகாரத்தையும் முகிலனையும் பார்த்துக் களைத்திருந்தான் அவன்.

“இப்ப நீ வரியா? இல்ல நான் கிளம்பட்டுமா?”  பொறுமையிழந்தான் பஷீர்.

Vizhigalirandu

மலைமோதி பின் அலைமோதி

சிலையின் கலைமோதி பின்

என் தலைமோதி விளையாடும்

காற்றைவிட்டு நான் விலகேன்

இந்த நதியையும் நான் பிரியேன் ” பொழிய ஆரம்பித்தான் முகிலன்.

“அடேய் என் வேல போனா கூட பரவாயில்லை. நீ எவ்ளோ போராடி இந்த இடத்துக்கு வந்திருக்க..வாடா போலாம் ..உன் கவிதையெல்லாம் விடுதில வச்சுக்கலாம் ...எந்திருச்சு தொலடா” என்று முகிலனின் கையைப் பிடித்து இழுத்தான் பஷீர்.அவனை பார்த்து கொஞ்சம் சிரித்துவிட்டு,

இதற்கு மேல் பஷீருடன் விளையாடி அவனின் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை முகிலன்.பக்கதிலிருந்த அவனது தொப்பியை எடுத்துக்கொண்டு பஷீரின் வலது தோள் மேல் கைப் போட்டு நடக்கலானான் முகிலன்.

“இன்னைக்கு தொழுகை சீக்கிரம் முடிச்சிட்டியா?”

“ஆமாம்”

“ஏன்?” வியந்து கேட்டான் முகிலன்.

“விடுதில கொஞ்சம் வேலை இருக்கு.சீக்கிரம் போகணும் அதுக்கு தான்” கொஞ்சம் வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான் பஷீர்.

“எனக்கு தெரியாம என்னடா வேலை ?”

“எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல முடியாது  முகில்..”

“எல்லாவற்றையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டாம்.உன் நண்பன் என்னிடம் சொல்” உரிமையை முன்னிறுத்தி அவனின் கைகளை பற்றி கேட்டான் முகிலன்.நட்பின் இலக்கணம் அறிந்தவன் அவன்.

“நான் இப்போ சொல்ற நிலைல இல்ல..”முகிலின் முகத்தை பார்க்காமல் அவனது கைகளை விலக்கி பதில் சொன்னான் பஷீர்.

அவன் தன்னிடம் சொல்ல விரும்பவில்லை என்று முகில் வருத்தமடையவில்லை.நண்பனை ஏதோ ஒன்று,அவனின் நெருங்கிய நண்பான தன்னிடம் கூட சொல்ல முடியாமல் தவிக்க செய்யும் ஒன்று என்ன என்று சிந்தித்த படியே நடந்தான் முகிலன்.

நண்பனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பியும் தவித்தும் உடன் நடந்தான் பஷீர்.

சிறிது தூரம்  இருவரும் ஏதும் பேசாமல் நடந்ததில் சாலையின் முக்கிய வழியை அடைந்திருந்தனர்.

சாலையில் மக்கள் நடமாட்டம் சற்றே குறைய தொடங்கி இருந்தது.

“ஹே பாஷா அங்க பாருடா உனக்கு பிடிச்ச சுக்கு காபி..வா குடிப்போம்.” உயர்ந்த மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த மிதிவண்டியை நோக்கி காண்பித்தான் முகிலன் ஆனந்தம் நிறைந்த கண்களில்.

“எனக்கு வேணாம்டா..”சலித்துகொண்டான் பஷீர்.

“ஆனா எனக்கு வேணுமே ..”

“சரி நீ குடிச்சிட்டு வா.நான் இங்கேயே நிக்குறேன்”

“அதெல்லாம் முடியாது.உன்னையாராவது கடத்திட்டு போய்ட்டா??”

“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது.நீ போய் குடிச்சிட்டு வா..”

“அட உனக்கு ஒன்னும் ஆகாது.கடத்துறவன் கதி என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சியா.உனக்கு சாப்பாடு போட்டே அவன் செத்திடுவானே.அப்புறம் உன் மேல கொலை கேஸ் ஆகிடும்..அநியாயமா ஒரு உயிர் போகணுமா??நாட்டை காக்குற உயர் பதிவிக்கு போக போற உன்னால இப்படி ஒரு சம்பவம் நடந்ததுனு பின்னாடி வரலாறு உன்ன தான் குத்தம் சொல்லும்.இதுக்கு நான் உடந்தையாக மாட்டேன் பா..இது தேச துரோகம்.. ”மூச்சிரைக்க பேசி முடித்தான் முகிலன்.

“டேய் போதும் டா.வலிக்குது..உன் நாட்டு பற்று அப்படியே சிலிர்க்க வைக்குது..என் மேலையும் இந்த நாட்டு மேலையும் அம்புட்டு பாசமாடா ??” சிரித்தபடி கேட்டான் பஷீர்.அவன் சிரிப்பில் இணைந்து கொண்டான் முகிலன்.

முகிலன் பெயருக்கேற்றபடி எப்போதும் எதையோ தேடி வான்மீதில் சென்றுகொண்டிருக்கும் அந்த மேககங்களைப் போல் வற்றாத தேடலுடையவன்.உயர்ந்த தோற்றமும் எப்போதும் ஒளி பொங்கும் கண்களும் கொண்டவன். வீசும் காற்றுக்கு லேசாய் தலையாட்டும் மென்மையான தலை முடியும் வீரமும் கனிவும் கலந்த பொலிவான முகமும் வாய்த்தவன்.தமிழ் மீது காதல் கொண்டவன்..தாய் நாட்டின் மீது அளவிற்கரிய நேசமும் பக்தியும் கொண்டவன்.இனிப்பென்றால் “இந்தியா” என்பவன்

அதனால் தான் அவன் வீட்டில் எவ்வளவு தடுத்தும்,ஏன் அவன் உயிரோடு கலந்து நிற்கும் அவனின் “அவள்” சொல்லியும் கேட்காமல் இந்திய இராணுவத்தில் சேருவதற்கான தேர்வில் கலந்து கொண்டான்.

“டேய் நீ வீட்டுக்கு முதல் பிள்ள .உன்ன அனுப்பிட்டு உன்னையே நினைச்சுக்கிட்டு நாங்க இங்க கஷ்டப்படனுமா?” கண்ணீரோடு கேட்டும் தாய்க்கு அவள் கன்னம் வழியும் நீர் துடைத்து பதில் சொல்லலானான் முகிலன்.

“மா, நாட்டுக்காக நான் உயிர் தியாகம் செய்ய போறேன்னு நினைக்காத.எல்லா உறுப்பும் சேர்ந்து இயங்குனா தான் உடல்.நாம எல்லோரும் நல்ல உறுப்புகளோட இங்க நிம்மதியா வாழுறோம்.காரணம் அங்க சிலப் பேரோட உறுப்பும் உயிரும் பணயம் வச்சதுனால தான்.இந்தியாவோட உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமா சிலரால அழிக்கபடுது.வலிக்க வலிக்க அழுது நிக்குற இந்த மண்ண சின்ன வயசுல இருந்து பாத்து பாத்து கொதிச்சு போய் இருக்கேன்.மனம் தினமும் துடிச்சிருக்கேன்..வளர வளர அந்த துடிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு..

நீ அழுது நின் விழி துடைக்கும்

என் விரல்கள்..நிலமழுதால்

விரைந்து நீளுமேயன்றி

நின்று வேடிக்கை பார்த்திடுமோ??”

என்று மீண்டும் தாயின் கன்னங்கள் பிடித்து பதில் சொன்னான் முகிலன்.

“இப்படி பேசிப் பேசியே எங்கள பேச விடாம பண்ணிடு.நீ முடிவு பண்ணிட்ட பிறகு நாங்க என்ன பேசுறது.உன் விருப்பபடியே செய்.ஆனா நாடு நாடுன்னு வீட்டையும் இந்த அம்மாவையும் அகிலனையும் மறந்துடாத.எங்களுக்கு இருக்கறது நீ ஒருத்தன் தான்...” மீண்டும் நீர் உகுத்தார் முகிலனின் தாய் வற்றாத பாசத்தோடு.

“அம்மா..என் செல்ல அம்மா நீ இப்படி அழுதுட்டே வழி அனுப்பினா நானும் அங்க போய் அழுதுட்டு தான் இருப்பேன்...ராணி கொஞ்சம் சிரிச்சுட்டே வழியனுப்பினா இளவரசனும் வாகை சூடி வீடு திரும்புவேன்ல..” என்று அம்மாவை அணைத்தப்படி கொஞ்சினான் முகிலன்.

“சரிப்பா.....நேரம் தவறாம சாப்பிடு..தினமும் ரெண்டு தடவை போன் பண்ணு.உன் குரலை கேக்காம எங்களால இருக்க முடியாது.அகிலன் பரீட்சை முடிஞ்சதும் மேல படிக்க நீ தான் அவனுக்கு உதவியா இருக்கணும்.உன் பேக்ல உனக்கு தேவையானது எல்லாம் வச்சிருக்கேன்..தம்பி வந்ததும் உன்கிட்ட போன்ல பேச சொல்றேன்.ரயில் இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்குதானே?”

“ஆமாம் மா..நாளைக்கு சாயங்காலம் போய் சேர்ந்திடுவேன்.அகிலுக்கு நாளையோட பரீட்சை முடியுதுல?” அவனிங்கு பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளமெல்லாம் அவனின் அவளிடமே சென்று கொண்டிருந்தது.

“ஆமாம் பா..நாளை முடியுது..இந்த புத்தகங்களை எல்லாம் இங்கேயே வச்சிட்டு போகக் கூடாதா ?அது வேற இன்னும் பாரமா இருக்மே..”

“இல்ல மா..நல்ல புத்தகம் நல்ல தோழனுக்கு சமம்.என் தோழர்கள் எப்பவும் என்கூட இருந்தா நான் உற்சாகமா இருப்பேன்”

...கடிகாரத்தை பார்த்தான்.

“கொஞ்சம் தாகமா இருக்கு..தண்ணி கொண்டுவா மா” என்று அம்மாவை அனுப்பி விட்டு எப்போதும் போல் வாசலோடி காற்றாக மறைந்து விட்டான் முகிலன்.

“இந்த பிள்ளைக்கு இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி விளையாட்டு தனமா இருப்பான்னு தெரியலையே” என்று வீட்டில் அவனைக் காணாமல் மீண்டும் அவன் புறப்படுவதற்கு தேவையான பொருட்களை சரி பார்க்க ஆரம்பித்தார் முகிலனின் தாய் சாரதா…

தொடரும்

Episode # 02

{kunena_discuss:846}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.