(Reading time: 10 - 20 minutes)

05. இரு கண்ணிலும் உன் ஞாபகம் - வத்ஸலா

ந்த குளத்தின் படிக்கட்டில் நின்றாள் அவள்.

'வா மாதும்மா... கீழே இறங்கி பார்க்கலாம்' என்றது அந்த குரல். ஏனோ கீழே இறங்க தோன்றவில்லை. மனதிற்குள் எதோ ஒன்று தடுத்தது.

அங்கே பதற்றத்தின் எல்லையில் இருந்தான் அவன். எங்கே போயிருப்பாள் அவள்.?

iru kannilum un nyabagam

சட்டென அவன் அவளிடம் கொடுத்த கைப்பேசி நினைவுக்கு வந்தது அவனுக்கு, அதை கையில் வைத்திருப்பாளா அவள்.?

சட்டென அவனது கைப்பேசியை எடுத்து அந்த எண்ணை அழைத்தான் முகுந்தன். அவள் கையிலேயே தான் இருந்தது அந்த கைப்பேசி. ஒலித்தது அது.

அவள் பார்வை கைப்பேசியை நோக்கி திரும்ப, மாதும்மா... என்றது அது.

என்னை பாரு மாதும்மா... நான் சொல்றதை கேட்பேதானே.... வா.. மாதும்மா நாம போலாம்.... வா மாதும்மா.... நான் உன்னை பத்திரமா பார்த்துக்கறேன். வா மா...தும்மா

அதன் குரல் கேட்க கேட்க கைப்பேசிக்கு அவள் கவனம் செல்லவில்லை.

வா.... மாதும்மா.... வா.... என்கூட வா... படி இறங்கினாள் அவள். கைப்பேசி நழுவி கீழே படியின் மீது விழுந்தது.

ஐயோ... போன் எடுடா...... மாதங்கி'  திரும்ப திரும்ப முயன்றுக்கொண்டே இருந்தான் அவன்..எதுவுமே புரியாத அப்பாவி பெண்ணவள். அவளை இங்கே அழைத்து வந்து இப்படி தொலைத்து விட்டேனே?

திரும்ப திரும்ப கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்க அந்த உருவத்தின் பார்வை கைப்பேசியின் பக்கம் திரும்பி விரிய  சட்டென அது செயல் இழந்தது

அவன் மறுபடியும் முயல, அது அணைக்கப்பட்டிருந்தது. இருந்த ஒரு வழியும் சட்டென அடைத்துக்கொண்டது போல் ஒரு உணர்வு.

பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது அவனுக்கு, அந்த கடைக்காரன் சொன்ன திசையில் ஓடினான் முகுந்தன்

னது வீட்டு பூஜை அறையில் அமர்ந்திருந்தார் தாத்தா.

ஓம் த்ரியம்பகம் யஜா மஹே,
சுகந்திம் புஷ்டி வர்தனம்;
உருவாருகமிவ பந்தனான்,
ம்ரித்யோர் மோக்ஷியே மா அம்ருதாத்.

பூஜை அறையில் அமர்ந்து திரும்ப திரும்ப மிருத்யுஞ்சய மந்திரத்தையே உச்சரித்துக்கொண்டிருந்தார் தாத்தா. அவர் மனம், எண்ணங்களும் அந்த மந்திர ஒலிகளிலேயே நிலைத்திருந்தன. இறைவா என் பிள்ளைகளை காப்பாற்று.

சுற்றிலும் மொத்தமாக இருள் சூழ்ந்திருந்தது. குளத்தின் படிக்கட்டில் நின்றிருந்தாள் அவள். அந்த  முகுந்தன் உருவத்தின்   குரலுக்கு கட்டுப்பட்டவளாகவே படி இறங்கினாள் மாதங்கி.  நான்காவது... ஐந்தாவது படியில் கால் வைத்தாள் அவள்.

அந்த விநாடியில் அவளுக்கு கேட்டது அந்த சத்தம். அங்கிருந்து கொஞ்சம் தொலைவில் இருந்த கோவிலில் இருந்து ஒலித்த அந்த மணி சத்தம்.

நிசப்தமான அந்த பகுதியில் எதிரொலித்தது அந்த மணி சத்தம். அவள் காதில் அந்த மணி சத்தம்  கணீர் கணீர் என கேட்டது.

அந்த ஒலியில் அவள்  புலன்கள் எல்லாம் விழித்துக்கொண்டன மனம் சட்டென தெளிவானது. அந்த மணியோசையின் சத்தத்தில் மூளை சட்டென உயிர் பெற்றதை போலே ஒரு உணர்வு.

எங்கே இருக்கிறேன் நான்? அவள் கருவிழிகள் சுழன்றன? எதுவுமே புரியவில்லை அவளுக்கு. அங்கே இருப்பது முகுந்தன் இல்லை. அவளுக்குள்ளே ஏதோ ஒன்று சொன்னது.

மாது....ம்மா இங்க வா மாதும்மா அதன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக தேய, மணி ஓசை கேட்டுக்கொண்டே இருக்க கொஞ்சம் பின் வாங்கினாள்.

தன்னை சுற்றி ஏதோ ஒன்று தப்பாக நடப்பதை உணரத்துவங்கினாள் மாதங்கி. இரண்டு மூன்று படிகள் அவள் மேலே ஏற, தண்ணீரின் அருகில் நின்றது அந்த உருவம். சட்டென திரும்பியவளின் கண்களில்  தெரிந்தது அந்த பிம்பம். தண்ணீரில் தெரிந்தது வெள்ளை நிறத்தில் அதன் நிஜ உருவம். முகத்தில் வெறி சிரிப்புடன்  அந்த கோர உருவம்.

நடுங்கிப்போனாள் மாதங்கி. அடிவயிற்றிலிருந்து மேலுழும்பியது பயம். கத்த முயற்சித்த போதும் வெறும் காற்று மட்டுமே வெளியே வந்தது.

தொடர்ந்து கேட்டது மணியோசை. மணியோசை எதிரொலிக்க, எதிரொலிக்க அந்த உருவத்தில் ஏதோ மாற்றம், கொஞ்சம் கொஞ்சமாக புகை வடிவமாக மாறத்துவங்கியது அது.

அது எப்படியே மேலுழும்பி சுருண்டு இவளை நோக்கி நகர்ந்து வர, இவள் தடுமாறி மேலே ஏறினாள்.  காலடியில் தட்டுபட்டது அவள் கைப்பேசி. சட்டென அதை எடுத்தாள் மாதங்கி . உயிர் இழந்து இருந்தது. எப்படி அதை உயிர்ப்பிப்பது என்று தெரியவில்லை அவளுக்கு.

அந்த புகை வடிவம் இவளுக்கு அருகில் வர, சுதாரித்து நகர்ந்து, ஓடத்துவங்கினாள் அவள். அவளை தொடர்ந்து வந்தது அது.

தாத்தாவின் எண்ணங்கள் மிருத்யுஞ்சய மந்திரத்திலேயே மூழ்கி இருந்தன 'இறைவா என் பிள்ளைகளுக்கு கவசமாகி விடு,'

கால்கள் ஓட, ஓட ஏதோ ஒன்று அவளை செலுத்த அறிவு ஏதோ ஆணையிட அவளே அறியாமல் அந்த  கோவிலுக்குள் நுழைந்திருந்தாள் அவள்.

அந்த கோவிலுக்குள் நுழைந்த ,மாத்திரத்தில் உடலெங்கும் ஒரு அமைதி  பிரவாகம். தன்னை சுற்றியிருந்த விலங்குகள் உடைந்து விழுந்த நிம்மதி உணர்வு.

திரும்பி பார்த்தவளின் கண்களில் அந்த புகை வடிவம் தென்படவில்லை. அப்படியே அந்த கோவிலின் உள்ளே அமர்ந்தாள் மாதங்கி. நீண்ட நேரத்துக்கு பிறகு இதயத்தை தொட்டது நிம்மதியான சுவாசம்.

எங்கே இருக்கிறேன் நான்? எந்த ஊர் இது? முகுந்தன் எங்கே? என்ன நடக்கிறது என்னை சுற்றி? மனம் உண்மைகளை ஆராய பதில் தெரியாமல் கண்களில் வெள்ளம்.

சன்னதிக்குள் சென்று நின்றாள் அவள். சில நிமிடங்கள் அந்த சன்னதியில் இருந்த துர்கையை பார்த்தபடியே நின்றிருந்தாள் மாதங்கி.விளக்கொளியில் மின்னியது அந்த துர்க்கை சிலை.

அங்கே ஒலித்த மந்திர ஒலிகளும், மணியோசையும் அவள் சிந்தையை நிதானப்படுத்த, மறுபடியும் கைப்பேசியை நோக்கி திரும்பியது அவள் பார்வை.

அவள் விரல்கள் மறுபடியும் முயல, சட்டென உயிர்பெற்றது அது. அடுத்த நொடி ஒலித்தது கைப்பேசி.

சன்னதியை விட்டு வெளியே வந்து 'ஹலோ! என்றாள் அவள்.

அவள் குரல் கேட்ட மாத்திரத்தில் இத்தனை நேரம் இதயத்தை பிடித்து அழுத்திக்கொண்டிருந்த சுவாசம் நிம்மதியுடன் வெளியேற , எங்கேடா இருக்கே? என்றான் முகுந்தன்.

என.....க்கு... எ..னக்கு தெரியலை. இங்கே ஒரு கோவில்லே இருக்கேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு குரல் உடைந்தது அவளுக்கு.

அழாதே டா. அழாதே. எல்லாம் சரியாயிடும்  நான் இப்போ அங்கே வந்திடறேன். நீ அங்கேயே இரும்மா. தைரியமா இரு வந்திடறேன். என்ன கோவில்டா அது?

'துர்க்கை அம்மன் கோவில்.'

அந்த கோவில் இருக்குமிடத்தை தெரிந்துக்கொண்டு, காரை கிளப்பிக்கொண்டு விரைந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.