(Reading time: 8 - 16 minutes)

04. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

தொகுப்பாளர் ஸ்ரீதர் பணத்திற்காக மட்டுமே விமலாவிடம் பேசியதாகக் கூற, அவனின் கோபம் அதிகரித்து விமலாவை கொலை வெறியுடன் பார்த்தான்.

“இப்போ எதுக்காக நீங்க விமலாவை முறைக்கறீங்க ஸ்ரீதர்.  நான் சொன்னது இல்லைன்னு சொல்லப்போறீங்களா?”

“இது எப்படி மேடம், விமலா மட்டும் சொன்னதா, இல்லை இதையும் அக்கம் பக்கம் கேட்டு confirm பண்ணிக்கிட்டீங்களா?”, ஸ்ரீதர் படு நக்கலாக தொகுப்பாளரைப் பார்த்து கேட்டான்.

Vidiyalukkillai thooram

தொகுப்பாளர் அவனின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவன் விமலாவிடம் என்ன பேசினான், அவனின் தாயார் அவளிடம் என்ன எல்லாம் பேசினார்கள் என்பதையே மாற்றி மாற்றிக் கேட்க, கடுப்பான ஸ்ரீதர் அவரின் எந்தக் கேள்விக்கும் இனி தான் பதில் சொல்ல முடியாது என்று கூறி அமர்ந்து விட்டான்.

“நீங்க பேசப் பேச உங்க மேல விமலா கொடுத்த புகார் எல்லாமே உண்மைதான்னு தோணுது ஸ்ரீதர்.  என்கிட்டயே, எத்தனையோ லட்சம் மக்கள் பார்க்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில இத்தனை நக்கலா பேசினா, பாவம் விமலா அவங்கக்கிட்ட என்ன எல்லாம் பேசி இருக்க மாட்டீங்க”

“அதுதான் நான் என்ன பேசினேன்னு உங்களுக்குத்தான் தெருஞ்சிருக்கே, அப்பறம் என்ன கேள்வி மேடம்”

ஸ்ரீதரின் பதிலில் அயர்ந்த தொகுப்பாளர் இவன் அடங்கவே மாட்டானா என்பது போல் பார்க்க, விமலா அவரைப் பார்த்து,

“பார்த்தீங்களா மேடம், நீங்க கிட்டத்தட்ட இவரோட அரை மணி நேரமா பேசிட்டு இருக்கீங்க.  உங்களையே எப்படி பேசறார் பாருங்க.  இப்போ உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்குமே, எங்க அப்பாக்கிட்ட இவங்க எல்லாம் எப்படி பேசி இருப்பாங்கன்னு.  அவங்க பேசினதைத் தாங்க முடியாமத்தான் அவருக்கு அன்னைக்கு நைட்டே உடம்பு சரி இல்லாமப் போச்சு மேடம்”, என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

விமலா அழ அதைத் தொகுப்பாளர் சமாதானப்படுத்த என்று சற்று நேரம் ஓடியது.  பொறுமை இழக்க ஆரம்பித்தான் ஸ்ரீதர்.

“மேடம் இந்த டிராமா எல்லாம் முடிஞ்சுதுன்னா நான் கிளம்பி போயிட்டே இருப்பேன்.  எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.  ஏதோ டெக்னிகல் ப்ரோப்லம் அப்படின்னு கூப்பிட்டதாலே அவசர அவசரமா வந்தேன்”

“ஸ்ரீதர் எதுக்கு இத்தனை கோவம் வருது உங்களுக்கு தப்பு அத்தனையும் உங்க மேல வச்சுக்கிட்டு.  அதுவும் இங்க விமலா இப்படி அழுதுகிட்டு இருக்காங்க,  கொஞ்ச கூட மனசாட்சியே இல்லாம  நீங்க நக்கலா பேசிட்டு இருக்கீங்க”, தொகுப்பாளர் பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

“இப்போ அவங்க அழுதா என்னை என்ன பண்ண சொல்றீங்க.  நான் வேணா என்கிட்ட இருக்கற கர்சிஃப் கொடுக்கட்டா”, அவனின் பதிலில் வாயடைத்துப் போன தொகுப்பாளர் எப்படி அவனிடம் பதில் வாங்குவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.

“சரி ஸ்ரீதர்.  இந்த நக்கல் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா பேச ஆரம்பிக்கலாமா.  உங்க மேல விமலா சொன்ன குற்ற சாட்டுக்களை எல்லாம் நீங்க மறுக்கரீங்களா”

“மொதல்ல நீங்க குற்றசாட்டை சொல்லுங்க, அப்பறம் நான் மறுக்கறதா, வேண்டாமான்னு யோசிக்கறேன்”, விமலாவின் குற்றசாட்டுக்களை சொல்லாமல் ஸ்ரீதரிடம் இருந்து பதில் வாங்க முடியாது என்பதை நன்கு அறிந்த தொகுப்பாளர் அவளிடம் பேசியதைக் கூற ஆரம்பித்தார்.

“நாங்க பொதுவா இந்த மாதிரி ஒருத்தர் பேசியதை இன்னொருத்தர்க்கிட்ட சொல்றதில்லை”

“நீங்க பேசறது காமெடியா இருக்கு மேடம்.  ஊருக்கே நீங்க ரெகார்ட் பண்ணினதைப் போட்டுக் காட்டப் போறீங்க.  இதுல என்கிட்ட சொல்றதுலதான் உங்க ப்ரைவசி பாழாப் போகுதா?”

“சரி விடுங்க.   பொண்ணு பார்த்துட்டு போனதுலேர்ந்தே உங்க வீட்டுல ஏகப்பட்ட கெடுபிடி பண்ணி இருக்கீங்க.  உண்டா இல்லையா?”

“தனித்தனியா கேக்காதீங்க மேடம்.  எல்லாத்தையும் சேர்த்து வச்சு ஒட்டுமொத்தமா கேளுங்க.  நான் பதில் சொல்றேன்”

ஸ்ரீதர் சொல்ல விமலா அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு பின்பு மிகுந்த சோகத்துடன் தலையைக் குனிந்து கொள்கிறாள்.

“ஓகே ஸ்ரீதர்.  நிச்சயம் நடந்த போது உங்க வீட்டு ஆளுங்க ஏகப்பட்ட டிமாண்ட் பண்ணி இருக்காங்க.  அதேப் போல எல்லாத்துலயும் குத்தம் கண்டு பிடிச்சு பொண்ணு வீட்டை படுத்தி எடுத்திருக்கீங்க.  அப்போவும் அவங்க எதுவும் பேசாமதான் இருந்து இருக்காங்க”, இதை சொன்னபோது ஸ்ரீதர் விமலாவைப் பார்க்க அவள் தலை நிமிர்த்தவே இல்லை.

“அப்பறம் கடைசியா உங்க வீட்டுல பண்ணினதுதான் உச்சகட்டம்.  கல்யாணத்திற்கு ஒரு மாசம் இருக்கும்போது கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டு லட்ச ரூபாய்க்கு செலவு செய்ய சொல்லி இருக்கீங்க.  படிச்சவங்கதானே சார் நீங்கள்லாம்.  இப்படியா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நடந்துப்பீங்க. உங்க டிமாண்ட்ல பாதிதான் அவங்களால பண்ண முடியும்ன்னு சொன்ன உடனே அப்போ எங்களுக்கு இந்த சம்மந்தம் வேண்டாம் அப்படின்னு சொல்லி இருக்கீங்க.  இப்போ தெரிஞ்சுதா எல்லா குற்றசாட்டும்.  பதில் சொல்லுங்க”

“அதுக்குள்ள முடிச்சுட்டீங்களா மேடம்.  நான் கூட நிறைய இருக்கும்ன்னு பார்த்தேன்.  கம்மியாதான் இருக்கு.  விமலா மேடம்க்கிட்ட நீ சொன்ன குற்றசாட்டுக்கெல்லாம் நான் உண்மையான பதில் சொல்லட்டா எப்படி?”, என்று  விமலாவிடம் கேட்க, அவள் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் தொகுப்பாளரை கண்ணீர் மல்கும் விழிகளுடன் பார்த்தாள். 

“ஸ்ரீதர் கேள்வி கேட்டது நானு.  என்கிட்ட பதில் சொல்லுங்க.  அவங்களை எதுக்கு கேள்வி கேக்கறீங்க”

“ஹ்ம்ம் கரெக்ட்தான்  நீங்க சொல்றது. ஆனா நான் விமலா இல்லை.  குடும்ப விஷயத்தை பொது சபைக்கு கொண்டு வர.   உங்க எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது”

“ஸ்ரீதர் பல பேர் பார்க்கிற ப்ரோக்ராம் இது.  நீங்க இப்படி எல்லாம் பேசக்கூடாது.  விமலாவோட கேள்விக்கு பதில் சொல்லுங்க.  அதே மாதிரி அவங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க”

“நஷ்டமா இது என்ன புதுக் கதை?”

“ஆமாம் நஷ்டம் இல்லாம என்ன.  நிச்சயம் வரைக்கும் அவங்க கிட்டத்தட்ட ஒரு மூணு லட்ச ரூபாய் அவங்க வீட்டுல செலவு பண்ணி இருக்காங்க.  அதை நஷ்ட ஈடா நீங்கதான் தரணும்”

“ஓ அப்படியா சரி.  அப்போ நிச்சயம் நடத்தினதே எங்க வீட்டுலதான்.  அதுக்கு விமலாக்கு நாங்க போட்ட நகையோட சேர்த்து அஞ்சு லட்ச ரூபாய் செலவு ஆச்சு.  அதை அவங்க திருப்பி தருவாங்களாமா?”, ஸ்ரீதர் கேட்க விமலா முழித்தாள்.

“ஸ்ரீதர் விமலா வீட்டுல பிரச்சனை பண்ணி இந்தக் கல்யாணம் நின்னு போய் இருந்தா நீங்க சொல்றது ஞாயம்.  கல்யாணத்தை நிறுத்தினது நீங்க.  அப்போ நீங்கதான் அவங்களுக்கு கொடுக்கணுமே தவிர அவங்க எதையும் திருப்பி தரணும்ன்னு அவசியம் இல்லை”

தொகுப்பாளர் பேசப் பேச கடுப்பான ஸ்ரீதர் சோபாவிலிருந்து எழுந்து, “உங்க எந்தக் கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது மேடம்.  அதே மாதிரி நஷ்ட ஈடு கொடுக்கறது பத்தியும் எதையும் சொல்ல முடியாது”

“இந்த மாதிரி எங்ககிட்ட மொறைச்சுக்கிட்டு பேசாதீங்க ஸ்ரீதர்.  மீடியாவோட வலிமையைப் பத்தி உங்களுக்குத் தெரியலை”, தொகுப்பாளர் மிரட்டும் தொனியில் பேச ஆரம்பித்தார்.

“மீடியான்னா என்ன நீங்க கடவுளா,  அப்படியே நெற்றிக்கண்ணை தொறந்து பொசுக்கிடுவீங்களோ”

“ஸ்ரீதர் மேல மேல பேசிட்டே போறீங்க.  ஒரு பொது நிகழ்ச்சில எப்படி பேசணும் அப்படிங்கற சென்ஸ் கூட இல்லை உங்களுக்கு.  என்ன படிச்சு என்ன, நீங்களே இப்படி இருந்தீங்கன்னா, உங்க வீட்டு ஆளுங்க எப்படி இருந்து இருப்பாங்க.  நான் கூட விமலா ஏதானும் மிகப்படுத்தி சொல்லி இருப்பாங்களோன்னு நினைச்சேன்.  ஆனா உங்க நடத்தையை பார்த்ததுக்கு அப்பறம் அவங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான்னு நினைக்கத் தோணுது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.