(Reading time: 10 - 19 minutes)

06. விடியலுக்கில்லை தூரம் – ஜெய்

ஸ்ரீதரின் அப்பா கூறியதற்கு ஒரு பதிலும் கூறாமல் யோசைனையில் இருந்த கமலை எல்லாரும் ஏன் இப்படி பதில் சொல்லாமல் இருக்கிறார் என்பது போல் பார்த்தனர்.

“என்னடா கமல், உன்னோட மாமா பேசறதுக்கு பதிலே சொல்லாம யோசிச்சுட்டு இருக்க”, கமலின் அம்மா கேட்க, அப்பொழுதுதான் அனைவரின் பார்வையும் தன் மேல் இருப்பதைக் கவனித்தான் கமல்.

“சாரி மாமா, ஏதோ யோசனைல இருந்துட்டேன்.  நீங்க என்ன சொன்னீங்க “

Vidiyalukkillai thooram

“பரவா இல்லை மாப்பிள்ளை.  நாம இப்போவே அவங்க வீட்டுக்குப் போலாமா, என்னால ஆத்திரத்தை அடக்கவே முடியலை”

“இல்லை மாமா, நாம இப்போ நேர போக வேண்டாம்,   இப்போ நாம போய் என்ன பேசினாலும், ஏதோ அவங்க கூட சண்டை போடப் போனா மாதிரியே இருக்கும்”

“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க.  அப்போ இதை அப்படியே விட்டுடலாம்கறீங்களா?”

“அப்படியே விட சொல்லலை மாமா.  எதையுமே யோசிச்சு பண்ணலாம் அப்படின்னு சொல்றேன்.  அந்தப் பொண்ணு இந்த அளவுக்கு போய் இருக்குன்னா, அவங்க எல்லாத்தையும் பிளான் பண்ணாம பண்ணி இருக்க மாட்டாங்க இல்லை.  இந்த நேரத்துல நாம அவங்க வீட்டுக்குப் போனா அதையும் அவங்களுக்கு சாதகமா use பண்ணிப்பாங்க.  அதுக்கு நாமளே வழி வகுக்க வேண்டாமே மாமா”

“இல்லை மாமா, அவங்க அப்படி எல்லாம் பிளான் பண்ணி, பண்ணினா மாதிரி தெரியலை.  அந்த விமலா தனியாத்தான் வந்து இருந்தா.  கூட அவங்க அப்பா கூட வரலை”

“இல்லை ஸ்ரீதர்.  அந்த பொண்ணு என்ன சொல்லிச்சு.  இந்தக் கல்யாணம் நின்னுப் போனதால, அவங்க அப்பாக்கு உடம்பு முடியாமப் போச்சுன்னு சொல்லிச்சு இல்லை.  எனக்கு என்னவோ அந்தப் பொய்யை maintain பண்ணத்தான் அவ அப்பா வரலைன்னு நினைக்கறேன்’

“நீங்க சொல்றா மாதிரியும் இருக்கலாம் மாமா.  அங்க இருந்த மொத்த நேரமும் கண்ணாம்பாக்கு அக்கா மாதிரி ஒரே சோக ரசத்தை புழிஞ்சு தள்ளிட்டா”

“ஹ்ம்ம் அதனாலதான் சொல்றேன்.  மாமா நாம இப்போ போக வேண்டாம்.  நீங்க மொதல்ல அந்த விமலா அப்பாக்கு ஃபோன் பண்ணி அவங்க ஏன் இப்படி பண்ணினாங்கன்னு கேளுங்க”

கமல் சொல்ல அதை ஆமோதித்த ஸ்ரீதரின் தந்தை விமலாவின் தந்தைக்கு அழைத்தார்.  முதல் இரு முறை அவரின் கை பேசிக்கு அழைக்க, அதை அவர் எடுக்காமல் போக, மூன்றாம் முறை வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தார்.  இம்முறை விமலாவின் அம்மா தொலைபேசியை  எடுத்தார்.

“ஹலோ யாருங்க பேசறது”

“வணக்கம்மா, நான் ஸ்ரீதரோட அப்பா பேசறேன்.  எந்த ஸ்ரீதர்ன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கறேன்”

“அச்சோ என்னங்க உங்களைத் தெரியாதா, என்ன விஷயமா ஃபோன் பண்ணி இருக்கீங்க”

“ஊர் பட்ட போய் சொல்லி எங்க மானத்தை, இப்படிக்  கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம வாங்கி இருக்கீங்களே, அதை கேக்கலாம்ன்னுதான்....”

“அய்யோ, நீங்க எனக்கு அண்ணன் மாதிரி, உங்க குடும்பத்தை நாங்க அப்படில்லாம் பண்ணுவோமா,  இந்தப் பொண்ணுதான் குடு குடுன்னு போய் இப்படி ஒரு வேலை பண்ணிடுச்சு ......”, விமலாவின் தாயார் பேசிக்கொண்டிருக்கும்போதே அவரின் கையிலிருந்த தொலைப்பேசியை பிடிங்கிய அவளின் கணவன், மனைவியை முறைத்தபடியே அங்கிருந்து போக சொன்னார்.

“ஹலோ, என்ன சார், ஃபோன் பண்ணி வீட்டுப் பொம்பளைங்களை மிரட்டறீங்களா”

“வாங்க சார் வாங்க.  மொதல்ல நான் உங்க செல் ஃபோன்க்கு பண்ணும்போது அதை எடுக்காம வீட்டுப் பொம்பளை பேச வைச்சது நீங்க.  அதை மறந்துட்டு என்னைப் பார்த்து கேள்வி கேக்கறீங்க”

 “செல் ஃபோனை எடுக்கலைன்னா உங்கக்கூட பேச இஷ்டம் இல்லைன்னு அர்த்தம்.  அதைப் புரிஞ்சுக்கற அடிப்படை அறிவுகூட உங்களுக்கு இல்லை.  சரி இப்போ எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணினீங்க,  சொல்லுங்க”, தங்கள் பக்கம் இப்பொழுது மிக வலுவாக உள்ளது என்ற மமதையில் விமலாவின் அப்பா கண்டபடி பேச ஆரம்பித்தார்.

“கல்யாணத்தன்னைக்கு பேசினது இதே வாய்தானா சார்.  எனக்கு சந்தேகமா இருக்கு, இப்போ என்ன அலட்டலா பேசறீங்க”

“இங்க பாருங்க நீங்க பேசற வெட்டித்தனமான விஷயத்தை எல்லாம் கேக்க எனக்கு நேரம் இல்லை.  அதனால என் வாயைப் பத்தின ஆராய்ச்சியை விட்டுட்டு நேரடியா விஷயத்துக்கு வாங்க”

“ரொம்ப திமிராத்தான் பேசறீங்க.  உங்க பொண்ணு எப்படி எங்க மேல இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி இப்படிக் கேவலப்படுத்தலாம்....”

ஸ்ரீதரின் தந்தை கேள்வி கேக்க ஆரம்பித்தவுடன் இடையில் புகுந்த விமலாவின் தந்தை, “என்னது இல்லாதது, பொல்லாததா, அப்படி எதுவும் சொல்லலையே. நீங்கதானே கல்யாணத்தை நிறுத்தினீங்க.  அந்த மன வருத்ததுல எனக்கு உடம்பு சரி இல்லாமப் போச்சு.  என் பொண்ணு இதைத்தான் சொன்னா.  இதுல பொய் எங்க இருந்து வருது”

“கல்யாணத்தை நாங்க நிறுத்தினது உண்மைதான்.  ஆனா அதுக்கான காரணம்ன்னு உங்கப் பொண்ணு டிவில சொல்லிச்சே, அது உண்மையா, உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க”

“மனசாட்சி பத்தி நீங்க பேசாதீங்க.  இந்தக் காலத்துல நடக்காத எதையோ என் பொண்ணு பண்ணிட்டா மாதிரி விசாரணை பண்ணினீங்களே.  அது சரியா.  நீங்க கேள்வி கேக்க கேக்க நாங்க கூனிக் குறுகிப் போய் நின்னோமே, அது சரியா”

“ஹலோ உங்கப் பொண்ணு பண்ணினது சாதாரணமான விஷயமா, அது சரி, உங்க மாதிரி குடும்பத்துக்கு வேணும்ன்னா அது சாதாரணமா இருக்கலாம், ஆனால் எங்க மாதிரி மானத்தை பெரிசா மதிக்கற குடும்பத்துக்கு இல்லை”

“அப்போ எங்களை என்ன மானங்கெட்ட குடும்பம்ன்னு சொல்றீங்களா?”

“அதை நான் வேற என் வாயால சொல்லணுமா.  இங்க பாருங்க, என்னப் பண்ணுவீங்களோ தெரியாது.  நாளைக்கே நீங்க உங்க பொண்ணு பண்ணினது தப்புன்னு அந்தத் தொலைக்காட்சிக்குப் போய் சொல்லி அவங்களை அதை டெலிகாஸ்ட் பண்ண வைக்கறீங்க.  இல்லைன்னா விளைவுகள் கடுமையா இருக்கும்”

“என்ன மிரட்டறீங்களா? மறுப்புத் தெரிவிக்கலைன்னா என்ன பண்றதா இருக்கீங்க”

“மிரட்டலா.... சந்தோஷம், இதை மிரட்டலாவே எடுத்துக்கோங்க.  நீங்க அப்படி மறுப்புத் தெரிவிக்கலைன்னா நாங்க உண்மையை சொல்ல வேண்டி வரும், அவ்வளவுதான்.  என்ன அது ஓகேவா உங்களுக்கு”

“உண்மையா, நீங்க சொன்னா உடனே நம்பிட அவங்க என்ன ஒண்ணாங்கிளாஸ் பசங்களா.  ஏற்கனவே உங்கப் பையன் மேல பயங்கர கோவத்துல இருக்காங்க.  அதனால இப்போ நீங்க என்ன சொன்னாலும், அது பொய்யாத்தான் போகும்.  உங்ககிட்ட அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை”

“ஹ்ம்ம் அன்னைக்கு எங்கக்கிட்ட அழுது பொறண்டு சேகரிச்ச ஆதாரம் அத்தனையும் வாங்கிட்டீங்க.  அந்த திமிருலதானே பேசறீங்க.  கடவுள் இருக்கார் சார்.  கல்யாணம் நடக்கறதுக்கு முன்னாடி உங்க சுயரூபம் தெரிய வச்சவர் இப்போவும் எங்களுக்கு வழி காட்டுவார்”

“அப்படியா அப்போ அந்தக் கடவுளையே சாட்சியா கூப்பிட்டுக்கிட்டு டிவி ஸ்டேஷன் போய் பேசுங்க.  இப்போ மொதல்ல ஃபோனை வைங்க.  நான் போய்  தூங்கணும்”, படு நக்கலாகப் பேசிவிட்டு ஃபோனை டொக்கென்று வைத்தார் விமலாவின் தந்தை. 

 “என்ன மாமா ஆச்சு.  என்ன சொல்றாரு விமலாவோட அப்பா.  ஏன் இத்தனை டென்ஷனா பேசினீங்க”, கமல் கேட்க விமலாவின் தந்தை பேசியது முழுவதையும் அவர் கூற, அனைவரும் அதிர்ந்து உட்கார்ந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.