(Reading time: 10 - 19 minutes)

பார்த்தீங்களா மாமா, இதுக்குத்தான் நேரப் போக வேண்டாம்ன்னு சொன்னேன்.  நாமப் போய் இருந்தோம்ன்னா வேணும்ன்னே கைகலப்பு ஆகறா மாதிரி பேசி நம்மளை உசுப்பேத்தி விட்டிருப்பாங்க”

“கரெக்ட்தான் மாப்பிள்ளை.  அந்தாள் ஃபோன்ல பேசின பேச்சுக்கே அவனை இழுத்து வச்சு அறையணும் போல இருந்தது.  அத்தனை தப்பும் பண்ணிட்டு கொஞ்சம் கூட கூசாம என்னாப் பேச்சுப் பேசறான்”

“எனக்கு ஒண்ணு புரியலை மாமா.  எந்த தைரியத்துல அவங்க இதைப் பண்றாங்க.  நாளைக்கு உண்மை தெரிஞ்சா அவங்க மானம்தானே போகும்”

“இல்லை மாப்பிள்ளை, நாம நம்மக்கிட்ட  கிடைச்ச ஆதாரத்தை எல்லாம் அவங்க கிட்ட கொடுத்துட்டோம்.   நாம இப்போ எதை சொன்னாலும் அதை நிரூபிக்க நம்ம கிட்ட சாட்சி இல்லை.  அந்த தைரியம்தான் அவங்களுக்கு”

“தப்பு பண்ணினாலும், அந்தப் பொண்ணு நல்லா இருக்கணும்ன்னு நாம பண்ணினது நமக்கே எதிராப் போச்சு.  சரி மாமா,  நேரம் ரொம்ப ஆகிடுச்சு.  நீங்கப் போய்த் தூங்குங்க.  அத்தை வேற மருந்து சாப்பிடணும். நாளைக்கு காலைல எழுந்து என்ன பண்றதுன்னு பார்க்கலாம்.  நாங்களும் இப்போக் கிளம்பறோம்.  காலைல பசங்களை ஸ்கூல் அனுப்பிட்டு வர்றோம்”

“எங்க மாப்பிளை தூங்கறது.  அதுதான் அந்த ராட்சஸி மொத்த குடும்பத்து தூக்கத்தையும் கெடுத்துட்டாளே”, ஸ்ரீதரின் தாய் மீண்டும் அழ ஆரம்பிக்க, கண்மணியும், அவள் மாமியாரும் அவரை சமாதானப்படுத்தினர்.

“அத்தை நீங்க அழறதால உங்க உடம்புதான் கெடும்.  ஏற்கனவெ ஜுரம் வந்து ரொம்ப வீக்கா இருக்கீங்க.  அதனால அழுகையை நிறுத்துங்க.  கண்மணி நீ வேணும்னா அத்தைக்குத் துணையா இங்க இரு.  நானும், அம்மாவும் பசங்களை கிளப்பி அனுப்பிட்டு காலைல வர்றோம்”

“ஆமாம் கண்மணி.  பசங்களை நான் பார்த்துக்கறேன்.  நீ இங்க உங்க அம்மாக் கூட இரு.  அவங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்”, என்று கண்மணியின் மாமியாரும் கூறி, அவர்களிடம் விடை பெற்று கிளம்பினார்.

“இவங்களைப் போல நல்ல சம்மந்தம் நம்ம ஸ்ரீதர்க்கும் கிடைச்சிருக்கக் கூடாதா.  நமக்கு ஒண்ணு அப்படின்ன உடனே எப்படி ஓடி வர்றாங்க பாரு”, ஸ்ரீதரின் அம்மா வருத்தப்பட, கண்மணி அவரை ஆருதல் படுத்தினாள்.

“அம்மா எல்லாம் சரியாப் போய்டும்.  நீங்கள்லாம் ஏதானும் சாப்பிட்டீங்களா, இல்லையா”, கண்மணி கேட்க, அனைவரும் பதில் சொல்லாததில் இருந்தே, அவர்கள் உண்ணாததை அறிந்த கண்மணி அனைவரையும் மிரட்டி உணவு உண்ண வைத்து படுக்க வைத்தாள்.

அனைவரும் சென்று படுத்தபோதும், அடுத்து என்ன செய்து இந்த பழி சொல்லை நீக்குவது என்று தெரியாமல், தூக்கம் வராமல் தவித்தனர்.

மறுநாள் காலையில் வந்த கமலும், அவன் அம்மாவும்  கண்மணியிடம் அனைவரின் மனநிலையைக் கேட்ட படியே உள்ளே நுழைந்தனர்.

“ஹ்ம்ம் யாருக்குமே தூக்கம் இல்லீங்க.  அம்மாதான் இப்படி ஆகிப் போச்சேன்னு புலம்பிட்டே இருந்தாங்க.  அப்பறம் ஒரு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வச்சோம்.  அத்தை பசங்க ஸ்கூல் கிளம்ப ரொம்பப் படுத்தினாங்களா?”

“அதுங்க என்னைக்குத் படுத்தி இருக்குங்க.  இங்க உங்கம்மாக்கு உடம்பு சரி இல்லை, அதனால நீ, அவங்களை பார்த்துக்க வந்திருக்கேன்னு சொன்னேன்.  அதைக் கேட்டுட்டு சரி பாட்டின்னு சொல்லிட்டு, அவங்க பாட்டுக்கு சமத்தா குளிச்சு கிளம்பிட்டாங்க.  நீ இருந்தா சாப்பிட படுத்துவாங்களே, அதுக்கூட இல்லை.  அஞ்சு நிமிஷத்துல சாப்பிட்டு முடிச்சுடுத்துங்க”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, உள்ளறையில் இருந்து ஸ்ரீதரின் தந்தையும், ஸ்ரீதரும் வெளியில் வந்தார்கள். 

“வாங்க சம்மந்தி, எங்களால உங்களுக்குத்தான் ரெண்டு நாளா அலைச்சலாப் போச்சு”, ஸ்ரீதரின் தந்தை வருத்தத்துடன் சொல்ல,

“சும்மா அதையே சொல்லாதீங்க சம்மந்தி.  கஷ்டத்துல இருக்கற போதுதான் மனுஷங்க துணை வேணும்.  மதி இன்னும் எழும்பலையா”, அவருக்கு ஆருதல் அளித்தபடியே கேட்டார் கமலின் தாயார்.

“இன்னும் எழும்பலை.  ராத்திரி மாத்திரை கொடுத்துத்தான் அவளை தூங்க வச்சுது.  காலைல கொஞ்சம் மெதுவாத்தான் எழுந்துப்பா.  நாங்களும் அவளை எழுப்பலை.  எழுந்தாலும் திருப்பி இப்படி ஆகிப் போச்சேன்னு உக்கார்ந்து அழத்தான் போறா”

“அது சரிதான்”, இவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டுத் தொலைபேசி அலறியது.

ஸ்ரீதரின் ஒன்று விட்ட சித்தப்பா கூப்பிட்டு இப்படி ஆகி விட்டதே என்று துக்கம் விசாரிப்பது போல் அவர்களின் வருத்தத்தை ஏற்றி விட்டார்.  அன்று முழுவதும் நண்பர்கள், உறவினர்கள் என்று  ஒருவர் மாற்றி ஒருவர் அழைத்து இதைப் பற்றியே கேட்க ஆரம்பித்தார்கள்.  வீட்டிலிருந்தவர்கள் மாற்றி மாற்றி பதில் சொல்லி களைத்துப் போனார்கள்.  பாதிப் பேர் இவர்கள் சொன்னதை நம்பினாலும், மீதிப் பேர் பெண் வீட்டார் சொல்வதிலும் உண்மை ஏதேனும் இருக்குமோ, என்று துருவி துருவி கேட்க ஆரம்பித்தார்கள்.

இப்படியே இரண்டு நாட்கள் ஓட, என்ன செய்வது என்று தெரியாமல், மாற்றி மாற்றி அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தனர் ஸ்ரீதர் குடும்பத்தினர்.  மறுநாள் காலை, ஸ்ரீதரும், கமலும் வேலைக்கு கிளம்பி செல்ல, அன்று மதியம் ஸ்ரீதர் வீட்டிற்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. 

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.